தமிழைப் பற்றிய \"அரிய\" அறிதல்

essay கடந்த வாரம் ராவய பத்திரிகையில் வெளியான பத்தி ஒன்றைத் தழுவி எழுதப்பட்டது.

நாங்களும் தமிழ் படித்தால் அவர்களின் எண்ணங்களை அறியலாம்..................
தேøவைகளை அறியலாம்............................. பிரச்சினைகளை அறியலாம்.

அண்மைக்காலமாக நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் படிக்கும் தமிழ் மொழி யைக் கற்போம் என்ற தலைப்பிலான பயிற்சிப் புத்தகத்தின் ஒரு அத்தியாயத்தில்  மேற் குறிப்பிட்ட வாக்கியங்கள் உள்ளன. ஒவ்வொரு வாக்கியமும் அறியலாம் என்ற சொல்லுடன் முடிவடைகிறது.

அறியலாம் என்பது கேட்கும் போது காதுக்கு இனிமை தருமொரு சொற்பதம். அதுவு மன்றி ஒன்றன் பின் ஒன்றாக ஒரே சீரில் அமைவதால் இவை மேலும் மெருகு பெறுகின்றன.

இவ்விதம் வாக்கியங்கள் ஒரே சீரில் அமைந்து, வாசிக்க, பேச,எழுத இதமாய் அமைவ து குறித்து எனது சிறுவயதுக் கால அனுபவமொன்று ஞாபகத்துக்கு வருகிறது.

எனது தாயாரை ஒத்த வயதுடைய சில பெண்மணிகள் எனது அம்மாவுடன் இணைந்து ஆங்கிலம் கற்றுக் கொண்ட சம்பவம் அது. ஆங்கில வகுப்பு எங்கள் வீட்டில் மாலை வேளைகளில் நடை பெற்றன. நானும் எனது சகோதர்களும் பாடம் நடைபெறும் வேளைகளில் அம்மாவுக்குப் பின்னால் போடப்பட்டிருக்கும் வாங்கில் அமர்ந்திருப் போம். வகுப்பை நடத்தும் ராமச்சந்திரன் சேர், எமக்கும் ஆங்கிலத்தைக் கற்றுத் தரும் நோக்கில்

I Can................... என ஒன்றின் கீழ் ஒன்றாக ஐந்து தடவைகள் எழுதி, வசனங்களைப்  பூர்த்தி செய்யுமாறு என்னையும் சகோதரர்களையும் கேட்பார். வாக்கியத்தை  ஆங்கிலத்தில் பூர்த்தி செய்ய இயலாது எனது சகோதர்களின் முகங்களைப் பார்த்து தட்டுத் தடுமாறி நான் விழித்தமை இன்றும் எனது ஞாபகத்துக்கு வருகிறது.

ராமச்சந்திரன் சேர் எங்கள் வீட்டில் ஆங்கில பாடம் கற்பிப்பதை அவதானித்துக் கொண்டிருந்த அந்த நாள்களில் தான் முதலாவது தமிழ்ச் சொல்லான பை என்பது சிங்கள மொழியில் வழங்கும் கோணிய என்ற சொல்லுக்கான கருத்து என்பதை நான் கற்றுக் கொண்டேன். ஒரு வகையில் இது நான் கற்றுக்கொண்ட முதலாவது தமிழ்ச்சொல்.
அண்மையில் ஒரு நாள் நான் சிறு வயதில் பயிற்சிப் புத்தகத்தில் முன்னால் கோடிட்டு கடைசியில் அறியலாம் என பூர்த்தி செய்ய வேண்டியிருந்த பயிற்சிக் கேள்வி குறித்த நினைவு மீண்டும் ஒரு தடவை மனதில் நிழலாடியது.

............. அறியலாம்
............ அறியலாம்
................அறியலாம்

இத்தனை காலம் கழித்து அறியலாம் என்ற இந்தத் தமிழ்ச் சொல்லின் கருத்து என்ன என்றறிய நான் முயன்றதற்குக் காரணம் இல்லாமலில்லை.

