ஈழம்.. கொடூரமும் கொலையும்! -அம்பலமாக்கும் ஐ.நா. அறிக்கை - திடீர் தொடர் 4



இறுதிக் கட்ட ஈழப் போரின்போது, ஏக்கப் பெருமூச்சுடனும் கலக்கம் மிகுந்த  கண்களுடனும் மக்கள் தவித்துக்கொண்டு இருந்தனர். 'என்ன நடக்கிறது?’ என்பதே அவர்களுக்குப் புரியவில்லை.
எதிர்ப்பு தெரிவிக்காமல் புலிகளும், தங்கள் நிலைகளை ராணுவத்திடம் விட்டுக்கொடுத்தனர். ஆனாலும், சிங்கள ராணுவம் மிகுந்த கவனத்துடனும் அச்சத்துடனுமே, ஒவ்வோர் அடியையும் எடுத்துவைத்தது. உயிரைக் கையில் பிடித்தபடி நீண்ட தூரம் நடந்த மக்களோ, களைத்துவிட்டனர். இந்தத் துயரப் பயணத்தில் தங்கள் உறவுகளை இழந்தவர்கள் பலர். குண்டுப் பொழிவுக்கு பலியானவர்களின் உடல்களை அடக்கம் செய்யக்கூட நேரம் இல்லை. அவை அப்படியே பாதையில் கிடக்க... எங்கும் பிண வாடை. வேகமாக நடக்க முடியாத முதியவர்கள், குடும்பத்தினரைப் பிரிந்தனர்; காயமடைந்தவர்களோ, வலி தாளாமல், வழியிலேயே விழுந்துவிட்டனர். ஆதரவற்ற இவர்கள் முன்னேறிச் செல்லும் மக்களிடம் உதவி கேட்டு அபயக் குரல் எழுப்பியும், பரிதாபப்பட்ட மீதி மக்கள் அதைக் கேட்காததுபோல், தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடினர்.
ஆவேசத்தில் மக்கள்... பிடிபட்ட புலிகள்!
கடைசி மூன்று மாதங்களாக, மக்களுக்குப் பெரும் சோதனையை ஏற்படுத்தியது உணவுத் தட்டுப்பாடு. இதுவும், சிங்கள ராணுவத்தின் திட்டமிட்ட சதிதான். பாதுகாப்பான பகுதியிலும், ஒண்டுக் குடித்தனத்தில் இருப்பவரைப்போல், நெரிசலோடு தங்கினர் ஏகப்பட்ட மக்கள். குளிப்பதற்கும், ஒதுங்குவதற்கும்கூட வழி இல்லை. இந்த நிலையில், வன்முறையோடு அப்புறப்படுத்தி இந்த மக்கள் குறித்த கணக்குகளை, சிங்கள ராணுவம் திட்டமிட்டே குறைவாகச் சொன்னது.
மூன்று லட்சம் மக்கள் இருந்த நிலையில், 'வெறும் 10 ஆயிரம் பேர்’ என பச்சைப் பொய் சொன்னது. ஒவ்வொரு முறையும், அரசு தரப்பில் நடந்த கணக்கெடுப்பில், ஓர் அளவுக்கு உண்மையான தகவல் வெளிவர... ஆத்திரம் அடைந்த ராணுவம், அரசு அதிகாரிகளை மிரட்டியது; தாக்கியது. இப்படிப்பட்ட நெருக்கடிக்களுக்குப் பிறகும்கூட, தங்கள் அடைக்கலத்தில் 75 ஆயிரம் பேர் இருப்பதாகவே, பொய் சொன்னது ராணுவம்.
சிங்கள ராணுவம் இப்படித் தவறான தகவல் கொடுத்ததால், குறைவான உணவுப் பொருட்களும் மருந்துகளுமே கிடைத்தன. 'உணவுக்கான போராட்டத்தில், புலிகள் மீது மக்கள் ஆத்திரம் கொள்வார்கள்’ என அது எதிர்பார்த்தது. அதேபோல், ஒரு சில இடங்களில் புலிகள் பலர் பிடிபட்டனர். இதில், ராணுவத்துக்கு ரொம்பக் கொண்டாட்டம்!
ஆனாலும், 'போதிய மருந்துகள் கிடைக்கவில்லை’ என டாக்டர்கள் வெளி உலகத்துக்கு சொல்லிவிட்டனர். அவர்களைப் பிடித்த ராணுவம், 'எல்லா மருந்துகளும் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கிறது!’ என தங்கள் முன்னிலையில் அறிக்கையை வெளியிடச் சொன்னது. இந்த இரு முரண்பட்ட தகவல்களையும் உற்று நோக்கும்போது, டாக்டர்கள் மிரட்டப்பட்டது, அப்பட்டமாக அம்பலமானது!
