மழை விட்டும்...

 essay
அண்மைக் காலமாக தமிழர் தரப்பு தொடர்சியாக பல்வேறு ஜனநாயக ரீதியான போராட்டங்களை நடத்தத் தொடங்கியிருக்கிறது. இந்தப் போராட்டங்கள் தீவிரம் பெற்று, சர்வதேசத்தின் காதுகளில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் உரிமைக் குரல்கள் கேட்கத் தொடங்கிவிட்டால் அவ்வளவுதான். அரசுக்கு தலையிடி தொடங்கிவிடும்.
 அண்மைக் காலமாக தமிழர் தரப்பு தொடர்சியாக பல்வேறு ஜனநாயக ரீதியான போராட்டங்களை நடத்தத் தொடங்கியிருக்கிறது. இந்தப் போராட்டங்கள் தீவிரம் பெற்று, சர்வதேசத்தின் காதுகளில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் உரிமைக் குரல்கள் கேட்கத் தொடங்கிவிட்டால் அவ்வளவுதான். அரசுக்கு தலையிடி தொடங்கிவிடும்.

எங்கள் ஒருத்தருக்கும் சண்டை பிடிக்கிறதிலையோ, இல்லாட்டி ட்ரெயினிங் எடுக்கிறதிலையோ எப்பனும் விருப்பமில்லை. ஆனாலும் கட்டாயம் ட்ரெயினிங்குக்கு போகவேண்டிய நிலை. விடியப்பறமே கிழடு கட்டையள் கூட, றோட்டால ஒரு பொல்லாங்கட்டையைத் தூக்கிக் கொண்டு ஓடவேணும்.
 
 அதுதான் கூடுதலா ட்ரெயினிங். மற்றது என்னென்ன குண்டுகள் எப்படி இருக்கும், அதை எப்படியெல்லாம் ஆமி உருமறைப்புச் செய்து வைச்சிருப்பாங்கள், சிலவேளை அப்படியான குண்டுகளைக் கண்டால் எப்படி அதைக் கையாளவேணும் இப்படியான வகுப்புகளும் நடந்தது. அதுக்குப் பிறகு நாங்களும் எல்லைப்படையாகிட்டம்.''
 
ஒரு முன்னாள் எல்லைப்படை வீரரின் பயிற்சி அனுபவங்கள்.
 
புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்து விட்டு, புலிகளுடனான போரில் குதித்த படைத்தரப்பு, தனது அணுகு முறைகளை பெருமளவுக்கு மாற்றியிருந்தது. விடுதலைப் புலிகளின் வெற்றிக்கு எந்தெந்த வியூகங்கள் சாதகமாக இருந்தனவோ அவற்றை எல்லாம், அப்படியே கொப்பியடித்து அதில் வெற்றியும் கண்டது. 
 
அவற்றில் ஒன்றுதான் எல்.ஆர்.ஆர்.பி. என்று சொல்லப்படும் ஆழ ஊடுருவும் படையணி. வன்னிக் காடுகளுக்குள் சிறு சிறு குழுக்களாக, உள்நுழைந்து, புலிகளினதும் மக்களினதும் நடமாட்டங்களை அதிகம் கொண்டிருக்கும் வீதிகளில் கிளைமோர் தாக்குதல்களில் ஈடுபட்டனர் இந்த எல்.ஆர்.ஆர்.பி. காரர்கள். புலிகளின் கெரில்லாத் தாக்குதல் உத்தியையும், கிளைமோர் தாக்குதல் நுட்பத்தையும் ஒன்றிணைத்தே இந்த எல்.ஆர்.ஆர்.பி. காரர்கள் இத்தகைய தாக்குதல்களை நினைத்தபடி நடத்த முடிந்தது.
 
 விடுதலைப் புலிகளுக்கு இந்தத் தாக்குதல்கள் தலையிடியாக அமைந்தன. மட்டுப்படுத்தப்பட்ட போராளிகளை வைத்துக்கொண்டு முன்னேறிவரும் படைகளுடன் சமர்புரியவே ஆளணிப் பற்றாக்குறைய எதிர்கொண்டிருந்தனர் புலிகள். இந்த நிலையில் வீதிகளில் அடிக்கடி கிளைமோர்களை வெடிக்க வைக்கும் எல்.ஆர்.ஆர்.பி. காரர்களை காடுகளுக்குள், புகுந்து தேடிப் பிடிக்கவும், அவர்கள் வீதிகளில் கிளைமோர்களைப் பொருத்தாத வகையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் தமது ஆளணியை பலமடங்கு அதிகப்படுத்த வேண்டியிருந்தது. ஆனால் அது சாத்தியமான விடயமுமல்ல.
 