 அண்மையில் ஒரு நாள் அரியமலர் என்ற பெயருடைய பெண்ணொருத்தியை நான் கொழும்பில் வைத்துச் சந்திக்க நேர்ந்தது. காணாமல் போனோர் தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்ட தொரு மாநாட்டில் வைத்துத்தான் நான் அவளைச் சந்தித்தேன். மாநாடு முடிந்து வீட்டுக்குத் திரும்பிய நான் அறியலாம் என்ற தமிழ்ச் சொல்லின் அர்த்தம் என்னவென்று தெரிந்து கொள்ளும் ஆவலில் என்னிடமிருந்த தமிழ் சிங்கள அக ராதியைப் புரட்டிப் பார்த்தேன்.
அறிய என்ற தமிழ்ச் சொல்லுக்கு சிங்கள மொழியில்  தனகனீம (தெரிந்து கொள்ள) என்ற கருத்து விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது. அதன்படி அறியலாம் என்ற தமிழ்ச் சொல்லுக்கு தன கனீம புளுவன் (தெரிந்து கொள்ள இயலும்) எனச் சிங்களத்தில் கருத்தாகிறது. அரியமலர் என்ற அப்பெண்ணின் பெயர் சிங்களத்தில் பொருத்தமான கருத்தெதனையும் தராது தனித்து நின்றமை எனக்குப் பெரும் குழப்பத்தைத் தந்தது. அரியமலர் என்ற அந்தத் தமிழ்ச் சொல்லுக்கான அடிப் படைக் கருத்தை சிங்கள மொழியில் என்னால் தெளிவு படுத்திக் கொள்ள இயலவில்லை.

காணாமல் போனோர் தொடர்பான மாநாடு இடம் பெற்று அந்த ஐந்து நாள்களாக  அரியமலருடன் நான் நெருங்கிப் பழகச் சந்தர்ப்பம் வாய்த்தது. அவள் அரியமலர்  தான் கடமையாற்றும் அலுவலகத்துக்கோ, அல்லது வீட்டுக்கு வெளியே எங்காவது செல்வ தானாலோ ஸ்கூட்டி மோட்டார் சைக்கிளையே பயன் படுத்துகிறாள். எப்போதுமே சிரித்த முகத்துடன் உற்சாகமாக உலாவுவது அவளின் தனி இயல்பு  வழியில் சந்திப்போருடன் நின்று அளவளாவும் போது கூட எப்போதும் ஸ்கூட்டியின் திறப்புக்கோர்வை அவளது கை விரலொன்றில் சுழன்று கொண்டிருக்கும். நடக்கும் போது அவளது சேலைத் தலைப்பு காற்றில் பட படக்கும் அழகு, ஒரு தனி அம்சம். தினமும் மாறி மாறி வெவ்வேறு சேலைகளில் ஒயிலாக வலம் வருவாள்.

பின்னொரு சமயம்தான் ஞாபகத்துக்கு வந்தது தமிழ் மொழியில் "ற' மற்றும் "ர' ஆகிய எழுத்துக்கள் தனித்தனியாக வெவ்வேறு வரிசைகளில் உள்ளன என்ற நினைவு பொறித் தட்டியது. மீண்டும் ஒரு தரம் தமிழ் சிங்கள அகராதியைப் புரட்டிப் பார்த்தேன். தமிழில்"ற' வுக்கு முன்னால் "அ' எழுத்தைச் சேர்த்தால் "அர' என்ற உச்சரிப்பும் "ர' என்ற எழுத்துக்கு முன்னால் "அ' எழுத்தைச் சேர்த்தால் "அற' என்ற உச்சரிப்பும் உண்டாகும் என்பது தெளிவாகியது. அந்த வகையில் அரிய என்ற தமிழ்ப்பதம் சிங்களத்தில் பெறுமதிமிக்க என்ற கருத்தையும் மலர் என்ற தமிழ்ப் பதம், சிங்களத் தில் "பூ' என்ற கருத்தையும் தருவதால் பெறுமதிமிக்க "பூ' என்ற சிங்கள அர்த்தம் தரும். அவளது பெயர் அரிய மலரே யன்றி அறிய மலர் அல்ல என்ற உண்மை தெளி வாகியது.

