இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக சில நம்பிக்கைகளை அளிக்கத்தக்க
வடக்கு, கிழக்கு இணைப்பு, சுனாமி நிவாரணக் கட்டமைப்பு என்பன அரசுகள்,
நீதிபரிபாலனம் ஆகிய இரு தரப்பாலும் திட்டமிட்ட வகையில் நிராகரிக்கப்பட்டன.
இன்று அவர்களுக்குள் முரண்பாடு எழும்போது ஒருவரையயாருவர் குற்றம் சாட்டும்
நிலை தோன்றியுள்ளது.
இன்னும் சொல்லப் போனால் நீதியின் சுதந்திரத் தன்மை அப்போது
பாதுகாக்கப்பட்டதா என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. முன்னாள் பிரதம
நீதியரசர் பல விடயங்களை விமர்சனத்துக்குள்ளாக்குவதன் மூலம் தன்னைத் தானே
கூட சுயவிமர்சனம் செய்கிறார் என்பது ஒரு ஆரோக்கியமான விடயம்.
தமிழில் "தன்வினை தன்னைச் சுடும்",
"பிறர்க்கிடு பள்ளம் தான் விழு பள்ளம்", "முற்பகல் செய்யின் பிற்பகல்
விளையும்" போன்ற பல பழமொழிகள் உள்ளன. இவை தனித்தனியாக வெவ்வேறு
கருத்துக்களைக் கொண்டிருந்த போதிலும் சில சம்பவங்களைப் பொறுத்தவரை இவை
எல்லாமே பொருந்தி வந்து விடுவதுண்டு. முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்
சில்வா கூட இந்தப் பழமொழிகள் துரத்த ஆரம்பித்து விட்டன.
அவர் கடந்த ஜனாதிபதித் தேர்தலில்
பகிரங்கமாகவே சரத் பொன் சேகாவுக்கு ஆதரவளித்தமை, அரசின் பல நடவடிக்கைகள்
தொடர்பாக விமர்சனங்களை முன் வைத்தமை என்பன அரச தரப்புக்கு அவர் மீது
சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
அதன் காரணமாக அவர் பதவியிலிருந்த
காலத்தில் மேற்கொண்ட சில நடவடிக்கைகள் தொடர்பாக விசாரணைகளின் போது ஒரு
நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்படவுள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.
ஆனால் அவரோ பதவியிலிருந்து ஓய்வுபெற்று
விட்டதன் பின்னர் சட்டபூர்வமாக விசாரணை நடத்த முடியாது எனக் கூறி வருவதுடன்
அரசு பற்றியும் ஜனாதிபதி பற்றியும் பல சர்ச்சைக்குரிய விமர்சனங்களை
முன்வைத்து வருகிறார்.
தற்துணிவு
முன்னாள் நீதியரசர் மிகவும் துணிச்சலான
ஒரு நீதிபதி எனப் பெயரெடுத்தவர். சட்டங்களின் சிக்கல்களையும் அவற்றின்
பலவீனங்களையும் பாவித்து அரசுக்குச் சாதகமான பல தீர்ப்புகளை வழங்கியவர்.
அது மட்டுமன்றி இனப் பிரச்சினையை மேலும்
சிக்கலாக்கும் வகையில் தீர்ப்புகளை வழங்கியதுடன் தீர்வுக்காக உருவான
சாதகமான நிலைமைகளையும் இல்லாமல் செய்தவர்.
எனினும் அவர் தனது தீர்ப்புக்கள்
தொடர்பாக முன்வைக்கும் விமர்சனங்களும் அப்படித்தான். தீர்ப்புக்களை வழங்க
வாய்ப்பை ஏற்படுத்திய காரணங்களும் முன் வைக்கப்படும் போது பல உண் மைகள்
வெளிச்சத்துக்கு வருகின்றன.
