யாழ்.குடாநாடு முற்றுமுழுதாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில்
வந்துவிட்டதாக, சந்திரிகா பண்டாரநாயக்க உத்தியோகபூர்வமாக ஊடகங்களில்
முழங்கித் தள்ளிக் கொண்டிருந்தார்.
ஆனால் மானிப்பாய் மருதடிப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து பொன்னாலைக் கிருஷ்ணன்
ஆலயம் வரையான மிகப்பரந்த பிரதேசத்தில் மட்டும் மருந்துக்குக் கூட
இராணுவத்தினர் இல்லை. காவலரண் இல்லை. சோதனைச்சாவடி இல்லை.
ஆனால் புலிகள் இருந்தார்கள். மற்ற இடங்களில் முழத்துக்கு முழம் சனங்கள்
இறங்கி ஏறிக்கொண்டிருக்க, இங்குள்ளவர்கள் மட்டும் முன்னரைப்போலவே
சுதந்திரமாக இருந்தார்கள். மக்களோடு மக்களாக இங்கிருந்த புலிகள்தான்,
யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்த படைகளுக்கு அவ்வப்போது தலையிடி கொடுத்துக்
கொண்டிருந்தார்கள்.
நல்லவேளையாக அப்போதும் துயிலுமில்லங்களை படையினர் சிதைத்திருந்தாலும்
கட்டடங்களையும், முகப்புகளையும் விட்டு வைத்திருந்தனர். இப்போது போல தங்கள்
படைத்தளங்களை கல்லறைகளுக்குள் அமைத்து அதியுன்னத வன்மத்தை
வெளிப்படுத்தவில்லை.
அன்றைக்கு மாவீரர் தினம். "கோப்பாய் துயிலுமில்லத்தில எப்படியும்
விளக்கேத்த வேணும் என போராளிகள் எல்லோரும் ஓர்மத்துடன்
சொல்லிக்கொண்டார்கள். நான்கு பேர் கொண்ட அணி புறப்பட்டது.சிக்கல்
என்னவென்றால், எப்படியும் மாவீரர் தினத்துக்கு தீபமேற்ற புலிகள் வருவார்கள்
என்று படையினரும், கண்ணில் எண்ணெய் விட்டுக் காத்திருந்தனர்.
தீபமேற்றாமல் திரும்புவதில்லை என வந்த போராளிகள் தமக்குள் தீர்மானித்தனர்.
ஒரு தளத்தின் மீதான தாக்குதலைப்போன்று தீபமேற்றவும் திட்டமிடப்பட்டது. ஏ.கே
47 சன்னங்களைச் சடசடவென்று கக்க,நான்கு பேரும் நான்கு திக்குகளிலிருந்து
பாய்ந்தார்கள்.
படையினர் ஒரேகணத்தில் கலங்கிப் போயினர். மாவீரர் மயானத்தின் மீது தீபமேற்ற
நூற்றுக்கணக்கான புலிகள் வந்துவிட்டதாக எண்ணினர். காவலுக்கு இருந்தவர்கள்
துணைக்கு ஆள்களை அழைத்துவர ஓடினர். இந்த இடைவெளிக்குள் உள்நுழைந்தவர்கள்,
ஓரளவுக்கு சிதைவில் இருந்து தப்பித்த கல்லறையொன்றில் தீபமேற்றி விட்டு,
திரும்புவதற்கிடையில் சுற்றி வளைக்கப்பட்டிருந்தனர்.
இருளைக்கிழித்தபடி இருதரப்பும் பரிமாறிக்கொண்ட துப்பாக்கி வேட்டுக்கள்
ஆயிரமாயிரம் தீபங்களாகின அந்த துயிலுமில்லத்தில். தம் உயிரால் தீபமேற்றிய
நான்கு போராளிகளின் உடல்கள், இதழோரப்புன்னகையோடு மாவீரர் மயானத்தில்
நிரந்தரத்துயில் கொண்டிருந்தன.
