மீண்டும் சந்திரிகா..!

 essay
சந்திரிகா கிராமங்களில் இறங்கியபோது பலருக்கு அவரை அடையாளம் தெரிந்திருக்கவில்லை. சிலருக்கு அவர் சந்திரிகாதான் என்று சொன்ன பின்னரும் அடையாளப்படுத்த முடியவில்லை. சிறிமாவின் மகள் என்றபோதுதான் புரிந்தது. பின்னர் நட்புறவுடன் பழகினார்கள். சந்திரிகாவின் நிறுவனத்தால் கொடுக்கப்பட்ட சூரிய சக்தி மின்கலத் தொகுதியால் தமது பிள்ளைகள் பயன்பெறுகிறார்கள் என்பதே அனேகரின் கருத்தாக அமைந்தது.

 1976ஆம் ஆண்டில் நாட்டின் பிரதமராகப் பதவி வகித்தவர் சிறிமாவோ பண்டாரநாயக்கா. அதேயாண்டில் யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தார். தமிழ் மக்கள் அவருக்கு நிலபாவாடை விரித்து அழைத்துச் சென்று பெரு வரவேற்பு வழங்கினர்.
 
யாழ்ப்பாண மக்களால் பெருமகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்ட தென்பகுதிச் சிங்கள அரசியல் தலைவர்களில் சிறிமாவோவே கடைசியானவர் எனவும் கூறப்படுவதுண்டு. 
சிறிமாவோவின் மகளான சந்திரிகா 1994ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டவேளை, தமக்கு தமிழ் மக்களது ஆதரவு கோரி யாழ்ப்பாணத்துக்கு வரவில்லை. 
 
வரும் நிலைமையும் இருக்கவில்லை. ஆனாலும் சமாதான தேவதையாக அவரை ஆதரித்தார்கள் யாழ்.குடாநாட்டு மக்கள். சந்திரிகா அரியணைக்கு உரிமை கோரிய போது அவர் பற்றி யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் மதிப்பு நிலவி வந்தது.
 
 "சந்திரிகா காப்பு', "சந்திரிகா பாக்', "சந்திரிகா குடை', "சந்திரிகா சீலை' என்ற பெயரில் பல பொருள்கள் யாழ்ப்பாணத்தில் விற்கப்பட்டன. விடுதலைப் புலிகளுக்கும் சந்திரிகாவின் தலைமையிலான அரசுக்கும் இடையில் சமாதானப் பேச்சுக்கள் இடம்பெற்றமையால் சந்திரிகாவின் புகழ் யாழ்ப்பாணத்தில் பிரபலமடைந்திருந்தது. 
 
அந்தச் சமாதானப் பேச்சுக்கள் முறிவடைந்த பின்னர் சமாதான தேவதை என்ற சந்திரிகாவின் பிம்பம் அடியோடு மாறியது. யாழ். குடாநாட்டை விடுதலைப் புலிகளிடமிருந்து பிடுங்க அவர் எடுத்த இராணுவ நடவடிக்கை சந்திரிகாவை நரபலியெடுக்கும் தெய்வங்களுக்கு நிகராக யாழ்ப்பாண மக்களிடம் மாற்றியது.
 
சந்திரிகாவின் அரச படைகள் 1995ஆம் ஆண்டு யாழ். குடாநாட்டைக் கைப்பற்றின. அதற்கான போரை அடுத்து அதேயாண்டு ஒக்ரோபர் மாதம் ஒரே நாளில் குடாநாட்டைச் சேர்ந்த சுமார் 5 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்தனர். பல நூறுபேர் இறந்தனர்; பலர் காணாமல்போயினர். 
 
குடாநாட்டைப் பிடித்த வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் இலங்கையின் தேசியக் கொடியை அங்கு ஏற்றி வைக்க யாழ்ப்பாணம் வந்தவர்கள் அப்போதைய பாதுகாப்புப் பிரதி அமைச்சரும் சந்திரிகாவின் மாமனுமான அனுருத்த ரத்வத்தை. 
இந்தச் செயல் குடாநாட்டு மக்களின் மனங்களைச் சுக்குநூறாக்கியது. அவர்களின் மனவேதனையை அதிகரிக்கும் விதத்தில் யாழ்ப்பாணம் வெல்லப்பட்ட செய்தியை பேழையில் வைத்து  மன்னர் ஆட்சிக் காலத்தைப் போன்று சந்திரிகாவுக்கு அறிவித்தார் ரத்வத்த. 
 
