ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத் தொடரில் அமெரிக்காவினால் முன்மொழியப்பட்ட இலங்கை பற்றிய தீர்மானம் பெரும்பான்மை உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமது தீவிர பிரசாரத்தின் மூலம் மேற்படி தீர்மானத்தைத் தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கையில் பெருமெடுப்பில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டிருந்தது. இருந்தும் அமெரிக்காவின் தீர்மானம் வெற்றி பெற்றதால் இலங்கை அரசாங்கம் மோசமான தோல்வி நிலைக்கு உள்ளாகி முகங்கள் கறுத்த நிலையில் கடுகடுப்பாகியும் காணப்படுகிறது. குறிப்பாக இலங்கை அரசாங்கம் தம்மை இந்தியா இறுதிவரை கைவிடாது என்ற நம்பிக்கையிலேயே இருந்து வந்தது. ஆனால், இந்தியா இறுதி நேரத்தில் அமெரிக்கப் பிரேரணைக்கு தனது ஆதரவைத் தெரிவித்து வெற்றி பெறவும் உதவிக் கொண்டது.
கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதி தொடங்கிய ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரின் ஆரம்பம் முதல் இலங்கை பற்றிய விவகாரமே முன்னுரிமை பெற்றிருந்தது. பெரும் சர்ச்சைகளும் விவாதங்களும் எதிர்வாதங்களும் மண்டபங்களுக்கு உள்ளே மட்டுமன்றி வெளியேயும் இடம்பெற்றன. மூன்று வருடங்களுக்கு முன்பு இலங்கையின் வடக்கே இடம்பெற்ற வன்னி யுத்தத்தின் இறுதிக் காலகட்டத்தில் போர்க் குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் என்பன இடம்பெற்றன என்பதும் இவற்றால் 40 ஆயிரம் வரையான பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பதும் பிரதான பேசுபொருளாதாக முன்வைக்கப்பட்டது. இவற்றுடன் வடக்கு கிழக்கின் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் குறிப்பாக அரசியல் தீர்வின்மை உட்பட இலங்கை அரசாங்கத்தை விரல் சுட்டும் கேள்விகளும் எழுப்பப்பட்டன. இவை யாவற்றுக்கும் இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூறல் வேண்டும் என்பதே பிரதான கோரிக்கையாக அமைந்திருந்தது. இவற்றை அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட மேற்குலக நாடுகளும் விடாப்பிடியாக விவாதங்களுக்கு உள்ளாக்கி நின்றன. அதற்குப் பதில் அளிப்பதற்காக இலங்கை அரசாங்கம் இங்கிருந்து ஐம்பதுக்கு மேற்பட்ட அரசாங்க சார்புப் பிரதிநிதிகளைப் பெரும் செலவில் அனுப்பி வைத்தது.
தமிழ் முஸ்லிம் அமைச்சர்கள் உட்பட உயர் அதிகாரிகள் பட்டாளம் ஜெனீவாவில் முகாமிட்டு அரசாங்கத்தின் நடவடிக்கைகளையும் நிலைப்பாட்டையும் நியாயப்படுத்த அரும்பாடு பட்டு நின்றன. ஆக உச்சமாக இலங்கையின் வடக்கைச் சேர்ந்த ஒரு உயர் இராஜதந்திரியான தமிழ்ப் பெண்மணியை இலங்கைத் தூதுக் குழுவின் தலைமைப் பதவியில் வைத்து தமது பக்க நியாயங்களை நிலை நிறுத்தவும் அரசாங்கம் செயலாக்கியது.
அதேவேளை அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் இம்முறை விட்டோமா பார் என்ற நிலையில் இலங்கையை எப்படியும் மாட்டவைப்பது என்ற அளவில் கங்கணம் கட்டிநின்றனர் அவர்களது பக்கத்தில் சர்வதேசப் பிரபலம்வாய்ந்த மனித உரிமைகள் அமைப்புகளும் புலம்பெயர்ந்த நாடுகளில் செயல்பட்டு வரும் தமிழர் அமைப்புகளும் வரிந்து கட்டிநின்றன. அவர்களோடு புலம்பெயர்ந்து வாழும் சிங்கள ஜனநாயகமனித உரிமை வாதிகளும் கைகோர்த்து நின்றனர்.
