நவராத்திரிப் பண்டிகை

essay நவராத்திரி என்றால் ஒன்பது இரவுகள். திருவருட் சக்தியும் உலகமாதாவுமாகிய உமாதேவியை விஷேடமாக வழிபட்டு நாம் ஈடேறுவதற்காகிய புண்ணிய காலம் நவராத்திரியாகும்.

புரட்டாதி  மாதத்துப் பூர்வபக்க பிரதமைத் திதி முதலாகவுள்ள ஒன்பது இரவுகள் நவராத்திரி எனவும்; பத்தாம் நாள் விஜயதசமி எனவும் சொல்லப்படும். சக்தியின் திருநாமங்கள் பல பெயர்களால் அழைக்கப்படும். உமாதேவி, காமாட்க்ஷி, சிவகாமசுந்தரி, மீனாட்க்ஷி, விசாலாட்க்ஷி, லக்ஷ்மி, சரஸ்வதி, காயத்திரி, சாவித்திரி, துர்க்கை, காளி, புவனேஸ்வரி, வாலாம்பிகை, பெரியநாயகி, மனோன்மணி, பர்வதவர்த்தினி, தையல்நாயகி, இராஜராஜேஸ்வரி, வீரலக்ஷ்மி, விஜயலக்ஷ்மி, தனலக்ஷ்மி முதலான அனந்தத் திருநாமங்களைப் பெற்று ஆத்ம கோடிகளுக்கு அருள்புரிகின்றவள்.

ஒரு மனிதனின் வளர்ச்சிக்கு உடல் வலிமையும், வாழ்க்கைக்குத் தேவையான செல்வமும் அறிவு வளமும் மிகவும் அவசியம். அதனை வெளிப்படுத்த உடல் வலிமையின் சக்தியாக ஸ்ரீதுர்க்கா தேவியையும், வாழ்க்கைக்குத் தேவையான செல்வத்தை நல்கவல்ல சக்தியாக ஸ்ரீமஹா லக்ஷ்மியையும் அறிவையும் ஆற்றலையும் தரவல்ல கல்வியின் தேவதையாக ஸ்ரீசரஸ்வதி தேவியையும் நாம் வழிபட்டு அந்த தேவியரின் அருள் பெற்று வலிமை, செல்வம், கல்வி ஆகிய மூன்றினையும் பெறுவதற்காக ஏற்படுத்தப்பட்ட பண்டிகையே நவராத்திரி எனப்படும்.

ஒன்பது இராத்திரிகளில் முதல் மூன்று இரவுகள் ஸ்ரீதுர்க்கா தேவியையும் அடுத்த மூன்று இரவுகள் ஸ்ரீமகாலக்ஷ்மி தேவியையும் கடைசி மூன்று இரவுகள் ஸ்ரீசரஸ்வதி தேவியையும் ஆராதித்து பெறற்கரிய இந்தச் செல்வங்களைப் பெற வழி வகுத்துத் தரும் ஒரு அற்புதமான பண்டிகை தான் நவராத்திரி.

எளிய முறையில் பக்தியோடு ஆராதிக்க வேண்டும் என்பது தான் நாளாவட்டத்தில் இந்த ஆராதனை ஒரு பண்டிகையாக மாறி, அதற்கு ஒரு சமூக அந்தஸ்தும் பொது வாழ்க்கையின் தொடர்பும் ஏற்பட காரணமாயிற்று.

அவரவர் விருப்பத்துக்கேற்ப தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தி, அதனைப் பகிர்ந்து கொள்ள நண்பர்களையும் உறவினர்களையும் தத்தம் வீட்டுக்கு அழைத்து தாங்கள் வைத்திருக்கும் பொம்மைக் கொலுவை பார்க்கும் படி செய்து, உபசரித்து அனுப்புவது நவராத்திரி பண்டிகையின் ஓர் அம்சமாக மாறியது.