யாழ்ப்பாணத்தில் சிங்கக் கொடி ஏற்றப்பட்டமை குறித்தும் ரத்வத்தை வெற்றியை அறிவித்த விதம் குறித்தும் தமிழர்களிடம் இருந்து அப்போது கடுமையான கண்டனங்கள் வெளியாகின. ஆனால் சந்திரிகா அது பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. 
சிங்கக் கொடி ஏற்றி வைக்கப்பட்டமை தொடர்பாக தமிழ் மக்கள் கவலை கொண்டுள்ளதாக அந்த வேளையில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின்  தலைவர்கள் சந்திரிகாவுக்குத் தெரியப்படுத்தினர். 
 
தனது செல்வாக்கு தமிழ் மக்களிடம் சரிந்துவிட்டது என்பதை அவர் புரிந்துகொண்டார். எனவே தமிழ் மக்களைத் திருப்திப்படுத்தும் நோக்கில் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஊடாக அரசியல் தீர்வுப் பொதியொன்றைத் தயாரித்தார். ஆயினும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் தயாரிக்கப்பட்ட அந்த அரசியல் தீர்வுப்பொதி யோசனை தமிழ் மக்களது அரசியல் விருப்பைப் பூர்த்தி செய்வதாக அமையவில்லை.
 
அதன் பின்னர் இராணுவ ரீதியில் விடுதலைப் புலிகளை அடக்கியொடுக்க சந்திரிகா முயற்சித்ததன் காரணமாக தமிழ் மக்கள் மத்தியில் சந்திரிகா அடியோடு மதிப்பிழந்து போனார். எனினும் 1999ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்களின் ஆதரவு இன்றியே சந்திரிகா மீண்டும் ஜனாதிபதியானார். அந்தப் பதவிக் காலத்தின் போதும் அவர் ஒருபோதும் யாழ்ப்பாணத்துக்குச் வரவில்லை. புலிகளின் தாக்குதல் அச்சம் அதற்குக் காரணம் என்று கற்பித்துக்கொண்டார்கள்.
 
1971ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்துக்கு பயணம் செய்ததன் பின்னர் இரு வாரங்களின் முன்னரே அவர் மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு வந்தார். அண்மைய அவரது யாழ்ப்பாணப் பயணம் இந்த நாட்டில் இயங்கும் வெளிநாட்டுத் தூதராலயங்களின் கடும் கவனத்தை ஈர்க்கும் ஒரு சம்பவமாக அமைந்தது. அது மட்டுமன்றி, சந்திரிகாவின் அண்மைய யாழ்ப்பாணப் பயணத்துக்கான அடிப்படை நோக்கம் குறித்தும் பல தரப்புக்கள் மத்தியிலும் வெவ்வேறு அபிப்பிராயங்கள் நிலவின.
 
சந்திரிகாவின் பயணம் மிக இரகசியமாகவே இருந்தது. இராணுவப் புலனாய்வாளர்கள் பொலிஸார் என்போருக்கே தெரியாத அளவுக்கு அவரது பயணத்தின் இரகசியம் பேணப்பட்டது. அவர் யாழ்ப்பாணம் வந்த பின்னரே அவர்களுக்கும் அது பற்றிய செய்திகள் தெரிந்தன. பதறியடித்து விழித்துக் கொண்ட அவர்களால் பின்னரும்கூட சந்திரிகா ஏன் வந்தார் என்ற காரணத்தை முற்றாக அறியமுடியவில்லை. 
 
சந்திரிகா ஏ9 பாதை வழியே தன்னுடைய வாகனத்தில் வந்தார். இரண்டு பாதுகாப்பு வாகனங்களும் கூடவே வந்தன. அவரது பயணம் குறித்து தெற்கைச் சேர்ந்த ஒரேயொரு ஊடகத்தைத் தவிர வேறு எவருக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டிருக்கவில்லை. 
 
