நந்தி விலகிவிட்டது நந்தனுக்கு தரிசனம் வாய்க்குமா?

essay குடியரசுத் தலைவர் தேர்தலைப் பொறுத்தவரை காங்கிரஸுக்கு என்று ஒரு பண்பாடும் உண்டு. அது, "ரப்பர் ஸ்டாம்ப்' தலைவர்களைக் குடியரசுத் தலைவர் ஆக்குவது என்பதுதான்.

ஆனால், அதையும் மீறி 2 முறை "எதிர்ப்புக் குரல்' மிக்க தலைவர்களைக் காங்கிரஸ் நிறுத்தியிருக்கிறது. 1969இல் நீலம் சஞ்சீவ ரெட்டி நிறுத்தப்பட்டார் என்றால், இப்போது பிரணாப் முகர்ஜியும் தனக்கென சில கருத்துகளை உடைய குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் என்று சொல்லலாம்.
 
1969இல் ஜாகிர் உசேன் மறைவினைத் தொடர்ந்து, நீலம் சஞ்சீவ ரெட்டியை வேட்பாளராக நிறுத்தியது காங்கிரஸ். அவர் "சொன்ன பேச்சைக் கேட்கமாட்டார்'' என்பதை உணர்ந்த இந்திரா காந்தி, அவரை எதிர்த்து தனது சொந்த வேட்பாளராக வி.வி.கிரியை நிறுத்தினார். 
 
"மனசாட்சிப்படி'' வாக்களிக்குமாறு காங்கிரஸ் உறுப்பினர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். காங்கிரஸ் உறுப்பினர்களும் "மனசாட்சி''ப்படி வாக்களித்து கட்சி வேட்பாளரைத் தோற்கடித்து இந்திராவின் வேட்பாளரான வி.வி.கிரியை வெற்றிபெறச் செய்தனர்.
 
 இந்தமுறை குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜி களமிறக்கப்பட்டார். அவர் தலையாட்டிப் பொம்மையாக இருக்க மாட்டார் என்று தெரிந்தும் அவரை வேட்பாளராக அறிவிக்க வேண்டிய நிர்பந்தம் காங்கிரஸுக்கு ஏற்பட்டது என்பதுதான் உண்மை. 
 
1969இல் கடைப்பிடித்த "மனசாட்சி வாக்கு'' உத்தியைக் கையாளும் பலம் இந்திரா காந்தியைப் போல சோனியா காந்திக்கு இல்லாமல் இருப்பது பிரணாப் முகர்ஜி செய்த புண்ணியம்.
 
அதை இன்னொரு விதமாகவும் அணுகலாம். ராகுல் வருவதற்கான ராஜபாட்டையை தயார்செய்ய பிரணாபுக்குக் கொடுத்த வெகுமானமாக இதைக் கருத இடமுண்டு. பிரணாப் முகர்ஜியை அமைச்சராக வைத்துக் கொண்டு ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது உறுத்தலான செயலாகத்தான் இருக்கும். 
 
எனவேதான், சல்லடை போட்டு பிரதிபா பாட்டீலைக் கண்டுபிடித்தது போல இந்த முறை "பரம விசுவாசி' எவரையும் சோனியாவால் முன்னிறுத்த முடியவில்லை.
 
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பிரணாப்பின் பெயர் அறிவிக்கப்பட்ட பிறகு, ராகுல் காந்தியை முக்கிய பொறுப்பு ஏற்கச் செய்யும் விடயத்தில் ஒவ்வொரு காரியமும் திட்டமிட்டு படிப்படியாக (இயல்பாகவே நடந்தது போலத் தோன்றினாலும்) நடந்தன.
 
முதலில் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் மிகவும் கண்டிப்புடன் கூறுவதுபோல், "தீவிர அரசியலுக்கு ராகுல் வரவேண்டும்'' என்றார். அதன் பிறகு, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் திக்விஜய் சிங், ஜூலை 16ஆம் திகதி திங்கட்கிழமை "மாறிவரும் சூழலை மனதில் கொண்டு பார்த்தால் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது தவிர்க்க முடியாதது'' என்றார்.
 
 இதைத் தொடர்ந்து குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான வேட்பு மனுவை ஹமீது அன்சாரி தாக்கல் செய்த நாளில் (ஜூலை 18, புதன்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய சோனியா காந்தி, ""உயர் பதவிகளை வகிப்பது குறித்து ராகுல்தான் முடிவெடுக்க வேண்டும்'' என்றார். இதைத் தொடர்ந்து அடுத்த நாளே அதாவது குடியரசுத் தலைவர் தேர்தல் நாளில் (ஜூலை 19, வியாழன்) ராகுல் காந்தி, "கட்சி மற்றும் ஆட்சியில் பொறுப்புகளை ஏற்பதில் தயக்கமில்லை'' என்றார். ஆக, குடியரசுத் தலைவர் பதவிக்கு பிரணாப் "தள்ளப்பட்டதன்' பரம்ம ரகசியம் இப்போது புரிந்திருக்கும்.
 
