தூக்கத்தைக் கலைக்கும் விலைவாசி உயர்வு

essay நள்ளிரவு 12 மணியைப் போன்று இந்த நாட்டுக் குடிமக்களை அச்சத்தில் உறையவைக்கும் வேறேதும் இருக்கப்போவதில்லை. அவர்கள் இரவில் அச்சத்துடனேயே படுக்கைக்குச் செல்கின்றனர்.
 நள்ளிரவு 12 மணியைப் போன்று இந்த நாட்டுக் குடிமக்களை அச்சத்தில் உறையவைக்கும் வேறேதும் இருக்கப்போவதில்லை. அவர்கள் இரவில் அச்சத்துடனேயே படுக்கைக்குச் செல்கின்றனர்.

வெளிப்பார்வைக்கு பலம் மிக்க மரமொன்றாகத் தோன்றினாலும், முருங்கை மரம் அதில் ஏறும் ஒருவரின் பாரத்தைக் கூடத் தாங்கிக் கொள்ள இயலாத அளவுக்குப் பலமற்றதொரு மரமாகும். 
 
கிளைகள் அளவுக்கு அதிக மாகப் பெருத்து வளரும் போது அவற்றின் பாரத்தைத் தாங்கிக் கொள்ள இயலாது அடிமரமே சாய்ந்து நிலத்தில் வீழ்வதை எம்மால் காண இயலும். அந்த வகையில் ஒருவர் முருங்கை மரமொன்றில் ஏறுவதென்பது மிக்க அவதானத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டிய தொன்று. இல்லையேல் குறிப்பிட்ட அந்த நபர் பாதிப்புக்கு உள்ளாக நேர்வது நிச்சயமே. மரம் முறிந்து அவர் நிலத்தில் விழ நேர்வதைத் தவிர்த்திட இயலாது. 
 
பொய் கூறி அதனால் தனக்குப் பாதிப்பை ஏற்படுத்த ஒருவர் முனைவதைச் சுட்டிக்காட்டுவதற்காகவே என்னை முருங்கை மரத்தில் ஏற்ற முயற்சிக்க வேண்டாமென ஒருத்தர் மற்றவருக்குச் சிலேடையாகக் கூறி தாம் குறிப்பிட்ட விடயத்தில் உஷாராயிருப்பதாக உணர்த்துவதுண்டு. முருங்கை மரத்தின் இயல்பைத் தெரிந்திருக்கும் ஒருவர் அதில் ஏறுவதை எவ்வாறு அவதானமாகத் தவிர்த்துக் கொள்வரோ அதே போன்று முருங்கை மரத்தின் இயல்பு குறித்து எதுவும் அறிந்திராத ஒருவர் அதில் ஏறுவதற்கு ஒரு போதும் பின்னிற்கப் போவதில்லை. 
 
கடந்த பல காலமாக இந்த நாட்டின் பொது மக்களை முருங்கை மரத்தில் ஏற்றிவிடுவதில் இந்த நாட்டின் அரசியல்வாதிகள் திறமை பெற்றிருந்தனர்.. 
 
அரசியல்வாதிகளது வாக்குறுதிகள் மற்றும் தமது எதிர்பார்ப்புக்கள் என்ற பாரமான மூட்டைகளைச் சுமந்துகொண்டு முருங்கை மரக்கொப்புகளில் ஏறிய அப்பாவிப் பொதுமக்கள் ஒடிந்ததனால் தற்போது தமது சுமைகளுடன் நிலத்தில் வீழ்ந்து அழுந்த நேர்ந்துள்ளது அவ்விதம் மரத்திலிருந்து வீழ்ந்ததனால் காயமுற்றுச் சிரமத்தில் அழுந்த நேர்ந்திருக்கும் பொது மக்களை நள்ளிரவு 12 மணிக்கு பயங்கரக் கொம்புகளுடனான எருது ஓட ஓட விரட்டித் தனது கொம்புகளால் குத்திக் காயப்படுத்த ஆரம்பித்துள்ளது.
 
