கிழக்கில் தேர்தல்; 3 மாதங்களின் மோட்சத்தோடு


essay 2006 ஆம் ஆண்டு, ஓகஸ்ட் மாதத்தில் கிழக்கு மாகாணத்திலிருக்கும் மாவிலாறு அணை விடுதலைப் புலிகளால் மறிக்கப்பட்டது. அத்தோடு தொடங்கிய தண்ணீருக்கான போராட்டம் அந்த ஒரு மாதத்துக்குள்ளேயே பல ஆயிரம் அப்பாவித் தமிழ் உயிர்களைக் காவுகொண்டது. 2009 ,மே மாதப் படுகொலை மட்டும் நடைபெறா விட்டிருந்தால், தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஓகஸ்ட் தான் அதிக உயிர்களைப் பலியெடுத்த மாதமாக இருந்திருக்கும்.
 தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தையும் சில மாதங்களையும் வரலாற்றிலிருந்து பிரித்துப் பார்க்கவே முடியாது. ஜூலை, ஓகஸ்ட, மே இந்த மூன்று மாதங்களும் தமிழ் இன அழிப்பின் அல்லது மாற்று அரசியல் மார்க்கத் தொடக்கத்தின் திறவுகோலாய் இருந்திருக்கின்றன. 
 
ஜூலையில் முதற் திருப்பம்
 
ஜூலை மாதம் தமிழர்களால் மறக்கவே முடியாத படுகொலை மாதமாகும். இற்றை வரைக்கும் கறுப்பு ஜூலை எனத் தான் பலரும் நினைவு வைத்திருக்கின்றனர். இலங்கைப் பெரும்பான்மை மக்களிடம் உருவாக்கி விடப்பட்டிருந்த சிங்களத் தேசிய வாத சிந்தனை இந்த மாதத்தில்தான் பாசிசத்துடன் அதன் வழியான சர்வாதிகார வடிகால்களையும் நோக்கிப் பாய்ந்தது. இலங்கையின் தலைநகர் கொழும்பை மையப்படுத்தி வாழ்ந்த தமிழர்கள் பெரும் கலவரப் பிரளயத்தோடு அடித்து விரட்டப்பட்டார்கள். உயிரிழப்புகள், அவய இழப்புகள், சொத்திழப்புகளோடு அந்த நகரத்தை விட்டு கப்பலேற்றப்பட்டார்கள். இந்த ஆறா வடுவாகிய ஜூலையோடுதான் தமிழர்களின் அரசியல் வெளி புதிய அரசியல் கலாசாரம் ஒன்றுக்குள் நுழைந்தது. அதாவது ஜூலையிலிருந்து கற்றுக் கொண்ட பாடங்கள் ஆயுத ரீதியான விடுதலைப் போராட்ட விரிவடைவுக்கு காரணமாக அமைந்தது. 
 
பதிவு செய்யப்படாத படுகொலைகளின் மாதம்
 
ஓகஸ்ட் மாதம் தமிழர்களின் விடு தலைப் போராட்டத்துக்கு வித்தியாசமான படிப்பினையைத் தந்தது. சமாதானம் குழப்பப்பட்ட பின்னர் இறுதிப் போரை ஆணித்தரமாகத் தொடக்கி வைத்த மாதம் இது. இந்த மாதத்தோடுதான் இனி இலங் கைக்கு ஒரு போதும் சமாதானம் திரும்பி வரப் போவதில்லை என்ற தீர்மானத்தைப் பலரும் எடுத்தனர். 2006 ஆம் ஆண்டு, ஓகஸ்ட் மாதத்தில் கிழக்கு மாகாணத்திலிருக்கும் மாவிலாறு அணை விடுதலைப் புலிகளால் மறிக்கப்பட்டது. அத்தோடு தொடங்கிய தண்ணீருக்கான போராட்டம் அந்த ஒரு மாதத்துக்குள்ளேயே பல ஆயி ரம் அப்பாவித் தமிழ் உயிர்களைக் காவு கொண்டது. 
 