செம்மணியை வந்தடைந்த பின்னர் அவர்களது வாகன அணி அங்கு சற்று நேரம் நின்றது. பின்னர் கிழக்கு அரியாலைப் பக்கமாகத் திரும்பிப் பயணித்தது. சந்திரிகா தலைவராக இருக்கும் நீதி மற்றும் ஜனநாயக நிதியத்தின் மூலம் போரால் பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கு வழங்கப்பட்ட சூரிய சக்தி மின்கலத் தொகுதிகள் எவ்வளவு தூரம் மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கின்றன என்பதைப் பரிசோதிப்பதற்காகவே அவர் யாழ்ப்பாணம் வந்தார் என்று சொல்லப்பட்டது. 
 
கிழக்கு அரியாலை மற்றும் நீர்வேலி ஆகிய இடங்களுக்குச் சென்று சந்திரிகா பார்வையிட்டார். இந்தப் பயணத்தின் போது சந்திரிகா எந்தவொரு இடத்திலும் முறையான, சிறப்பான வரவேற்பைப் பெறவில்லை. அவர் மீதான வெறுப்பால் மக்கள் அப்படி நடந்துகொண்டார்கள் என்று சொல்ல முடியாது. சந்திரிகா வருகிறார் என்று அவர்களுக்குத் தகவல் தெரிந்திருக்கவில்லை. 
 
சந்திரிகா கிராமங்களில் இறங்கியபோது பலருக்கு அவரை அடையாளம் தெரிந்திருக்கவில்லை. சிலருக்கு அவர் சந்திரிகாதான் என்று சொன்ன பின்னரும் அடையாளப்படுத்த முடியவில்லை. சிறிமாவின் மகள் என்றபோதுதான் புரிந்தது. பின்னர் நட்புறவுடன் பழகினார்கள்.
 
 சந்திரிகாவின் நிறுவனத்தால் கொடுக்கப்பட்ட சூரிய சக்தி மின்கலத் தொகுதியால் தமது பிள்ளைகள் பயன்பெறுகிறார்கள் என்பதே அனேகரின் கருத்தாக அமைந்தது. 
சந்திரிகா நல்லூர் ஆலயத்துக்குச் சென்றார், நாகவிகாரைக்குச் சென்றார், நயினாதீவுக்கும் செல்வார் என்றெல்லாம் ஊடகங்கள் பல கதைகள் திரித்த போதும் அவற்றில் எதுவும் நடந்திருக்கவில்லை. சந்திரிகா அன்று பிற்பகலில் நல்லூரில் உள்ள சைவ உணவு விடுதியில் மதிய உணவை அருந்தினார். அவர் அங்கு உணவருந்திக் கொண்டிருந்தபோது மேலே சுற்றிக்கொண்டிருந்த காற்றாடி ஒன்று கழன்று விழுந்தது. 
 
எனினும் அதனால் சந்திரிகாவுக்கு ஆபத்து ஏதும் ஏற்படவில்லை. உணவு முடிந்ததும் சந்திரிகா உடனடியாகவே கொழும்பு புறப்பட்டுவிட்டார். யாழ்ப்பாணத்துக்கான இரகசியப் பயணம் உள்ளிட்ட சந்திரிகாவின் அண்மைக்கால போக்கைப் பார்க்கும்போது, அவர் ஏதோ ஓர் அரசியல் பாய்ச்சலை மீண்டும் நடத்தத் தயாராகி வருகிறார் என்பது புலப்படுகிறது. அவர், அடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பான பொதுவேட்பாளராகப் போட்டியிடத் தயாராகி வருகிறார் என்று ஒரு தரப்பினர் சந்தேகம் வெளியிட்டு வருகின்றனர். 
 