 நள்ளிரவு 12 மணியைப் போன்று இந்த நாட்டுக் குடிமக்களை அச்சத்தில் உறையவைக்கும் வேறேதும் இருக்கப்போவதில்லை. அவர்கள் இரவில் அச்சத்துடனேயே படுக்கைக்குச் செல்கின்றனர். அடுத்த நாள் காலையில் நித்திரை விட்டெழும்பும் போது எரிபொருள் விலை, பாண் விலை, பால்மா வகைகளின் விலைகள், எரிவாயுவிலை மற்றும் சிமெந்து விலை என்பன அதிகரிக்கப்பட்டுள்ளதான அரசின் அறிவிப்பைக் கேட்க நேரக்கூடுமோ என்ற அச்சத்துடனேயே அவர்கள் தினமும் இரவில் படுக்கைக்கு செல்ல நேர்ந்துள்ளது.
 
 மேலும் மேலும் வேறு பொருள்களின் விலைகளும் அரசினால் உயர்த்தப்பட நேருமோ என்ற அச்சமும் அவர்களது நாளாந்த வாழ்க்கையில் தொடர்கதையாகத் தொடர்கிறது. 
இன்றைய அரசு நாட்டின் பொருளாதாரச் சிக்கலை சமாளிக்க இயலாது தலைச்சுற்றுக்கு ஆளாகியுள்ளது. என்பது வெளிப்படையாகப் புலப்படும் ஓர் உண்மையாகும். இதற்கான மாற்று வழியாக பொது மக்களது அத்தியாவசிய பாவனைப் பொருள்களின் விலைகளை அதிகரித்தும், பொது மக்களிடமிருந்து அறவிடும் வரிகளை உயர்த்தியும், புதிதாகக் கட்டுப்பாடின்றிப் பண நோட்டுகளை அச்சிட்டுப் பாவனைக்கு விட்டும் வெளித்தரப்புகளிடமிருந்து அதிகரித்த வட்டிக்குக் கடன் பெற்றும் நிலைமையை நேர்சீர் செய்து விடும் உத்தியை அரசு கைக்கொள்கிறது. 
 
நாட்டின் இருப்பு எவ்வாறானாலும் சரி அரசின் இருப்பை ஸ்திரப்படுத்திக்கொள்ளும் முனைப்பில் செயல்படும் அரசின் உயர்மட்ட அதிகாரிகளது பொருளாதார குறிக்கோள்களின் விளைவு, நாட்டின் பொதுமக்களது வாழ்க்கைச் செலவு விகிதம் முன்னெப் போதும் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்து செல்ல வழியமைத்துள்ளது. 
 
அத்தியாசிய பாவனைப் பொருள்களின் விலையேற்றம் குறித்து மட்டும் ஊடகங்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்ற போதிலும் புத்தாண்டுக்குப் பின்னரான கடந்த மூன்று வாரகால இடைவெளியில் வர்த்தக நிலையங்களில் சகல இறக்குமதி பொருள்கள் மற்றும் உள்ளூர் உற்பத்திப் பொருள்களின் விலைகளில் உயர்ச்சி ஏற்பட்டிருப்பதைத் தெளிவாக அவதானிக்க முடிகிறது. 
 
இறக்குமதிப் பொருள்களுக்கான விலைகள் மேலும் ஒரு தடவை உயர்த்தப்படக் கூடுமெனப் பொருளாதார நிபுணர்கள் முன்னெச்சரிக்கை செய்து வருகின்றனர். 
 
ஆயினும் இத்தகைய பொருளாதாரத் சிக்கலைப் போக்கும் திறன் இன்றைய அரசிடம் சிறிதளவும் கிடையாது. துரதிருஷ்டவசமாக உலகளாவிய ரீதியிலான பொருளாதாரச் சிக்கல் எமது நாட்டின் பொருளாதார நிலையில் குறிப்பிடத்தக்க அளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை மறுக்க இயலாத போதிலும் இலங்கை அரசால் இந்தச் சிக்கல் நிலையை உரிய முறையில் முகாத்துவப்படுத்த இயலாது போனதன் காரணமாகவே நாட்டு மக்கள் மென்மேலும் சிரமங்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளது.
 
