இஸ்ரேலிடம் இருந்து ஈழத் தமிழர் கற்றுக்கொள்ளவேண்டியவைகள்: (பாகம்-23)- நிராஜ் டேவிட்



பாரசீகருடைய ஆட்சியின் காலகட்டத்தில் புலம்பெயர்ந்த யூதர்கள் நாடு திரும்பியது பற்றியும், நாடு திரும்பியவர்கள் ஜெருசலேம் நகரில் மேற்கொண்ட சமூக வளர்ச்சிப் பணிகள், மற்றும் உள் கட்டுமாணப் பணிகள் பற்றியும் கடந்த வாரம் பார்த்திருந்தோம்.
அந்த நேரத்தில் இஸ்ரேல் தேசத்தின் அரசியல், ஆட்சி போன்றன என்னவோ பாரசீகருடைய கைகளிலேதான் இருந்தது என்றாலும், சமூகரீதியாக இஸ்ரேலிய சமூக மற்றும் மதத் தலைவர்களே மக்கள் மத்தியில் அதிக அதிகாரங்களையும், செவ்வாக்கையும் பெற்றிருந்தார்கள்.
பாரசீக ஆட்சி என்பது கி.மு 538 ம் ஆண்டு முதல் கி.மு.331 வரை சுமார் 200 வருடங்கள் நீடித்தது.
பாரசீகருடைய ஆட்சியின் பொழுது இஸ்ரேலில்(பலஸ்தீனத்தில்)காணப்பட்ட இந்த நிலை, அந்த ஆட்சியைத் தொடர்ந்து அங்கு இடம்பெற்ற கிரேக்க ஆட்சியின் பொழுதும், ரோம ஆட்சியின் பொழுதும் நிலவவே செய்தது.
பாரசீக ஆட்சியைத் தொடர்ந்து கிரேக்க ஆட்சி கி.மு.331 முதல் கி.மு. 323 வரை சுமார் 8 வருடங்களும், தொலாமியருடைய (Pholemy) ஆட்சிக்காலம் கி.மு. 301ம் ஆண்டு முதல் 198ம் ஆண்டு வரை 103 வருடங்களும், செலுக்கிய (Seleucus) ஆட்சிக்காலம் கி.மு.198ம் ஆண்டு முதல் 143ம் ஆண்டு வரை)  45 வருடங்களும், மக்கபேயர் ஆட்சிக்காலம் (கி.மு.166 முதல் 143வரை) சுமார் 23 வருடங்களும், கஸ்மோனியர் (Hasmonean) ஆட்சிக்காலம் கி.மு. 143 முதல் 103 வரை) 40 வருடங்களும், தொடர்ந்தன. இந்த ஆட்சிகளின் பொழுது யூதர்கள் ஒரு சில சந்தர்ப்பங்களைத் தவிர பெருமளவு மத மற்றும் சமூகச் சுதந்திரங்களை அனுபவித்ததாகவே வரலாறு கூறுகின்றது.
இந்த அன்னிய ஆட்சி காலத்தில் இஸ்ரேலிய மதத் தலைவர்கள், சமூகத் தலைவர்களுக்கு மக்கள் மத்தியில் காணப்பட்ட செல்வாக்கு, அதிகாரம் என்பனவற்றில் விகிதங்கள் சற்று கூடிக் குறைந்தாலும், யூதர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் யூதர்களாலேயே கட்டுப்படுத்தப்படும் நிலை காணப்படவே செய்தது.
இருந்த போதிலும் அன்னிய ஆட்சியில் ஒரு இனம் நீண்ட காலம் இருப்பது என்பது அந்த இனம் தனது தனித்துவத்தை இழப்பதற்கு காரணமாகவே இருக்கும் என்பதை யூதர்களது வரலாறு வெளிப்படுத்தி நிற்கின்றது.
என்னதான் அன்னியர் ஆட்சி என்பது பல சலுகைகளை வழங்கினாலும், மதச் சுதந்திரங்களை அனுமத்தாலும், அன்னிய ஆட்சியில் ஒரு இனம் நீண்டகாலம் வாழும் சந்தர்ப்பம் ஏற்பட்டால், அந்த இனம் பல சிதைவுகளைச் சந்திப்பதென்பது தவிர்க்கமுடியாதுதான்.
