இழுத்தடிக்கப்படும் தமிழர் விவகாரம்; தீர்வுதான் என்ன?(சிறப்புக்கட்டுரை)

  புத்தாண்டு பிறக்கின்ற மகிழ்ச்சியில் திளைத்து அதனை வரவேற்கின்ற சகலரும் தமது வாழ்நாளில் ஒரு வருடம் ஓடி மறைகின்றதை பெரிதுபடுத்தவோ இல்லாவிட்டால் நினைத்துப் பார்க்கவோ தவறி விடுகின்றனர். அந்த வகையில் 2011 ஆம் ஆண்டுக்கு இன்று விடைகொடுக்கப்பட்டு நாளைய தினத்தின் புதுவருட மலர்வு காத்திருக்கின்றது.

பழையன களைந்து புதுப்பொலிவு பெறவேண்டும் என்பது ஒவ்வொருவரதும் புத்தாண்டு சிந்தையாக இருக்கின்ற போதிலும் அது எமது நாட்டின் தமிழினத்தைப் பொறுத்தவரையில் பொருந்தாத ஒன்றாகியுள்ளது. இற்றைக்கு சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலான காலப் பகுதியில் தமிழினம் கண்ட புத்தாண்டு மகிழ்ச்சியையோ மனநிறைவினையோ தந்துவிடவில்லை.

முப்பது வருட கால யுத்தத்தின் போது தென்பகுதியில் புத்தாண்டு வரவேற்கப்பட்ட போதிலும் வடக்கு, கிழக்கில் அதற்கான தருணம் அமைந்து வரவே இல்லை. அந்த நிலைமை நாளை பிறக்கின்ற 2012ஆம் வருடத்திலும் தொடரப் போகின்றது என்பதுதான் மனதை இறுக்கமடையச் செய்கின்றது. இறுதி யுத்தத்தின் போது உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடிய தமிழர்கள் தலையிலும் முதுகிலும் பாரிய சுமைகளோடு புதுவருடத்தில் பயணிப்பதற்கு காலடி வைக்கப்போகின்றமையைப் பார்த்தால் படைத்தவனும் உருகிப் போவான். பிரச்சினை என்பது தமிழரோடு பிறந்த உடன்பிறப்பாக மாறியிருப்பதால் இந்த சுமையை இறக்கி வைத்து இளைப்பாறிச் செல்லும் அளவில் தமிழ் மக்கள் இன்று இல்லை.

விட்டுக்கொடுப்புக்கு மனமில்லாத இனவாத சிந்தனையாளர்களால் முன்னெடுக்கப்படுகின்ற முன்னெடுப்புகள், தந்திரோபாய காய் நகர்த்தல்கள் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களம் என்ற பேதம் இல்லாத வகையிலும் ஒட்டுமொத்த மக்களையுமே பாதிக்கின்றது என்பதை யாரும் உணர்வதாக இல்லை.

பாராளுமன்றத்திலும் சரி வெளியிலும் சரி ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்கள் இன்றைய காலகட்டத்திலும் புலிச்சாயம் பூசி சிங்கள மக்களைத் தூண்டிவிடுகின்ற நிலைமை இன்றும் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது. இந்நாட்டில் தமிழ் மக்களும் இருக்கின்றனர். அவர்களும் இந்நாட்டுப் பிரஜைகளே! இங்கு இனபேதம் கிடையாது. யாவரும் இலங்கையர் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இருப்பதாக கூறப்படுகின்றது. எனினும் அது நடைமுறையில் சாத்தியப்பட்டிருக்கின்றதா என்றால் அது கேள்விக்குறிதான். தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள உண்மைத்தன்மைகளை சிங்கள சமூகத்தின் முன்னால் கொண்டு செல்லத்துணியாத பெரும்பான்மை அரசியல்வாதிகளும் தலைவர்களும் தத்தமது பதவிகளையும் அதிகாரத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காகவே பாடுபடுகின்றனர்.

தமிழர் பிரச்சினைகள் சிங்கள மக்களிடத்தில் தெளிவுபடுத்தப்படுமேயானால் அது தீர்வை நோக்கிய பயணத்துக்கு வழியமைத்துக் கொடுக்குமே தவிர முட்டுக்கட்டையாக இருக்கப்போவதில்லை.

