மனுக்களை கையளித்துவிட்டு ஒதுங்கிவிடல் ஆகாது அனலை நிதிஸ் ச. குமாரன்.


ஆகஸ்ட் 12 2012-இல் இடம்பெற்ற டெசோ மாநாட்டில் இயற்றப்பட்ட 14 தீர்மானங்கள் அடங்கிய நகலை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினும் நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவும் ஐ.நா. சபையின் துணைப் பொதுச்செயலாளர் யான் லியாசனிடம் நியூயோர்க்கிலும் பின்னர் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் ஜெனிவாவிலும் கையளித்துள்ளனர்.
மனுக்களை கையளித்துவிட்டு ஒதுங்கிவிடல் ஆகாது என்பதனை டெசோ அமைப்பினரும் குறிப்பாக தி.மு.க. மறந்துவிடல் ஆகாமல் இருப்பதே எதிர்காலத்தில் ஈழத் தமிழர்கள் சம உரிமை கௌரவம் சமநீதி மற்றும் சுயமரியாதையுடன் வாழக்கூடிய நிலைமையை தோற்றுவிக்க முடியும்.
அக்டோபர் 3 2012-இல் கலைஞர் கருணாநிதி தலைமையில் டெசோ அமைப்பின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. அதில் டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் ஈழத் தமிழர்கள் அரசியல் உரிமைகளையும் வாழ்வுரிமைகளையும் குறித்த கோரிக்கை மனுக்களை நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. பொதுச் செயலாளரிடமும் ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையத்திடமும் வழங்க முடிவெடுத்து மனுக்களை ஸ்டாலினும் பாலுவும் நேரில் சென்று அளிப்பார்கள் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்திய மத்திய அரசின் அனுமதியுடன் அக்டோபர்31 2012-இல் நியூயோர்க் புறப்பட்டனர் ஸ்டாலினும் பாலுவும். ஐ.நா. சபை பொதுச் செயலாளர் பான் கி மூனை சந்தித்து மனுவைக் கையளிப்பது என்பதே திட்டமாக இருப்பினும் 20 நாட்கள் பயணமாக ஆபிரிக்கா தென் அமெரிக்க நாடுகளுக்கு மூன் சென்றிருந்ததனால் மூனை இவர்களால் சந்திக்க முடியவில்லை.
மூனுக்குப் பதிலாக ஐ.நா. சபையின் துணைப் பொதுச்செயலாளர் யான் லியாசன் இவர்களை வரவேற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மூன் இவர்களைச் சந்தித்து இருந்திருந்தால் நிச்சயம் சிறிலங்காவின் எதிர்ப்பை மூன் சந்தித்து இருப்பார் என்கிற காரணத்தினாலேயோ என்னவோ குறித்த இரு தமிழ் பிரமுகர்களையும் சந்திக்காமல் சென்றுவிட்டார் மூன் போலும்.

