ஈழத்தமிழினத்தை கடவுளாலும் காப்பாற்ற முடியாது

 essay
தமிழர்களின் பேரழிவுக்குப் பின்னரும் கூட திருப்தியடையாத பேரினவாதிகள் பொறுப்பான அமைச்சர் பதவியிலிருந்தவாறே இனவாதத்தைத் தூண்டுவது நாட்டின் சமாதானத்துக்கும் ஐக்கியத்துக்கும் கொள்ளி வைக்கும் செயலாகவே கருதமுடியும்.

"தேசிய அரசியலுக்குள் ஊடுருவியுள்ள பிரிவினைவாத சக்திகள் இன்று கிழக்கு மாகாணத்தில் புலிகளின் ஆக்கிரமிப்புப் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்கின்றன. சிங்களவர்களையும் முஸ்லிம்களையும் விரட்டி விட்டு தமிழர்கள் மாத்திரம் கிழக்கில் வாழ முயற்சிப்பது ஏற்றுக் கொள்ளமுடியாத விடயமாகும்.
 
இப்படி புலிகளைச் சொல்லி தமிழர்கள் மீது முஸ்லிம்களுக்கு வெறுப்பு ஏற்படுத்தவும் ஒற்றுமையாக வாழும் கிழக்கு மக்களிடையே பகைமையைத் தூண்டி விட்டு கிழக்கில் குழப்பம் ஏற்படுத்தவும் அமைச்சர் சம்பிக்கவும் அவரது ஹெல உறுமய கட்சியினரும் முயற்சி செய்கின்றனர் என்றே எண்ணத் தோன்றுகிறது.
 
கிழக்கு மண்ணை ஆக்கிரமித்தது யார் என்பது முஸ்லிம்கள் அறியாததல்ல. இது தம்புள்ளையில் தொடங்கி தெகிவளை வரை சென்று இப்போது குருநாகல் வரை பள்ளிவாசல்களுக்கு எதிராக மதவாதத்தை யார் கிளப்பி வருகிறார்கள் என்பதை நாடேயறியும். கிழக்கில் தீகவாபியில் என்ன நடந்தது என்பதும் தெரிந்த கதைதான்.
 
பிரிவினைவாதிகள் என்று யாரைச் சொல்லுகிறார்கள்? காலாதிகாலமாக வடக்கிலுள்ள தமிழர்களும், கிழக்கிலுள்ள தமிழர்களும் கொண்டும், கொடுத்தும் இன்றும் இந்த உறவு நீடித்து வருகின்றது என்பது வரலாறு. இதேபோல் வடக்கு முஸ்லிம்களும் கிழக்கு முஸ்லிம்களும் கொண்டும், கொடுத்தும் உறவுநாடி வருவதும் இன்று நேற்று ஏற்பட்டதல்ல.
 
இந்த உறவு நீடிக்கக் கூடாது. நீடித்தால் தமிழ் பேசும் இனம் பலம் வாய்ந்ததாக தமது பூர்வீக பூமியில் விளங்கும் என்பதை தடுப்பதற்காகவே வடக்கையும் கிழக்கையும் ஆட்சிப் பீடத்துக்கு வந்ததும் பிரித்தவர்கள் பிரிவினை வாதிகளா? இரு மாகாணங்களும் எவ்வகையிலும் பிரிக்கப்பட முடியாதவை என்று உறவு கொண்டாடுபவர்கள் பிரிவினைவாதிகளா?
 
குலபேதம், ஜாதிபேதம் இருக்கக் கூடாது என்று சில வருடங்களுக்கு முன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தமிழில் பேசுகையில் கூறிவந்தார். இதை அவர் விளங்கித்தான் பேசினாரோ தெரியவில்லை. மின்சக்தி அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் செயலாளருமான சம்பிக்க ரணவக்க இதே இயக்கத்தைச் சேர்ந்த இரத்தினசாரதேரர், தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாச அமரசேகர போன்றவர்கள் பொது நிகழ்ச்சிகளில் வெளியிடும் கருத்துக்களும் வார்த்தைகளும் இந்த நாட்டில் சிறுபான்மையினருக்கு உரிமைகள் இருக்க முடியுமா? என்ற கேள்விகளையே எழுப்புகின்றது.
 
