நல்லிணக்க செயற்பாட்டில் தென்னாபிரிக்காவின் ஈடுபாடு முடங்கியுள்ள பேச்சுக்கள் ஆரம்பமாக உதவுமா?

essay *மக்கள் முழுமையாக ஆதரிக்கிறார்கள் என்பதை உலகுக்கு காட்டுவதே மாகாண சபைத் தேர்தலின் நோக்கம் *காவி உடைதரித்த பயங்கரவாதம் என்ற மு.கா.தலைவரின் கருத்து ஏற்படுத்தியுள்ள தாக்கம் *நல்லிணக்க செயற்பாட்டில் தென்னாபிரிக்க அமைச்சர் குழுவின் ஈடுபாடு *நவிபிள்ளையின் பதவி இன்னர் சிற்றி தரும் தகவல்
 தொகுப்பு:கோகுலன்

சண்டே ரைம்ஸ் பத்திரிகை
நேற்று முன்தினம் 12.08.2012 அன்று
எழுதியிருந்த அரசியல் விமர்சனக் கட்டுரையில்
இருந்து ஒரு பகுதி இது 

 
வடமத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாண தேர்தல்கள் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைப் போல இந்த நாள்களில் மிக சுறுசுறுப்பாகப் பணியாற்றிக் கொண்டிருப்பவர் வேறுயாருமே இல்லை என்று சொல்லுமளவிற்கு அவர் "பிஸியாக' இருக்கின்றார்.
 
 விளம்பரம் ஏதும் இல்லாமலே இந்த மூன்று மாகாணங்களிலுமுள்ள பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்களது கூட்டங்களை அவர் தலைமை வகித்து நடத்தி வருகின்றார். 
 
அவர்கள் அனைவருமே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு பெரும் எண்ணிக்கையான வாக்குகள் பெற்றுத்தர வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டுள்ளனர். பல்வேறு காரணங்களால் இது அவருக்கு முக்கியத்துவமாக இருக்கின்றது. விடுதலைப்புலிகள் அமைப்பை தோற்கடித்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தமது அபிவிருத்திப் பணிகள் உட்பட தமது அரசின் சாதனைகளை மக்கள் அபரிமிதமாக ஆதரித்து நிற்கிறார்கள் என்று எடுத்துக்காட்ட அவர் விரும்புகிறார். 
 
ராஜபக்ஷ அரசுக்கு மக்களின் முழு ஆதரவும் இருக்கிறது என்பதை உள்நாட்டுக்கு மட்டுமின்றி வெளிநாட்டுக்கும் காட்டவேண்டியிருக்கிறது அவருக்கு. இந்தக் குறிக்கோளை அடைவதற்கு அரசு தனது மக்கள் நலத்திட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளது. வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் நீர் இறைக்கும் பம்பிகளைப் பெற்றுவருகிறார்கள். 
 
தமது குடியிருப்புக்களை திருத்திக்கொள்ள விரும்புகிறவர்களுக்கு வீடு திருத்தும்  உதவிகளும் வழங்கப்படுகின்றன. தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்கூட்டியே சட்டப்படி சாத்தியமான வகையில் நூற்றுக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.
 
கிழக்கு இலங்கையில் ஏற்கனவே குழம்பிப்போயுள்ள அரசியல் சூழ்நிலையானது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்த மருதூரில் வெளியிட்டுள்ள ஒரு கருத்து மேலும் குழப்புவதாக அமைந்துவிட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பயங்கரவாதத்தை வெற்றிகரமாக ஒழித்துக்கட்டிவிட்டார். 
 
அதேபோல் அவர் காவி உடைப் பயங்கரவாதத்தையும் இல்லாதொழிக்க வேண்டும் என்று அவர் கூறியதாகத் தெரிகின்றது. புனித ரம்ழான் மாத காலத்தில் குறைந்தது இரண்டு முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீது  தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதான செய்திகள் தொடர்பாகவே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டிருந்தார்.
  
இந்தக் கருத்து பௌத்த சமய குருமார்களின் உணர்ச்சிகளைத் தொட்டிருக்கின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசின் உறுப்பினராக இருந்து கொண்டே இவ்வாறான ஒரு கருத்தை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கூறியிருப்பதை அவர்கள் கண்டித்திருக்கிறார்கள். 
 
ரவூப் ஹக்கீம் கருத்து முஸ்லிம் காங்கிரஸினதும் அவருடையதுமான இரட்டை நிலைப்பாட்டையும் ஏமாற்றும் தன்மையையும் எடுத்துக் காட்டுவதாக ஜாதிகஹெல உறுமயவின் பிரதிச்செயலாளர் உதயா கம்மன்பில்ல கண்டித்திருக்கிறார்.
 