பிரணாப் முகர்ஜிக்கு குடியரசுத் தலைவர் பதவியை தந்ததுபோல, இரண்டு முறை பிரதமர் பதவி வகித்திருக்கும் மன்மோகன் சிங்குக்கு ஓய்வும் தந்துவிட்டால், ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதில் எந்த இடையூறும் இருக்கப்போவதில்லை.
 
ஆக, 2014 பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ராகுலை அரங்கேற்றும் முயற்சி குடியரசுத் தலைவர் தேர்தல் நாளில் நிறைவுற்றது எனக் கொள்ளலாம்.
இந்தக் குடியரத் தலைவர் தேர்தலில் சில ஆச்சரியமான ஒற்றுமைகளும் காணப்பட்டன. 
 
பிரணாப்பை எதிர்த்துப் போட்டியிட்ட பி.ஏ.சங்மாவும் "எதிர்ப்புக் குரல்' மிக்க ஒரு தலைவர்.
சோனியா காந்தியையே எதிர்த்தவர் சங்மா. இத்தாலியரான சோனியா காந்தி, இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக எப்படி வரலாம் என்று 1999இல் சரத் பவார், தாரிக் அன்வர் ஆகியோருடன் சேர்ந்து எதிர்ப்புத் தெரிவித்தவர் அவர்.
 
 அதனால், காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டவர். சரத் பவாருடன் சேர்ந்து தேசியவாத காங்கிரஸ் உருவாக்கிய முக்கிய தலைவர்களில் சங்மாவும் ஒருவர்.
 பின்னர், காங்கிரஸûடன் பவார் நெருங்குவதை எதிர்த்து தேசியவாத காங்கிரஸிலிருந்து விலகி மம்தாவின் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தார். பிறகு மீண்டும் தேசியவாத காங்கிரஸுக்கே வந்து சேர்ந்தார்.
 
ஆக, காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்ட பிரணாப்பும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பி.ஏ. சங்மாவும் ஒரு காலத்தில் காங்கிரஸிலிருந்து ஓரங்கட்டப்பட்டவர்கள்; தனிக் கட்சி கண்டவர்கள்; இயற்கையாகவே போர்க்குணம் மிக்கவர்கள்; "ரப்பர் ஸ்டாம்பு'களாக இருக்கத் தெரியாதவர்கள்.
 
இருந்தாலும், பிரணாப் முகர்ஜியைத்தான் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்தாக வேண்டிய கட்டாயம் சோனியாவுக்கு ஏற்பட்டது. காரணம், ராகுலுக்கு "வழி' கிடைத்தாக வேண்டுமே!
 
முன்னர் இந்திரா காந்தி "தன்னுடைய வேட்பாளரை' நிறுத்தியதுபோல், இன்று தன்னுடைய தனிப்பட்ட தேர்வை (பிரதிபாவை திணித்தது போல்) கட்சியின் மூலம் செயல்படுத்தும் நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இல்லை என்பதே உண்மை.
 
இந்த அரசியல் உண்மை, காங்கிரஸ் தலைமையின் பலவீனத்தையும், சோனியா நினைத்ததையெல்லாம் 100 சதவிகிதம் செய்யக்கூடிய அளவுக்கு வளைந்துகொடுக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி முன்பு போல் இல்லை என்பதையும் பறைசாற்றுகிறது.
 
சோனியாவின் முழுக் கட்டுப்பாட்டில் அவரது சுட்டு விரலசைவில் கட்சி இருப்பது போல ஊடகங்களில் வெளிப்படுத்தப்படும் செயற்கையான விம்பத்துக்கும் இப்போது நிலவும் அசலான நிலைக்கும் உள்ள இடைவெளியின் வெளிப்பாடுதான் பிரணாப் முகர்ஜின் தேர்வு. 
 
இந்தத் தேர்வில் கிடைத்திருக்கும் லாபம் ராகுலுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பு!
நந்தி விலகியது என்னவோ உண்மை. ஆனால், நந்தனுக்குத் தரிசனம் கிடைத்ததா என்று கேட்டால், பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
(u) G.JKMEDIAWORKS SPECIAL NEWS TEAM 2012

Ingen kommentarer:

Legg inn en kommentar