கூடு விட்டுக் கூடு பாயும்சட்டங்கள்

ஒரு காலத்தில் சிறுவர் சஞ்சிகைகளில் பலவிதமான மந்திர தந்திரக் கதைகள் வெளிவருவதுண்டு. அவை பொழுதுபோக்குக்குரியனவாக அமைந்த போதிலும் சிறுவர்களைத் திகிலூட்டும் வகையில் அமைவதுடன் சிறுவர்கள் மட்டுமன்றி பெரியவர்கள் கூட விரும்பிப் படிக்குமளவுக்கு அவை சுவையாக அமைந்திருக்கும். அவற்றில் வரும் பல்வேறு விதமான அதிசயங்களில் கூடுவிட்டுக் கூடு பாய்வதும் ஒன்றாகும். அதாவது சில மந்திரவாதிகள் தங்களின் சில தேவைகளை நிறைவேற்றவோ அல்லது தங்கள் உயிர் பாதுகாப்புக் கருதியோ தங்கள் உடலை விட்டு உயிரை வெளியேற்றி இன்னுமொரு உடலுக்குள் புகுந்து கொள்வதாகும்.
 
அந்த நாள்களில் அவற்றைப் பலரும் விரும்பிப் படித்த போதும் அவை முற்று முழுதான கற்பனை என்பதில் எவருக்குமே சந்தேகமிருந்ததில்லை. ஆனால் இன்று இவை இலங்கையில் யதார்த்த மாகிவிட்டதை அதிசயப்படாமலே எம்மால் காணக்கூடியதாக இருக்கிறது.
 
இதுவரை எமது நாட்டில் சகலவித மான அரசின் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளுக்கும் சட்டபூர்வமான அனுமதி வழங்கி வந்த அவசரகாலச் சட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அதன் முக்கிய மூன்று பிரிவுகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குள் கொண்டு வரப்பட்டுவிட்டன.

அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டது ஏன்?
 
ஒரு உடலுக்குள் இருந்த அந்தப் பயங்கர சட்டப் பிரிவுகள் இன்னொரு உடலுக்குள் கூடுவிட்டுக் கூடு பாய்ந்து விட்டன. அப்படியானால் அதற்காக எவரின் தேவைகளுக்காக அவசரகாலச் சட்ட விதிகள் நீக்கப்பட்டன என்ற கேள்வி இங்கே எழத்தான் செய்கிறது.இப்போது இலங்கை அரசு இரண்டு விதமான சிக்கலுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. ஒன்று செப்ரெம்பரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத் தொடர். இதில் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், நீண்ட காலமாக விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் பிரச்சினைகள், உயர் பாதுகாப்பு வலயங் கள் போன்ற விவகாரங்கள் தொடர்பாக அரசு பெரும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் என எதிர் பார்க்கப்படுகிறது. அந்த வேளையில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதைச் சுட்டிக் காட்டி நிலைமை சுமுகமாகி வருவதாக ஒரு மாயையை உருவாக்கி கண்டனங்களின் தாக்கத்தைத் தணிப்பதற்கு இது உதவலாம் என அரசு கருதுகின்றது.
 
மற்றது இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. வரிச்சலுகை நிறுத்தப்படுவதற்கு அவசரகாலச் சட்டம் நீக்கப்படாமையும் ஒரு காரணம் எனவே காட்டப்பட்டது. வெகுவிரைவில் இந்தச் சலுகை தொடர்பான மீளாய்வு இடம்பெறவுள்ளது. அங்கு அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டமையை சுட்டிக் காட்டி மீண்டும் அந்த வரிச்சலுகையை கோருவதற்கு இது பயன்படுத்தப்படலாம்உண்மையாகவே அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டிருந்தால் நடைமுறையில் ஒரு பெரும் மாற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும். ஆனால் நிலைமையோ முன்பிருந்ததை விட மோசமாக்கப்பட்டுள்ளதே யதார்த்தமாகும்.ஒவ்வொரு சின்னச் சின்ன விடயங்களிலும் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்குப் பயங்கரவாதத் தடைச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்து விட்டன.
 
அண்மையில் நாவாந்துறையில் மர்ம மனிதன் தொடர்பாக படையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே முறுகல் நிலை தோன்றியது. அதையடுத்து வீடு வீடாகப் புகுந்து நோயாளிகள், முதியவர் உட்பட 100 பேரை அடித்து நொருக்கிக் கொண்டு சென்று பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இவர்கள் மீது அரசுக்கு எதிராகச் சதி செய்ததாகவும் ஆயுதப் படையினரைக் கடமை செய்யவிடாது தடுத்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இராணுவப் பேச்சாளர் கூறியுள்ள கருத்து
 
இது தொடர்பாகக் கருத்து வெளியிட்டுள்ள இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் நிஹால் ஹப்பு ஆராய்ச்சி மீது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்படும் எனத் தெரிவித்துள்ளார்.இது மட்டுமன்றி ஏழாலையில் கிறீஸ் மனிதர்கள் எனக் கூறப் படுபவர்களுக்கு எதிரான ஒரு துண்டுப் பிரசுரத்தை விநியோகித்தார் என்ற பேரில் ஒரு இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது சாதாரணமாக மக்களுக்கு எதிராக எப்படி எப்படியெல்லாம் இந்தப் பயங்கரவாதத்  தடைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்பதற்கான முன்னறிவித்தல் என்றே கருதவேண்டியுள்ளது.
 
