ஈழம்.. கொடூரமும் கொலையும்! -அம்பலமாக்கும் ஐ.நா. அறிக்கை - திடீர் தொடர் 2



இலங்கை அரசுக்கும், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே 2006-ல் நடந்த சமரசப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததும், புலிகளை ஒழிக்கப் பன்முகக் கூட்டு நடவடிக்கையை அரசு மேற்கொண்டது.
அதன்படி, தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்கிற ரீதியில் பல்வேறு நாடுகளின் ஆதரவை இலங்கை அரசு பெற்றது. குறிப்பாக, இந்தியாவுடன் நெருக்கத்தை அதிகமாக்கிக்கொண்டது. இதனால், கடல் மார்க்கமாக ராணுவத் தளவாடங்களை புலிகள் எடுத்துச் செல்லும்போது, அதை இந்தியக் கடற்படை, இலங்கைக் கடற்படையினருக்குத் தெரிவித்தது. விரைந்து செயல்பட்டு அதை அழித்தார்கள்.
ஒருபக்கம் தனது படை பலத்தைப் பெருக்கிக்கொண்ட சிங்கள ராணுவம், மறுபுறத்தில் கடல் மார்க்கமாக ராணுவத் தளவாடங்களைப் புலிகள் பெற முடியாத நிலையை உருவாக்கியது. இதனால், ஏற்கெனவே சேமிப்பில் இருந்த ஆயுதங்களையே புலிகள் அமைப்பு பயன்படுத்தியது. ஆனாலும், கரும்புலிகள் தொடர்ந்து தற்கொலைப் படைத் தாக்குதல்களை நடத்தி, ராணுவத்தை நிலைகுலைய வைத்தனர்.
பாவப்பட்ட ஜனங்கள்! 2008 செப்டம்பரில் பல்வேறு முனைகளிலும் இருந்து வன்னிப் பகுதியை நோக்கி ராணுவம் முன்னேற... புலிகள் பின்வாங்கினர். 'ராணுவம் கைப்பற்றிய இடங்களில், பெண்கள் மானபங்கம் செய்யப்படுவார்கள், அப்பாவி மக்கள் துன்புறுத்தப்​படுவார்கள்’ என்பதால், மக்களும் புலிகளுடன் சென்றனர். டிராக்டர்கள், சைக்கிள்கள், வண்டிகள் மூலமாக தங்கள் உடைமைகளைக் கொண்டுசென்றனர். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், நோயாளிகள் எனப் பல்வேறு தரப்பினரும் கஷ்டத்தோடு இடம்பெயர்ந்தனர்.
பாதுகாப்பான இடத்தில் குண்டு மழை!
அதிகமான மக்கள், வீடுகளைவிட்டு வெளியேறி புலிகளுடன் இருந்தார்கள். 2009 ஜனவரி 20-ல் 'பாதுகாப்பான பகுதி’ (நோ ஃபயர் ஸோன்) என்று சில இடங்களை ராணுவம் அறிவித்தது. அந்த இடங்களுக்குள் வருமாறு மக்களை அழைத்தது ராணுவம். இந்தப் பகுதிகளில் ஐ.நா. ஊழியர்கள் தங்கும் இடத்தை அமைத்தனர். அரசின் சார்பில் உணவுப் பொருட்கள் அங்கு விநியோகம் செய்யப்பட்டன. சிங்கள ராணுவத்தின் இந்தத் திட்டத்துக்குப் பின்னால் உள்ள கொடூரமான சதியை அறியாத அப்பாவி மக்கள் அங்கு வந்தனர். நாலாவது நாளிலேயே, வான் வழியாக நூற்றுக்கணக்கான குண்டுகள் 'பாதுகாப்பான பகுதி’ மீது விழுந்தன. எங்கும் மரண ஓலம். ஐ.நா. ஊழியர்கள் பதுங்கு குழிகள் மூலம் உயிர் தப்பினர். ஆனால், மக்களுக்கு அந்த வசதி இல்லை. ஆகவே, பீதியோடு நடுங்கினர். அபயக் குரல் கேட்டு இங்கும் அங்கும் ஓடிய மக்கள் மீது குண்டுகள் வெடித்துச் சிதற, அவலக் குரல் எழுப்பக்கூட முடியாமல், அவர்கள் கரிக்கட்டைகளாக மாறினர்.
