பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா லக்பிம ஆங்கிலப் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் அதிகாரப் பகிர்வு, உதயன் செய்தி ஆசிரியர் மீதான தாக்குதல் என்பன பற்றி கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகங்களுக்கு தமிழ் அமைச்சர் ஒருவர் தெரிவிக்கும் கருத்துக்களை தமிழ் மக்கள் அறிந்து கொள்வதற்காக அந்தப் பேட்டியின் மொழியாக்கம் இங்கு தரப்படுகிறது.
ஊடகங்களில்
இருந்தே ஆரம்பிப்போம். யாழ்ப்பாணத்தில் பத்திரிகையாளர்கள் பயத்துடனேயே
வாழ்கிறார்கள். உங்கள் வழியில் குறுக்கிடும் எவரையும் விட்டுவைக்காத ஒரு
பயங்கரமான ஆள் நீங்கள் என்று யாழ்ப்பாணத்தில் பத்திரிகையாளர்கள் பலர்
கருதுகிறார்கள்...
இந்தக் குற்றச்சாட்டுக்களில் ஒன்றும்
நிரூபிக்கப்படவில்லை. அவை உண்மையாக இருந்தால் யாழ்ப்பாணத்தில் எந்தவொரு
பத்திரிகையும் இருக்கப்போவதில்லை. புலிகள் இருந்தபோது அவர்கள் ஊடகங்களை
ஒடுக்கினார்கள். ஆனால், நாங்கள் அதை எப்போதும் செய்ததில்லை. இனிமேலும்
செய்யமாட்டோம்.
தேர்தல் முடிந்த கையோடு, உதயன்
பத்திரிகையின் செய்தி ஆசிரியர் தாக்கப்பட்டார். எந்தவித விசாரணைகளும்
இன்றியே குற்றச்சாட்டுக்கள் எம்மீது சுமத்தப்பட்டன. ஆனால் அந்தத்
தாக்குதலுக்கு ஒரு பின்னணி இருக்கிறது. தாக்கப்படுவதற்கு முன்னர் அந்தச்
செய்தி ஆசிரியருக்கு முகாமைத்துவத்துடன் பிரச்சினை இருந்திருக்கிறது.
அதனால் அவரை ஒரு அறையில் பூட்டி வைத்திருந்திருக்கிறார்கள். உதயன்
பத்திரிகை நிறுவனத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து கொண்டே
இருக்கின்றன. அந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் கைது
செய்யப்பட்டுள்ளனர். இவையெல்லாம் உதயனின் உள்வீட்டுப் பிரச்சினைகள்,
இப்போது வெளியே வந்திருக்கின்றன.
அவர்கள் (உதயன்) எங்களை விமர்சிப்பதால்
நாங்கள் அவர்களைக் கொல்கிறோம் என்று எங்களை விமர்சிப்பவர்கள்
கூறுகிறார்கள். அது பொய். யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பாக இருந்து கொண்டே
அவர்கள் எங்களைத் தொடர்ந்தும் விமர்சிக்கிறார்கள். கருத்துக்களைக்
கருத்துக்களால் எதிர்கொள்வதே எமது கொள்கை. நாடாளுமன்றத் தேர்தலில் நான்தான்
யாழ். மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகள் பெற்று வெற்றி பெற்றேன்.
அதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் என்னைப் பார்த்துப்
பயப்படுகிறார்கள். நான் அவர்களில் இருந்து வேறுபட்ட நிலைப்பாட்டைக்
கொண்டிருக்கிறேன். தேசிய அரசியல் நீரோட்டத்தில் நான் இணைந்தேன்; அரசுடனும்
இணைந்திருக்கிறேன். இருப்பினும் நான் ஓர் அப்பாவி. புலிகளிடம் இருந்து
பாதுகாத்துக் கொள்வதற்காகவே கடந்த காலங்களில் மட்டுமே நாம் ஆயுதங்களை
வைத்திருந்தோம்.
வெளியே போனால் ஈபிடிபியினர்
கொன்றுவிடுவார்கள் என்ற அச்சம் காரணமாக, உதயன் பத்திரிகையின் பிரதம
ஆசிரியர் கானமயில்நாதனும் செய்தி ஆசிரியர் குகநாதனும் 6 ஆண்டுகளாக
பத்திரிகை அலுவலகத்துக்குள்ளேயே வாழ்கிறார்களே...