தந்தையைத் தவிர அவளது குடும்பத்தின் ஆண் அங்கத்தினர்களும், இடைநடுவில்  அவளது குடும்பத்தில் இணைந்து கொண்ட ஆண் மகன் ஒருவரும் காணாமல் போய் விட்டதாகத் தெரிந்து கொண்டேன். தந்தைக்கோ தற்போது கண்பார்வை அறவே கிடையாது. தமது குடும்பத்தில் காணாமல் போனவர்கள் ஒரு நாள் திரும்பி வரு வார்கள் எனக் காத்திருந்து காத்திருந்து கடைசியில் கண் பார்வை இழந்தது தான் மிச்சம் என்று சிரித்துக் கொண்டே கூறினாள் அவள்.
எவ்வாறு இவளால் இவ் விதம் இயல்பாக இருக்க முடிகிறது? முகத்திலோ எவ்வித  வாட்டத்தையும் காண முடியவில்லையே? ஒரு ஆண் மகன் மாதிரியல்லவா உற்சாகமாகச் சிரித்துப் பேசிச் செயற்படுகிறாள்?
அவள் அவ்வாறு இருந்தாக வேண்டியுள்ளதே. தனித்து அவளல்லவா எல்லாப் பாரத் தையும் தனது முதுகில் சுமக்க வேண்டியுள்ளது.
மனது இவ்விதம் சமாதானம் சொல்லிக் கொண்டாலும் ஏதோவொன்று மனதை இறுக் குகிறதே!
இரு அண்ணன்மார் காணாமல் போன வேளையில் அவள் சின்னஞ் சிறு சிறுமியாய் இருந்தாள். இருபது வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் அது. அவளது அண்ணன் மாரைப் பலாத்காரமாக ஏற்றிய அந்த பஸ் வண்டி புகை கக்கியவாறே தூரத்தில்  சென்று மறைந்ததை அந்தச் சிறுமி அரியமலர் கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தாளாம். வேறென்ன செய்ய முடியும். அவளது அண்ணன்மார் குறித்த  கதையை இத்தோடு நிறுத்திக் கொள்வதே பொருத்தம்.

அரியமலரின் தாயின் நினைவு சங்கடம் தருமொன்று. படிப்படியாக உணர்வுகள்  சுருங்கிப் போன அவள் ஒரு நாள் தன் மூச்சை நிறுத்திக் கொண்டாள். வீட்டின் பொறுப்பு குடும்பச் சுமை அரியமலரின் தலையில் வீழ்ந்தது.

அப்படியானால், அரிய மலரின் கணவன் காணாமல் போனதன் பின்னர்தானா அரியமலர் தொழிலொன்றில் இணைந்து கொண்டாள்?

 இல்லையில்லை; அதற்கு முன்னரும் கூட அரியமலர் மற்றவர்கள் குறித்து, ஊராரின் தேவைகள் குறித்து அக்கறைகாட்டிச் செயற்படும் போக்குக் கொண்டவள் தான்.

 கிராமத்து ஆள்களுக்கு, சிறு குழுக்களுக்கு சுயதொழிலொன்றை மேற்கொள்ள கடன் வசதிகள் பெற்று கொடுக்கும் நோக்கத்துடன் கிராமத்திலே சிறு கூட்டுறவு தொழில் முயற்சிச் சங்கமொன்றை உருவாக்க அரியமலர் எடுத்த முயற்சியே அவளது பரந்த மன உணர்வு வெளிப்பாட்டுக்கு கால்கோள் இட்டு வைத்தது. அதன் மூலம்  வருமானம் ஏதுமற்ற கிராமத்து இளைஞர்களின், இளம் பெண்களின் மனதில்  எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை அரியமலர் விதைத்தாள் என்று எண்ணுகிறேன்.