இதுவரையில் இடம்பெற்று வந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள் ,ஆணைக்குழுக்கள் உள்ளிட்ட முன்னெடுப்புக்கள் அனைத்துமே பயன்களைப் பெற்றுக்கொடுக்க முடியாத கால விரயங்களாகவே முற்றுப் பெற்றிருக்கின்றன.

யுத்தம் நிறைவடைந்து இரண்டு வருடங்களும் ஏழு மாதங்களும் கடந்துவிட்டன. ஆனாலும் தன்னிறைவில்லாத மீள்குடியேற்றத்துக்குட்பட்ட தமிழ் மக்கள் இன்று மழைக்கு ஒதுங்குவதற்கும் இடமில்லாதிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் பகிரங்கமாக குற்றச்சாட்டினை முன் வைத்திருந்தது. புலம்பெயர் தமிழர்கள் மீதும் சர்வதேச சமூகத்தின் மீதும் விரல் நீட்டுகின்ற பெரும்பான்மைத் தலைவர்களும் ஆட்சி அதிகாரம் மிக்கவர்களும் அங்கிருந்து கூறப்படுவது என்ன என்பதை செவிமடுப்பதாக இல்லை. உள்நாட்டு யுத்தம் ஒன்று உக்கிர நிலையை அடைந்தமைக்கான உண்மையான காரணங்களை அரசாங்கம் கண்டறிந்திருக்கின்ற போதிலும் அதனை பகிரங்கப்படுத்தி நேர்மையாக செயற்படுவதற்கான திறனைக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.

இவ்வருடத்தின் ஜனவரியில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் வட்டமேசையில் அமர்ந்த ஆளுந்தரப்பின் குழுவானது இன்றைய தினம்வரையில் அடுத்தகட்ட நகர்வுக்கான பயணம் குறித்து சிந்திக்கவில்லை. இங்கு ஒருவருடம் ஓடி மறைந்தது மாத்திரமே எஞ்சியிருக்கின்றது.

இவ்வாறுதான் இதற்கு முந்திய காலப்பகுதியும் மறைந்திருக்கின்றது. காலங்கள் மாறிக்கொண்டிருக்கின்றதே தவிர தமிழ் மக்களின் கவலைகள் மாறவும் இல்லை. எண்ணங்கள் ஈடேறவும் இல்லை.

தேசிய இனப்பிரச்சினைத் தீர்வுக்கு அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டதான கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவே பிரதான பாத்திரத்தை வகுப்பதாக கடந்த காலங்களில் கூறிவந்த ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் அதன் அறிக்கையை மலைபோல் நம்பியிருந்தது. எனினும் இன்றைய அரசாங்கத்தின் கடந்தகால அரசியல் நகர்வுகளை நன்கு உணர்ந்து கொண்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, அரசாங்கத்தினால் அமைக்கப்படுகின்ற ஆணைக்குழுக்களிலோ அதன் செயற்பாடுகளிலோ கடுகளவேனும் நம்பிக்கை கொள்ள முடியாது.

அந்த வகையிலே நல்லிணக்க ஆணைக்குழுவும் நோக்கப்படுகின்றது என்று கூறியிருந்தது. கூட்டமைப்பின் அன்றைய கூற்று இன்று உண்மையாகியிருக்கின்றது.

எனினும் மனித உரிமை விவகாரம் தொடர்பில் வெளிநாட்டுக் கையாளுகைகளை மேற்கொள்கின்ற அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஆணைக்குழுவின் அனைத்துப் பரிந்துரைகளையும் அமுல்படுத்த வேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு இல்லையெனக் கூறியுள்ள அதேநேரம் பாராளுமன்றத்தின் சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா, நல்லிணக்க ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது என பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

இது இவ்வாறிருக்க நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பக்கச் சார்பானதாக வரையப்பட்டிருப்பதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட ஆணைக்குழுவினாலேயே இந்த அறிக்கையும் பரிந்துரைகளும் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அரசாங்கத்திற்குள்ளேயே இதற்கெதிரான கருத்துக்களும் முரண்பாடுகளும் தோன்றுகின்றன. இது பிரச்சினையை மேலும் அதிகரிக்கச் செய்யும் செயற்பாடுகள் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை எச்சரித்திருக்கின்றது.