சிங்கள ராணுவம் கட்டவிழ்த்த பொய்களால், போரில் கொல்லப்பட்ட அப்பாவி மக்கள் குறித்த தகவல்களையும் பெற முடியவில்லை. 'போர் நடந்த பகுதியில் இருந்தவர்கள், எத்தனை பேர்? வன்னியில் இருந்து வெளியேறியவர்கள் எவ்வளவு? இறுதிக் கட்டப் போரில் எவ்வளவு புலிகள் இருந்தார்கள்? கொல்லப்பட்ட மக்களை எங்கே புதைத்தார்கள் அல்லது எங்கே வீசினார்கள்?’ எனப் பல கேள்விகளுக்கு நிஜமான பதில் வரவில்லை. இதனால், பலியானவர்கள் எண்ணிக்கை தெரியாமலே போய்விட்டது. இருப்பினும், இருக்கும் விவரங்களைக் கொண்டு பார்க்கையில், 40 ஆயிரம் பேருக்கு அதிகமானவர்கள் உயிர் இழந்து இருக்கலாம் எனத் தெரிகிறது. முறையான விசாரணை நடத்தினால் மட்டுமே, உண்மையான தகவல்களைப் பெற முடியும்!
போர்க் குற்றம்!
இறுதிக் கட்டப் போரில் சர்வதேச விதிமுறைகளுக்கு மாறான பல செயல்கள் நடந்தன. அப்பாவி மக்கள் மீது கொத்துக் குண்டுகள் அல்லது வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள் வீசப்பட்டன. குறிப்பாக, புதுக் குடியிருப்புப் பகுதியில் இந்த வகைக் குண்டுகளே வீசப்பட்டன. இதில் காயமடைந்து சிகிச்சை பெற்ற நோயாளிகளின் உடம்பில் இருந்த தீக்காயங்களைப் பார்க்கும்போது, அவை ரசாயனக் குண்டு தாக்குதல் என்பதைக் கண்டுபிடிக்க முடிகிறது. ஆனால், 'இந்த வகைக் குண்டுகளை நாங்கள் பயன்படுத்தவே இல்லை’ என்று சிங்கள ராணுவம் மறுத்து இருக்கிறது.
2009 மே 15-ம் தேதி, போர் முடிவுக்கு வந்துவிட்டதைப் புலிகள் உணர்ந்துவிட்டனர். அதனால், தங்களிடம் இருந்த தொலைத் தொடர்புச் சாதனங்கள் மற்றும் பாதுகாப்புக்காகக் கைவசம் இருந்த ஆயுதங்களையும் அழித்தனர். பிரமாண்டமான சத்தத்தோடு, அந்தப் பகுதியில் தீ கொழுந்துவிட்டு எரிந்திருக்கிறது. இந்த சமயத்தில்தான், சிங்கள ராணுவம் நந்திக்கடல் பகுதிக்கு முன்னேறி வந்தது. இதனால், லட்சக்கணக்கான மக்களும், புலிகளும் தங்கி இருந்த பகுதி வெறும் மூன்று கிலோ மீட்டருக்குள் சுருங்கிப்போனது, கடலோரம் முழுவதும் மனிதத் தலைகள் தென்பட... உடல் உபாதைக்காகக்கூட வெளியே செல்ல முடியாமல் சிரமப்பட்டனர்.
கொல்லப்பட்ட தலைவர்கள்!
மே 16-ல், சிங்கள ராணுவம் போர் வெற்றியை அறிவித்ததும், புலிகளின் முக்கியத் தலைவர்களும், அவர்களுக்குப் பாதுகாப்புக்காக இருந்த 250 தற்கொலைப் படை வீரர்களும் வெள்ள முள்ளி வாய்க்கால் பகுதிக்குள் சுருங்கினர். இந்த சமயத்தில், புலிகளின் முக்கியத் தலைவர்களான நடேசன், புலித்தேவன், கர்னல் ரமேஷ் ஆகியோர் சரண் அடைய முடிவு செய்தனர். இது தொடர்பாக, இலங்கை அரசு, ஐ.நா., செஞ்சிலுவை சங்கம், நார்வே அரசு, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பலருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இலங்கை அதிபர் ராஜபக்ஷேவும் பாதுகாப்பு அமைச்சகமும் இதனை ஏற்றனர்.
'புலிகள் தரப்பினர் சரண் அடையும்போது, மத்தியஸ்தர்கள் யாரும் உடன் வரக் கூடாது!’ என்ற நிபந்தனைக்கும் புலிகள் சம்மதித்தனர். சிங்கள ராணுவத்தினர் தெரிவித்த வழித்தடத்தில், மே 18-ம் தேதி, புலிகளின் தலைவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வெள்ளைக் கொடியோடு வந்தனர். அவர்கள் சென்ற சிறிது நேரத்திலேயே, அவர்கள் கொல்லப்பட்டுவிட்டதாகச் செய்திகள் வெளியாகின. இதுபற்றி சிங்கள ராணுவத்தின் தரப்பில் இருந்து தினமும் ஒவ்வொரு தகவலாக தெரிவிக்கப்பட்டபோதிலும், நாங்கள் (ஐ.நா. நிபுணர் குழு) அந்தச் சமாதானங்களை ஏற்கவில்லை. சரண் அடைய முன்வந்த புலிகளை சிங்கள ராணுவம் திட்டமிட்டுக் கொன்றுவிட்டதாகவே கருதுகிறோம்.
துயரங்கள் தொடரும்

நன்றி
ஜூனியர் விகடன்

Ingen kommentarer:

Legg inn en kommentar