அப்படியானால் இப்படியான சமூக நலவேலைக் கென அரியமலர் வெளியில் செல்ல ஆரம்பித்தது தனது கணவன் காணாமல் போன சம்பவத்தின் பின்னர் தானா?

கணவன் இறந்து விட்டாலோ, காணாமல்போய் விட்டாலோ மனைவி வீட்டுக்குள் முடங்கித்தான், பொது வாழ்க்கையில் ஒதுங்கித்தான் வாழ வேண்டும் என்றா சொல்ல வருகிறாய்? பெண்களை வீட்டுக்குள் அடங்கி ஒடுங்கி நடைப்பிணங்களாக வாழ வைக்க அவர்களின் புருஷன்மாரைக் காணாமல் போகச் செய்ய வேண்டுமென்று எண் ணுகிறயா? எண்ணங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டுக் கொள்கின்றன.
சில வகைப் பூக்களின் இதழ்கள் கரடு முரடாய் இறுக்கம் மிக்கதாய் இருக்கும். அது இயற்கையின் விந்தை; சுபாவம் வெவ்வெறு காரணங்களால் அது ஏற்படக்கூடும். அரியமலர் என்ற பெறுமதிமிக்க பூக் கூட இறுக்கமாய் மாறியமைக்கான காரணம் இயற்கையின் சுபாவம் என்று தான் கொள்ள வேண்டுமா? இல்லையில்லை மென்மையும் அழகும் மிக்க அந்த அரியமலர் இயற்கையின் உரிமையாளர்களாய் விட்டுள்ள மனிதர்களின் சுபாவத்தால் தான் இறுக்க மானது என்பதே உண்மை.
அரியமலரின் வாழ்க்கைப் பாரத்தைத் தன்தோள் மீது சுமக்க, அந்த மலரின் வாழ்க் கையை இலேசாக்க முன் வந்த அந்த நபர் வியாபாரத்தைத் தொழில் முயற்சியாகக் கொண்டவன். இவர்களுக்கு ஒரு மகள் பிறந்தாள்.

இறுக்கமான போக்கிலிருந்து மீண்டும் அரியமலர் மென்மையான போக்குக்கு மாறியதே சர்வதேச அரசசார்பற்ற நிறுவனமொன்றில் பணியாற்ற அவளுக்கு வாய்ப்புக் கிட்டியதன் பின்னரே. இப்படி எண்ணத் தோன்றவில்லையா?

உண்மைதான்; ஏதோ ஒரு காரணம் தான், சூழ்நிலைதான் மனிதர்கள் மனதளவிலும், செயலளவிலும் மாறுவதற்கு அடிப்படையாகிறது. இயல்பான போக்கில் மாற்றம் ஏற் படுவதற்கான பின்னணி இதுவே. தத்தமது இயற்கையாய் அமைந்த போக்கிலிருந்து  அவர்கள் ஏதோ ஒரு வகையில், ஒரு அளவில் மாறுவதற்கு இதுவே உந்து சக்தி. அதற்காக அவர்கள் மீது இலச்சினை பொறித்து அடையாளப் படுத்தத்தான் வேண் டுமா?

அரியமலரை அவள் தற்போது பணிபுரியும் அந்த அரச சார்பற்ற நிறுவனம் தேர்ந் தெடுத்தது அவள் மீது கொண்ட அனுதாபத்தாலல்ல. அவளிடம் திறமை காணப்பட்டமையாலேயே. ஆனாலும் அது அவளுக்கு ஒரு வகையில் மேலதிக சுமையாகவே அமைந்தது.
காணாமல் போன தன் புருஷன் திரும்பி வருவார் என அவள் காத்திருந்த காலமும் நீண்டு சென்றது.
காணாமல் போனோர் தொடர்பான மாநாடுகளுக்கு அவள் தானாக முன் வந்து  சென்று கலந்து கொள்வது, காணாமல் போய்விட்ட தனது அண்ணன்மார் மற்றும் புரு ஷனுக்கு நேர்ந்த கதி குறித்து ஏதாவது தகவல் கிட்டுமா என்ற எதிர்பார்ப்பில்லை என்பது மட்டும் உண்மை.
அது குறித்து குரலெழுப்ப கேள்வி கேட்க யாராவது இருக்கிறார்களா? யாராவது அந்த விடயத்தில் அக்கறை காட்டிச் செயற்படுகிறார்களா என்று தெரிந்து கொள்வது ஒரு வேளை அவள் மனதுக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒன்றாக அமைந்திருக்கக் கூடும்.  வாய்விட்டு அழுவதற்கான வாய்ப்பும், விருப்பும் வாழ்க்கையில் இதுவரை கிட்டியி ராது விட்டாலும், தனக்கும் கவலை உள்ளது என்பதை மற்றவர்களுக்குக் காட்டிக் கொள்வதற்காக, வாய்விட்டுக் கூறி உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதற்காகவாவது  இருக்கலாம்.