அது உண்மை என்று நான் நினைக்கவில்லை.
அப்படி என்றால் உதயனின் நிர்வாக இயக்குநரான ஈ.சரவணபவன் எப்படி எல்லா
இடங்களுக்கும் திரிகிறார்? அவர்தான் எங்களுடைய முதல் எதிரி என்று நீங்கள்
சொல்லக்கூடும், அப்படி இருக்கும்போது எந்தத் தடைகளும் இன்றி அவரால் எப்படி
எல்லா இடமும் செல்ல முடிகிறது? எனவே அவர்கள் சொல்வதில் உண்மையில்லை.
நாங்கள் கருத்துக்களைக் கருத்துக்களால்தான் எதிர்கொள்கிறோம்; துப்பாக்கிச்
சன்னங்களால் அல்ல. புலிகளை வளர்த்தெடுத்தவர்கள்தான் அதைச் செய்கிறார்கள்.
ஒரு விவாதத்துக்கு நான் கேட்கிறேன், நான் ஆபத்தானவனாக இருந்தால், அவர்கள்
எம்மை விமர்சிப்பதை நிறுத்த என்னால் முடியும். ஆரம்பத்தில் இருந்தே என்னைக்
கொல்வதற்கு அவர்கள் முயன்று வருகிறார்கள். என்னைக் கொல்வதை
நியாயப்படுத்துவதற்காக எனக்கு எதிராகக் கேவலமான அவதூறுகளைப் () பரப்பி
வருகிறார்கள். ஆனால் என்னைக் கொலை செய்வதில் தோற்றுவிட்டார்கள். அதனால்
இப்போது எனது மதிப்பைக் கெடுக்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறார்கள்.
ஜனாதிபதி விடுத்த அழைப்பை
ஏற்று, நாட்டை மீளக்கட்டியெழுப்பும் நோக்கோடு வந்த அறிவாளியான பேராசிரியர்
ரட்ணஜீவன் கூல் திடீரென நாட்டைவிட்டு வெளியேறி உள்ளார்...
யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர்
தேர்தல் நடப்பதற்கு முன்னர் அவர் (கூல்) என்னைப் பற்றி மிக உயர்வாகப் பேசி
வந்தார். துணைவேந்தராக அவர் வரவில்லை என்றதும் என்னை
விமர்சிக்கிறார். ஆனால், நீங்கள் யாழ்ப்பாணத்தில் குற்றவியல் வழக்கு ஒன்றை
அவருக்கு எதிராகத் தாக்கல் செய்ததன் காரணமாகவே அவர் நாட்டைவிட்டு ஓடினார்
என்று அறிக்கைகள் கூறுகின்றனவே?
நான் எந்தக் குற்றவியல் வழக்கும் பதிவு
செய்யவில்லை. அதைப் பற்றி எனது சட்டத்தரணியிடம் நீங்கள் கேட்கலாம். அவர்
எனது பெயரையும் புகழையும் கேவலப்படுத்துகிறார். அதனால் நான் முறையிட்டேன்.
ஊகாவற்றுறையில் நான் ஏன் முறையிட்டேன் என்றால், 2002இல் அங்கு தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பினர்
அமைதியின்மையை ஏற்படுத்தினர்; நான்
இராணுவத்துக்குப் பெண்களைக் கூட்டிக் கொடுத்தேன் என்று அவர் கூறினர்.
அதனால் இந்தத் தடவை அங்கு முறையிட்டேன். அதனால் பொலிஸார் அவரிடம் (கூல்)
வாக்குமூலம் பெற்றனர். நீதிமன்றத்தில் தோன்றி ஆதாரங்களைத் தரும்படி நீதிபதி
அவரிடம் கேட்டார்.