போரினால் வெளியேறிய தமிழ் மக்கள் மீளக் குடியேற்றப்பட்டு விட்டார்கள். தமிழர்கள் குடியிருப்பதற்கு வீடுகள் இருக்கின்றன. அவர்களின் பிள்ளைகள் படிப்பதற்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றன, உணவு வழங்கப்படுகின்றது, சுகாதார வசதிகள், போக்குவரத்து வசதிகள் இருக்கின்றன. இவற்றுக்கு மேல் தமிழர்களுக்கு என்ன வேண்டும் என்பதுதான் சம்பிக்க, இரத்தனசாரர், டாக்டர் குணதாச அமரசேகர போன்றவர்களின் கேள்வி.
 
சம்பிக்க அரசில் ஓர் அமைச்சர்; மற்றவர்கள் அரசுக்கு ஆதரவு கொடுப்பவர்கள். ஆளும் கட்சியிலுள்ள சிலரின் கருத்தும் இதை ஒத்ததாகவே இருக்கின்றது. இந்த நிலையில்தான் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு வாருங்கள். இனப் பிரச்சினைக்கு அங்கே தீர்வு காண்போம் என்கிறார்கள் ஆட்சிபீடத்திலிருப்பவர்கள்.
 
ஆட்சியிலிருப்பவர்களின் எண்ணிக்கை மிகமிக அதிகம். அவர்கள் தாம் விரும்பியதை நிறைவேற்றுவதற்கு எந்தத் தடையுமில்லை. பிரேமதாசாவுக்குப் பின் சட்டப்படி ஆட்சிபீடத்தில் அமர்ந்த டி.பி.விஜயதுங்க, "இலங்கையில் இனப் பிரச்சினை இல்லை. இருப்பது பயங்கரவாதப் பிரச்சினைதான்'' என்று ஒன்று உரிமைக் குரலை திசை திருப்பிவிட்டார்.
 
அமெரிக்காவில் உலகப் பொருளாதார மையத்தின் மீது கடத்தப்பட்ட விமானங்களால் மோதி உயிரழிவும், சொத்தழிவும் ஏற்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து "உலகப் பயங்கரவாத ஒழிப்பை'' அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜோர்ஜ் புஷ் பிரகடனப்படுத்தினார். இதையே இலங்கை அரசு தனது ஆயுதமாகப் பயன்படுத்தி லட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் அழியவும் பல லட்சக்கணக்கான தமிழர்கள் புலம்பெயரவும் உயிரைத் துச்சமெனக் கருதி இன்றும் சமுத்திரத்தில் கண்டம் விட்டுக் கண்டம் கடந்து போய்க்கொண்டிருக்கவும் வழி செய்திருக்கிறது.
 
 நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் உறுப்பினர்கள் தொகை ஒன்பதிலிருந்து ஆறாகக் குறைந்துள்ளது. இந்த நிலையில்தான் இடம்பெயர்ந்த சிங்களவர்களையும் முஸ்லிம்களையும் மீள வடக்கு மாகாணத்தில் குடியமர்த்திய பின் வடக்கு மாகாண சபைத் தேர்தலை அடுத்த செப்ரெம்பர் மாதத்தில் நடத்தப் போவதாகவும் புதியவாக்காளர் பதிவு நடைபெறுமென்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.
 
எந்தப் பிரதேசமும் தமக்கு மட்டுமே உரியது என்று எந்த இனமும் உரிமை கொண்டாட முடியாது என்று முக்கிய அமைச்சரும், ஜனாதிபதியின் சகோதரருமான பஷில் ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததும் தெரிவித்த கொள்கை விரைவில் செயல்படவிருக்கிறது.
இதே கருத்தை சர்வ அதிகாரங்களும் படைத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தெரிவித்திருந்தார். 
 
கொழும்பில் தமிழர்களும் முஸ்லிம்களும் தான் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். அவர்களுக்கு எந்தக் குறையுமில்லை என்றும் அவர் கூறியிருந்தார். வன்னியில் தமிழர் வாழும் நிலங்கள் யாவும் விடுதலைப் புலிகள் கொடுத்த அரச காணிகள் என்று சிங்கள அரசியல் வாதிகள் சிலரும் புத்தபிக்குகள் சிலரும் கூட கூறிவருகின்றனர். ஹெல உறுமய இரத்தினசார தேரர் சமீபத்தில் இந்துக் கோயில்கள் இருக்கும் இடங்கள் எல்லாம் முன்பு பௌத்த விகாரைகளுக்காக இருந்த இடங்களே என்று கூறியிருந்தார்.
 
