சடல வேட்டைத் திரவம்


 எச்சங்களை மிச்சம் மீதியின்றி அழிப்பதற்கு திராவகங்கள் வந்திறங்கியுள்ளன. மண்ணுக்குள் புளுத்தபின்னும் சடலங்களுக்கு இன்னமும் நிம்மதியில்லை.

எச்சங்களை மிச்சம் மீதியின்றி அழிப்பதற்கு திராவகங்கள் வந்திறங்கியுள்ளன. மண்ணுக்குள் புளுத்தபின்னும் சடலங்களுக்கு இன்னமும் நிம்மதியில்லை. 


ஓர் ஆராய்ச்சிக் கதை
பசி, தூக்கம் என்பவற்றை மறந்தவனாக அந்த ஆராய்ச்சியாளன் இயங்கிக் கொண்டிருந்தான். அவனுக்கு உலகில் எந்தவொரு இயக்கமும் கண்ணுக்குத் தெரியவில்லை.
 அவனுக்குத் தெரிந்ததெல்லாம் ஆராய்ச்சியில் வெற்றிபெறுவது மாத்திரமே. வேலை மும்மரத்தில் தன்னுடைய ஆசான் வந்ததைக்கூட அவன் கவனிக்கவில்லை. நீண்டநேரமாகப் பொறுத்துப் பார்த்த ஆசான், இனியும் காத்திருக்க முடியாது என்று எண்ணியவராக தன்னுடைய மாணவனான அந்த ஆராய்ச்சியாளனைப் பெயர் சொல்லி அழைத்தார். அப்போதுதான் அவன் ஆராய்ச்சி உலகில் இருந்து மீண்டு நனவுலகுக்கு வந்தான். 
"மன்னிக்கவேண்டும். ஆராய்ச்சியில் ஈடுபட்டதால் நீங்கள் வந்ததைக் கவனிக்கவில்லை'' என்றான் அவன். "பரவாயில்லை. கடமைதான் முக்கியம். அது சரி இப்போது எதைக் கண்டுபிடிக்க ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறாய்?'' என்றார் குரு.
"ஒரு விசேடமான திராவகத்தை'' என்றான் சீடன். "அதுதான் நிறையத் திராவகங்கள் உள்ளனவே. இதில் என்ன சிறப்பு?'' இது குரு. "உலகில் உள்ள எல்லாப் பொருள்களையும் கரைக்கக் கூடிய, அழிக்கக் கூடிய திராவகத்தைக் கண்டுபிடிக்கவே இந்த ஆராய்ச்சி''
.
சீடனின் பதிலைக் கேட்ட குரு கட கட எனச் சிரித்தார். சீடனுக்கு ஒரு மாதிரிப் போய்விட்டது. "ஏன் சிரிக்கிறீர்கள்? எனது ஆராய்ச்சி நோக்கத்தில் ஏதாவது தவறு உண்டா?'' என்று கேட்டான் சீடன்.
"மாணவனே! உனது ஆராய்ச்சியைப் பாராட்டுகிறேன். ஆனால் உலகில் உள்ள எல்லாப் பொருள்களையும் கரைக்கக் கூடிய திராவகத்தை நீ கண்டுபிடித்தால் அதனை எந்தக் கொள்கலனில் இட்டு வைப்பாய்? ஏனெனில் அது தான் எல்லாவற்றையும் கரைத்துவிடுமே'' என்றார் குரு. அப்போதுதான் தனது ஆராய்ச்சியில் உள்ள தவறினை சீடன் உணர்ந்து கொண்டான். 
வதைமுகாம் குளியல்
ஆராய்ச்சியாளன் உலகில் உள்ள எல்லாப் பொருள்களையும் அழிக்கவல்ல திராவகத்தை கண்டுபிடிப்பதை அத்தோடு நிறுத்தியிருந்தாலும் மனிதர்களுக்கு அழிவுத் திரவம் ஒன்று எப்போதும் தேவையாகவே இருக்கிறது. மனித உயிர்களை வகை தொகையின்றிப் புசிக்கும் அதிகாரத்தின் நாக்குகளுக்கு இன்னும் ருசி சேர்ப்பவையாக இந்த அழிவுத் திராவகங்கள் (அசிற்) இருக்கின்றன.
இரண்டாம் உலகப் போரின் ரத்தம் தோய்ந்த நாள்களில் ஜேர்மனியப் படைகளால் இலட்சக் கணக்கான யூதர்கள் வதை முகாம்களில் விலங்குகளைப் போல அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு உண்ண உணவில்லை. மிகக் குறுகிய இடத்திலே இருக்கவேண்டிய நிர்ப்பந்தம். பலர் நோய் வாய்ப்பட்டும், பட்டினியாலும் அந்த வதை முகாம்களுக்குள்ளே மடிந்து போனார்கள்.