இப்போது அவர் நாட்டைவிட்டு
வெளியேறிவிட்டார். நீதிபதியை விமர்ச்சிக்கிறார். வெளிநாட்டுக்குச்
செல்வதற்கான ஒரு காரணமாக அவர் இதனைப் பயன்படுத்துகிறார். கடந்த தடவையும்
அவர் இந்த மாதிரியே செய்தார். புலிகள் அவரை துணைவேந்தராக்க அனுமதிக்க
மாட்டார்கள் என்று தெரிந்திருந்தும் அவர் விண்ணப்பித்தார். ஆனால் "இல்லை,
துணைவேந்தராக நீங்கள் வரவேண்டாம்'' என்று தமிழ்ச் செல்வன் சொல்லிவிட்டார்.
அப்படியே அவர் துணைவேந்தராக வந்திருந்தால் புலிகள் அவரைக்
கொன்றிருப்பார்கள். புலிகளின் நிலைப்பாடு சரியோ தவறோ, அது வேறு விடயம்
ஆனால் அமெரிக்காவுக்குப் போவதற்கான சந்தர்ப்பமாக அவர் அதனைப் பயன்படுத்திக்
கொண்டார். அதுதான் அவரது பண்பு.
துணைவேந்தராக்குவதாக ஜனாதிபதி
அவருக்கு வாக்குக் கொடுத்திருந்தார். ஆனால், நீங்கள் எதிர்த்ததால் பின்னர்
அதனை அவர் கைவிட்டார் என்று சொல்லப்படுகிறது....
இல்லை. நான் எதிர்க்கவில்லை. கடந்த முறை
(2006) நான் அவரை சிபாரிசு செய்தேன். இப்போது இங்கே ஜனநாயகம் இருக்கிறது.
அதனால் யாழ். பல்கலைக்கழகப் பேரவையில் நான் தலையிடவில்லை. அதனால் வசந்தி
முதலாவதாக வந்தார், கூல் கடைசியாக வந்தார். ஜனாதிபதி வசந்தியை துணைவேந்தராக
நியமித்தார்.
கடந்த தடவை, துணைவேந்தர் தெரிவுப்
பட்டியலில் 3ஆவதாக வந்த கூலை நான் சிபாரிசு செய்தேன். ஏனெனில், புலிப்
பயங்கரவாதம் அங்கிருந்ததால் நல்ல மனிதர்களைத் தெரிவு செய்வதற்கு
அங்கிருந்தவர்கள் அச்சப்பட்டார்கள். ஆனால், இந்தத் தடவை கூல் என்னிடம்
வந்து தன்னைச் சிபாரிசு செய்யும்படி பல தடவைகள் வேண்டினார். நான் அவரிடம்
சொன்னேன், அதனை பேரவையே பார்த்துக் கொள்ளட்டும், நான் அதில் என்னை
ஈடுபடுத்திக் கொள்ளப்போவதில்லை என்று...
யாழ். பல்கலைக்கழகப் பேரவை
உறுப்பினர் பதவிகளையும் அங்கிருக்கும் முக்கிய பதவிகளையும் உங்கள்
ஆதரவாளர்கள் மட்டுமே வகிக்க முடிகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளதே...
(குறிப்பு: இம்முறை யாழ்.பல்கலைக்கழகப்
பேரவைக்குத் தெரிவான 13 உறுப்பினர்கள் டக்ளஸ் தேவானந்தாவின் அடிவருடிகள்
என்று பேராசிரியர் கூல் சண்டே லீடர் பத்திரிகையில் எழுதிய தனது கட்டுரையில்
குறிப்பிட்டிருந்தார்.)
அது பிழை. எல்லாப் பல்கலைக்கழங்களிலும்
என்ன நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறதோ அதுவே இங்கும் பின்பற்றப்படுகிறது.
உங்கள் பகுதிகளில் என்ன செய்கிறார்கள்?
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவே பேரவை உறுப்பினர்களை நியமிக்கிறது.
அப்படித்தான் யாழ்ப்பாணத்திலும் நடக்கிறது.
ஆனால், நீங்கள் கொடுத்த பட்டியலில் இருந்தவர்களைத்தான் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நியமித்தது என்ற குற்றச்சாட்டு உள்ளதே...
எல்லோரும்தான் பெயர்ப் பட்டியல்
கொடுத்தார்கள். நானும் கொடுத்தேன், மாவை சேனாதிராசா, மனோ கணேசன் மற்றும்
பலர் என்று எல்லோரும்தான் கொடுத்தார்கள். அதன் பின்னர் யாரை நியமிப்பது
என்பது மானியங்கள் ஆணைக்குழுவைப் பொறுத்த பணி.
