ஈழத்தமிழருக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம்.

 essay ஈழத்து மக்களுக்கு நியாயம் கிடைக்கிற வரையில் நிறுத்தாமல் போராடுவோம். வெற்றி கிட்டுகிற வரையில் போராடுவோம் என்று முழங்குகிறார் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநில பொதுச்செயலாளர் தா.பாண்டியன்.

 
ஈழத் தமிழர்கள் பிரச்சினை இந்தியாவில் மிக வேகமாக மக்கள் மயமாகி வரும் நிலையில், அந்தப் போராட்டத்தில் முக்கிய பங்கை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி செய்து கொண்டிருக்கிறது. தற்போது தேசிய அளவில் பிரச்சினையை எடுத்துச் சென்றிருக்கிறது கட்சி. 
 
அதன் தமிழக மாநிலப் பொதுச் செயலாளர் தா. பாண்டியனை சென்னையில் உள்ள அலுவலகத்தில் சந்தித்தேன். கட்சிக்குப் புதிய அலுவலகம் அமைக்கப்பட்டு வரு வதால் ஒரு சின்ன நெரிசலான பகுதியில் அந்த அலுவலகம் அமைந்திருக்கிறது. பின்னணியில் ஸ்டாலினின் படத்தை வைத்துக் கொண்டு எளிமையாக அமர்ந்திருக்கிறார் 
தா. பாண்டியன். 

அவருடனான உரையாடலில் இருந்து...
 
இலங்கையில் நடந்து முடிந்த இறுதிப் போர் பற்றிய உங்கள் பார்வை என்ன?

அந்தக் கடைசிக் கட்டப் போரில் குறிப்பாக 2009 மே மாதம் இலங்கை அரசு பிற நாட்டுப் படைகளின் ஆயுதங் களின் கருவிகளின் உதவியோடு தொடுத்த கோர யுத்தம் 45,000 மக்களைக் கொன்றிருக்கிறது. கொல்லப்பட்ட மக்கள் மனிதாபிமான அடிப்படையில் புதைக்கப்படக்கூட இல்லை. கொல்லப்பட்ட உடல்கள் முதலாவது மனித மரியாதையோடு முதலில் புதைக் கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவற்றையெல்லாம் காடுகளிலே விசிறி எறிந்துவிட்டார்கள். நாதியற்ற மக்களாக அவர்கள் தூக்கி எறியப்பட்டார்கள். கடைசியாக நடைபெற்ற யுத்தத்தின் போது சகல சட்டங்களையும் மீறி இருக்கிறார்கள். பயன்படுத்தக்கூடாத தடைவிதிக்கப்பட்ட குண்டுகளையும் கருவிகளையும் பயன்படுத்தி இருக்கிறார்கள். காயம்பட்ட மக்களுக்கு மருத்துவ வசதிகளைக் கொடுக்காமல் சாகவிட்டிருக்கிறார்கள். 
இப்போது அவை எல்லாம் வெளிச்சத்துக்கு வந்து விட் டன. ஆதாரபூர்வமாக, ஆவண ரீதியாக வெளியே வந்து கொண்டிருக்கின்றன.
 
இந்தப் போரில் இந்தியாவின் பங்கு பற்றி?
 
நடந்தவை எல்லாம் நன்கு தெரிந்தும் இந்திய அரசு உதவி இருக்கிறது. இவ்வளவு அட்டூழியங்களையும் செய்த பின்னர் ஒன்றுமே நடைபெறவில்லை, ஏதோ பயங்கரவாதி கள் 4 பேரை எதிர்த்துத்தான் சண்டை போட்டார்கள். அதில் வென்று விட்டோம் என்று வெற்றிவிழா நடத்துகிறார்கள். அதையும் இந்தியா வரவேற்றுக் கொண்டிருக்கிறது. பாராட்டி இதுவரை 2,000 கோடி ரூபா கடனும் கொடுத்திருக்கிறது. அதிலே பாதி நிவாரணம் என்கிறார்கள். கொன்றவனுக்கான பரிசளிப்புப் போன்று எங்களுக்கு இது தோன்றுகின்றது. கொலைக்கு ஆயுதங்கள் கொடுத்தார்கள். கொன்றதைப் பாராட்டிப் பணமும் கொடுக்கிறார்கள். 
 