இத்தகைய பொருளாதாரச் சிக்கலை எம்மால் தீர்க்க இயலாதுள்ளது. எவராவது இதற்குத் தீர்வுகாண இயலுமானால் அதனை நிறைவேற்றிக் காட்டுங்கள் எனத் தோல்வியை ஒப்புக்கொண்டு நாட்டின் நிர்வாகத்தை மற்றொருதரப்பிடம் கையளிக்கவும் இன்றைய அரசு ஒருபோதும் முன்வரப் போவதில்லை. தனது இயலாமைக்காக வெவ்வேறு நொண்டிச் சாட்டுகளை முன்வைத்து இன்றைய அரசு தன்னை நியாயப்படுத்தி வருகின்றது. 
 
கடந்த முறை அரசு அத்தியாவசியப் பொருள்களின் விலையை உயர்த்தியமை தொடர் பான பிரச்சினை எழுந்த போது, ஒருவர் மாதமொன்றுக்கு 2500 ரூபா வருமானத்தில் உயிர்வாழ இயலுமென கல்வி அமைச்சர் தெரிவித்தமை அந்த வேளையில் பரிகாசத்துக்கு உள்ளானதொரு கருத்தாக அமைந்தது. 
 
அக்கருத்து நாட்டு மக்களை அவமரியாதை செய்யுமொன்றாகக் கருதப்பட்ட போதிலும்,அக் கருத்து அர்த்தமற்றது என்பதை நிரூபிக்க எதிர்க்கட்சித் தரப்புகள் ஆர்வம் காட்டிச் செயற்பட முன்வரவில்லை. 
 
கல்வி அமைச்சரின் அன்றைய அக்கருத்து இன்றும் மீளாய்வு செய்யப் பட வேண்டிய நிலைக்கு வந்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் சொல்லப்பட்ட அந்த 2500 ரூபா கதையின் இரண்டாவது அத்தியாயம் இன்றோ நாளையோ மீண்டும் மீள்நிர்ணயம் செய்யப்படும் நிலை ஏற்படக்கூடும்.
 
அந்த வகையில் இன்று நாட்டின் வாழ்கைச் செலவு உயர்வுப் பிரச்சினை தொடர்பாக அரசினால் எத்தகைய சாதகமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இயலாத அளவுக்கு அரசு கையறு நிலைக்கு வந்துள்ளது.
 
யதார்த்தத்துக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை இன்று அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இது ஒரு நாளிலோ, இரு நாள்களிலோ தீர்க்கப்பட இயலாததொரு பிரச்சினை என்பதனை நாமறிவோம்.
 
 இது பல தசாப்தங்களாக இழுபறிக்கு உள்ளாகி வந்த பொருளாதாரச் கொள்கை வகுப்பாளர்களின் தவறுகள் போன்றோ, பொருளாதர நிலையைக் கையாளும் நோக்கில் அதனைக் கைகளில் எடுத்துக் கொண்ட அரசியல் வாதிகள் மற்றும் ஆட்சியாளர்கள் மேற்கொண்ட தவறான கையாள்கை என்பவற்றாலும், மேற்கொண்ட முடிவுகள் காரணமாகவும் மற்றும் அரச மட்டங்களில் நிலவிய லஞ்சம், ஊழல் போன்றவற்றாலும், இப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்கு பற்பல சிக்கல்களை எதிர் கொள்ள நேரிடும்.
 
 நீண்ட காலமும் தேவைப்படும். ஆயினும் இதற்குத் தீர்வு காணவேண்டியது கட்டாயமானதொன்றாகும். இப்பிரச்சினையை இனிமேலும் வேடிக்கை பேச்சுக்களாலோ ,நடிப்புக்களாலோ அல்லது இந்நாட்டின் குடிமக்களை முருங்கை மரத்தில் ஏற்றி விடுவது போன்ற செயற்பாடுகளாலோ தீர்த்துவிட இயலாது. அந்தக் கால மெல்லாம் தற்போது மலையேறி விட்டது. 
(U)G.JKMEDIAWORKS SPECIAL NEWS TEAM 2012

Ingen kommentarer:

Legg inn en kommentar