நீங்கள் அதிகாரப் பகிர்வு
பற்றிக் குறிப்பிட்டவர். இப்போது இருப்பது உங்களுடைய அரசு. ஆனால் போர்
இரண்டு வருடங்களுக்கு முன்னர் முடிந்து விட்டபோதும் உங்கள் அரசு இதுவரையில்
ஒன்றுமே செய்யவில்லையே..?
அதனால்தான் 6 மாத கால வரையறையுடன்
நாங்கள் ஒரு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை நியமித்துள்ளோம். முன்னர்
நியமிக்கப்பட்ட தெரிவுக் குழுக்களுக்கு காலவரையறைகள் இல்லை. தெரிவுக் குழு
என்ற யோசனையை நான்தான் முன்வைத்தேன்.
நாங்கள் அறிந்த வரையில் இந்தத்
தெரிவுக்குழு அதிகாரங்களைப் பங்கீடு செய்வதைப் பற்றி விவாதிக்கப்போவதில்லை
என்று தெரிகிறது. தேசிய நல்லிணக்கத்தை எப்படி ஏற்படுத்துவது என்பது
தொடர்பிலேயே இந்தத் தெரிவுக்குழு ஆராயும் என்று சொல்லப்படுகிறதே...
இல்லை. இந்தத் தெரிவுக்குழு அரசியல் தீர்வு பற்றி ஆராயும்.
ஆனால், இது ஒரு காலம் கடத்தும் உத்தி என்ற நம்பிக்கை அனேகமானவர்களிடம் குறிப்பாக எதிர்க்கட்சிகளிடம் இருக்கிறதே...
அதுதான் எதிர்க்கட்சியினரின் அரசியல். இல்லையா...
இருந்தாலும், அனைத்துக் கட்சிக்
குழு அறிக்கை, மங்கள முனசிங்க ஆணைக்குழு அறிக்கை மற்றும் இதற்கு முன்னர்
நியமிக்கப்பட்ட குழுக்களின் அறிக்கைகள் என்பவற்றுக்கு என்ன நடந்தது? ஏன்
அவற்றில் ஒன்று அரசில் தீர்வுக்கான அடிப்படையாக அமைய முடியாது?
அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு
அரசாங்கங்களுக்கு உரியவை. ஒவ்வொரு அரசுகளும் தமக்கென பிரத்தியேக கொள்கைகளை
வைத்துள்ளன. வேறுவேறு வழிவகைகளைக் கையாள்கின்றன.
ஆனால், அனைத்துக் கட்சிக் குழு இந்த அரசால் இந்த ஜனாதிபதியால்தானே நியமிக்கப்பட்டது?
அப்போது புலிகள் இருந்தார்களே! இப்போது
புலிகள் போய்விட்டார்கள். அதனால் இது வேறுபட்ட ஒரு சூழ்நிலை. புலிகள்
இருந்தால் அவர்கள் தீர்வு எட்டப்படுவதற்கு அனுமதிக்கமாட்டார்கள். இப்போது
இந்த அரசு உறுதியானது, அது தீர்வு ஒன்றைத் தருவதற்கு இடம்தாருங்களேன்...
13ஆவது திருத்தம் ஏற்கனவே அரசமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆனால், அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லையே...
அது ஒரு பிரச்சினைதான். ஆனால் எத்தகைய
இடைவெளிகள், பிரச்சினைகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் தெரிவுக்குழுவின்
மூலமாகத் தீர்த்துக்கொள்ளலாம்.
அதிகாரப் பகிர்வு தொடர்பில் உங்கள் சிந்தனையில் உண்மையில் என்ன இருக்கிறது?
13 ஆவது திருத்தமும் அதற்கு மேலும்.
அரசில் பல கட்சிகள் இருக்கின்றன; அவற்றுக்கிடையில் பல கருத்து முரண்பாடுகள்
இருக்கலாம். நாம் ஒன்றாக அமர்ந்திருந்து அவற்றை எல்லாம் பேசித் தீர்க்க
வேண்டும்.
13ம் மேலதிகமும் என்கிறீர்களே அவை என்ன?
அது பற்றியும் நாங்கள் கதைக்கத்தான் வேண்டும்.
பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களா?
இது ஒரு பிரச்சினைதான். இதில் அரசின்
கருத்துக்கு மாறுபட்ட பார்வையை நான் கொண்டிருக்கலாம். நான் பொலிஸ்
அதிகாரங்களைக் கோரலாம், ஆனால் ஜனாதிபதி அதைத் தர மறுக்கலாம். எந்தப்
பிரச்சினையாக இருந்தாலும் ஜனாதிபதியுடன் நாங்கள் கலந்தாலோசிக்கலாம். என்ன
தேவையோ அவற்றை அவர் உள்ளடக்கிக் கொள்வார். தெரிவுக் குழு எந்த ஒரு
தீர்வையாவது ஏற்றுக் கொண்டால் அதை நடைமுறைப்படுத்துவதில் தனக்கு எந்தப்
பிரச்சினையும் இல்லை என்று அவர் கூறுகின்றார்.
உங்கள் அரசில் சில கடும்போக்கு
சிங்கள பௌத்த கட்சிகள் இருக்கின்றன. அவர்களுடன் ஒரு தீர்வுக்கு வருவது
சாத்தியம் என்று நீங்கள் கருதுகிறீர்களா?
இதுவரைக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. நாங்கள் சேர்ந்தே வேலை செய்கிறோம்.
வடக்கில் நடந்த உள்ளூராட்சித்
தேர்தலில் அதிகூடிய வாக்குகளை வென்றிருக்கக்கூடிய தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு, யாழ்ப்பாணத்தின் அபிவிருத்திப் பணிகளில்
ஓரங்கட்டப்படுகிறதே...
அவர்கள் எதிர்த்தரப்பில்
இருக்கிறார்கள். பொதுவாக எதிர்த் தரப்பில் இருப்பவர்கள் அரசின் எல்லாத்
திட்டங்களையும் எதிர்ப்பார்கள் என்கிற ஒரு மரபு இலங்கையில் இருக்கிறது.
நாங்கள் என்னதான் நல்லது செய்தாலும் அவர்கள் விமர்சிப்பார்கள்.
யாழ்ப்பாணத்துக் கடைசி மன்னனின்
சிலையைப் புனரமைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிக்கு அவர்கள் எப்படி
எதிர்வினையாற்றினார்கள் என்பதையே உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். யாழ்.
மாநகர சபை அதனைப் புனரமைக்க விரும்பியது. நாங்கள் அந்தச் சிலையை முழுமையாக
அழித்துவிட்டு புத்தர் சிலையுடன் சேர்த்து அதனை வைக்கப்போகிறோம் என்று
கூட்டமைப்புக் கூறியது. இப்போது நாங்கள் அதனைப் புனரமைத்துவிட்டோம்; அது
அழகாகவும் இருக்கிறது. அவர்களின் தேவையெல்லாம் பிரச்சினைகள்
தீர்ந்துவிடக்கூடாது என்பதே.
இந்தியஇலங்கை ஒப்பந்தத்தால் கிடைத்த
சந்தர்ப்பத்தை யார் கெடுத்தது? இந்திய அரசா? அல்லது இலங்கை அரசா? இல்லை;
அதனை நாசமாக்கியது இலங்கையின் தமிழ் அரசியல் தலைமைதான். புலிகள் அதனை
நிராகரித்தார்கள்; ஈபிஆர்எல்எவ்
அமைப்பினர் அதனைத் தவறாகப் பயன்படுத்தினார்கள்.
1987இல் நீங்கள் தேசிய
அரசியலுக்குள் நுழைந்தீர்கள். பின்னர் சந்திரிகாவுடன் இணைந்தீர்கள்.
வந்தவழியைத் திரும்பிப் பார்க்கும்போது, உங்கள் முடிவு குறித்துத்
திருப்திப்படுகிறீர்களா?
ஆம்! சர்வநிச்சயமாக. இந்தத் தடவை
தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனவாதப் பிரசாரத்தில் ஈடுபட்டது
சங்கிலியன் புத்தா. தமிழ் ஊடகத்துறையினர் கற்பனாவாதங்களுக்கு அதிகம்
இடம்கொடுத்தார்கள். ஒன்றிணைந்த சிறிலங்காவுக்காக நான் என்றும் உறுதியாக
நிற்கிறேன்; அவர்கள் அதற்குச் சவால் விடுகிறார்கள்.