யுத்தக் குற்றவாளி ஒருவரை 100 கோடி மக்களைக் கொண்ட நாடு விருந்தாளியாக அழைத்துக் கௌரவிக்கிறது என்றால் ஏழரைக் கோடித் தமிழர்களின் இதயத்தில் இந்திய அரசு தனது கத்தியைப் பாய்ச்சி இருக்கிறது என்று அர்த்தம். இது தொடர்பில் நாங்கள் அமைதியாக இருக்கி றோம் தெரியாத்தனமான பிள்ளைகளாக இருக்கவில்லை. 
இவர்கள் நடந்து கொள்கிற முறையில் இவர்களும் இணைந்துதான் தமிழ் மக்களைக் கொன்றிருக்கிறார்கள். பங்கெடுத்திருக்கிறார்கள் என்று இப்போது நாங்களும் உணர்கிறோம். குற்றம் பகிரங்கமாகச் சாட்டுகிறோம். இந்திய அரசின் மீதும் குற்றஞ்சாட்டுகிறோம். இலங்கை அரசின் மீதும் குற்றஞ்சாட்டுகிறோம்.
 
போர் முடிந்து இரண்டாண்டுகள் கடந்துவிட்ட நிலையில் தமிழகத்தின் கள நிலை என்ன?
 
போர்க் களத்தில் நடந்தவைகள் அனைத்தும் ஆதாரங்களோடு ஆவணங்களோடு வெளிவருகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் குழுவும் அதை விசாரிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறது. பல நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப்போது குரல் எழுப்பி இருக்கிறார்கள். 
 
எல்லாவற்றுக்கும் மேலாக தமிழகத்தில் இந்தக் குரல் மேலோங்கி வருகிறது. அது மட்டுமல்ல போர்க் குரலாக அது மாறி வருகிறது. ஈழத்திலே நடைபெற்ற போர் தமிழகத்திலே களம் கண்டுவிடக்கூடாது தவறுகள் நிகழ்ந்து விடக்கூடாது என்றால் இந்திய அரசு புத்திசாலித்தனமாக காலமறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் ஏதோ யுத்தப் பிரகடனம் செய்கிறேன் என்பதல்ல இதன் அர்த்தம். நான் வாய் மூடினாலும் இளம் சந்ததி வாய் மூடி இருக்கப் போவதில்லை. தமிழ் மக்கள் கைகட்டி வாய் பொத்தி இருக்கப்போவதில்லை. 
 
நாங்கள் இப்போது கேட்பது கொல்லப்பட்டவர்கள் அனைவரையும் உயிரோடு எழுப்பு என்பதல்ல. ஆனால் அவர்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். எஞ்சி இருக்கிற மிஞ்சி இருக்கிற தமிழ் மக்கள் அனைவரும் குடிமக்களாக மனிதர்களாக மதிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களுக்கு ஈட்டுத் தொகையும் வழங்கப்பட வேண்டும். அவர்கள் தமது பிறந்த இடங்களுக்குச் செல்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களது வீடுகள் நிலங்கள் பறிக்கப்பட்டிருந்தால் அது மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட வேண்டும். 
 தெளிவான உறுதியான அரசியல் தீர்வும் வேண்டும் என்று நாம் கேட்கிறோம். வேறு பலரும் சொல்கிறார்கள். இவற்றையெல்லாம் கவனத்தில் எடுத்து இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் ஈழத்தில் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய நிலைக்கு எப்படித் தள்ளப்பட்டார்களோ அதேநிலைக்குத் தமிழகத்தின் இளைஞர்களும் தள்ளப்படுவார்கள்.  அப்படித் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் உணருகிறேன். மத்திய அரசுக்கு நான் எச்சரிக்கிறேன். 
 
இதை உணர்ந்து மத்திய அரசு தக்க நடவடிக்கை உரிய காலத்தில் எடுக்கவில்லை என்றால் கட்டாயம் இங்கும் போர்க் கோலம் புகுவார்கள். தமிழகமும் போர்க்களமாக மாறும். பிறகு கதறிப் பதறிப் பயனில்லை. காலத்தே எச்சரிக்கிறோம். இந்திய நாடு ஒருமையோடு, வலிமை யோடு நிற்கவேண்டுமானால் நேரு, காந்தி, இந்திரா கடைப்பிடித்த வழிகளை இன்றைய அரசும் கடைப்பிடிக்க வேண்டும். வாக்களித்த மக்களுக்கும் துரோகம் செய்ய நினைத்தால் துரோகிகளாகவே அவர்கள் பார்க்கப்படு வார்கள். அதற்கான காலம் வெகுதூரத்தில் இல்லை. 
 