பெற்றோர் மீது அக்கறை காட்டி, மனதை அவர்களுக்கு ஆதரவு காட்டும் விதத்தில் செயற்பட வைத்தவரை, அண்ணன்மார் குறித்து எனது எதிர்பார்ப்பை கைகழுவி விட முடிந்தது. அண்ணன்மார் காணாமற் போய் இப்போது இருபது ஆண்டுகள் கடந்து விட்டனவே? அவர்கள் எங்கே உயிருடன் இருக்கப் போகிறார்கள்? அவர்களைப் பற்றிய நம்பிக்கையை முற்று முழுதாகப் துடைத்தெறிந்து விட்டேன்.

ஆனாலும் எனது புருஷன் எங்காவது உயிருடன் இருக்கக் கூடும். என்றோ ஒரு நாள் அவர் என்னிடம் திரும்பி வருவார் என்ற நம்பிக்கை மனதின் ஒரு மூலையில் இல் லாமலில்லை. அவர் வன்னியில் சிறைப்படுத்தப்பட்டிருப்பதாக முன்பு ஒரு சில தகவல்கள் கிட்டின. நானும் வன்னிக்குச் சென்று பார்த்து விடுவதென்று  எண்ணினேன். ஆனாலும் என்னால் அப்போது அங்கு போக முடியவில்லை. யுத்தமும் ஆரம்பித்தது. இப்போ எங்கே போய்த் தேட முடியும்?

அரியமலர் கொழும்புக்கு வருவதற்கு சில நாள்களுக்கு முன்னர் கடைசிக் காலத்தில்  காணாமல் போனவர்கள் சிலரது பெற்றோரைச் சந்திக்க அவளுக்கு வாய்ப்புக்கிட்டிய தாம். அவர்களில் வயதான பெண்மணி காணாமல் போன தனது மகனது புகைப்படத்தை அரியமலருக்குக் காட்டிய போது அரிய மலரின் வழமையான முகமலர்ச்சி மறைந்து அவளது முகத்தில் இருள் படர்ந்தது. அந்தப் பெண்மணி காட்டிய புகைப்படத்தில் காணப்பட்டவன் காணாமல் போன தனது கணவனைக் காணாமல் போகச் செய்தவனே என்பதைத் தன்னால் உறுதியாகக் கூற இயலுமென  அரியமலர் தனது நெருங்கிய சினேகிதி ஒருத்தியிடம் மட்டுமே கூறியிருந்தாளாம்.

காணாமல் போனவர்களின் பட்டியலில் இடம் பெற்றிருப்போர் எப்போதோ, ஏதோ ஒரு வகையில் காணாமல் போனவர்கள்தான். ஆனால் இவர்கள் எல்லோரும் எதற்காகக் காணாமல் போகச் செய்யப்பட்டார்கள் என்பதெல்லாம் விடை காண இயலாத கேள்விகளே. அதனை எவ்வாறு வெளிக்கொண்டு வர இயலும் என்று எனக்குப் புரியவில்லை அக்கா என்றாள் அரியமலர் ஆதங்கத்தோடு.