தனிப்பட்டவர்கள் வீட்டில் நிகழ்ந்து கொண்டிருந்த இந்தப் பண்டிகை பின்னர் சமூக அளவில் மதிப்புப் பெற்று துர்க்கா பூஜை எனும் பெயர் பெற்றது. பொது இடங்களில் ஆதிபராசக்தியை துர்க்கா,லக்ஷ்மி,சரஸ்வதி வடிவில் அமைத்து, அலங்கரித்து, நித்திய ஆராதனை செய்து, பொதுமக்கள் கலந்துகொண்டு பொது பிரார்த்தனையாக கொண்டாடும் விதத்தில் இந்தப் பண்டிகை அமைந்தது.

முன்னர் இந்தப் பண்டிகையில் மக்களின் தெய்வீக ஈடுபாடும்,பக்தியும், ஆன்மிக ஒருமைப்பாடும்,எளிமையுமே காணப்பட்டது. சமீப காலத்தில் ஆடம்பர நோக்கங்களும் விளம்பர நோக்கங்களும் வியாபார நோக்கங்களும் இதில் பிரதிபலிக்க ஆரம்பித்து விட்டன.

முதல் மூன்று நாள்களும் வெற்றியை வேண்டித் துர்க்கா தேவியையும், அடுத்த மூன்று தினங்களும் செல்வத்தை வேண்டி லக்ஷ்மி தேவியையும், இறுதி மூன்று தினங்களும் கல்வியை வேண்டி சரஸ்வதியையும் வழிபடல் வேண்டும். ஒன்பதாம் நாளிரவு ஆயுத பூஜை எனப்படும்.

ஒவ்வொருவரும் தமது முயற்சிக்கு ஆதாரமான பொருள்களை ஆயுத வகைகள், புத்தகங்கள், இரத்தினம், பொன் முதலியவற்றை வைத்து வழிபடுவர். பத்தாம் நாள் விஜயதசமி எனப்படும். அன்று ஏடு தொடக்குதல் முதலான வித்தியாரம்பங்கள் தொடங்கும். மேலும் மகிடாசுரவதம், கன்னிவாழை வெட்டுதல்,மானம் பூ எனவும் இந்நாள் கூறப்படும்.

நவராத்திரி நாள்களில் கொலு வைக்கப்படுகின்ற வழக்கம் உண்டு. படைப்புக் கடவுளாகிய பிரம்ம தேவருக்கு நடந்த சகல ஆபத்துக்களையும் போக்கி, முன் படைத்தது போலவே மேலும் படைத்தற் தொழிலை நடத்த அருள் தேவியை நடுவே வைத்து அருட்சக்தியை சுற்றி இந்த உலகப் பொருளையெல்லாம் அழகு பெற வைத்து, உலகில் வாழ அருள் புரிந்த ஆதி சக்தியை வணங்குவதையே அது குறிக்கின்றது.

இந்தப் புண்ணிய தினத்தில் எவரேனும் தேவியை வணங்கத் தவறமாட்டார்கள். ஆலயங்கள், வித்தியாலயங்கள், மடாலயங்கள்,வீடுகள் முதலாக எங்கும் வழிபாடு நடைபெறும். ஆசிரியர்கள் பலவகை விருத்தங்கள், பாடல்கள், கோலாட்டங்கள் என்பனவற்றை மாணவர்களுக்கு பயிற்றுவிப்பர்.

பெரியோர் இல்லங்களுக்குச் சென்று அவர்களை மகிழ்வித்து சன்மானம் பெறுவர். எமது நாட்டில் இந்து மக்கள் யாவரும் ஒருமைப்பாட்டை விளக்கும் ஓர் அற்புதப் பண்டிகையாக நவராத்திரியினை கொண்டாடி வருகிறார்கள்.

இ.குமாரசாமிசர்மா
வண்ணார்பண்ணை
(நன்றி-Uthayan) GJKMEDIAWORKS TEAM 2012

Ingen kommentarer:

Legg inn en kommentar