எப்படி இருந்த போதிலும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் எந்தளவில் அமுல்படுத்தப்படப் போகின்றன என்பது குறித்து யாவரும் அமைதிகாத்த நிலையாய் உள்ளது.

இவ்வாறான நிலையில் தான் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை வரவேற்றுள்ள இந்திய மத்திய அரசாங்கம் ஜனவரி நடுப்பகுதியில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கு திட்டமிட்டுள்ளது.

1987 இல் கைச்சாத்திடப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் அதிகாரப் பகிர்வு வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. இதில் காணி அதிகாரம் மற்றும் பொலிஸ் அதிகாரம் உள்வாங்கப்பட்டிருக்கின்றன. எனினும் இந்த அதிகாரங்களை வழங்க முடியாது என்றும் அதற்கு தயாரில்லை என்றும் அரசாங்கம் தொடர்ச்சியாகக் கூறி வருகின்றது.

மேலும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கின்ற சர்வதேச மனித உரிமைப் பேரவை மாநாட்டின் போது இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தத்தின் போதான நிலைமைகள் மற்றும் மனித உரிமைகள் பேணல் தொடர்பில் இலங்கை அரசு பதிலளிக்க வேண்டிய கடப்பாட்டில் இருக்கின்றது.

இங்கு பதிலளிப்பதற்குக் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை சிறந்த வழிகாட்டியாக அமையும் என்று அரசாங்கம் கடந்த காலங்களில் கூறி வந்தது.

அதேபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைப் படலத்தையும் அரசு தனது சாதகமான பாத்திரமாகக் கொண்டிருந்தது. இருந்த போதிலும் இந்த இரு தரப்புப் பேச்சுவார்த்தை இப்போது விரிசல் நிலையை அடைந்துள்ளமை சிந்திக்கத்தக்கதாகும். பேச்சுவார்த்தை இவ்வாறு விரிசலடைவதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவே காரணமாகவும் அமைந்திருக்கின்றது என்பது மறுப்பதற்கில்லை.

இந்நிலையில் தான் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு சிறந்த வழியாக பாராளுமன்றத் தெரிவுக்குழுவே அமைந்திருக்கின்றது என்றும் இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளாததால் தீர்வினை எட்டுவதற்கான பாதை கடினமாகியிருப்பதாகவும் ஜனாதிபதி கூறியிருக்கின்றார்.

இந்தியாவில் இருந்து வெளியாகின்ற டெக்கான் குரோனிக்கிள் என்ற பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே ஜனாதிபதி இதனைக் கூறியிருக்கின்றார்.

இவ்வாறு ஒவ்வொரு கால கட்டத்திலும் தீர்வுக்காக முன் வைக்கப்படுகின்ற திட்டங்கள் மற்றும் வரைபுகள் என சகல அம்சங்களும் ஏதோவொரு காரணத்தைக் காட்டி புறக்கணிக்கப்படுகின்றது.

அதிகாரப்பகிர்வு சாத்தியமாக வேண்டுமானால் புலிகள் ஆயுதங்களைக் கீழே வைக்க வேண்டும் என்று கூறிய அரசாங்கம் பிற்காலத்தில் புலிப்பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்படும் வரையில் அதிகாரப்பகிர்வு குறித்து பேசுவதில் அர்த்தமில்லை என்று மாற்றுக்கதை கூறியது.

எப்படியிருந்த போதிலும் யுத்த அழிவுகளுக்கும் அதன் பின்னரான நிலைமைகளுக்கும் பதில் கூறியாக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்துக்குள் விழுந்திருக்கும் அரசாங்கம் இன வாத சிந்தனைகளுக்கு இடமளிக்காத வகையில் செயற்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்ட அரசாங்கத்திற்கு தீர்வுத் திட்டத்தை முன் வைப்பது பாரிய விடயமல்ல. எனினும் அது ஏன் இழுத்தடிக்கப்பட வேண்டும் என்பது தான் விடை தெரியா வினாவாக உள்ளது.

சல்லத்துணியாத பெரும்பான்மை அரசியல்வாதிகளும் தலைவர்களும் தத்தமது பதவிகளையும் அதிகாரத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காகவே பாடுபடுகின்றனர். 
G.JKMEDIAWORKS SPECIAL NEWS TEAM 2011

Ingen kommentarer:

Legg inn en kommentar