ஸ்டாலினைப் புகழ்ந்து தள்ளிய கலைஞர்:
ஸ்டாலினும் பாலுவும் யான் லியாசனைச் சந்தித்த மறுகணமே கலைஞர் தனக்கு வந்த பாணியிலேயே அறிக்கைகளை விட்டார். ஈழத் தமிழருக்காகப் பல தசாப்தங்களாக தி.மு.காவே போராடி வருகிறது என்று கூறியதுடன் ஈழத் தமிழருக்காக தி.மு.க.ஐ.நா. மன்றத்தை அணுகுவது இது முதல் முறை அல்ல என்றார்.
கலைஞர் தனது அறிக்கையில் கூறியதாவது'ஏற்கனவே 1961-ஆம் ஆண்டு தூத்துக்குடியில் நடந்த தி.மு.க. பொதுக்குழுவில் இலங்கை தமிழர் பாதுகாப்பு பற்றி தீர்மானம் நிறைவேற்றி ஐ.நா. சபை தலையிட்டு தமிழர்களை பாதுகாக்க கோரிக்கை வைத்தோம். 1985-ஆம் ஆண்டு ஒரு கோடி கையெழுத்து பெற்று அனுப்பி வைத்தோம். இப்போது பல்வேறு விரும்பத்தகாத நிகழ்ச்சிகள் நடைபெற்று தமிழர்கள் கண்ணீரும்இ செந்நீரும் வடிக்கும் நிலை உள்ளது. இனி மேலாவது ஈழத் தமிழர்களுக்கு விடிவு காலம் ஏற்பட வேண்டும். அதற்கு அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதற்கான முயற்சியை ஐ.நா. சபை எடுக்க வேண்டும்.தேவையான ஒத்துழைப்பை இந்திய அரசும் வழங்க வேண்டும்' என்பதாகும்.
மேலும் அவர் எழுதுகையில் 'இலங்கை பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப் பொது வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி உள்ளோம். அதை செயல்படுத்த இலங்கை அரசுக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். இலங்கையில் ஈழம் பிரிந்து தனி நாடு உருவாக்க வேண்டும் என்பது டெசோ தீர்மானம் அல்ல. தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம். அதில் நன்மை விளையும் என்று நம்புகிறோம்'என்றார் கலைஞர்.
தனது மகனைப் புகழ்ந்து தள்ளிய கலைஞர் மேலும் தனது அறிக்கையில் 'நெருக்கடி நிலை நேரத்தில் ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுஅழைத்து செல்லப்பட்ட போது நான் தி.மு.க. தலைவர் என்ற நிலையில் அல்ல அவருடைய தந்தை என்ற முறையில் தனியாக அமர்ந்து கலங்கினேன். அப்போது ஸ்டாலின் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் மட்டுமே கடந்த நிலையில் ஸ்டாலினின் மனைவி கண்ணீர் நிறைந்த கண்களோடு மாமா என்று கதறிய போதுஇ பதில் சொல்ல முடியாமல் ஆறுதலும் வழங்கிட வார்த்தை கிடைக்காமல் வாடித் தவித்தேன்.இருந்தாலும் என் மகனும் ஜனநாயக வழியில் பொதுப்பணி ஆற்றியதற்காக சிறைக்குச் செல்கிறாரே என்பதை எண்ணி உள்ளுக்குள் பெருமிதமே ஏற்பட்டது.'

'பின்னர் ஸ்டாலின் மேயராகி சட்டப்பேரவை உறுப்பினராகி  தி.மு.க. துணைப் பொதுச் செயலாளராகி துணை முதலமைச்சராகி தற்போது தி.மு.க.பொருளாளராக தமிழகமெங்கும் நான் செல்ல வேண்டிய நிகழ்ச்சிகளுக்கெல்லாம் சென்று திமுகவினரின் வேண்டுகோள்களைப் பூர்த்தி செய்யக் கூடிய அளவில் நாளெல்லாம் கழகம் கழகம் என்று பம்பரம்போல் சுற்றிச் சுழன்று பாடுபடுவதைப் பார்த்து இளம் வயதில் நாம் உழைத்ததைப் போலவே நம் மகனும் உற்சாகத்தோடு உழைப்பதை எண்ணி மனதிற்குள் பெரும் மகிழ்ச்சி அடையும் நான் ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதற்காக அமெரிக்கா பயணம் மேற்கொள்ள என்னிடம் விடை பெற்றுக் கொண்ட போது மிசா கைதியாக ஸ்டாலின் சிறைக்குப் புறப்பட்ட நினைவும் சிறைச்சாலையிலே அடிக்கப்பட்ட கையிலே உள்ள காயத்தை மறைத்து முழுக்கை சட்டை போட்டுக் கொண்டு என்னைச் சந்தித்த அந்த நினைவும்தான் என் மனதை சூழ்ந்து கொண்டிருந்தன.
ஸ்டாலின் பிறந்த போது ஏற்பட்ட மகிழ்ச்சியை விட மிசா கைதியாக சிறைக்குள் இருந்த போது ஏற்பட்ட மகிழ்ச்சியை விட ஈழத் தமிழர்கள் வாழ்வில் இருள் நீங்கி ஒளி பிறந்திட வேண்டுமென்பதற்காக அவர் பயணம் மேற்கொள்வதில் எனக்கு தனிச் சிறப்பான மகிழ்ச்சி ஏற்பட்டது' என்றார் கலைஞர்.
தமிழகத்திலுள்ள தமிழர்களை மட்டுமல்ல ஈழத் தமிழர்கள் உட்பட அனைத்து உலகத்தில் வாழும் தமிழர்களையும் உணர்வுபூர்வமாகக் காப்பாற்றவும் அவர்களை முன்னேற்றவும் தம்மால் முடிந்த பணிகளை முனைப்புடன் தொடருவோம் என்று கூறினார் கலைஞர்.

