இலங்கையில் ஜனநாயகத்துக்கான பத்திரிகையாளர்கள் அமைப்பின்
உருவாக்குநர்களில் ஒருவரான பாஷண அபேயவர்த்தன, "இலங்கையில் தண்டிக்கப்படாத
போர்க்குற்றங்கள்'' ஆவணப்படத்துக்கு வலுவான ஆதாரங்களை வழங்கிய ஒருவராக
கருதப்படுகிறார். அதனால் நேர்ந்த அச்சுறுத்தலினால் தற்போது அஞ்ஞாதவாசம்
இருக்கும் அவர், தமிழக இதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இருந்து ஒரு சிறு
பகுதி இங்கு பிரசுரமாகிறது.
மே 2009 இல் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பான உங்களது எதிர்வினை என்ன? அப்பொழுது நீங்கள் எங்கே இருந்தீர்கள்?
இப்போது போலவே போரின் கடைசிக்
காலங்களில் நான் தலைமறைவாகவே இருந்தேன். இதனால் 2006 ஆம் ஆண்டு மார்கழி
மாதம் நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டேன்.
நான் நாட்டைவிட்டு மிகத் தூரத்தில்
வாழ்ந்த போதும், இலங்கைக்குள் ஊடக வேலை செய்யும் என்னுடைய சக நண்பர்கள்
பலரைவிடக் குறிப்பிட்ட சூழ்நிலை மற்றும் சம்பவங்கள் தொடர்பாகப் பல தகவல்களை
நன்றாகப் பெற்றுக் கொள்ளும் ஒரு நிலையிலேயே எப்பொழுதும் இருக்கிறேன்.
இக்காரணத்திற்கான பின்னணி,
மற்றவர்களைவிட எனக்கு அக்கறை அதிகம் என்பதல்ல. மாறாக இலங்கையில் இருக்கின்ற
பல்வேறு தடைகள் காரணமாக அங்கு செயல் படுகின்ற ஊடகவியலாளர்ளுக்கு இல்லாத
சலுகை எனக்கு இருக்கிறது. அதாவது அனைத்து மூலாதாரச் சக்திகளுடன் தொடர்பு
கொண்டு எல்லா வகையான தகவல்களையும் எந்தத் தடைகளும் இல்லாது பெற்றுக்
கொள்வதற்கான வழிகள் எனக்கு இருக்கின்றன. இந்த ஓர் உண்மையாலும், தலைமறைவாக
இருந்த போதும், நான் எழுதுவதைப் பிரசுரிக்கப் பத்திரிகைகள்
இருக்கின்றமையாலும் எனது பத்திரிகையாளர் தொழிலைத் தொடரமுடிகிறது.
எனது தலைமறைவு வாழ்க்கையின் முதல்
மூன்று வருடங்களும் நான் தொடர்ச்சியாக ஒன்றிரண்டு
சிங்களப்பத்திரிகைகளுக்குப் பத்திகளும் ஆய்வுக் கட்டுரைகளும்
எழுதிவந்துள்ளேன். என்னைப் போன்றவர்களின் குரல்களும் வெளிவருவதற்கு ஓரளவான
ஜனநாயக வெளியை வைத்திருப்பதற்கு இந்தப் பத்திரிகைகள் முயல்கின்றன.
இவற்றில் ஒவ்வொரு கிழமைமையும்
வன்னியில் என்ன நடக்கிறது எனபதையும் அந்த அழிவுகளையும் கொடூரங்களையும்
எழுதினேன். இவை வெறுமனே தமிழ் மக்களை என்ன செய்கிறார்கள் என்பதை வெளியிடும்
கட்டுரைகளல்ல. மாறாக என் மக்களின் தார்மீக அறத்தை உயிர் வாழ்வைப்பதற்கான
அவாவினாலான ஒரு போராட் டமே. இந்த இடத்தில் நான் ஒன்றைக் குறிப்பிட்டுச்
சொல்ல வேண்டும்.
தென்பகுதியில் நடைபெற்ற தொடர்ச்சியான
முடிவற்ற வன்முறைக் காலச்சுழல்களில் வளர்ந்த தலைமுறையைச் சேர்ந்தவன் நான்.
பயங்கரமான காலங்களினூடாக வாழ்ந்திருக்கிறேன். மிகவும் கோரமான,
காட்டுமிராண்டித்தனமான சம்பவங்களின் சாட்சியாக நான் இருக்கிறேன். ஆனால்
2009 விதிவிலக்கானது.