ஒரு நாட்டின் ஜனநாயக விழுமியங்களைக்
கட்டிக்காக்கும் நிறுவனங்களாக சிவில் நிர்வாகம், ஆயுதப் படைகள்,
நீதிமன்றம், சிறைச்சாலை என்பனவே கொள்ளப்படுகின்றன. நாடாளு மன்றம் சட்டவாக்க
அதிகாரத்தைக் கொண்டிருந்த போதிலும் அவற்றை அமுல்படுத்துவதை இந்த
நிறுவனங்களே மேற்கொள்கின்றன.
அதிலும் எந்த விடயத்துக்கும் இறுதி
முடிவெடுக்கும் அதிகாரம் உயர்நீதிமன்றத்துக்கே உண்டு. சில குறிப்பிட்ட
சந்தர்ப்பங்களில் நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்களைக் கூட நிராகரிக்கும்
உரிமை உயர் நீதிமன்றத்துக்கு உண்டு. அதாவது அரசியலமைப்புக்கும் சர்வதேச
பொதுச் சட்ட விதிகளுக்கும் இசைவாக நாட்டில் சட்டத்தின் ஆட்சியை
நிலைநிறுத்துவது நீதிமன்றமே.
சட்டத்திலுள்ள பலவீனங்கள்
ஏற்படுத்தும் சாதகங்கள்
ஆனால் சட்டத்தில் ஏற்படும் சில
பலவீனங்கள், முரண்பாடுகள் காரணமாக அவற்றைப் பயன்படுத்தி அதிகார
பீடங்களுக்குச் சாதகமாகத் தீர்ப்புகள் வழங்கப்படுவதுமுண்டு. ஆட்சியாளர்கள்
அந்தத் தீர்ப்புகளை அடிப்படையாக வைத்து தமக்குச் சாதகமான வகையில் அடுத்த
கட்டத்துக்கு நகர்வதுமுண்டு.
அந்த வகையில் வடக்கு, கிழக்கு இரண்டாகப்
பிரிக்கப்பட வேண்டும் என வழங்கிய தீர்ப்புத் தொடர்பாக அவர் வழங்கிய
விளக்கத்தின் மூலம் 13 ஆவது திருத்தச் சட் டமும், வடக்குக் கிழக்கு
இணைப்பும் எத்தகைய ஒரு படு போலித்தனமானது என்பதையும் இலங்கையின்
ஆட்சியாளர்கள் எவருமே இனப்பிரச்சினையைத் தீர்க்க விரும்பவில்லை என்பதை நாம்
புரிந்து கொள்ள முடியும்.
1987 ஆம் ஆண்டு வடக்கு, கிழக்கு
இணைக்கப்பட்டு அது சர்வஜன வாக் கெடுப்பு மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்
என ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது. அதைக் கொண்டு வந்த ஜே.ஆர். ஜெய
வர்த்தனாவோ அல்லது அடுத்து வந்த ஆட்சி யாளர்களோ எவருமே ஒரு சர்வஜன
வாக்கெடுப்பின் மூலம் வடக்கு, கிழக்கு இணைப்பைச் சட்டபூர்வமாக்கவில்லை.
அது ஒரு சட்ட பூர்வமற்ற இணைப்பாகவே
விளங்கியது. அது மீண்டும் பிரிக்கப்பட வேண்டும் என வழக்கு நீதிமன்றத்தில்
தொடுக் கப்பட்டு அது தனித்தனி மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டன. எந்த ஒரு
ஆட்சியாளரும் ஒரு சர்வஜன வாக்கெடுப்பு மூலம் அந்த இணைப்பைச் சட்டபூர்வ
மானதாக்க விரும்பவில்லை.
வடக்கு, கிழக்கைப் பிரிப்பதில்
உறுதியாகச் செயற்பட்டவர்
அதேவேளையில் இந்தப் பிரச்சினை
நீதிமன்றத்துக்கு வந்த போது அன்றைய உயர்நீதிமன்ற நீதியரசராக இருந்த சரத்
என். சில்வா ஏற்கனவே உள்ள சட்டப் படி ஒரு சர்வஜன வாக்கெடுப்பை நடத்தும் படி
கட்டளையிட்டிருக்கலாம். அந்த வாக்கெடுப்பின் முடிவின் படி பிரிப்பதா,
இணைப்பதா என்று முடிவு செய்திருக்கலாம். ஆனால் அவர் அதைச் செய்ய வில்லை.