இதனை உணர்ந்துதான் அகில இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எல்லா மாநிலங்களிலும் எல்லா இடங்களிலும் இந்தச் செய்தியைப் பரப்பிப் கொண்டிருக்கிறோம். உலகக் கம்யூனிஸ்ட்டுக்களுக்கும் கூட இதனைப் பரப்பிக் கொண்டிருக்கிறோம். 
 
ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பில் கம்யூனிஸ்ட் கட்சி இப்போது எத்தகைய முயற்சிகளை எடுத்து வருகிறது? 
 
ஒரு சிறு நூலை ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன். அது இலங்கையின் முழு வரலாறு பற்றிய நூல் அல்ல. கடைசிக் கட்டப் போரின் போது இழைக்கப்பட்ட அநியாயங்களைப் பற்றி எழுத்தப்படும் நூல். போர்க் குற்ற விசாரணை தேவை என்பதை வலியுறுத்துவதாக அது அமையும் ஒரு கைநூல். அதனை ஹிந்தியில் மொழிபெயர்த்து வட இந்தியா முழுமைக்கும் கொடுக்க உள்ளார்கள். 
 
சரியாகச் சொல்லப் போனால் உண்மையான தகவல்கள், மறுபக்கச் செய்திகள் தமிழ் மொழி பேசாத இந்திய மக்க ளுக்கு இதுவரை போய்ச்சேரவில்லை. தமிழகத்தின் அருகில் இருக்கும் ஆந்திராவில் உள்ள மக்களுக்கே கூடச் சென்று சேரவில்லை. இலங்கை அரசும் இந்திய அரசும் பரப்பிய செய்திகள்தான் தெரிந்திருக்கிறது. புலிகளைக் கொன்று விட்டோம் என்று அரசுகள் அறிவித்த செய்திகள் அவர்களை எட்டியுள்ளன. இலங்கை மக்கள் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டார்கள், தமிழர்கள் 1956 முதல் அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்ற செய்தி போய்ச் சேரவில்லை. இப்போதுதான் இந்திய அளவில் அந்தச் செய்திகளைப் பரப்புவதில் முனைப்புக் காட்டுகிறோம். 
 
கடந்த 8ஆம் திகதி ஈழத்தமிழர் ஆதரவு தினம் மும்பை, டெல்லி, ஹைதராபாத், கேரளா என்று எல்லா இடங்களிலும் எமது கட்சி ஏற்பாட்டில் நடைபெற்றது. எனினும் அங்கு வாழக்கூடிய தமிழ் மக்கள்தான் பெருவாரியாக இந்த நிகழ்வுகளில் கூடியிருக்கிறார்கள். மற்றவர்கள் சிறிய எண்ணிக்கையிலேயே கூடி இருக்கிறார்கள். 
 
இப்போதுதான் செய்தி பரவத்தொடங்கி உள்ளது. இதைப் பெரும் செய்தியாக மாற்ற வேண்டும். இனி உலக அளவில் எழுப்ப வேண்டும். பல நாடுகளில் இதனை உரிமைப் பிரச்சினையாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுத்திருக்கிறார்கள். அதுவே நல்ல செய்திதான்.தமிழக சட்டசபையில் ஈழத் தமிழருக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
 
அதிமுக செயலாளர் இதற்கு முன்னர் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போதும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவே கருத்துரைத்திருந்தார். மத்திய அரசு நடவடிக்கை எடுக்கத் தவறினால் நாங்களே படையெடுத்துச் சென்று நடவடிக்கை எடுப்போம் என்ற அளவில் சீற்றத்தோடு பேசினார். அதைப் பலர் கேலி செய்தார்கள். ஆனால், அதனை அவர் மறவாமல் வைத்திருந்து இப்போது தமிழக சட்ட மன்றத்தில் அதனைத் தீர்மானமாக நிறைவேற்றி உள்ளார். நிறைவேற்றிய வேகத்திலேயே டெல்லிக்குப் போய் அதைப் பற்றி வலியுறுத்தி உள்ளார். தொடர்ந்து அவரது கட்சியினரும் இதற்கு ஆதரவு தெரிவித்துப் போராட்டங்களில் பங்கெடுக்கிறார்கள். 
 