பேருக்கும் புகழுக்குமாக வாழாமல் இதய சுத்தியுடன் கலைஞர் ஈடுபட்டு ஈழத் தமிழர்களை காப்பாற்றுவதே தி.மு.க. தலைமையில் எடுக்கப்பட்டுவரும் செயற்பாடுகளுக்கு உண்மையான பலம் கிடைக்கும். தனிப்பட்ட விளம்பரங்களுக்காக ஈழத் தமிழர்களை ஒருபோதும் பலிக்கடா ஆக்கக்கூடாது என்பதே உலகத்தமிழர்களின் மனமார்ந்த வேண்டுகோள்.

என்ன தான் பேசினார்கள்?

நடைபெற்ற கலந்துரையாடல்கள் பூட்டிய அறைக்குள்ளேயே இடம்பெற்ற காரணத்தினால் சந்திப்புக்களில் கலந்து கொண்டவர்கள் கூறுவதே செய்தியாக வெளிவந்துள்ளது.தி.மு.கவினால் வெளியிடப்பட்டு வெளிவந்த தகவல்களின்படி யான் லியாசனுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட தகவல்கள் பின்வருமாறு அமைந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'சிறிலங்காத் தமிழர் விவகாரத்தில் ஐ.நா.சபை என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?' என்று யான் லியாசன் கேட்டுள்ளார். இதற்கு ஸ்டாலின் 'சிறிலங்காவில் போரால் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்க வேண்டும். நிம்மதியான வாழ்க்கை அமைய மீண்டும் அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்த வேண்டும். தமிழர் பகுதிகளில் உள்ள இராணுவத்தைத் திரும்பப் பெற வேண்டும். ஈழத் தமிழர்கள் விரும்புகிறபடி அரசியல் தீர்வு காண வேண்டும். அதற்காக உலக அளவில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும். போரால் 90000-க்கும் மேற்பட்ட பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் மேலும் துன்பப்படுகிறார்கள். அவர்களை சிறிலங்காவின் இராணுவம் தவறான முறையில் நடத்துகிறது. எல்லாவற்றுக்கும் உடனடியாகத் தீர்வு காண வேண்டும்' என்று கூறியுள்ளார்.