 தென்இலங்கையில் அவர் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் பேசும் போது சிங்கள குருமாரையும் பௌத்தமதத்தையும் அவர் பாராட்டுகிறார். ஆனால் கிழக்கு மாகாணத்தில் அவர் தமிழில் பேசும் போது அதே குருமார்களை காவி உடை பயங்கரவாதிகள் என்று திட்டுகிறார். இந்த  நாட்டில் பெரும்பான்மையான மக்கள் பௌத்த துறவிகளை மதிக்கிறார்கள் அவர்களை புனிதமானவர்கள் என்றும் கருதுகிறார்கள் என்பது அவருக்குத் தெரியாது போலும் என்று கூறியுள்ளார் காமன்பில்ல. 
 
அரசு தரப்பில் கடந்த வியாழக்கிழமை அமைச்சரவைத் தீர்மானங்களை வெளியிடும் பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல குறிப்பிடுகையில் இந்த விடயம் புலனாய்வு செய்யப்படும் என்று  தெரிவித்திருந்தார். 
*       *                  *
 
நல்லிணக்க முயற்சியில் தெ.ஆபிரிக்கா
இந்தவாரம் இன்னொரு குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் அரசின் மீள் நல்லிணக்க நடவடிக்கைகளில் தென்னாபிரிக்கா நடுவராக செயற்படக்கூடும் என்பதாகும். அந்த நாட்டின் பிரதி வெளியுறவு அமைச்சர் எப்ராகிம். எப்ராகிம் கடந்த வாரம் கொழும்பு வந்திருந்தார். 
 
1980 களின் ஆரம்பத்தில் அந்த நாட்டு அமைச்சின் செயற்பாடுகளில் பங்களிப்பு செய்திருந்தவர் அவர். அவருடன் ஹொயிலொப் மெயர் என்பவரும் வந்திருந்தார். தென்னாபிரிக்கா சிக்கலின் போது அவர் தென்னாபிரிக்க தேசியக் கட்சியின் பிரதம பேச்சாளராக இருந்தவர் தென்னாபிரிக்க சிக்கல் தீர்க்கப்படுவதில் முக்கிய பங்காளியாக செயற்பட்டிருந்தார். தென்னாபிரிக்க இன ஒதுக்கல் கொள்கை இறுதிக் கட்டத்தில் இவர் ஆபிரிக்க தேசியக் காங்கிரஸ் பேச்சாளர் இரில் ரம்மோசாவுடன் இணைந்து செயற்பட்டு 1994 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் ஜனநாயக முறையில் தேர்தல் ஒன்று நடைபெறுவதற்கு உதவினார்.
 
தேர்தலின் பின்னரும் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் அமைச்சரவையில் மெயர் அரசமைப்புத் துறைக்கான பதவியில் தொடர்ந்து பணியாற்றினார். 
 
தென்னாபிரிக்க தூதுவர் கே.ஒப்.டொயிட்கே சகிதம் தென்னாபிரிக்கக் குழுவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ, த.தே.கூ தலைவர் இரா.சம்பந்தன், எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியவர்களைச் சந்தித்திருந்தது. 
 
தென்னாபிரிக்கக் குழுவினரின் வருகை வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்ஸின் முன் முயற்சியில் இடம்பெற்றதாகவும் நிலைமைகளை ஆராயும் முயற்சி என்று தங்கள் வருகையை அவர்கள் வர்ணித்துக்கொண்டதாகவும் தெரிக்கின்றது. மீள் நல்லிணக்க முயற்சிகளில் தென்னாபிரிக்காவின் ஈடுபாடு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கூட இலங்கைக்கு நல்லபெயரைக் கொண்டுவரும் என்று சொல்லலாம் குறைந்தபட்சம் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் அது தீவிரமாக இருக்கிறது என்ற வகையில். 
 
எதுவானாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் கலந்துகொள்ளுமாறு செய்ய தென்னாபிரிக்கக் குழுவினரால் சாத்தியமாகுமா என்பது பல லட்சம் ரூபா பெறுமதியான கேள்வியாகத்தான் இருக்கின்றது. 
 
13 ஆவது அரசமைப்பு திருத்தத்தை முழுமையாகச் செயற்படுத்துவதற்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு இந்தியா விடுக்கும் கோரிக்கைக்கு இலங்கை செவி சாய்க்காமல் இருந்துவரும் ஒரு கால கட்டத்தில் தென்னாபிரிக்காவின் இந்த முயற்சி ஆரம்பமாகியிருக்கின்றது. 
 
தமிழர் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வும் நாடாளுமன்றக் குழுவின் மூலமாக மட்டுமே செயற்படுத்தப்படும் என்று ஜனாதிபதி தீர்க்கமாக அறிவித்திருக்கிறார். மனித உரிமைகள் தொடர்பான இலங்கை அரசின் அறிக்கை ஒன்றை ஐ.நா வுக்கான இலங்கை தூதுவர் ஜெனிவாவிலுள்ள ஐ.நா. செயலகத்தில் கடந்த புதன்கிழமை கையளித்தார். 
 