 எஞ்சியோர் எலும்பும் தோலுமாக மாறிப் போயினர். பிணங்களுக்கு மேலேயே ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு விடிந்து கொண்டிருந்தது. திடீரென பல வதைமுகாம்களின் வாசல்கள் திறந்தன. சிரித்த முகத்தோடும் கைகளில் ஒருவித ஸ்படிகக் கற்களோடும் ஜேர்மனிய வீரர்கள் வந்தனர்.
 அவர்களின் உதடுகளில் இருந்து பின்வரும் சொற்கள் உதிர்ந்தன. "இன்றைக்கு உங்கள் எல்லோருக்கும் விடுதலை'' இதைக் கேட்டதும் எலும்பும் தோலுமாக மாறிப் போயிருந்த வதைமுகாம் வாசிகள் ஆனந்தத்தின் உச்சிக்கே போயினர்.
வதைமுகாம் யூதர்கள் ஒவ்வொருவருக்கும் ஆளுக் கொரு ஸ்படிகக் கற்களைக் கொடுத்த ஜேர்மனிய வீரர்கள், "விடுதலைக்கு முன்னர் நீங்கள் எல்லோரும் அருகில் உள்ள அறைக்குச் சென்று குளித்து விட்டு வாருங்கள்'' என்று சொன்னார்கள். 
அவ்வளவுதான் தாமதம்! யூதர்கள் எல்லோரும் அடித்துப் பிடித்துக் கொண்டு குளியல் அறை நோக்கி ஓடினார்கள். இவர்கள் ஓடிய அதே வேகத்தில் பக்கத்து அறை திறந்து கொண்டது. அதன் சாய்வான வாசலில் சறுக்கிய படியே யூதர்கள் மிகப்பெரிய நீர்த் தடாகம் ஒன்றுக்குள் வீழ்ந்தனர். வீழ்ந்த பின்னர் தான் தடாகத்தில் இருந்தது தண்ணீர் என்ற திரவம் அல்ல, திராவகமே (அசிற்) என்ற உண்மை யூதர்களுக்கு உறைத்தது. 
அதற்கிடையில் அவர்கள் அனைவரும் திராவகத்தில் கருகி, உருகி, எந்தவொரு எச்சமும் இல்லாமல் கரைந்து போயினர். அதன்பின்னர் திராவகத்தில் கரையாது மிதந்து கொண்டிருந்த ஸ்படிகக் கற்களை வைத்து எத்தனை ஆயிரம் யூதர்களைக் கொன்றோம் என்று ஜேர்மனிய வீரர்கள் கணக்கிட்டுச் சிரித்துக் கொண்டார்கள். யூதர்களைக் கொல்ல ஹிட்லர் கையாண்ட நூதனமான முறைகளில் திராவகக் குளியலும் ஒன்று.
எச்சங்களைத் தின்னுதல்
விலங்குகள்கூட தாம் கொன்றுதின்ற பிராணிகளின் எச்சங்களை அப்படியே விட்டுவிட்டு சென்று விடும். ஏனெனில் அவற்றுக்கு போர்க்குற்ற விசாரணை பற்றிய அச்சம் எதுவும் கிடையாது. வேட்டையாடினால் மட்டுமே உயிர்வாழ முடியும் என்ற நியதியில் விலங்குகளின் கொலைகள் அவற்றுக்கு நியாயப் பட்டனவாகவே இருக்கின்றன.
இலங்கையிலும் இறுதிப் போரில் விலங்குகளே போரில் இறங்கியிருந்தன. சீருடைகளுக்குள் தம்மை உரு மறைத்துக் கொண்ட இந்த வேட்டை விலங்குகள் இரத்த வெறியோடு பாய்ந்தன. இவற்றுள் பல விலங்குகள் துப்பாக்கிகளோடு தமது ஆண் குறிகளையும் ஆயுதமாக்கிக் கொண்டன. வெட்ட வெளியில் எந்தவொரு ஆடையும் அற்று காயங்களோடு குற்றுயிராய்க் கிடக்கும் அப்பாவிப் பெண் உடல்கள் விலங்குகளின் உடற் பசிக்கு தாராளமாக இரையாக்கப்பட்டன.
  எல்லாம் முடிந்த பின் அலுத்துப் போன உடல்கள் துப்பாக்கிச் சன்னங்களால் சிதறடிக்கப்பட்டன. இன்னும் சில விலங்குகள் கொல்லப்பட்ட மக்களின் உடைகளைக் களைந்து நிர்வாணமாக்கிப் பார்த்து மகிழ்ந்தன. புத்தரின் பரிநிர்வாணப் போதனை இதனைத்தான் அவர்களுக்கு ஊட்டியிருந்தது போலும். நிர்வாணச் சடலங்களை கொத்துக் கொத்தாக வாகனங்களில் தூக்கி எறிந்து சற்றுத் தூர உள்ள இடங்களுக்குக் கொண்டு சென்று புதைத்தார்கள். 