இந்த நேரத்தில்தான் மக்கள் தம்மைத் தாமே பாதுகாக்கும் வகையில்  எல்லைப்படை என்ற கட்டமைப்பை புலிகள் ஏற்படுத்தினர். ஆழ ஊடுவும் படையணி போன்ற எதிர்பாரத ஆபத்துகளில் இருந்து தமக்கு ஏற்படும் இழப்புகளை மக்கள் தாமாகவே குறைப்பதற்கு இந்த எல்லைப் படையினர் உதவ வேண்டும் என்பதே புலிகளின் திட்டம்.
 
 இலங்கைப் படையினரை இனங்காணல், அவர்கள் குறித்த தகவல்களை புலிகளின் படையணிகளுக்கு தெரியப்படுத்தல், சந்தேகத்துக்கு இடமான மர்மப் பொருள்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தல், பொது இடங்களில் மக்கள் விமானக் குண்டுவீச்சு முதலான ஆபத்துகளில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக பதுங்கு குழிகளை அமைத்தல் போன்ற நடவடிக்கைகளுக்கான பயிற்சிகளே இவர்களுக்கு வழங்கப்பட்டன.
 
ஆனாலும் எல்லைப் படைக்குச் செல்வதற்குக்கூட பெரும்பாலானோர் பின்னடித்தனர். இதனால் வேறுவழியின்றி கட்டாய ஆள்சேர்ப்பின் மூலமே எல்லைப்படை உருவாக்கப்பட்டது. இவ்வாறான கட்டாயச் சேர்ப்பு, உண்மையான அர்ப்பணிப்பில்லாத எல்லைப் படையின் உருவாக்கத்துக்கே வழிவகுத்தது. எனினும் ஏ9 உள்ளிட்ட பிரதான மார்க்கங்களில் எல்லைப் படையினரை தொடர்ச்சியான காவலில் ஈடுபடவைத்ததன் மூலம் எல்.ஆர்.ஆர்.பி. காரர்களின் நடமாட்டத்தையும், கிளைமோர் வெடிப்புகளையும் ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடிந்தது.
 
அத்துடன் ஈழவிடுதலைப் போராட்டம் மக்கள் மயப்படுத்தப்பட்டுள்ளதாக புலிகள் கூறிக்கொள்வதற்கும் எல்லைப்படை உருவாக்கம் உதவியாக இருந்தது.
 ஆனால் போர் உக்கிரம் கொள்ளத் தொடங்க, எல்லைப்படை என்ற கட்டமைப்பும் சிதறத் தொடங்கியது. எல்லையில் நின்ற பலர் ஆயுதங்களை தூக்கி எறிந்துவிட்டு, குடும்பங்களோடு ஐக்கியமாகிக் கொண்டனர். (இவர்களில் ஒரு சிலருக்கே ஆயுதங்கள் வழங்கப்பட்டிருந்தன.) பின்னர் இதே எல்லைப் படையில் இருந்தவர்கள் பலர் மீண்டுமொரு கட்டாய ஆள்சேர்ப்பில் புலிகளால் கொண்டு செல்லப்பட்டு குறுங்கால கட்டாய ஆயுதப் பயிற்சியோடு களமுனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 
 
அப்போதும் ஆயுதங்களை எறிந்துவிட்டு தப்பித்துச் சென்றவர்கள் பலர். மனவிருப்புடன் இணையாத இத்தகையோரின் நடவடிக்கைகளால் புலிகளுக்கு பின்னடைவே ஏற்பட்டது.
 
அதன் பின்னர், போர் முடிந்த பின்னர் எல்லோரும் நலன்புரி நிலையங்களுக்குள் அடைக்கப்பட்டனர். போரில் சரணடைந்த புலிகளைத் தவிர, தம்மை இனங்காட்டாது மக்களுடன் இணைந்திருந்த புலிகளையும் களையெடுத்து தடுப்புக்கு கொண்டு சென்றனர் படையினர். அதன் பின்னர் அவர்களில் அநேகர் புனர்வாழ்வு என்ற பெயரில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
 
ஆனாலும் அவ்வாறு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தொடர்ச்சியாக படைப் புலனாய்வாளர்களின் கண்காணிப்பு வளையங்களுக்குள்ளேயே இருக்கின்றனர். அவர்கள் சமூகத்துடன் ஒன்றித்து வாழ்வதிலும் தொடர்ச்சியான நெருக்குதல்களை எதிர்கொண்டபடியே உள்ளனர்.
 