இந்த அறிக்கையின் இறுதி வடிவம் ஜனாதிபதியின் செயலாளர் லலித்வீரதுங்க மற்றும் ஜனாதிபதியின் மனித உரிமைகள் தொடர்பான விசேட பிரதிநிதியான அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஆகியவர்களால் தயார்செய்யப்பட்டிருந்தது. 
 
2008 ஆம் ஆண்டு உலக பருவகால ஆய்வுக் குழுவுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி அரசினால் தன் முனைப்பாக மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துவதற்கான செயற்றிட்டம் ஆகிய விடயங்கள் தொடர்பாக இந்த அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது. 
 
இலங்கை தொடர்பான பருவகால ஆய்வு நவம்பர் மாதம் முதலாம் திகதி நடைபெறவிருக்கின்றது. கடந்த மார்ச் மாதம் மனிதஉரிமைகள் சபையில் அமெரிக்க ஆதரவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவது தொடர்பாக இலங்கை அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக வரவிருக்கும் ஐ.நா.நிபுணர்களை நாட்டுக்குள் வருவதற்கு அனுமதிப்பதென்று அரசு தீர்மானித்திருக்கிறது. 
 
வருடமுடிவுக்குள் மனிதஉரிமைகள் சபை ஆணையாளர் நவநீதம்பிள்ளையும் இலங்கை  வருவதற்கு வாய்ப்புள்ளது. 
*       *                  *
 
நவநீதம்பிள்ளை விவகாரம்
 
நவநீதம்பிள்ளை மனித உரிமை சபையின் தலைவராக நீடித்திருப்பது பற்றி இன்னர்சிற்றி பிரஸ் பத்திரிகையாளர் மெத்யூலீ பின்வரும் தகவலை வெளியிட்டிருக்கிறார்.
நவநீதம்பிள்ளை நான்கு வருடங்களுக்கு பதிலாக இரண்டு வருடங்கள் மட்டுமே பதவியிலிருப்பதற்கு அவர் வற்புறுத்தப்பட்டாரா அல்லது அவரே ஏற்றுக்கொண்டாரா என்பது பற்றி இன்னர் சிற்றி  அவரிடம் நேரடியாகவும் மறைமுகமாகவும் கேள்வியெழுப்பியது. அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். ஆனால் அவர் இரண்டு வருட பதவிக்காலத்துக்கு சம்மதிப்பதற்கான பேரம் எப்படி நடைபெற்றது என்பது நம்பகமான  வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. 
 
அமெரிக்காவும் மற்றவர்களும் வற்புறுத்தியதன் பேரில் நவநீதம்பிள்ளை இரண்டாவது தடவையும் பதவியில் இருக்க முடியாது என்ற தகவலை செயலாளர் நாயகம் பான்கீமூன் நவநீதம்பிள்ளையிடம் தெரிவித்துள்ளார். இது நல்லபடியாக தெரியும் வகையில் பதவியில் இருந்து அவர் தாமே விலகிக்கொள்வதே நல்லது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
ஆனால் நவநீதம்பிள்ளை அதனை மறுத்து இதைப் பகிரங்கப்படுத்தப்போவதாக அச்சுறுத்தியுள்ளார். அதன் பேரில் இதில் ஒரு முடிவு காண்பதற்கு பிள்ளையின் சொந்த நாடான தென்னாபிரிக்காவிடம் அணுகப்பட்டுள்ளது. தென்னாபிரிக்காவுக்கு மேலாளர் அந்தஸ்துள்ள உதவி செயலாளர் நாயகம் பதவி வழங்குவதற்கும் விருப்பம் தெரிவிக்கப்பட்டிருந்தது.  அதற்கு ஈடாக நவிபிள்ளையை இணங்கச் செய்யவேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது. 
 
ஆனால் இதற்கு தென்னாபிரிக்க சம்மதிக்கவில்லை அதன் பேரில் பிள்ளைக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பிள்ளையின் அந்தஸ்து பலவீனமாகியுள்ளது. இனி பிள்ளையும் அவரது குழுவினரும் இலங்கைக்கு வருவார்கள். 
 
40 ஆயிரம் பேர் கொல்லப்படுவதற்கான பொறுப்புக் கூறலும் இல்லாத நிலையில் இவர்களின் பயணம் இடம்பெறவிருக்கிறது. உண்øம யில் பான்கீமூனின் நிபுணர்குழுவின் அறிக்கையின்படி பொறுப்பான ஒரு இராணுவ ஜெனரலே அவருக்கு ஆலோசனை வழங்குபவராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப் பயணம் நடைபெறவிருக்கிறது. 
 
எனவே நவநீதம்பிள்ளை இனி என்ன சொல்வார் அல்லது அவரால் என்ன சொல்ல முடியும் என்பதை இனிமேல் தான் பார்க்கவேண்டும்இவ்வாறு மெத்யூலீ தெரிவித்துள்ளார்.
(U)G.JKMEDIAWORKS SPECIAL NEWS TEAM 2012

Ingen kommentarer:

Legg inn en kommentar