நினைவைப் பரப்பும் கார்த்திகைப் பூ
கார்த்திகை தீபங்களின் மாதமென்பதாலோ என்னவோ தமிழர் பகுதிகளில்
கார்த்திகையில் மட்டுமே பூக்கும் காந்தள் எனப்படும் கார்த்திகைப் பூவும்
தீப வடிவெடுத்துள்ளது. சுடரின் நடனம் போல, நெளிநெளியான உடல்வாகுடன் மஞ்சள்,
சிவப்பு வர்ணக்கலவையுடன் கரங்குவித்து வணங்கி அஞ்சலிப்பது போன்ற உணர்வை
கார்த்திகைப் பூ தோற்றவைக்கின்றது.
கொல்கிசின் எனும் நச்சு இரசாயனத்தைக் கொண்டுள்ளதால், கழுத்தில் நஞ்சேந்திய
போராளிகளை ஞாபகமூட்டுகின்றது. இதனால் அது மலர் என்ற நிலையில் இருந்து,
வித்தாகிப்போன வீரமறவர்களின் குறியீட்டுப்பொருளாகவும் மாறிப்போனது. மலரை
மாவீரர்களின் அடையாளப்பொருளாகக் கொள்வது இங்கு மாத்திரம் நிகழும் ஒன்றல்ல.
பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகள் முதலாம் உலகப்போரில்
தம்நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு "பொப்ப' எனப்படும்
மலர் கொண்டே அஞ்சலிக்கின்றனர். அந்த நிகழ்வும் கார்த்திகை மாதத்திலேயே
கார்த்திகை 11 வருவது இன்னொரு ஒற்றுமை.
விஷத்தன்மை கொண்டிருப்பதால் மனிதர்க்கு வேண்டாப்பொருளல்ல கார்த்திகைப் பூ.
அது ஏராளமான மருத்துவக் குணங்களை தன்னகத்தே கொண்டது. அண்மைய அறிவிப்பொன்று
உயிர்கொல்லி எய்ட்ஸுக்குக்கு கார்த்திகைப் பூவிலிருந்து மருந்து
கண்டுபிடிக்கும் முயற்சி வெற்றியளித்துள்ளதைச் சொல்கிறது.
பழந்தமிழ் இலக்கியங்களில் பெண்களின் கைவிரலுக்கு உவமிக்க புலவர்களுக்கு
காந்தள் மலரைத் தவிர வேறு பொருள்கள் கிடைத்ததில்லை. மாவீரர்
நினைவேந்தலுக்கு முள்வேலியிடப்பட்ட காலத்திலும், தமிழர் நிலமெங்கும்
பூத்திருக்கும் கார்த்திகைப்பூக்கள், மண்ணுக்குள் உறங்கும் மறவர் நினைவுகளை
பரப்பியபடியே இருக்கும்.
காத்திருக்கும் கல்லறைகள்
துட்டகைமுனுவுக்கு எல்லாளன் பெரியதலையிடி. எப்படி முயன்றாலும் தோற்கடிக்கவே
முடியவில்லை. தலையையும், காலையும் நீட்டிப்படுக்க வேண்டுமானால் எல்லாளனைக்
கொன்றேயாக வேண்டும். வேறுவழியில்லை. வட இந்தியாவுக்கு ஓடினான். அவர்களிடம்
கெஞ்சிக் கூத்தாடி திரட்டினான் பெரும்படை.
எல்லாத்தேசத்து படைகளும் ஒரே அணியில். எல்லாளன் தனித் தமிழ்ப் படையுடன்.
மூண்டது உக்கிரப்போர். வயதானாலும் வீரம் குறையவில்லை எல்லாளனிடம்.
இந்தமுறையும் மூக்குடைபடவேண்டியது தான் என துட்டகைமுனு எண்ணிக்கொண்ட
தருணத்தில், எதிர்பாராதவிதமாக எல்லாளன் வீழ்த்தப்பட்டான். தன்னை நிம்மதியாக
உறங்கவிடாமல் செய்த பரமஎதிரி தொலைந்த சந்தோஷத்தில் துட்டகைமுனு ஆடினான்,
பாடினான், ஆனந்தத்தின் உச்சிக்கே போனான்.