சாதாரண சட்டங்களின் கீழ் பொலிஸார் சிவில் நிர்வாகத்தின் ஒரு பகுதியினரே. இவர்களே பொதுமக்களின் பாதுகாப்பு, சட்டம், ஒழுங்கு நிலை நிறுத்தல் என்பவற்றுக்குப் பொறுப்பானார் கள். ஆனால் அவசரகாலச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இரா ணுவம் ஈடுபடுத்தப்பட்டது. வடக்குக் கிழக்கில் பாதுகாப்பு நடவடிக்கைளில் மட்டுமன்றி சாதாரண ஒவ்வொரு சிவில் நிர்வாக நடவடிக்கைகளிலும் இராணுவத்தினரின் தலையீடு இருந்தது. பாடசாலை நிகழ்வுகள் முதல் அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் வரை அனைத்திலும் படையினரின் பிரசன்னமும் தலையீடும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன என்ற வகையில் விடயங்கள் இடம்பெற்றன.
 
இப்போது அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டு விட்டது. ஆனால் ஏற்கனவே இருந்து வந்த நடைமுறைகளில் எவ்வித மாற்றமும் இல்லை. இதுவரை வடக்கில் இராணுவ சோதனைச் சாவடிகள், காவலரண்கள் அகற்றப்படவுமில்லை. இராணுவம் முகாம் களுக்குள் முடக்கப்படவுமில்லை.
 
இதேவேளையில் அவசரகாலச் சட்டம் இல்லாமலே படையினரை நாட்டின் எப்பகுதியிலும் சேவைக்கு அழைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது சிவில் நிர்வாகத்தில் பாதுகாப்புக்குப் பொறுப் பான பொலிஸ் மா அதிபர் பாதுகாப்பு அமைச்சுக்கும் கோரிக்கை  வைக்காத நிலையில் கூட ஜனாதிபதி இந்த அதிகாரத்தைப் பயன்படுத்த முடியும். இப்படியான நிலையில் அவசரகாலச் சட்டம் நீக்கப் பட்டமைக்கு அர்த்தம் எதுவாக இருக்க முடியும். அதைவிட அவசரகாலச் சட்டத்தின் மூன்று பிரிவுகள் இப்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குள் கூடுவிட்டுக் கூடு பாய்ந்து விட்டன.
 
மக்களின் எதிர்பார்ப்பு
அவசரகாலச் சட்டம் நீக்கப்படவுள்ளது என அறிவிக்கப்பட்ட போது தமிழ் மக் கள் உயர்பாதுகாப்பு வலயங்கள் நீக்கப் படும் எனவும் அவற்றுக்காக அபகரிக் கப்பட்ட காணிகள் மீளவும் வழங்கப்பட்டு மக்கள் குடியமர அனுமதிக்கப்படுவார் கள் எனவும் எதிர்பார்த்தனர். அது மட் டுமன்றி விசாரணைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவர் அல்லது சாதாரண சட்டங்களின் கீழ் நீதிமன்றில் நிறுத் தப்பட்டு பிணையில் விடப்படுவர் எனவும் எதிர்பார்த்தனர். மேலும் சரண டைந்து புனர்வாழ்வு என்ற பேரில் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகளும் விடுக்கப்படுவர் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
 
இந்த எதிர்பார்ப்புகள் அனைத்தும் இந்த மூன்று அவசரகாலச் சட்டப் பிரிவுகளும் பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குள் புகுத்தப்பட்டதன் மூலம் நிர்மூல மாக்கப்பட்டன. இவ்வாறு பயங்கரவாதத் தடைச்சட்டம் புனர் ஜென்மம் எடுப்பதற்கும் கிறீஸ் மனிதர்கள் எனப்படும் மர்மமனிதர்களுக்கும் சம்பந்தம் உண்டா என்ற கேள்வி எழுகிறது. நிச்சயமாக அப்படியொரு தொடர்பு இருப்பதாகவே கருத வேண்டியது தவிர்க்க முடியாமலுள்ளது.
 