இதற்கு, உலகில் கட்டுப்பாட்டிலும், ஒற்றுமையிலும், தனித்துவத்திலும் நிகரில்லாத ஒரு இனம் என்று பரவலாகக் கருதப்படுகின்ற யூத இனம் கூட விதிவிலக்கல்ல.
யூத இனத்தினது தனித்துவமான மொழியான ஹிப்றூ மொழியின் தனித்துவமும், ஆழுமையும் பற்றி முன்னொரு அத்தியாயத்தில் நாம் பார்த்திருக்கின்றோம். அப்படிப்பட்ட இந்தத் தனித்துவமாக மொழியின் வளர்ச்சியை அன்னிய ஆட்சியின் பொழுது யூத இனம் இழக்கும் ஒரு அவல நிலை உருவானது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
முதலாவதாக யூதர்கள் பாபிலோனியர்களால் சிறைப்பிடிக்கப்பட்டு பாபிலோன் தேசத்திற்கு அடிமைகளாக அழைத்துச் செல்லப்பட்ட பொழுது, அங்கு வழக்கத்தில் இருந்த அரேமிய மொழியை (Aramic Language)  கற்றுக்கொள்ளவேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டது.
அங்கு அடிமைத்தனத்தில் இருந்த தம்மை விடுவித்துக் கொள்வதற்கும், வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும், இந்த மொழியை கற்கவேண்டிய ஒரு நிர்ப்பந்தம் புலம்பெயர் இஸ்ரேலியர்களுக்கு உருவானது.
ஆரம்பத்தில் தம்மை அடிமைகளாக அழைத்துச் சென்ற எஜமானர்களின் மொழி என்கின்ற ரீதியில் அரேமிய மொழியைக் கற்ற யூதர்கள் காலப்போக்கில் தமது இருப்புக்காகவும், வளர்ச்சிக்காகவும், வியாபார நடவடிக்கைகளுக்காகவும், அந்த அன்னிய பாசையை கற்றுக்கொள்ளத் தலைப்பட்டார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் அரேமிய மொழியை கற்றுக்கொள்வது ஒரு நாகரீகமாகவே புலம் பெயர் யூதர்களின் இளைய தலைமுறையினர் மத்தியில் மாற ஆரம்பித்திருந்தது.
பின்நாட்களில் ஜெருசலேம் திரும்பிய யூதர்கள்; இந்த அரேமிய மொழியையும் தம்முடன் இஸ்ரேலுக்கு எடுத்து வந்திருந்தார்கள்.
காலப்போக்கில் யூதர்களின் தாய்மொழியான ஹிப்றூ மொழிக்கு அடுத்ததாக - அல்லது ஹிப்றூக்கு இணையாகப் பயன்படுத்தப்படும்; ஒரு மொழியாகவே அன்னிய மொழியான அரேமிய மொழி யூதர்கள் மத்தியில் மாறியிருந்தது.
இதேபோன்றுதான் கிரேக்கர்களுடைய ஆட்சிக்காலத்தில் நீண்ட காலம் யூத தேசம் இருந்தது.
கிரேக்க ஆட்சி என்பது யூதர்களுக்கு அதிக சுதந்திரத்தைக் கொடுத்த ஒரு ஆட்சிக்காலமாக இருந்தது. மகா அலெக்சாண்டர் மற்றும் அவருடைய தளபதிகளின் ஆட்சிக்காலம் என்று சுமார் 200 வருடங்கள் கிரேக்க அல்லது கிரேக்கம் சார்ந்த ஆட்சியின் கீழ் யூதர்கள் இருக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இந்தச் சூழ்நிலை என்பது, கிரேக்க மோழியின் தாக்கம் யூதர்களின் வாழ்க்கையில் பாரிய அளவில் ஏற்படக் காரணமாக அமைந்தது.
கிரேக்க அரசனான மகா அலெக்சாந்தருடைய சரித்திரத்தை ஆராய்கின்ற பொழுது, கிரேக்க மொழியையும், கிரோக்க கலாச்சாரத்தையும் அவர் சென்ற இடங்களிலெல்லாம் பரப்பியதாக காணப்படுகின்றது.