2009 ,மே மாதப் படுகொலை மட்டும் நடைபெறாவிட்டிருந்தால்,  தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஓகஸ்ட் தான் அதிக உயிர்களைப் பலியெடுத்த மாதமாக இருந்திருக்கும். மூதூர்ப் படுகொலை, "அக்ஸன் பெய்ம்" நிறுவனப் பணியாளர் படுகொலை, செஞ்சோலைப் படுகொலை என கிட்டிய நினைவுக்கு வரும் எண்ணற்ற துயரச் சம்பவங்களை இந்த மாதம் தந்தது. அதனால்தான் இந்த மாதத்தோடு விடு தலைப் புலிகள் இறுதிப் போருக்கான கதவு களை அகலத் திறந்தனர். அத்தோடு தமிழர் களின் ஆயுத அரசியல் தளம், இறுதி இலக்கை அடைவதற்கான இறுதிப் பயணத்தை வலிந்து மேற்கொண்டது. ஆகவே தமிழர்க ளைப் பொறுத்த வரையில், ஓகஸ்ட் மாதம், ஆயுத ரீதியான விடுதலைப் போராட்டத்தின் இறுதி இலக்கை அடைவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாதமாகக் கணிப்பிடப்படுகின்றது.
 
எதையும் குறிப்பிடத் தேவையற்ற மே
 
இறுதியாக மே மாதத்தைப் பற்றி தமிழர்களுக்கு எதுவுமே சொல்லத்தேவையில்லை. நூற்றாண்டுத் துயரத்தை இந்த மாதத்தில்தான் அனுபவிக்க நேர்ந்தது. 30 வருடங்களுக்கு மேல் நீடித்த விடுலைப் போராட்டம் பல்லாயிரம் மக்களின் உயிர் பறிப்போடு மே மாதத்தில் மௌனித்தது. ஒரு வகையில் ஈழத்தமிழர்கள் அரசியல் அநாதைகள் ஆக்கப்பட்டு தெருவில் விடப்பட்டதும் இந்த மாதத்திலிருந்து தான். 
இங்கு குறிப்பிடப்பட்ட மூன்று மாதங்களும்,  வெவ்வேறுபட்ட   நிலப்பகுதிகளை அடையாளமாகக் கொண்டிருக்கின்றன. ஜூலைகொழும்பு, ஓகஸ்ட் மூதூர், மே முள்ளிவாய்க்கால் என்ற அடிப்படையில் அடையாளமாகியிருக்கின்றன. இதில் ஓகஸ்ட் மாதத்திற்கும் கிழக்கு மாகாணத்துக்கும்  நெருக்கமான தொடர்பிருப்பதாகத்தான் சொல்லத் தோன்றுகின்றது. ஏற்கனவே குறிப்பிட்டதுபோல இறுதிப் போரைத் தொடக்கி வைத்து, தமிழரின் ஆயுத ரீதியிலான அரசியலை மௌன நிலைக்குக் கொண்டு வந்தது இந்த மாதம் தான். அதனைத் தொடக்கிய நிலம் கிழக்கு மாகாணத்திலிருக்கின்றது. ஆகவே முப்பது ஆண்டுகால போராட்டத்தின் அஸ்தமனத்தை உதயமாக்கியது தமிழர்களின் பாரம்பரிய நிலமாக இருந்து வரும் கிழக்கே ஆகும். 
 
ஓகஸ்டில்தான் கிழக்கு உதிக்கின்றது
 
இப்போது  ஓகஸ்ட் மாதத்தில் மீண் டும் கிழக்கிலிருந்து தமிழர் அரசியல் தளத் துக்கு  உதயம்  கிடைத்திருக்கின்றது. அதாவது ஜனநாயக ரீதியான போராட்டத்தின் தொடக்கம் கிழக்கில் ஏற்பட்டிருக்கின்றது எனக் குறிப்பிடலாம். 
 
விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியோடு வலுவான சர்வதேச பார்வைக்குள் சிக்கிக் கொண்ட இலங்கை, இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் நியாயமான அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வுத் திட்டம் நோக்கி நகர வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டது. இந்த ஆண்டுத் தொடக்கத்தில் கொண்டு வரப்பட்ட ஜெனீவாத் தீர்மானமும், இந்தியா மற்றும், மேற்கு நாடுகளின் அழுத்தங்களும் இலங்கையில் வாழும் இனங்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்கான வேலைத் திட்டமொன்றை உருவாக்கின. அதன் ஒருபடியாகத்தான் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பார்க்கப்பட்டது. அதிகரித்து வரும் சர்வதேச அழுத்தங்களைக் குறைத்துக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகக் கிழக்குத் தேர்தலை இலங்கை  அரசு பயன்படுத்துகின்றது எனக் கூறப்பட்டாலும், தேர்தல் முடிவுகள் தமிழர்களுக்கு வாய்ப்பாக  அமையுமாயின் அது தொடர்பில் கவலை கொள்ளத் தேவையில்லை.
 