அடிப்படையில் அரச தரப்போ, ஜே.வி.பி.யோ,
உயர் நீதிமன்றமோ எல்லோருமே ஒரே கருத்துடன் வடக்கு, கிழக்கைப் பிரிப்பதில்
உறுதியாக இருந்தனர் என்பதுதான் உண்மை.
அதேபோன்று P-TOMS என அழைக் கப்பட்ட
சுனாமிப் பேரழிவின் பின்னரான நிவாரணக் கட்டமைப்பு தொடர்பான வழக்கில்
நீதிமன்றம் இடைக்காலத் தடையுத் தரவை மட்டுமே விதித்தது. அந்த வேலைத்
திட்டத்தை நிறைவேற்ற உயர் நீதிமன்றம் இரு நிபந்தனைகளை விதித்தது. இந்த இரு
திருத்தங்களையும் செய்து சமர்ப்பிப் பதற்கான சந்தர்ப்பத்தை அன்றைய அரசு
செய்யவில்லை. அது அப்படியே கைவிடப்பட்டது.
அதாவது இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக
சில நம்பிக்கைகளை அளிக்கத்தக்க வடக்கு, கிழக்கு இணைப்பு, சுனாமி
நிவாரணக்கட்டமைப்பு என்பன அரசுகள், நீதிபரிபாலனம் ஆகிய இரு தரப்பாலும்
திட்டமிட்ட வகையில் நிராகரிக்கப்பட்டன. இன்று அவர்களுக்குள் முரண்பாடு
எழும்போது ஒருவரையொருவர் குற்றம் சாட்டும் நிலை தோன்றியுள்ளது. இன்னும்
சொல்லப் போனால் நீதியின் சுதந்திரத் தன்மை அப்போது பாதுகாக்கப்பட்டதா என்ற
கேள்வியும் எழத்தான் செய்கிறது.
முன்னாள் பிரதம நீதியரசர் பல விடயங்களை
விமர்சனத்துக்குள்ளாக்குவதன் மூலம் தன்னைத் தானே கூட சுயவிமர்சனம்
செய்கிறார் என்பது ஒரு ஆரோக்கியமான விடயம். எனினும் அவர் செய்த பல
காரியங்கள் அவருக்குத் தன்வினை தன்னைச் சுடும் என்ற நிலைமையை
ஏற்படுத்தியுள்ளமையையும் அவர் ஒப்புக்கொள்ளத் தவறவில்லை.
குறிப்பாக ஹெல்பிங் அம்பாந்தோட்டை என்ற
திட்டத்துக்குக் கிடைக்கப்பெற்ற நிதி தொடர்பாக அப்போது மஹிந்த ராஜ பக்ஷ
மேல் தொடுக்கப்பட்ட வழக்கை அவராகவே சுட்டிக்காட்டுகிறார்.
தெரிவுக் குழுவின் விசாரணை
உண்மையாகவே அந்த நிதி முறையாக
வைப்பிலிடப்படவில்லை எனவும் அது வேறொரு வைப்பில் இடப்பட்டதாகவும் அவர்
தெரிவித்திருந்தார். அதாவது ஒரு ஊழல் நடந்திருப்பதற்கான சாத்தியக் கூற்றை
அவர் மறுக்கவில்லை. அந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மஹிந்த ராஜபக்ஷ சிறை
சென்றிருக்க வேண்டியிருந்திருக்கும் எனவும் இந்த விவகாரத்தில்
சம்பந்தப்படாத ஒருவர் வழக்குத் தாக்கல் செய்தமையைச் சாதகமாக வைத்து
வழக்கைத் தள்ளுபடி செய்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
ஆனால் இன்றோ அவருக்கெதிராகவே விசாரணைகள்
மேற்கொள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழு தன்வினை தன்னைச் சுட்ட கதையாக
அமைக்கப் படவுள்ளது. அன்று ஹெல் பிங் அம்பாந் தோட்டை முறையாக விசாரணை
செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இலங்கையின் தலைவிதியே
வேறுவிதமாக அமைந்திருக்கும். அதுமட்டுமன்றி சரத் என். சில்வா இன்று
சந்திக்கும் நெருக்கடியும் தவிர்க்கப்பட்டிருப்பதுடன் அவர் எவருக்கும்
அஞ்சாத நியாயத்தின் பக்கம் நிற்கின்ற ஒரு நீதிபதி என்ற பெருமையையும்
பெற்றிருக்க முடியும்.