ஒரு சில முன்னாள் போராளிகள் இந்த நெருக்குதல்களின் விளைவால் தற்கொலை கூடச் செய்துள்ளனர். புலிகள் அமைப்பில் இருந்த ஒவ்வொருவரும் விடுவிக்கப்பட்டிருந்தாலும்கூட, ஏன் நாங்கள் புலிகள் அமைப்பில் இருந்தோம்? என அவர்கள் ஒவ்வொருவரும் தம்மைத் தாமே நிதமும் நொந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே, முன்னாள் போராளிகளை நெருக்குதல் வாழ்வுக்குள் படைத்தரப்பு தள்ளியுள்ளது.
 
போர் முடிவுக்கு வந்து மூன்று வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் ஓரளவுக்கு நிலைமையில் தளர்வு நிலை தென்படத் தொடங்கியுள்ளது. சர்வதேசத்தின் கரிசனம் தமிழர்கள் பக்கம் திரும்பயுள்ளதாலும், ஜெனிவாத் தீர்மானத்தால் அரசுக்கு சிக்கல் நிலை தோன்றியுள்ளதாலுமே இவ்வாறனொதொரு சிறிய ஆசுவாச இடைவெளி தமிழர் தரப்புக்கு கிடைத்துள்ளது.
 
இந்த இடைவெளியில் படைகள் மீதான தமது பயத்தை மறந்து, போர்க்குற்ற சாட்சியங்களாக பாதிக்கப்பட்ட மக்கள் குரலெலுழுப்பத் தொடங்கி விடுவார்களோ என்று அரசுத் தரப்பு அஞ்சுகிறது. ஏனெனில் அண்மைக் காலமாக தமிழர் தரப்பு தொடர்சியாக பல்வேறு ஜனநாயக ரீதியான போராட்டங்களை நடத்த தொடங்கியிருக்கிறது. 
 
இந்தப் போராட்டங்கள் தீவிரம் பெற்று, சர்வதேசத்தின் காதுகளில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் உரிமைக் குரல்கள் கேட்கத் தொடங்கிவிட்டால் அவ்வளவுதான். அரசுக்கு தலையிடி தொடங்கிவிடும். முன்னரெல்லாம் கை காட்டிய இடங்களில் மீளக்குடியமர்ந்து வந்த மக்கள் இப்போது தமது சொந்த இடங்களில் மட்டுமே மீளக்குடியமர்வோம் என்று போர்க் கொடி தூக்கத் தொடங்கியுள்ளனர்.
 
இவ்வாறான கலகக் குரல்களை முன்னரப்போல் துப்பாக்கி முனைகளைக் கொண்டு அடக்கினால், சர்வதேச ரீதியாக அரசக்கு இன்னும் சிக்கலை ஏற்படுத்தும் விடயமாக அது அமைந்துவிடும். எனவே உளவியல் போர் மூலமே இந்தக் கலகக் குரல்களின் உருவாக்கத்தைச் சிதைக்க அரசுத்தரப்பு முனைகிறது.
 
 எப்போதும் நீங்கள் படையினரின் கண்காணிப்பு வட்டத்துக்குள்ளேயே இருக்கிறீர்கள். அரசுக்கெதிராக நீங்கள் சிறு துரும்பை அசைத்தாலும் கூட அப்படியே அலாக்காகத் தூக்கிவிடுவோம் என்பதைச் சொல்லாமல் சொல்லும் வகையில் படைப் புலனாய்வாளர்கள் செயற்படத் தொடங்கியிருக்கிறார்கள். அதன் ஓர் அங்கமாக எல்லைப் படையில் இருந்தவர்கள் பற்றிய விவரங்களைப் படைப் புலனாய்வாளர்கள் திரட்டி வருகிறார்கள்.
 
 போராளிகளாக இருந்தவர்களே விடுவிக்கப்பட்டுவிட்ட நிலையில், சாதாரண பயிற்சியுடன் எல்லைப் படையில் இருந்தவர்களை கண்காணிக்கவேண்டிய அவசியம் ஏன்? என்ற வினா எல்லோரிடமும் எழுந்துள்ளது. ஒரு வகையில் இதன் மூலம் அவர்களை மறைமுகமாக அச்சுறுத்தி, அவர்களுக்கான உயிராபத்து இன்னும் நீங்கிவிடவில்லை என்பதை மறைமுகமாக உணர்த்தி, ஜனநாயகப் போராட்டங்களில் இருந்து அவர்களை (எல்லைப்படையில் இருந்தோரை) ஒதுங்கச்செய்து, கலகக் குரல்களை பலவீனப்படுத்த அதிகாரத் தரப்பு திட்டமிடுகிறது என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
 
மழை விட்டும் இன்னும் தூவானம் விடவில்லை. தூவனத்திலிம் தமிழர்களின் கண்ணீர்த் துளிகளே தெறிக்கின்றன.
(U)G.JKMEDIAWORKS SPECIAL NEWS TEAM 2012

Ingen kommentarer:

Legg inn en kommentar