அரசியல் தீர்வு ஒன்றை எட்டுவதற்கு 6 மாத காலம் மட்டும் போதும் என்று நீங்கள் கருதுகிறீர்களா?
ஆம்! இது மற்றொரு பொன்னான வாய்ப்பு;
அதனை இழந்துவிடாதீர்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நான் சொல்லி
இருக்கிறேன். நடைமுறைச் சாத்தியமான ஒரு தீர்வை நாம் முன்வைக்க வேண்டும்;
அப்படியே அரசு ஏமாற்றினால் அரசு இப்படித்தான் நடந்துகொள்கிறது என்று வெளி
உலகுக்கும் மக்களுக்கும் வெளிப்படுத்துவோம் என்று சொல்லி இருக்கிறேன்.
அவர்களின் பதில் என்ன?
அவர்களுக்குப் பிரச்சினைகள்
தீரவேண்டாம். வன்னிப் போரின் போதுகூட நான் அவர்களிடம் சொன்னேன், "இப்போது
கிழக்குப் போய்விட்டது; அழிவுகளில் இருந்து வடக்கையாவது மீட்க வேண்டும்.
நீங்கள் ஜனாதிபதியிடம் பேசுங்கள். நான் அதற்கான கூட்டத்தை ஏற்பாடு செய்து
தருகிறேன். எல்லோருமாகப் பிரச்சினையைத் தீர்க்க முனையலாம்'' என்று
சொன்னேன். அவர்கள் எல்லாவற்றுக்கும் "ஓம்! ஓம்!'' என்று போட்டு அதனைக்
கைவிட்டார்கள். இப்போது அவர்கள் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள்.
புலிகளுடன் பேசாமல் போரை எப்படி முடிவுக்குக் கொண்டு வந்திருக்க முடியும்?
நான் அவர்களிடம் (கூட்டமைப்புக்கு)
புலிகளையும் அழைத்து வாருங்கள் என்றுதான் சொன்னேன். கூட்டமைப்புத்தான்
புலிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தியது. ஜனாதிபதியாக வந்தபோது, தான்
புலிகளுடன் பேசத் தயாராக இருக்கிறார் என்று மஹிந்த ராஜபக்ஷ
அறிவித்திருந்தார். ஒவ்வொரு ஜனாதிபதிகளும் பிரச்சினையைத் தீர்க்க முயற்சி
செய்திருக்கிறார்கள். யார் அவர்களுக் குச் சந்தர்ப்பத்தை வழங்காமல்
விட்டவர்கள்? கூட்டமைப்பினரும் புலிகளும்தான்.
தமிழ் ஆயுதக் குழுக்களின்
பயணத்தில் தற்போதும் உயிருடன் இருக்கும் ஒரே தலைவர் நீங்கள்தான். கடந்த கால
நினைவுகளுடன், தமிழ் ஆயுதரப் போராட்ட வரலாற்றைத் திரும்பிப்
பார்க்கும்போது எப்படியிருக்கிறது?
ஆமாம்! ஆமாம்! சிலசமயங்களில், பழையவற்றை நினைத்துப் பார்க்கும்போது நான் மட்டுமே உயிருடன் இருக்கிறேன் என்பது ஆச்சரியமளிக்கிறது.
எப்படி நீங்கள் மட்டும் வாழ முடிந்தது?
தமிழில் ஒரு பழமொழி இருக்கிறது,
பாம்பின் கால் பாம்பறியும் என்று. இது என்னுடைய இடம், இங்கேதான் நான்
படுத்து எழும்பினேன். இது ஒரு பதுங்கு குழி என்று மக்கள் சொல்லக்கூடும்.
நீங்களே பாருங்கள் இது ஒரு பதுங்கு குழியா? நான் விழிப்பாக இருந்ததனால்
நான் வாழ்கிறேன். என்னைச் சுற்றி இருந்தவர்களும் உசாராக இருந்தார்கள். நான்
எப்போதும் புலிகளுக்கு ஒருபடி முன்னே இருந்தேன்.
Ingen kommentarer:
Legg inn en kommentar