முதல்வர் ஜெயலலிதாவின் இந்தப் போக்கு இன்னும் எத்தனை காலத்துக்குத் தொடரும் என்று நினைக்கிறீர்கள்? 
 
அவர் நிச்சயமாகத் தொடர்ந்தும் உறுதியாக இருப்பார். எப்போதுமே அவர் ஒரு முடிவை எடுக்கிற போது யோசித்து விவாதித்த பின்னரே எடுப்பார். முடிவெடுத்து விட்டார் என்றால் அதனை முடிக்கிற வரையில் விடமாட்டார். அதனால் வரப்போகும் விளைவைப் பற்றிச் சிறிதும் கவலைப்பட மாட்டார். ஆட்சி போகும் என்றாலும் அதைப் பற்றி அஞ்ச மாட்டார். எனவே ஈழத் தமிழர் விடயத்தில் அவரது நிலைப்பாடு மாறாது.
 
 
இருப்பினும் இந்திய அரசின் இலங்கை தொடர்பான கொள்கை அல்லது போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தத் தமிழகத்தால் இன்னும் முடியவில்லையே? 
 
தமிழகத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவானவர்கள் அனைவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அமைச்சர்களாகவும் இருக்கிறார்கள். தமிழ் மக்கள் பிரச்சினையில் அவர்கள் குரல் எழுப்பினார்கள். ஆனால் அழுத்தம் கொடுக்கவில்லை. மத்திய அரசோடு சேர்ந்து முழுமையாக ஒத்துழைத்து விட்டார்கள். அந்த வகையில் அவர்களை துரோகிகள் காட்டிக் கொடுத் தவர்கள் என்றுதான் தமிழ் மக்கள் நினைக்கிறார்கள்.
 
இது கலைஞரின் காதுக்கும் எட்டியிருக்க வேண்டும். எனவே தனது வயதான இந்தக் காலத்தில் தன் மீதான பழியைத் துடைப்பதற்கு அவர் முன்வர வேண்டும். தமிழ் மக்களுக்கான உரிமைகளுக்கான உரத்த குரலாக தமிழகம் ஒலிப்பதற்கு ஆதரவாக அவர் நடந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் பழி போகும்.
 
சர்வதேச அரங்கில் இந்திய அரசு தொடர்ந்தும் இலங்கை அரசுக்குப் பாதுகாப்பு அளித்து வருவதற்கான முக்கிய காரணம் என்ன? 
 
இந்திரா காந்திக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் தலைமையிலான அரசுகள் இந்த விடயத்தை ராஜீவ் காந்தி யோடு தொடர்புபடுத்தியே பார்த்தன. நரசிம்மராவ் காலத்தில் இருந்தே ஈழத்தமிழர்களுக்கான ஆதரவான நிலை மாறிவிட்டது. ராஜீவ் காந்தி படுகொலையையே அவர்கள் முன்னிறுத்தினார்கள். துரதிர்ஷ்டவசமாக புலிகளை ஆதரித்து இங்கு பரப்புரை செய்தவர்களும் ராஜீவ் கொலையை நியாப்படுத்தினார்கள். இது தமிழக மக்களையே வெறுப்படைய வைத்து விட்டது. இதனால்தான் தொடக்க காலத்தில் இருந்த ஆதரவும் அனுதாபமும் சற்று மங்கிப் போனது. 
 
2008இல் உண்ணாவிரதம் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதனைப் புதுப்பித்தது. ராஜீவ் காந்தியோடு அருகில் இருந்து காயம்பட்டவனே நான்தான் எனவே அதைக் காட்டி எமது தாய்மாரையும் குழந்தைகளையும் கொல்லாதே என்று நான் தெரிவித்த பிறகு இந்த நிலைப்பாட்டில் மாற்றம் வந்தது. இல்லையென்றால் அந்த ஒன்றை மட்டுமே வைத்து இந்திய மக்களை ஈழத்து மக்களுக்கு எதிராகத் திருப்பியிருப்பார்கள். நல்ல வேளை அதைத் தடுத்து இப்போது மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறோம். 
 
ஐ.நா. பொதுச் செயலாளர் நியமித்த நிபுணர்கள் குழு வின் அறிக்கையினால் ஏதாவது நடக்கும் என்று நினைக்கிறீர்களா? 
 