கிழக்குத் தேர்தலும் கட்சிகளும்
 
கடந்த முறை நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலைத்  தமிழ்  தேசியக் கூட்டமைப்பு புறக்கணித்திருந்தது. கிழக்குத் தேர்தலில் போட்டியிட்டால் வடக்குகிழக்கு மாகாணப் பிரிப்பை தமிழர் அரசியல் தரப்பும் ஏற்றுக்கொண்டதாகிவிடும், ஆகவே இந்தத் தேர்தலை நிராகரிக்கின்றோம் என அந்தக் கட்சியி னர் தெரிவித்திருந்தனர். அதனால் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும், பிள்ளையான் கிழக்கு மாகாணத்துக்கான முதல்வரானார். 
 
ஆனால் இந்த முறை நடைபெறுகின்ற தேர்தலில் தமிழர்கள் சார்பில் தமிழ்க் கூட்டமைப்பு களமிறங்கியிருக்கின்றது. இவர்களோடு முஸ்லிம் காங்கிரஸும், அதற்கு அடுத்த நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் போட்டியிடுகின்றன. இதில் தமிழ்க் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸூம் இணைந்து போட்டியிடும் என ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டாலும் பின்னர் அது கைகூடவில்லை. இரு கட்சிகளும் தனித்தனியே போட்டி யிடுகின்றன. 
 
தனியே ஆட்சி அமைப்பது சாத்தியமில்லை
 
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் எப்படித்தான் தனித்தனியே அரசியல் கட்சிகள் போட்டியிட்டாலும் தனியே ஆட்சி அமைக்க முடியாத நிலையே நிலவுகின்றது. மூவின மக்களையும் சராசரியாகக் கொண்டிருக்கும் கிழக்கு மாகாணத்தில் ஒரு கட்சி அதிக பெரும் பான்மைப் பலத்தோடு ஆட்சிமைப்பது சாத்தியமற்றது. சம பலத்துக்கு வரும் இரண்டு கட்சிகள் இணைந்தே மாகாண சபையை அமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. இதனால்தான் தேர்தல் களம் சூடுபிடித்திருப்பதை விட தேர்தல் வெற்றிக்குப் பின்னர் ஆட்சியமைக்கும் காலம் மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 
இப்போதைக்கு கிழக்குத் தேர்தலில் முன்னிலை வகிக்கும் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுமே இணைந்து ஆட்சி அமைக்கும் என நம்பப்படுகின்றது. அப்படி அமைந்தால்,  இலங்கைத் தமிழர்  முஸ்லிம்கள் வரலாற்றில் அது பொற்காலமாகவே மதிப்பிடப்பட வேண்டும். இரண்டு சிறுபான்மை இனங்களின் இணைவை எந்த நாட்டையும் ஆட்சி செய்கின்ற பெரும்பான்மை இனம் விரும்புவதில்லை என்ற பொது விதியை உடைக்கும் சந்தர்ப்பமாகவே அது அமையும். ஆனால் அது சாத்தியமா?
 
முஸ்லிம் காங்கிரஸின் இரட்டை முகம்
 
இந்த விடயத்தில் கூட்டமைப்பு இதயசுத்தியுடன் களமிறங்கியிருப்பினும், முஸ்லிம்  காங்கிரஸிடம் அந்த நல்லெண் ணம் இருப்பதை இதுவரையில் வெளிப்படுத் தவில்லை. ஆளுங்கட்சியில் நீதி அமைச்சராக இருக்கின்ற முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், இந்தத் தேர்தலில் அரசுக்கு எதிராகப் போட்டியிடுகின்றார். அத்தோடு அண்மைக்காலமாக அரசின் போக்கைக் கடுமையாகப் பொது இடங்களில் விமர்சித்தும் வருகின்றார். ஆனால் அரசு இது பற்றிக் கண்டுகொள்ளவோ, அல்லது ஆட்சியில்  முக்கிய பங்கு வகிக்கும் அமைச் சர் ஒருவர் வெளியிடும் அரசுக்கு எதிரான கருத்துக்களுக்கு பதில் அளிக்கவோ இல்லை. இதிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் மீதான சந்தேகம் பலப்படுகின்றது. 
 