கிரேக்கத்தின் எழுச்சியின் தாக்கம் யூதர்களிடையேயும் ஏற்படவே செய்தது. அதற்கு கவர்ச்சி, ஆட்சி மொழி, ஆதிக்க மொழி என்பது ஒரு காரணம் என்றாலும், மற்றொரு காரணமும் இருக்கவே செய்கின்றது.
அலெக்சாண்டரின் படைகள் தேசங்களைக் கைப்பற்றியபடி நகர்ந்துகொண்டே இருந்தது. அவரது படையில் இருந்த முதியவர்கள், காயப்பட்டவர்கள், தொடர்ந்து பயணம் செய்முடியாத நிலை ஏற்பட்ட பொழுது அவர்களை அந்தந்த இடங்களிலேயே வாழவைப்பதற்காக பட்டணங்களை கட்டிவிட்டு சென்றான் அலெக்சாண்டார்.
இதேபோன்ற ஒழுங்குகள் இஸ்ரேல்(பலஸ்தீன) தேசத்தின் பல இடங்களிலும்; அலெச்சாண்டரினால் செய்யப்பட்டடிருந்தது.
அத்தோடு கிரேக்கர்கள் யூதர்களுக்கு வழங்கிய பலவிதமான சலுகைகளினால் கவரப்பட்டும் கூட, பல இஸ்ரேலியர்கள் கிரேக்க கலாச்சவாரத்தை தழுவ நேரிட்டது.
இதன் காரணமாக கிரேக்க மொழி யூதர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யம் அடைய ஆரம்பித்தது.
கிரேக்க மொழியின் தாக்கம் எந்த அளவிற்கு யூதர்கள் மத்தியில் ஏற்பட்டது என்றால், கிறிஸ்தவர்களது பைபிளின் புதிய ஏற்பாடு கிரேக்க பாசையிலேயே எழுதப்படும் அளவிற்கு கிரேக்க மொழி அந்தக் காலத்தில் யுதர்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தியிருந்தது.
கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளின் புதிய ஏற்பாட்டில் மொத்தம் 27 புத்தகங்கள் உள்ளன. இவைகள் அனைத்தும் வெவ்வேறு நபர்களால் வெவ்வேறு சந்தர்ப்பங்களிலேயே எழுதப்பட்டுள்ளன. இந்தப் புத்தகங்கள் அனைத்தும் கிட்டத்தட்ட கி.பி. 50 ஆம் ஆண்டளவிலேயே எழுதப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இந்த 27 புத்தகங்களுமே Koine Greek  என்ற கிரேக்க பேச்சுவழக்கிலேயே எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது, அந்தக் காலகட்டத்தில் யூதர்கள் மத்தியில் அன்னிய மொழியான கிரேக்க மொழி எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது என்பதற்கு முக்கியமான உதாரணம்.
அன்னிய ஆட்சி என்பது, ஒரு இனத்திற்கு என்னதான் சலுகைகளை வழங்கினாலும் கூட, அந்த இனத்தின் அடையாளத்தை சிதைத்துவிடும் என்பதற்கு இஸ்ரேலியர்களின் மொழிச் சிதைவு ஒரு நல்ல உதாரணம்.
கி.பி. முதலாம் நூற்றாண்டளவில் இஸ்ரேலியர்களின் ஹிப்றூ மொழி யூதர்களின் மத்தியில் இருந்து பெரிய அளவில் மறைய ஆரம்பித்திருந்ததாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
தொடர் அன்னியர் ஆட்சிகளில் கிட்டத்தட்ட முற்றாகவே அழிந்துவிட்ட தமது தேசிய மொழியை இஸ்ரேலியர்கள் மீண்டும் எவ்வாறு மீட்டார்கள்?
இது பற்றி தொடர்ந்துவரும் வாரங்களில் விரிவாகப் பார்ப்போம்.
தொடரும்...
nirajdavid@bluewin.ch

Ingen kommentarer:

Legg inn en kommentar