இந்தியா ஆதரிக்காத வரை ஐ.நாவில் எதுவும் நடக்காது. இந்தியா என்ன சொல்கிறது என்பதை மற்றைய நாடுகள் பார்த்துக் கொண்டிருக்கின்றன. இலங்கையும் இந்தியாவும் மிக நெருக்கமானவை; ஒரே கலாசாரத்தைக் கொண்டவை என்ற நிலையில் இந்தியாவே சும்மா இருக்கும் போது நாம் ஏன் தலையிட வேண்டும் என்று அவை ஒதுங்கிவிடும்.
இந்தக் கட்டத்தில்தான் மத்திய அரசுக்கு தமிழர்கள் ஓர் எச்சரிக்கையைக் கொடுத்தாக வேண்டியிருக்கிறது.ஒன்றரைக் கோடி சிங்களவர்களின் நட்பை பெரிதாக எடுத்துக் கொண்டு ஏழரைக் கோடி தமிழர்களை இழக்க விரும்புகிறாயா? என்ற அந்த எச்சரிக்கையை இப்போது நாம் கொடுத்து வருகின்றோம். அது அவர்களின் காதில் பாய வேண்டும். இல்லாத வரையில் அவர்கள் இப்படியேதான் இருப்பார்கள். மத்தியைச் சிந்திக்க வைக்க வேண்டுமானால் தி.மு.க, காங்கிரஸ் உட்பட எல்லோரும் ஈழத் தமிழர் தொடர்பான நிலைப்பாட்டுக்கு ஆதரவு தர வேண்டும். நாங்கள் இப்போது அவர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துக் கொண்டு தான் இருக்கிறோம். இது தேர்தல் இல்லை. தமிழ் மக்களைக் காப்பாற்றுவதற்கு நீங்களும் வாருங்கள் என்று கேட்கிறோம். கட்சியே வேண்டாம். ஒருமித்த குரலாக எழுவோம் என்று சொல்கிறோம். 

தமிழக இளைஞர்கள் மத்தியில் இப்போது முன்பை விட ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பில் ஒரு விழிப்பு வந்திருப்பது போன்று தோன்றுகிறதே?
 
மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் இந்தப் பிரச்சினை இப்போது வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் நெருப்பாகக் கசியத் தொடங்கி இருக்கிறது. எப்பொழுது கொழுந்து விட்டு எரியும் என்பது தான் கேள்வி. அதனை எங்களால் பார்க்க முடிகிறது. அரசினால் பார்க்க முடியவில்லை என்றால் பின்னர் அது விளைவுகளைச் சந்திக்கும். 
 
ஈழத் தமிழர் பிரச்சினைக்கு என்னதான் தீர்வு என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

எந்த ஒரு நாடும் பிளவு என்பதை எடுத்த எடுப்பிலே ஏற்றுக்கொள்ள மாட்டாது. இந்தியாவில் கூட பாகிஸ்தான் பிரிப்பை கடைசி வரையில் காந்தி எதிர்க்கத்தான் செய்தார். ஆனால் இரு நாடுகளும் பிரிக்கப்பட்டதை ஏனைய அரசுகளும் மக்களும் பின்னர் ஒப்புக் கொண்டார்கள். அதன் பிறகு பங்களாதேஷ் என்று மூன்றாவதும் ஒன்று பிரிந்தது. எனவே இங்கேயே அந்த பூகோள அரசியல் படம் மாறி இருக்கிறது. முதலில் மறுத்தாலும் பின்னர் நடந்திருக்கிறது.நேற்றைக்கு தென்சூடான் சுதந்திரம் பெற்று இன்று அது ஒரு சுதந்திர நாடு என்று கொண்டாடிக் கொண்டிருக்கிறது.
 
சுனாமி வந்ததற்கும் சுதந்திரப் போராட்டத்துக்கும் என்ன சம்பந்தம்? ஆனால் இந்தோனேஷியாவில் அது நடந்தது. அங்கே சின்னஞ்சிறு கிழக்குத் தைமூர் தனிநாடாக அறிவிக்கப்பட்டது.
 