விடுதலைப் புலிகளை அழித்து வெல்ல முடியாது என்று கருதப்பட்ட வெற்றியை சிங்களவர்கள் ஈட்டியிருக்கிறார்கள். இலங்கை சிங்களவர்களுக்கே உரியது என்ற மனப்பான்மை அதி உயர் பீடத்திலிருப்பவர்கள் தொடக்கம் சாதாரண குடிமகன் வரை ஊறிப்போயிருக்கிறது. இதை ஊட்டி வளர்த்ததில் புத்த பிக்குகளுக்கும் சிங்கள இனவாத ஊடகவியலாளருக்கும் பெரும் பங்குண்டு.
 
எங்கும் எதிலும் சிங்கள இனவாதம் ஊறி உறைந்து போயிருக்கிறது. எல்லோரும் இலங்கையர்கள் என்றும் ஜாதிபேதம், குலபேதம் இருக்கக்கூடாது என்றும் சொல்வதெல்லாம் வெறும் பேச்சுக்குத்தான். இது உண்மையிலேயே அதிஉயர் ஜனாதிபதியின் உள்ளத்தில் உறைந்து போயிருந்தால் போரில் வெற்றி பெற்றதும் வெளிநாட்டிலிருந்து திரும்பியதும் விமான நிலையத்தில் நாட்டின் மண்ணை முத்தமிட்டதுடன், "நடந்ததை மறப்போம் இனி எல்லோரும் ஒன்றிணைந்து நாட்டின் ஐக்கியத்தை கட்டி எழுப்புவோம்'' என்று தென்னாபிரிக்க மாவீரன் நெல்சன் மண்டேலா போல் சொல்லியிருந்திருப்பார்.
 
வெற்றியின் பின் கிளிநொச்சியில் அமைச்சரவைக் கூட்டம் நடத்தியதிலிருந்து இந்தப் "புலம்பெயர் புலிகள்' என்று முத்திரை குத்துவதன் மூலமும் புலிகளைப் போலவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களும் நடந்துகொள்கிறார்களென்றும் பிரிவினை வாதிகளென்றும் பழிபோடுவதன் மூலமும் நாட்டில் ஐக்கியத்தை ஏற்படுத்தி விடமுடியாது.
 
ஆட்சிபீடத்தில் உள்ளோர் தென்னாபிரிக்காவுக்குப் போய் வந்தார்கள். சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் போய் வந்தார்கள் அங்கிருந்தும் அமைச்சர்களும் வந்து போகிறார்கள். ஆனால் தென்னாபிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலாவும்  சிங்கப்பூரின் பெருந் தலைவர் லீ.குவான்.யீயும் காட்டிய வழியைக் கொஞ்சமாவது நினைவிலிருத்தி செயற்பட்டிருந்தால் இலங்கை ஆசியாவில் ஆச்சரிய நாடாக மட்டுமல்ல அதிசய நாடாகவும் மாறி மூன்று வருடங்கள் நிறைவெய்தியிருக்கும்.
 
அடுத்த வருடம் செப்ரெம்பர் மாதத்தில்தான் வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடைபெறும் என்றும் புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார். முன்பு வவுனியாவில் 35,000 சிங்களவர்கள் வாழ்ந்திருக்கிறார்களென்றும் அவர் கூறியிருக்கிறார்.
 
சில மாதங்களுக்கு முன் இரத்தினசார தேரர் யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் வாழ்ந்த சிங்களவர்கள் தொகை பற்றித் தெரிவித்திருந்தார். புதியவாக்காளர் பட்டியலின் பின் எந்தப் பிரதேசத்துக்கும் எவரும் உரிமை கொண்டாட முடியாது என்ற கருத்து நிஜத்தில் நிரூபிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். இதற்குத்தான் கால அவகாசம் என்றாலும் எங்கள் தமிழர்கள் எதை இழந்தாலும் வேலை வாய்ப்புக்கும் தலைமைப் பதவிக்கும் போட்டி போடுவதிலும் காட்டிக் கொடுப்பதிலும் பின்நிற்கப் போவதில்லை. 
 
ஈழத் தமிழினத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது. ஆண்டவன் என்றால் முன்பு ஆட்சியிலிருந்தவர்கள் என்று அர்த்தப்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.  ஆதலால் கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்று சொல்லலாம். 
 
 
 
எஸ்.எம்.கோபாலரத்தினம்
(U)G.JKMEDIAWORKS SPECIAL NEWS TEAM 2012

Ingen kommentarer:

Legg inn en kommentar