வழமை போல அந்தக் கட்சி ஆட்சியைப் பிடித்தவுடன் கட்சி மாறிவிடும் என்று பலரும் நம்பிக்கை வெளியிடுகின்றனர். இதற்கு வலுவான ஆதாரங்களும் உண்டு. கிழக்குத் தேர்தல் பற்றிய அறிவிப்பு வந்த உடனேயே முஸ்லிம் காங்கிரஸ் அரசுடனேயே இணைந்து போட்டியிடும் என்ற முணுமுணுப்புகள் நம்பத்தகு வட்டாரங்களில் இருந்து வந்தன. கடைசி வரைக்கும் கட்சியும் அதற்கு முயற்சித்தது. பின்னர் அந்த நிலைப்பாட்டுக்கு கிளம்பிய எதிர்ப்பின் காரணமாகத் தனித்துப் போட்டியிடுதல் என்ற முடிவை முஸ்லிம் காங்கிரஸின் தலைமைப் பீடம் எடுத்தது.  இவ்வாறு இரட்டை வேடத்தை அணிந்து கொண்டு தேர் தல் அரங்கில் நிற்கும் முஸ்லிம் காங்கிரஸ், சிறுபான்மை இன நல்லிணக்கத்தைத் தொடர்ந்தும் மாறிலியான எதிர்பார்ப்புக் குள்ளேயே வைத்திருக்கின்றது. 
 
அமெரிக்கா கிழக்குத் தேர்தலை விரும்புகின்றதா?
 
அண்மையில், அமெரிக்கா கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழர் தலை மையிலான ஆட்சி மாற்றத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டுக் களமிறங்கியிருக்கின்றது  என்ற செய்தி பலரின் கவனத்துக்கும் உள்ளாகியிருந்து. அதற்காகவே மேற்கு நாடுகளின் ராஜதந்திரிகள் கிழக்குத் தேர்தலை முன்னிலைப்படுத்தித் தமது பய ணங்களை மேற்கொள்கின்றனர் எனவும் ஆதாரப்படுத்தப்பட்டிருந்தது. 
 
இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் மேற்கு நாடுகள் இதயசுத்தியுடன் செயற்படுமாக இருந்தால் அது சாத்தியமே. ஆனால் அதனை உருவாக்க களத்தில் நிற்கும் கட்சிகளிடையே புரிந்துணர்வு அவசியம். இன நல்லிணக்கத்தையும், கிழக்கு மாகாணத்தைத் தமிழரின் தாயக பூமியாக்குவதற்குமான சிந்தனை வேண் டும். இதை விடுத்துத் தேர்தலில் வெற்றிய டைவதற்காக மட்டும் இன நல்லிணக்கத் தையும், வெற்று வார்த்தைகளையும் பயன்படுத்துவது மீண்டும் தவறுகளுக்கே வித்திடும். 
 
இப்படியே இருப்பின் அமெரிக்கா மட்டுமல்ல, உலகமே திரண்டு வந்து கிழக்கு மாகாணத்தைத் தமிழர்களுக்குப் பெற்றுக் கொடுக்க முயற்சித்தாலும் அது நிகழாது.
 
தமிழர் அரசியல் பயணத்தில் ஓகஸ்ட் மாதம் பல திருப்பங்களைத் தந்திருக்கின்றது. பதிவு செய்யப்படாத  படுகொலைகளைத் தாங்கிய மாதமாக இது காணப்பட்டதாலே இந்த அடையாளத்தைப் பெற்றது. அதன் வழியில் நின்றே அரசியல் திருப்பங்களுக்கும் காரணமாக அமைந்தது. குறிப்பாக தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஓகஸ்ட் மாதத்திற்கும், கிழக்கு மாகாணத்திற்கும் அதிக தொடர்புண்டு. 30 ஆண்டு கால போராட்டப் பயணத்தின் அஸ்தமனத்தைத் தொடக்கி வைத்தது கிழக்கில் திறக்கப்பட்ட போர் வாசல்கள்தான். ஆக, இன்னொரு அரசியல் திருப்பத்தை கிழக்கிலிருந்தே இந்த மாதம் தருமானால், ஓகஸ்ட் பலி யெடுத்த தமிழ் உயிர்களுக்குப் பெறுமதி கிடைக்கும்.
 
(U)G.JKMEDIAWORKS SPECIAL NEWS TEAM 2012

Ingen kommentarer:

Legg inn en kommentar