இலங்கையிலோ தனி மாநிலம் அமைப்பதற்கே முடியாது என்று மறுத்து, உரிமைகளைச் சமமாகக் கொடுப்பதைத் தடுத்து, சொந்த மக்களுக்கு எதிராகவே இராணுவத்தைப் பயன்படுத்தி இலங்கை அரசு அராஜகங்களைச் செய்துள்ளது. அப்படிப்பட்ட அரசு முதலில் இறங்கி வந்து என்ன தீர்வைத் தரப்போகிறது என்று சொல்ல வேண்டும். அப்படியில்லாமல் எதுவும் தரமுடியாது என்று அறிவிக்குமானால் பிறகு போராடி வென்றெடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. இதுதான் ஈழத் தமிழர்களுக்கு நான் தரும் பதில். 
 
குற்றச்சாட்டுக்களை வைப்பதை விட்டுவிட்டு ஈழத் தமிழர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கு உதவத் தமிழகம் முன்வரவேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறதே?
 
தொழிற்சாலைகளைக் கட்டுவதற்கு முன்னர் அங்கு பணிபுரிபவர்களை நீ மனிதனாக மதிக்கிறாயா? சம உரிமைகளை வழங்குகிறாயா? அப்படி இல்லாத போது எப்படி மேம்பாடு சாத்தியம். சிங்களவர்களுக்கு இணையான உரிமைகளை அந்த மண்ணின் மைந்தர்களான தமிழ் மக்களுக்கும் வழங்கிய பின்னர் அபிவிருத்தி பற்றி யோசிக்கலாம். 
 
முதலில் உயிர் பாதுகாப்பு, பின்னர் உரிமைகள், அதன் பின்னர் முன்னேற்றத்துக்கு வழி. அதுதான் சரியாக இருக்கும். 
மேம்பாட்டுக்கான வழிகளைத் தமிழர்களே தீர்மானிக்க வேண்டும். முதலில் அரசியல் தீர்வைக் கொடுத்து ஆட்சியில் அவர்கள் பங்கெடுக்க அனுமதித்தால் பிறகு மேம்படுத்துவதற்கான திட்டங்களை அவர்களே நிறைவேற்றிக் கொள்வார்கள். அப்போது அந்த முன்னேற்றத்தில் இந்திய அல்லது தமிழகம் உதவலாம். இலங்கை அரசுக்கு இப்போது உதவுவது என்பது மேம்பாட்டுக்கானதாக இருக்காது. ஆயுதங்களை வாங்கி மிச்சம் இருக்கிற தமிழ் மக்களையும் கொல்வதற்கானதாகத்தான் இருக்கும். எனவே கொலைகாரனுக்கு கத்தியைத் தீட்டிக் கொடுக்கும் வேலையை நாம் செய்யக்கூடாது. 

ஈழத் தமிழ் மக்களுக்கு என்ன சொல்கிறீர்கள்?

ஈழத் தமிழ் மக்கள் தாம் முன்வைத்திருக்கின்ற கோரிக்கைகளை தொடர்ந்து வற்புறுத்த வேண்டும். அடிப்படை உரிமைகள் எதையுமே இழக்கக் கூடாது.      இதுவரையில் அவர்கள் செய்திருக்கிற தியாகம் என்பது அளப்பரியது. அவர்களும் தியாகம் செய்திருக்கிறார்கள் அவர்களுக்காகப் போராடியவர்களும் தியாகம் செய்திருக்கிறார்கள். அதனை தமிழ் நாட்டு மக்களும் இந்திய மக்களும் மதிக்கிறோம் போற்றுகிறோம். வணங்குகிறோம். 
 
இப்போது போராட வேண்டியவர்கள் இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் ஈழத்தில் உள்ள தமிழ் மக்கள் அல்லர். இந்தியாவில் உள்ள தமிழ் மக்களே. அது அவர்களின் கடமையாக மாறி வருகிறது. ஏனெனில் ஈழத் தமிழர்கள் ஏற்கனவே அளவுக்கு அதிகமாக வலிகளைச் சுமந்து விட்டார்கள். இப்போது பக்கத்து நாடு பங்காளிகள் என்ற வகையில் நாங்கள்தான் போராட வேண்டும். கட்டாயம் அந்தப் போரைத் தொடங்குவோம். ஈழத்து மக்களுக்கு நியாயம் கிடைக்கிற வரையில் நிறுத்தாமல் போராடுவோம். வெற்றி கிட்டுகிற வரையில் போராடுவோம். ஆனால் முடிவு ஈழத்தமிழர்கள் கைகளில்தான்.

Ingen kommentarer:

Legg inn en kommentar