எனது சகோதரர்கள் இருவரும் ஏனைய நூற்றுக்கணக்கான ஆண்களுடன் தான் காணாமல் போனார்கள். அரச படைகளை ஆக்ரோசம் அடைய வைத்த விடுதலைப் புலிகளது செயற்பாடுகளாலேயே எனது சகோதரர்கள் காணாமல் போகச் செய்யப்பட்டார்கள் ஆனால் எனது அண்ணன்மார் என்ன தவறு செய்தார்கள்?

எனது கணவரை விடுதலைப் புலிகளே அழைத்துச் சென்றார்கள். அவர் செய்த தவறு அவர் வர்த்தகத் தொழில் செய்ததுதான். இன்றோ எனது கணவரைக் கூட்டிச் சென்ற வர்களும் காணாமல் போய்விட்டார்கள்.

அரிய மலர் ஒரு புதிரான பெண் என்று மனதில் எண்ணிக் கொண்டேன். கொழும்புக்கு வந்திருந்தாலும் கூட அவள் குறைவாகவே பேசினாள். மாநாட்டின் உரையாற் றியவர்கள் பலரும் சிங்களத்திலும் ஆங்கிலத்திலுமே உரையாற்றினார்கள். அவர்களது கருத்தை நேடியான சமகால மொழிபெயர்ப்பு மூலம் தமிழில் கேட்டு விளங்கிக் கொள்ள அரியமலர் போன்ற தமிழ்ப் பங்கேற்பாளர்கள் தானியங்கி ஒலி வாங்கிகளைத் தொடர்ச்சியாகத் தமது காதுகளில் பொருத்தியிருந்தனர். வடக்கு, கிழக்கு மாகாணங்க ளிலிருந்து வந்து மாநாட்டில் கலந்து கொண்டோரில் சிலர் மட்டுமே தமது கருத்துக்க ளைச் சுருக்கமாகத் தெரிவித்த சந்தர்ப்பங்களில் நாம் அவர்களது கருத்தைத் தெரிந்து கொள்ள ஒலி வாங்கிகளை காதில் பொருத்திக் கேட்டு அவர்களது கருத்துக்களைக்  கேட்க அசிரத்தை காட்டியதேன்? மனதில் இது உறுத்தினாலும், அரியமலரோ, நானோ அது குறித்து எவரிடமும் வினா எழுப்பியதில்லை.

மாநாடு சிறப்பாக நடந்து முடிந்தது. ஏராளமான பேர் பங்கேற்றிருந்தார்கள். மாநாட் டில் பலர் உரை நிகழ்த்தினார்கள். கலந்து கொண்டோரில் பலர் பெரும் புள்ளிகள். சிறப்பான வரவேற்பும் உபசரிப்பும் எமக்குக்கிட்டின. மாநாட்டு நிகழ்வுகள் இடம் பெறாத வேளையில் நாங்கள் ஒருவரோடு ஒருவர் மனம் விட்டுப் பேசிக் கொண்டோம். அது ஒரு அரிய வாய்ப்புத்தானே?

மாநாடு முடிந்து வீட்டுக்குத் திரும்பிய பின்னர் கொழும்பில் மாநாடு எவ்விதம் நடந்தது என அறிய விரும்பிக் கதை கொடுப்போருக்கு அரியமலர் இவ்வாறு தான் பதிலளித்திருந்திருப்பாள்.

எது, எவ்வாறானபோதிலும் அரியமலர் என்ற தமிழ் வார்த்தையை இனி மேல் என் னால் ஒரு போதும் மறக்க இயலாது என்பது நிச்சயம். இதனாலேயே முற்கூறிய அந்த மூன்று வாக்கியங்களின் கருத்தையும் நான் இங்கு பதிவு செய்ய முடிவெடுத்தேன். அரியமலர் என்ற வார்த்தை என் மனதில் ஒரு போதும் மறக்க இயலாத தொன்றாகப் பதிவாகி இருக்க வேண்டும் என்ற முனைப்பிலேயே அவ் வார்த்தைகளை மீண்டும் மீண்டும் நினைவில் கொள்வேன்.
G.JKMEDIAWORKS SPECIAL NEWS TEAM 2011

Ingen kommentarer:

Legg inn en kommentar