முள்ளிவாய்க்காலில் மடிந்து போன ஒவ்வொரு உயிரின் சாவும் நிராகரிக்கப்பட முடியாத சாட்சியங்களாக விஸ்வரூபம் எடுத்தன. முள்ளிவாய்க்காலில் புதைக்கப்பட்டு புளுத்துப் போன சடலங்களின் வாடை உலகெங்கும் பரவியது. படைவீரர்களின் கைத் தொலைபேசிகளில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளிலும் கோரக் குருதி கொப்பளித்தது. 
இந்தக் காட்சிகள் அவ்வப் போது ஏதோவொரு ஊடகத்தின் வழியே வெளிப்பட்டு உலகத்தோரின் விழித்திரைகளுக்குள் ஊடுருவிக் கொண்டன. அந்தக் கணங்களில் காட்சிகளின் வீரியம் மனதை அதிரச் செய்து கண்களை நீர் சொரிய வைக்கும். 
எல்லா அநீதிகளையும் பார்த்த பின்னும் எதுவுமே தெரியாதது போல கண் மூடிப் படுத்திருந்த நாடுகளின் மனச் சாட்சியை பிடித்து உலுக்கிய பின்னரே ஓய்ந்தன. 
இப்போது மூன்றாவது கட்டமாக ஒரு தொகுதிப் படங்கள், காணொலிகள் வந்திருக்கின்றன. வழமையைப் போலவே உறைந்து கிடக்கும் குருதிக்கு மேலே குவிந்து கிடக்கும் சதைக் குவியல்கள், இறந்தபின் நிர்வாணமாக்கப்பட்ட உடலங்கள், சரணடைந்த பின்னர் கைவிலங்கிடப்பட்டு பிணங்களோடு சேர்த்து கொண்டு செல்லப்படும் போராளிகள் இந்தப் புதிய காணொலிகளின் மூலம் சாட்சியங்களாக்கப் பட்டுள்ளார்கள்.
தொடர்ந்தும் வெளிவந்து கொண்டிருக்கும் அசைக்க முடியாத ஆதாரங்களை, எத்தனை நாளைக்குத் தான் "போலியானவை'' என்ற ஒற்றைச் சொல்லால் அதிகாரத் தரப்பு நிராகரிக்க முடியும். திரும்பிய பக்கம் எல்லாம் "போர்க்குற்ற விசாரணை தேவை'' என்ற குரல்கள் மஹிந்த வாதிகளின் காதுகளை அடைக்கத் தொடங்கியிருக்கின்றன. 
போர்க்குற்ற விசாரணை பற்றிய நெருக்குதல்கள் சர்வதேசத்தால் அழுத்தப்படுகின்றன. இந்த நிலையில் இறுதிப் போர் நடந்தேறிய குருதிக்களத்தில் கும்பல் கும்பலாக புதைக்கப்பட்ட உடலங்களும் ஆதாரமாக மாறி தம்முடைய இருப்பை இல்லாதாக்கி விடுமோ என்று அரசு தரப்பு அஞ்சுகிறது. 
"யாமிருக்க பயமேன்'' என்று இலங்கைக்கு அபயம் கொடுத்திருக்கிறது சீனா. விசேட மாகத் தயாரிக்கப்பட்ட திரவம் ஒன்றை இலங்கைக்கு சீனா அனுப்பி வைத்திருக்கிறது. அந்தத் திரவம் இந்தப் பத்தியில் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட ஆராய்ச்சியாளன் கண்டுபிடிக்க முயன்ற திராவகத்தின் தன்மையை ஒத்தது தான். ஆனால் இது அகிலத்தில் உள்ள எல்லாப் பொருள்களையும் அழிக்கக் கூடியதல்ல. ஆதாரங்களை மட்டுமே எஞ்சியிருக்கும் சடலங்களின் மிச்ச சொச்சங்களையே இருந்த இடம் தெரியாமல் செய்யும் வல்லமை மிக்கது. தன்னுடைய பேரரசை நிறுவுவதற்கு செய்த படுகொலைகளை கழுவுவதற்கு சீனாவுக்கு இதுபோன்ற திரவங்களே உதவின. தனக்கு உதவிய திரவத்தை தன் நண்பனுக்காக சீனா அனுப்பியிருக்கிறது. 
இனி கைகளில் உள்ள துப்பாக்கிகளைத் தூர எறிந்துவிட்டு, அமிலப் போத்தல்களோடு சடலங்களை வேட்டையாட படைகள் புறப்படப் போகின்றன. எல்லா எச்சங்களையும் அவர்கள் அழித்து விட்டதாக நிமிர்கின்ற ஓர் நாளில், இறந்துபட்ட எல்லா உயிர்களினதும் ஆன்மாக்களின் சாட்சியக் குரல் உலகெங்கும் தூக்கி எறியப்பட முடியாததாக வியாபிக்கத் தொடங்கியிருக்கும். அதுவரைக்கும் தொடரட்டும் சடல வேட்டை.Vallai skeletons
(U)G.JKMEDIAWORKS SPECIAL NEWS TEAM 2012

Ingen kommentarer:

Legg inn en kommentar