மேலும் சில தகவல்களை ஸ்டாலின் கூறும் போது'இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்கள் சிறிலங்காப் பிரச்சினையில் என்ன மாதிரியான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர் என்று லியாசன் கேட்டதற்கு 'ஈழத் தமிழர்களின் மனித உரிமை காக்கப்பட வேண்டும் என்பதில் அனைத்துத் தலைவர்களும் உறுதியாக இருக்கின்றனர். ஐ.நா. சபையால் மட்டுமே இதற்குச் சரியான தீர்வு காண முடியும் என்று நினைக்கிறோம்' என்றாராம் ஸ்டாலின்.
நியூயோர்க்கில் இடம்பெற்ற சந்திப்புக்குப் பின்னர் ஜெனிவா சென்றடைந்த இருவரும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை சந்தித்து டெசோ தீர்மானங்களைக் கையளித்து சுமார் 35 நிமிடங்களுக்கும் மேலாக பேசியதாக தி.மு.கவின் தலைமை அறிவித்துள்ளது. குறித்த சந்திப்பில் ஈழத் தமிழர் வாழ்வுரிமை தொடர்பான கருணாநிதி கையெழுத்திட்டு அளித்திருந்த அறிக்கையினை அவரிடம் அளித்து சிறிலங்காவில் ஈழத்தமிழர்களின் நிலை பற்றி விவரமாக எடுத்துக் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஈழத்தில் நடைபெற்ற போரினால் விதவைகளாக்கப்பட்ட90000 விதவைப் பெண்களின் பரிதாப நிலை மீள்குடியேற்றப் பணிகள் மேற்கொள்ளப்படாதது உட்பட கடந்த மூன்றரை ஆண்டுகளாக போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தங்கள் சொந்த மண்ணிலேயே நிம்மதியற்று வாழும் நிலை மாறி நிம்மதியாக வாழ வழி வகுத்தல் தமிழர்கள் பகுதிகளில் உள்ள சிங்கள இராணுவ வீரர்கள் உடனடியாக வெளியேற்றப்படுதல் தமிழர் பகுதியில் சிங்களவர்களை குடியேற்றுவதை தடுத்து நிறுத்துதல் போரின்போது தங்கள் வீடுகளை விட்டு ஓடிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட 125 000 தமிழர்கள் மீண்டும் தங்கள் பகுதிகளில் குடியமர்த்தப்படல் என்பவை குறித்து விரிவாக விளக்கிக் கூறினர் என்று தி.மு.கவின் அறிக்கை தெரிவித்துள்ளது.

ஸ்டாலினும் பாலுவும் கையளித்த மனுக்கள் நிச்சயமாக ஐ.நாவினால் பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்றே. இவர்களுடைய பயணங்கள் உட்பட சந்திப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தது இந்திய மத்திய அரசு. தமிழர்கள் வகை தொகையின்றி கொலை செய்யப்பட்ட போது மூனுக்கு ஆலோசகராக செயற்பட்ட கேரளத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகரும் நியூயோர்க்கில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தால் சிங்கள இராணுவத்தினர் சுட மாட்டார்கள் என்கிற வாக்குறுதியை அளித்தவரும் இந்த மலையாளியே.
ஒரு காலத்தில் சிங்களத்துடன் அளவளாவியவர்கள் இன்று நீலிக் கண்ணீர் வடிப்பது வேடிக்கையாக இருக்கிறது.
ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரத்தையும்இஅவர்களின் அரசியல் எதிர் காலத்தையும் ஒளிமயமாக ஆக்குவதே தி.மு.கவின் கொள்கை என்று கூறுகிறார் கலைஞர்.

அரசியல் சாணக்கியரான கலைஞர் மனதில் எதையோ வைத்துக்கொண்டுதான் செயல்படுகிறார் என்று கூறுகிறார்கள் ஒரு தரப்பினர். மறு தரப்பினரோ கலைஞர் இதய சுத்தியுடனேயே செயல்படுகிறார் என்கின்றனர். எதுவாக இருப்பினும் ஈழத் தமிழர்கள் சம உரிமை கௌரவம் சமநீதி மற்றும் சுயமரியாதையுடன் வாழக்கூடிய நிலைமை தோற்றுவிக்க குறித்த மனு வழிவகுக்கும் என்று கலைஞர் கூறியிருப்பதை தமிழராகப் பிறந்த ஒவ்வொருவரும் வரவேற்பார்கள் என்பதில் கடுகளவும் ஐயம் இல்லை. இருப்பினும் மனுக்களைக் கையளித்துவிட்டு முன்பு அதைச் செய்தேன் இதைச் செய்தேன் என்று கூறி இதனையும் கூறிவிட்டு ஒதுங்காமல் இருந்தால் கலைஞருக்கும் தி.மு.கவுக்கும் சிறந்தது.
(நன்றி-S24) GJKMEDIAWORKS TEAM 2012

Ingen kommentarer:

Legg inn en kommentar