அத்துடன் புலம்பெயர்ந்த தமிழர்கள் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகவும் புலம் பெயர்ந்த சிங்களவர் இலங்கையர் என்ற பெயரில் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாகவும் ஜெனீவாவில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவும் செய்தனர். அங்கு மட்டுமன்றி இலங்கையில் குறிப்பாகத் தலைநகரில் ஜெனீவாக் கூட்டத் தொடர் தொடங்கிய அன்று பரவலான ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றன. இவற்றில் அரசாங்க சார்பினர் மற்றும் பேரினவாத அமைப்புகளைச் சேர்ந்தோரே அதிகளவில் பங்கு பற்றியிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டங்கள் எரிபொருட்களின் விலை உயர்வுக்கும் பொருட்களின் அதிகரித்த விலைகளுக்கும் எதிரான மக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் திசை திருப்புவதற்காகவும் நடத்தப்பட்டன. அத்துடன் அரசாங்கத்தில் அங்கம் பெறும் தேசிய சுதந்திர முன்னணியின் அமைச்சரான விமல் வீரவன்சவும் ஜாதிக ஹெல உறுமயவின் அமைச்சரான சம்பிக்க ரணவக்காவும் தேசப் பற்றுள்ள தேசிய இயக்கத்தின் குணதாச அமரசேகரவும் தங்களை விட்டால் தேசப்பற்றார்கள் எவருமே இல்லை என்றவாறு அமெரிக்கமேற்குலக எதிர்ப்பைக் கக்கினர். இவை நேர்மையான ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலை நின்று முன்னெடுக்கப்பட்டால் அது வரவேற்கப்படவேண்டியதாகும். ஆனால், இவர்களது அமெரிக்க எதிர்ப்பு தமது கேவலமான பேரின வாதத்திற்கு ஆதரவு கிடைக்கவில்லை என்பதற்காகவே தெரிவிக்கப்படுகிறது. இது தேசப்பற்றும் அல்ல நாட்டு மக்கள் மீதான அக்கறையும் அல்லது.
மேலும் அமெரிக்காவின் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளித்தமையானது அரசாங்கத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இந்தியாவின் நிலைப்பாடு இறுதி நேரத்தில் மேற்கொள்ளப்பட்டதாகவே தோற்றமளித்தாலும் அதில் வழமையான இரட்டைத் தனமும் ஏமாற்றும் இருக்கவே செய்கிறது. ஒரே நேரத்தில் அமெரிக்காவையும் திருப்திப்படுத்தி தமிழ் நாட்டிலிருந்து வந்த உணர்வலைகளையும் கவனத்தில் கொண்டுள்ளதாகவும் காட்டிக்கொண்டது.
இதனைச் சிலர் தமிழ் நாட்டிற்கு முன்னால் மன்மோகன் சிங் அரசு அடிபணிந்து விட்டது என்றும் காட்ட முற்படுகின்றனர். அவ்வாறு கூறுபவர்கள் இறுதி யுத்த காலத்தில் தமிழ்நாட்டு மக்களும் கட்சிகளும் ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க யுத்தத்தை நிறுத்தக் கோரிய போது இதே மன்மோகன் சிங் அரசாங்கம் எவ்வாறு நடந்து கொண்டது என்பதனைத் திரும்பிப் பார்க்க வேண்டும். அன்று தமிழ் நாட்டில் எத்தனை பேர் அதற்காகத் தீக்குளித்து உயிர் துறந்து கொண்டனர். அப்போதெல்லாம் டில்லி மத்திய அரசு மரத்த நிலையில் நின்று இலங்கை அரசாங்கத்தின் யுத்தத்திற்கு எண்ணெய் வார்த்துக்கொண்டது. அன்று அவ்வாறு நடந்து கொண்ட இந்தியா மட்டுமன்றி அதே அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் தான் இன்று ஜெனீவாவில் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் தீர்மானத்தைக் கொண்டு வந்த நிறைவேற்றியிருக்கின்றன. இதை இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான செயல் என்று எவராது ஊதிப் பெருப்பித்துக் காட்ட முற்பட்டால் அது உண்மைகளை மறைப்பதாகவே இருக்கும். ஏனெனில் அமெரிக்காவின் தீர்மானம் வென்றாலும் அல்லது தோற்றிருந்தாலும் அதனால் பெரிதாக எதுவுமே இடம்பெறப் போவதில்லை.
அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் இலங்கை மீது போர்க்குற்றம் மனித உரிமை மீறல்களுக்காக சர்வதேசக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி நியாயம் கேட்கப் போகிறார்கள் என்றே ஆரம்பத்தில் தோற்றம் காட்டப்பட்டது. ஆனால், ஜெனீவாக் கூட்டத்தின் மார்ச் 7 ஆம் திகதி அமெரிக்கா கொண்டு வந்த இலங்கை மீதான தீர்மானத்தில் அப்படி எதுவுமே இருக்கவில்லை. மிக மிகக் கனதியற்ற தீர்மானமே முன்வைக்கப்பட்டது. இவ்வாறு முன்வைக்கப்பட்ட தீர்மானத்தில் இலங்கை அரசாங்கம் நியமித்தும் பெற்றுக்கொண்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை அமுல்படுத்துமாறே கேட்கப்பட்டுள்ளதே தவிர வேறு எதுவும் இல்லை.