அந்தவேளையிலும் ஒருகாரியம் செய்தான். எல்லாளனின் உடலுக்கு சகல
மரியாதைகளோடும் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. அந்த இடத்தால் செல்லும்
எல்லோரும் இறங்கி எல்லாளனுக்கு மரியாதை செய்யவேண்டும் என்றும்
கட்டளையிட்டான்.
ஆனால் துட்டகைமுனுவின் தோன்றல்கள் தாமேயென்று கொட்டமடிப்பவர்கள் போரில்
வென்றவுடன் செய்த முதல்வேலை, மாவீரர் துயிலுமில்லங்களின் கல்லறைகளைத்
தோண்டியெடுத்ததுதான். டாங்கிகள் கொண்டு துயிலுமில்லங்களை உழுதபின்னும்,
வெறி அடங்கவில்லை. தோண்டப்பட்ட கல்லறைகள் வீதிப்புனரமைப்புக்கென்று சொல்லி,
அங்கிருந்து அகற்றப்பட்டன.
இதனாற்றான் வீதி அகலிப்பின் போது கொண்டுவந்து கொட்டப்பட்ட கிரவல்
மண்ணுக்குள், உக்கிப்போன வரிச்சீருடைகளும், எலும்புகளும் தட்டுப்பட்டன.
ஒருவகையில் இதுவும் நல்லதுதான். ஒரு குறித்த இடத்தில் மாத்திரம்
குறுகிக்கிடந்த துயிலுமில்லத்தை தமிழர் தேசமெங்கும் பேரினப்படைகள்
விதைத்திருக்கின்றன.
இதனால் கார்த்திகை 27 இல் இனிமேல் தீபமேற்ற மாவீரர் துயிலுமில்லங்கள்
இல்லையே என்று கலங்கத்தேவையில்லை. வீதிகளெங்கும் நீண்டு, ஒளிந்து கிடக்கும்
மாவீரர் கல்லறைகளும் தீபங்களுக்காகக் காத்திருக்கின்றன. மாவீரர் நாளில்
வருவதால் கார்த்திகை விளக்கீட்டுக்கு தீபமேற்ற கடவுளர்கள் கூட படைகளிடம்
அனுமதி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
கடவுளுக்கே இந்தக் கதியென்றால், கண்ணீரின் விளிம்புகளில் தத்தளிக்கும்
தமிழ்மக்களால் என்ன செய்யமுடியும்? மண்ணுக்காகவும், மக்களுக்காகவும்
மடிந்துபோன தங்கள் பிள்ளைகளுக்கு ஒரு தீபமேற்றக்கூட முடியாத கையறு நிலையை
எண்ணி, இன்னமும் கண்ணீர் விட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
ஆனாலும் எல்லா வீடுகளுக்குள்ளும் ஒளித்து வைத்து ஏற்றப்படும் தீபங்களில்
ஒளிரும் தம் பிள்ளைகளின் வதனங்களைக் காண்பதை எந்த இரும்புக்கரத்தாலும்
தடுக்க முடிவதில்லை. கல்லறைகள் அழிந்து போனாலும், புதையுண்டு போனவர்கள்
தீபங்களின் தழல்களில் தாகம் தீர்ப்பதற்காகக் காத்திருக்கிறார்கள்.
எல்லோரிடத்தும் உயிரைப் பிழிந்து வழியும் எண்ணெயில், மனங்களின் உணர்வுத்
தீயில் மேலெழுகிறது சுடர். தீபங்கள் எங்களின் கைகளில் மட்டுமல்ல,
மனங்களிலும் தான். கார்த்திகையின் இருளைத் தின்கின்றன தீபங்கள். எங்கும்
ஒளிவெள்ளம். "ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி மூடுங்கள்"
மறவர்களே. உங்கள் தாகம் அடங்கட்டும்.
ஒளண்யன்
|
Ingen kommentarer:
Legg inn en kommentar