இரத்தினபுரி மாவட்டத்தில் சில நடுத்தர வயதுப் பெண்களின் கொலையுடன் ஆரம்பமான மர்ம மனிதன் விவகாரம் முதலில் மலையகத்தின் பல பகுதிகளுக்கும் விரிவடைந்தன. பெண்கள் மீது பாலியல் சேட்டைகள், மரத்திலிருந்து குதித்து அல்லது மறைவிடங்களிலிருந்து தோன்றி மிரட்டுவது, சந்தேகத்துக்கிடமான வகையில் நடமாடி விட்டு ஓடுவது போன்ற அர்த்தம் காண முடியாத சம்பவங்களே இந்த மர்ம மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டன. இரத்தினபுரியில் நடந்த சம்பவங்களை விட வேறு எங்கும் கொலையோ, கொள்ளையோ, பாலியல் வன்புணர்வோ மேற்கொள்ளப்படவில்லை. அதேவேளையில் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் உறவினர்களைத் தேடி வந்தவர்கள், யானை கணக்கெடுக்க வந்தவர்கள், தேன் சேகரிக்க வந்தவர்கள் எனக் கூறப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

நீதியின் முன் நிறுத்தப்படாத கிறீஸ்
 
இங்கு கவனத்தில் எடுக்கப்பட வேண்டியது என்னவெனில் கிறீஸ் மனிதர்கள் எனச் சந்தேகிக்கப்பட்டவர்கள் எவரும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை. மாறாக அவர்களைப் பிடித்தவர்கள் அவர்களைத் தாக்கியவர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.அடுத்து இந்தப் பிரச்சினை கிழக்கில் பரவியது. வாழைச்சேனையில் ஆரம்பித்த இந்த விவகாரம் கல்முனை, சம்மாந்துறை, களுவாஞ்சிக்குடி, வெல்லா வெளி எனப் பரவி கிண்ணியாவரை நீண்டது.இந்த விடயங்களில் இப்படியான சந்தேகத்துக்கிடமானவர்கள் ஓடிப் போய் பொலிஸ் நிலையங்களுக் குள்ளோ படை முகாம்களுக்குள்ளோ மறைந்துவிட்டனர். மக்களால் பிடித்து ஒப்படைக்கப்பட்டவர்களும் விடுவிக் கப்பட்டனர். இதன் காரணமாக பொலிஸாருக்கும் மக்களுக்குமிடையேயும் படையினருடனும் மோதல்கள் ஏற்பட்டன. இதில் படையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் சில பொதுமக்கள் இறந்தனர். பலர் படுகாயங்களுக்கு உள்ளானார்கள். பலர் கைது செய்யப் பட்டனர். ஆனால் எந்த ஒரு மர்மநப ரும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை.
 
இதே மர்மநபர் விவகாரம் வடக்கின் பல பகுதிகளுக்கும் பரவியது. மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபர்கள் அனைவருமே விடுவிக்கப்பட்டு விட்டனர். ஆனால் மர்ம நபர்களைப் பிடிக்க முயன்ற பலர் அடித்து நொருக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். நாவாந்துறையில் வீடுகளுக்குள் புகுந்து கைது செய் யப்பட்டவர்கள் மேல் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுக்கப்படவுள்ளது.
 
மர்மமனிதர்களின் நோக்கம் என்ன?
மலையகத்திலும் சரி கிழக்கிலும் சரி வடபகுதியிலும் சரி இந்த மர்ம மனிதர்களின் நடமாட்டங்கள் மக்கள் நெருக்கமாக வாழும் பகுதிகளில் அதாவது மக்கள் உடனடியாக ஒன்றுகூடக் கூடிய இடங்களிலேயே இடம்பெற்றுள்ளன. அப்படியானால் இதன் நோக்கம் என்ன? மக்கள் விரட்டும் போது மர்த மனிதர்கள் ஓடிப்போய் படைமுகாம்களுக்குள் மறைவது ஏன்?மக்களை வீதியில் இறக்கி மக்களுக்கும் படையினருக்குமிடையே முறுகல் நிலையை ஏற்படுத்தி ஓர் அசாதாரண நிலை நிலவுவதாக ஒரு தோற்றப் பாட்டை ஏற்படுத்தி இதன் அடிப்படையில் அடக்குமுறைச் சட்டங்களை மேலும் இறுக்குவதே நோக்கம் என்பது தெளிவாகிறது.
 
இதைப் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தனா செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்த கருத்திலிருந்து தெளிவாகவே புரிந்துகொள்ள முடியும்.அவர் வெளிநாட்டுச் சதிகளின் ஒரு பகுதியாகவே மர்மமனிதர் விவகாரம் விளங்குவதாகவும் அதன் காரணமாகக் குற்றவியல் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். ஏற்கனவே அப்படி ஒரு முயற்சி நீதியமைச்சரால் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு ஐ.தே.கட்சி யின் எதிர்ப்புக் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
அதாவது மர்மதனிதர் விவகாரம் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்ட பின்பு பாதுகாப்புச் சட்டத்தையும் குற்றவியல் சட்ட்களையும் மேலும் வலுப்படுத்தி அடக்குமுறையைத் தொடர காரணங் கள் உருவாக்கத் திட்டமிட்டு மேற் கொள்ளப்பட்டது என்பதில் சந்தேக மில்லை. அடிப்படையில் அவசரகாலச் சட்டம் இப்போ கூடுவிட்டுக் கூடு பாய்ந்து வேறு சட்டங்களுக்குள் புகுந்து கொண்டுவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.    

Ingen kommentarer:

Legg inn en kommentar