என்னுடைய வாழ்க்கையில் மிகவும்
நிம்மதியிழந்த மனச் சோர்வடைந்து வாழ்ந்த காலங்கள் அவை. அப்பொழுது
மனிதர்களுக்கு நடந்த பயங்கரமான துன்பங்களும் சோகங்களும் அழிவுகளின்
அளவுகளும், கணக்கிடவோ கற்பனை செய்யவோ முடியாதவை.
இந்தப் பேரழிவுகளினதும் இன
அழிப்பினதும் தினசரிச் செய்திகள் உள்வாங்கவோ கூறவோ முடியாதளவிற்கு
மோசமானவையாக இருந்தன. ஆனால் இவற்றைப் பற்றித்தெற்கில் இருந்த அறியாமைக்கும்
அவற்றைப் புரிந்து கொள்ள முடியாதளவிற்கு உணர்வில்லாதவர்களாக இருந்ததற்கும்
சாட்சியாக இருந்தமை என்னை மிகவும் பாதித்தது.
மிலேச்சத்தனமான வன்முறைகளால்
பாதிக்கப்பட்டவர்களாக நீங்கள் இருக்கும் போது குறிப்பிடத்தக்களவு தார்மீக
அறத்தை உணரக்கூடியவர்களாக நீங்கள் இருப்பீர்கள். ஏனெனில் என்ன
நடந்திருக்குமென உங்களுக்குத் தெரியும். நீங்கள் எந்தவிதமான மனப்
பாதிப்பில் இருந்த போதும், அழிவானது உடல்ரீதியாக இருப்பின் உங்களது விதியை
நீங்களே காணக்கூடியவராக இருப்பீர்கள். ஆனால் மோசமான போர் வன்முறை மற்றும்
பாலியல் குற்றங்களைப் புரிந்தவர்களினூடான ஒரு சமூகத்தைப் பிரதிநிதித்துவப்
படுத்துபவராக நீங்கள் இருக்கும் போது, உங்களது சமூகத்தின் கூட்டு
ஆன்மாவானது இவ்வாறான மிருகத்தனமான, பயங்கரமான போர்க்குற்றங்களைப்
புரிந்தவர்களால் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற போது, இவ்வாறான
போர்க்குற்றங்கள் புரிந்தவர்களின் உணர்ச்சிகளைப் பகிர்ந்தும் பகிராததற்கும்
அப்பால், அவர்களின் குற்றங்களைக் கூட்டாக நியாயப்படுத்தும் சமூகத்தைப்
பிரதிநிதித்துவப்படுத்துகின்ற போது, நீங்கள் தார்மீக அறந்தொடர்பான அதல
பாதாளப் படுகுழியில் வீழ்வீர்கள்.
ஏனெனில் நீங்கள் உங்கள் தோலை உரித்துக்
கொண்டு எவ்வாறு வெளியில் வரமுடியாதோ, அப்படித் தான் சமூகத்தின் கூட்டு
அடையாளத் திலிருந்தும் நீங்கள் உடனடியாகப் பாய்ந்து வெளிவர முடியாது.
நாம் எந்தவிதமான குறிப்பிடத்தக்க
எதிர்ப்புகளையும் காட்டாது இருந்தமையானது இவ்வாறான அழிவுகள் நடைபெறுவதற்கு
நாமும் உடந்தையாக இருந்தமையையே காட்டுகின்றது. சுய சீரழிவு நமக்குள்
ஏற்படுவதற்கு இந்த நிலை காரணமாக இருக்கின்றது. இது தார்மீகம், அறம்
தொடர்பானது. ஆகவே வெளியே தெரியாது. இவ்வாறான இனப் படுகொலையும் அழிப்பும்
போர்க் குற்றங்களும் நடப்பது தொடர்பான சிறிதளவான அக்கறைகூடக் காட்டாமல்
விட்டமையால், நாம் கூட்டுச் சமூகமாக இருக்கிறோம் என்பதை கூறுவதற்கான
தார்மீக அடிப்படையைக் கூட நாம் இழந்துள்ளோம். எங்களுடைய குற்றவுணர்வானது
எங்களது ஆன்மாவை முடமாக்கியுள்ளது.
அது நமது ஆன்மாவை உள்ளிருந்தே அரிக்கிறது. ஒரு சிங்களவராக நான் பெற்ற அனுபவம் இதுதான்.
|
Ingen kommentarer:
Legg inn en kommentar