எப்படியிருப்பினும் சட்டங்களின்
பலவீனங்களைப் பயன்படுத்தி நீதி நிர்வாகம் எப்போதுமே அதிகார பீடத்துக்கு
சேவை செய்யும் வகையிலேயே செயற்பட்டு வந்திருக்கிறது என்பதை சரத் என்.
சில்வா விளக்கங்கள் மூலம் நாம் புரிந்து கொள்ள முடிகிறது. இப்படியான
விடயங்களை நியாயபூர்வமான ஊடகங்கள் கூட விமர்சிப்பதில்லை. நீதிமன்றத்
தீர்ப்புகள் விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட முடியாதவை என்ற சட்டத்துக்கு
அஞ்சி அவையும் மௌனம் சாதித்து விடுவதுண்டு.
அதேவேளையில் உயர் நீதி மன்றத்தின்
கட்டளைகளை ஆட்சியாளர்கள் நிறைவேற்றாமல் விடுவது முண்டு. உதாரணமாக நீண்ட
காலம் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள்
உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் அல்லது நீதிமன்றில் நிறுத்தப்பட்டுப்
பிணையில் விடப்பட வேண்டும் என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா
கட்டளையிட்டிருந்தார். இன்னும் அது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும்
எடுக்கப்படவில்லை. மாறாக இந்தக் கைதிகள் தொடர்பான ஆவணங்கள் சட்டமா அதிபர்
திணைக்களத்தில் நீண்ட துயில் கொள்கின்றன.
நீதிமன்றங்களிலும்
நியாயம் கிடைக்காவிட்டால்...
ஒரு பெரும்பான்மையினர் ஆட்சி
அதிகாரத்தில் இருக்கும் ஒரு நாட்டில் அடக்கி ஒடுக்கப்படும் மக்கள்
நீதிமன்றங்களில் கூட நியாயத்தைப் பெற முடியாவிட்டால் அவர்களின் அடுத்த கட்ட
நடவடிக்கை எப்படி அமையும் என நாம் சொல்லித்தான் தெரிய வேண்டும்
என்பதில்லை.
ஆனால் நாம் சில விடயங்களை புரிந்து
கொள்ள முடியும். சில தேசிய சர்வதேச அழுத்தங்கள் காரணமாக
அடக்கியொடுக்கப்படும் மக்களின் உரிமைகளைப் பெற சில வாய்ப்புக்கள்
தோன்றினாலும் அவை நிறைவேற்றப்படாது இழுத்தடிக்கப்படும்.
சந்தர்ப்பம் கிடைக்கும் போது அத்தகைய
விடங்களை இல்லாமல் செய்ய அரசு அதிகாரம், நீதி பரிபாலனம் என அனைத்துமே முழு
வீச்சில் முடுக்கி விடப்படும். நீதிமன்றம் ஒடுக்கப்படும் மக்களுக்கு
சார்பாக ஏதாவது தீர்ப்பு வழங்கினாலும் நிர்வாக நடைமுறைகளின்
இழுத்தடிப்புகள் மூலமாக அவை நிறைவேற்றப்படுவது தவிர்க்கப்படும்.
இது காலம் காலமாகத் தமிழ் மக்கள் கற்று வந்த பாடம். தற்சமயம் இது முன்னாள் பிரதம நீதியரசர் வாயால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
G.JKMEDIAWORKS SPECIAL NEWS TEAM 2011
Ingen kommentarer:
Legg inn en kommentar