அதற்காக தமிழ் மக்களிடம் தனக்குள்ள செல்வாக்கை நாடிபிடித்தறியவே அவர் யாழ்ப்பாணம் வந்தார் என்றும் அந்தத் தரப்பினர் கூறுகின்றனர். உண்மையில் தேர்தலில் தோல்வியைத் தழுவியதன் காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டவரல்லர் சந்திரிகா. பதினேழு ஆண்டுகள் கால ஐ.தே.கட்சியின் அதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்து சுதந்திரக் கட்சியை ஆட்சி அதிகாரத்தில் அமர வைத்தவர் சந்திரிகாவே. சுமார் 11 ஆண்டுகள் ஓர் அரசியாக இந்த நாட்டை ஆண்டார்.
 
2005 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலிலும் சுந்திரக் கட்சி சார்பில் போட்டியிட விரும்பியிருந்தார். ஆனாலும் மஹிந்த ராஜபக்ஷவின் நடவடிக்கைகளால் அவரால் அதைச் செய்ய முடியாமல் போய்விட்டது. இதனால் மஹிந்தவின் வெற்றிக்காக சந்திரிகா மனது வைத்து உழைக்கவில்லை என்றதொரு குற்றச்சாட்டு இருக்கிறது.
 
 இருந்தாலும் 2004ஆம் ஆண்டில் அவர், ரணிலின் தலைமையில் இயங்கிய ஐ.தே.கட்சி அரசைக் கலைத்து புதிதாகப் பொதுத் தேர்தலை நடத்தி சுதந்திரக்கட்சியை மீண்டும் அரசமைக்க வழி செய்திருக்காவிட்டால் இன்று இந்த நாட்டின் ஜனாதிபதி பதிவியை வகிக்க மஹிந்தவுக்கு வாய்ப்புக் கிட்டியிருக்காது. ஆகக் குறைந்தது பிரதமர் பதவியை வகிக்கக்கூட வாய்ப்புக் கிட்டியிருந்திருக்காது.
 
சந்திரிகா, இந்த நாட்டின் சுபீட்சத்துக்காக பெரிய அளவில் எதுவும் செய்துவிடவில்லை என்றொரு பொது அபிப்பிராயம் நிலவுகிறது. ஆனால் சுதந்திரக்கட்சியின் தீவிர ஆதரவாளர்களில் பலர் இன்றும் சந்திரிகா மீது நம்பிக்கையும் மதிப்பும் வைத்துள்ளனர். 
 
ஐக்கிய தேசியக் கட்சி ஆதிக்கத்திலிருந்த நாட்டில் தமது கட்சியை மீண்டும் பலம்பொருந்தியதாக மாற்றியமைத்தவர் அவரே என்று அடிமட்ட சுதந்திரக் கட்சியினர் இன்றும் கருதுகின்றனர். 
 
மஹிந்த ராஜபக்ஷவால் ஈர்க்கப்பட்டவர்களும் மற்றும் ஐ.தே.கட்சியின் தீவிர ஆதரவாளர்களும் மட்டுமே சந்திரிகா நாட்டின் சுபீட்சத்துக்காக பெரிதாக எதையும் செய்திடவில்லை என்று தெற்கில் குற்றம் சுமத்துகின்றனர். தமிழ் மக்களின் நிலை எல்லோருக்கும் தெரிந்ததுதான். 
 
இந்த நிலையில் அடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளராகப் போட்டியிடும் நிலை உருவாகுமானால் சுதந்திரக் கட்சியின் தீவிர ஆதரவாளர்களும் கடைநிலைத் தொண்டர்களும் தடுமாற்றமுறுவர் என்பது நிச்சயம். 
அதேவேளை மஹிந்தவுக்கும், மஹிந்தவின் அரசில் அமைச்சர்களாகப் பதவி வகிப்போருக்கும் சந்திரிகாவை எப்படி விமர்சிப்பது என்ற பிரச்சினையும் தலைதூக்கும். ஏனெனில் அவர்கள் தமது முன்னாள் தலைவியையே விமர்சிக்க வேண்டியிருக்கும். 
 
சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற தவறான செயற்பாடுகளை அவர்கள் விமர்சிக்க முயன்றால் அது உண்மையில் தம்மீது தாமே எச்சில் உமிழ்வதற்கு ஒப்பானதாக மாறிவிடும். ஏனெனில் மஹிந்தவைப் போன்றே, இன்றைய அரசில் அமைச்சர்களாக பதிவி வகிக்கும் பலரும் சந்திரிகாவின் அமைச்சரவையின் உறுப்பினர்களாக இருந்தவர்களே!
 