சிங்கள ராணுவத் தரப்பில்தான் ஏவுகணைகள் விழுந்து வெடித்தன என்பதைப் பார்த்த ஐ.நா. பாதுகாப்பு அதிகாரி, இதுபற்றி கொழும்பு நகரில் செயல்பட்ட ஐ.நா. அலுவலகத்துக்கு பதற்றத்தோடு தகவல் கொடுத்தார். அவர்கள், ராணுவத்தின் கவனத்துக்குக் கொண்டுசென்றனர். ராணுவச் செய்தித் தொடர்பாளரோ அதை அவசரமாக மறுப்பதில்தான் அக்கறை காட்டினார். ஆனால், கோரத் தாக்குதல் ஓயவில்லை. பாதுகாப்புப் பகுதியில் இரவு நேரத்தில் சிங்கள ராணுவம் கொடூரமாகக் குண்டு மழை பொழிந்தது. விடிந்த பிறகு எங்கும் சடலங்கள் சிதறிக்கிடந்தன. 
சிதைந்த உடல்கள்! சிங்கள ராணுவத்தின் இந்த மனிதாபி​மானமற்ற செயலால், அங்கு தஞ்சமடைய வந்த மக்களின் சடலங்களும், மிகக் கடுமையாகக் காயம் அடைந்தவர்களும் ஏ-35 சாலை நெடுகிலும்கூட சிதறிக்கிடந்தனர். திரும்பிய பக்கம் எல்லாம் ஆயிரக்​கணக்கில் சடலங்கள்,  பலியான செல்லப் பிராணிகள், நொறுங்கிக்கிடந்த நூற்றுக்கணக்கான வாகனங்கள்... சிங்கள ராணுவத்தின் இந்த ஊழித் தாண்டவத்தைக் கேட்டு வெஞ்சினம்கொண்ட புலிகள், பாதுகாப்பான பகுதிக்குள் ஓரமாக ஒளிந்து ராணுவத்தின் மீது தாக்கினர். பீரங்கித் தாக்குதலையும் நடத்தினர். புலிகள் இருந்த இடம், ஐ.நா. ஊழியர்கள் மையம் அமைத்து இருந்த இடத்தில் இருந்து வெகு தொலைவில் இருந்தது. ஆனாலும், மக்களுக்கு அருகில் ஐ.நா. ஊழியர்கள் தங்கி இருந்த பகுதிக்குள் இந்தத் தாக்குதலை எதற்காக ராணுவம் மேற்கொண்டது? இதற்கான விளக்கம் இது வரை வெளியிடப்படவில்லை.
இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதும் ஐ.நா. ஊழியர்களும், செஞ்சிலுவைச் சங்கத்தினரும் வெளியேறி புதுக் குடியிருப்புப் பகுதிக்குச் செல்ல... அச்சத்தில் தவித்த மக்கள் கூட்டம் கூட்டமாக ஓடி நெருக்கியடித்து அந்தப் பதுங்கு குழிகளில் முடங்கினர்.
2009 பிப்ரவரி மாதத்தில் இரண்டாவது பாதுகாப்பான பகுதியை ராணுவம் அறிவித்தது. கடலோரத்தில் இருக்கும் அம்பலவான் போக்கணை, கரய முள்ளிவாய்க்கால், புதுமட்டளன், வலயான்மடம், வெள்ள முள்ளிவாய்க்கால் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய 12 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு இந்த இடம் இருந்தது. இந்த அறிவிப்பு வெளியாவதற்கு சில தினங்களுக்கு முன்பு, தரை, கடல், வான் வழிகள் மூலமாக ராணுவம் தீவிரத் தாக்குதல் நடத்தியது. அந்தப் பகுதிக்குள் 3,30,000 பேர் வரை இருந்தனர். இந்தத் தாக்குதல்களால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
இதேபோல, மூன்றாவது, நான்காவதாக அறிவிக்கப்​பட்ட பாதுகாப்பான பகுதிகளும் சிங்கள ராணுவத்தின் தாக்குதலுக்குத் தப்பவே இல்லை!
- துயரங்கள் தொடரும்...
நன்றி
ஜூனியர் விகடன்

Ingen kommentarer:

Legg inn en kommentar