மேலும் போர்க்குற்றம் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால் அவற்றையும் உள்நாட்டுச் சட்டப் பொறிமுறைகளின் கீழ் இலங்கை அரசாங்கமே விசாரணை செய்ய வேண்டும் என்றே கேட்கப்பட்டுள்ளது. தீர்மானத்தில் இலங்கை அரசாங்கத்திற்குச் சூட்டைக் கிளப்பியுள்ள விடயம் என்னவெனில் மேற்படி தீர்மானத்தின் அடிப்படையில் ஒருவருட ஒரு வருட அவகாசம் கொடுக்கப்பட்டிருப்பது அதனை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கண்காணித்து உரிய அறிக்கை செய்ய வேண்டும் என்பதுமாகும். இதனை எவ்வாறு மீறுவது அல்லது சமாளித்து இழுத்தடித்துச் செல்வது என்பதே மகிந்த சிந்தனை அரசாங்கத்தின் முன் உள்ள பிரச்சினையாகும். ஏனெனில் இதுவரை காலமும் தேசிய இனப்பிரச்சினையில் ஏமாற்றுவது இழுத்தடிப்பது மறுத்து நிற்பது போன்றவற்றின் மூலமே தமது பேரினவாத நிகழ்ச்சி நிரலை எல்லா அரசாங்கங்களுமே முன்னெடுத்து வந்துள்ளன. இது மேலும் தொடரப்படுவதையே மகிந்த ராஜபக்ஷவும் விரும்பியிருந்தார். ஆனால், இம்முறை ஜெனீவாத் தீர்மானம் அதற்கு ஒரு வகைக் கடிவாளம் போட்டுள்ளது அல்லது முதுகுச் சட்டையில் ஒரு கொழுக்கியைப் போட்டுள்ளது. அமெரிக்கா தனது தேவைக்காகப் போட்டுள்ள ஜெனீவாத் தீர்மானம் கொழுக்கி முழுமையாக இல்லாது விடினும் பேரினவாத விஸ்தரிப்புக்கு ஒரு தற்கா லிகத் தடையாகஇருக்குமானால் தீய விடயத்தில் ஒரு நல்ல விடயம் இடம்பெறுவதைக் காண முடியும்.
ஆனால், வெள்ளைமாளிகை இராஜதந்திரம் கொழும்பு இராஜதந்திரத்தை முறியடித்துவிட்டது. அதற்காக ரொபேர்ட் பிளேக் தொடக்கம் கிலாரி கிளிண்டன் வரை கடும் முயற்சி செய்து கொண்டனர். அதற்கு இணங்குமாறு இந்தியாவையும் வற்புறுத்திக் கொண்டது வெள்ளை மாளிகை. பல நிலைகளிலும் அமெரிக்காவின் மூலோபாயக் கூட்டாளியாக இருந்து வரும் மன்மோகன் சிங் அரசாங்கமும் அதன் கொள்கை வகுப்பாளர்களும் அமெரிக்க நிலைப்பாட்டை மீற முடியவில்லை. நட்பு ரீதியில் அமெரிக்கத் தீர்மானத்தை மேலும் மெலியவடையச் செய்வதற்கு திரை மறைவில் முயற்சி செய்த போதிலும் அது முடியாமல் போய்விட்டது.
அது மட்டுமன்றி மன்மோகன் சிங் அரசாங்கத்திற்கு மகிந்த ராஜபக்ஷவின் மீது உள்ளூர இருந்து வந்த கீழ்ப்படியாமை பற்றிய கோபத்தைக் காட்டிக்கொள்ளவும் ஜெனீவாத் தீர்மான ஆதரவு ஒரு சந்தர்ப்பம் ஆகிக் கொண்டது. மேலும் நேரடியான போர்க் குற்றம் மனித உரிமை மீறல் பற்றியவை நேரடியான தீர்மானமாக ஜெனீவாவில் வந்திருக்குமானால் இந்தியா விற்குப் பிரச்சினையாகவே இருந்திருக்கும். ஏனெனில், அவற்றில் இந்தியாவும் பங்காளியேயாகும். அமெரிக்காவை விட இந்தியாவே மகிந்த சிந்தனை அரசாங்கத்தின் மிக நம்பிக்கைக்குரிய இறுதி யுத்தப் பங்காளியாக இருந்து வந்தது. என்பது பகிரங்க இரகசியமாகும். அதனால் தான் போலும் இந்தியாவிற்கு சிரமம் கொடுக்காத விதத்திலும் ராஜபக்ஷ அரசாங்கத்தை முற்று முழுதாக எதிர்நிலைக்குத் தள்ளிக்கொள்ளாத வகையிலும் அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் ஜெனீவாத் தீர்மானத்தை நிறைவேறிறியுள்ளன.
எவ்வாறாயினும் அடுத்து என்ன என்பது மிக முக்கியமான கேள்வியாகும். மகிந்த சிந்தனை அரசாங்கம் மிகப் பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து நிற்கிறது. நாளுக்கு நாள் மக்களின் அதிருப்தி எதிர்ப்பைச் சந்தித்த வாறே உள்ளது. அதேவேளை தேசிய இனப்பிரச்சினைக்கு மனம் திறந்த பேச்சுவார்த்தைக்கோ அன்றி நியாயமான தீர்வுக்கோ முன் வராத நிலையை நீடிக்கவே விரும்புகிறது. இந்நிலையில் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எத்தகைய தாக்கத்தை விளைவிக்கப் போகின்றது என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டியிருக்கிறது.
G.JKMEDIAWORKS SPECIAL NEWS TEAM 2011
Ingen kommentarer:
Legg inn en kommentar