2005ஆம் ஆண்டில் சந்திரிகா அரசிலிருந்து விலகிக் கொண்டபோது, சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களிடம் மட்டுமன்றி ஐ.தே.கட்சியின் உறுப்பினர்கள் மத்தியில்கூட சந்திரிகா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பமைந்தால் அவரால் நிச்சயமாக வெற்றி பெற இயலும் என்ற கருத்தே நிலவி வந்தது. 
 
1988ஆம் ஆண்டில் ஜே.ஆர்.ஜெவர்த்தன அதிகாரத்தைப் பிரேமதாசவிடம் ஒப்படைத்து விட்டு அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற வேளையில் மீண்டும் ஜே.ஆர். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பமைந்தாலும் அவரால் வெற்றியீட்ட இயலாது என்ற கருத்தே பரவலாக நிலவி வந்தது. ஆனால் சந்திரிகாவின் நிலை அப்படியிருக்கவில்லை.
 
அதனால், தொடர்ச்சியான தோல்விகளால் துவண்டு போயுள்ள எதிரணி, அடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிகாவே பொருத்தமான பொது வேட்பாளர் என எண்ணுவதில் தவறேதும் கிடையாது. 
 
2005ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட இயலாமல் சந்திரிகாவுக்குத் தடையாக அமைந்தது ஜே.ஆரின் அரசமைப்பில் இருந்த 2 தடவைகளுக்கு மேல் ஒருவர் ஜனாதிபதியாக முடியாது என்ற தடையே! தற்போது ஜனாதிபதி மஹிந்தவால் அந்த விதியும் மாற்றப்பட்டுவிட்டது. 
 
ராஜபக்ஷ பரம்பரையினர் தொடர்ந்தும் இந்த நாட்டின் ஜனாதிபதிப் பதவியை வகிக்க வேண்டுமென்ற நோக்கத்திலேயே மஹிந்த ராஜபக்ஷவால் இந்த அரசமைப்பு விதிமாற்றம் மேற்கொள்ளப்பட்டிருக்கக்கூடும். ஆனால் அந்தத் தடைநீக்கம், மீண்டும் பண்டாரநாயக்கா பரம்பரை அதிகாரத்தைக் கைப்பற்ற வழியை ஏற்படுத்தி விடக்கூடும்.
சந்திரிகாவை அரசியலரங்கில் இருந்து வெளியேற்றும் எண்ணத்துடனேயே 1994 ஆம் ஆண்டு முதல் எதிரணியினர் மஹிந்த ராஜபக்ஷவை வளர்த்து வந்தனர்.
 
 ஆனால் கடைசியில் அதன் விளைவு, மஹிந்த ராஜபக்ஷ தனக்கான பாதையை வகுத்துக் கொண்டு எதிரணியினரின் தோள்மேலேறி ஜனாதிபதிப் பதவியைக் கைப்பற்றியதாக முடிந்தது. தற்போது ஜனாதிபதி மஹிந்தவை அதிகாரத்திலிருந்து அகற்ற, சந்திரிகாவைப் பயன்படுத்த எதிரணி நினைத்தால் அது அதன் பழைய உத்திதான். ஆனாலும் பயன்மிக்க உத்தியாகவே இருக்கும்.
 
இருந்தாலும் பொது எதிரணி வேட்பாளராக சந்திரிகாவை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்த முயன்றால், எதிரணியின் தோள்மேலேறி சந்திரிகா மீண்டும் இந்த நாட்டின் ஜனாதிபதியாக ஆகி சுதந்திரக் கட்சி அரசை ஆட்சியில் இருத்துவாரா என்பது குறித்துத் தற்போது எதனையும் உறுதியாகக் கூற இயலாதுள்ளது.
(Uthayan)G.JKMEDIAWORKS SPECIAL NEWS TEAM 2012

Ingen kommentarer:

Legg inn en kommentar