கைது செய்பவர்களே தண்டனையையும் வழங்கும் அதிகாரத்தை யார் கொடுத்தது- இரா.துரைரத்தினம்


பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் குற்றம் புரியாத அப்பாவி தமிழர்கள் பலர் தண்டனை அனுப்பவித்து இருக்கிறார்கள் என்பதை முன்னர் ஒரு தடவை பார்த்திருக்கிறோம். போர் நடந்த காலத்தில் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்தார்கள் என குற்றம் சாட்டப்பட்ட பலர் தடுத்து வைக்கபட்டிருந்தார்கள், சிறைத்தண்டனையை அனுபவித்தார்கள். போர் முடிந்து அரசாங்கம் பயங்கரவாதிகள் என கூறிய விடுதலைப்புலிகளும் முற்றாக அழிக்கப்பட்டு நான்கு வருடங்களாகிறது.
இப்பொழுது மீண்டும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என இதுவரை 48க்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.  வடக்கே கைதுசெய்யப்பட வேண்டிய நபர்கள் இன்னும் இருக்கிறார்கள், அவர்களையும் கைது செய்ய வேண்டும் என்று சிறிலங்காவின் காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரிஷாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். எனவே கைது செய்யும் நடவடிக்கைகள் நீண்டு செல்லப்போகிறது என்பது மட்டும் உண்மை.
இவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் என்றும், நீண்டகாலமாக சேகரித்துவந்த புலனாய்வுத் தகவல்களின்படியே இவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பிரிஷாந்த ஜயக்கொடி தெரிவித்தார். இலங்கை இராணுவத்திடம் சரணடையாமல் மறைந்து வாழ்ந்த இவர்கள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்படும் என்றும் அதன்பின்னர் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
போரின் போது முள்ளிவாய்க்காலிலிருந்து இராணுவ கட்டுப்பாட்டிற்குள் வந்த எவரும் இராணுவத்தினரிடம் சரணடையாமல் தப்பி வருவதற்கான எந்த வழிகளும் அப்போது காணப்படவில்லை. சரணடைந்த பின்னர் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டவர்களே இப்போது கைது செய்யப்பட்டு வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் சிலர் ஏற்கனவே இராணுவத்தினரால் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் விடுவிக்கப்பட்டவர்கள் தான். எனவே படைத்தரப்பினர் கூறுவது போல முள்ளிவாய்க்காலிலிருந்து வெளியேறிய பின்னர் இராணுவத்திடம் சரணடையாமல் மறைந்து வாழ்ந்தார்கள் என்பது நடக்க கூடிய காரியம் அல்ல.
கைது செய்யப்பட்டவர்களில் மாணவர் ஒருவரும் மூன்று பெண்களும் அடங்குகின்றனர். கைது செய்யப்பட்ட மாணவன் 18வயதுடையவர் என கூறப்படுகிறது. அவர் விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே கைது செய்யப்பட்டிருக்கிறார். நான்கு வருடங்களுக்கு முதல் விடுதலைப்புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டனர் என அரசாங்கம் அறிவித்திருந்தது.
2009ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் இந்த மாணவனுக்கு 14வயது மட்டுமே. அத்துடன் அம்மாணவன் போர் நடந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்திலேயே வாழ்ந்து வந்தார் என அவரின் பெற்றோர் தெரிவித்திருக்கிறார்கள். இம்மாணவன் எப்படி இல்லாத விடுதலைப்புலிகளுடன் தொடர்பை பேணியிருக்க முடியும்?
கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வெலிக்கந்தை புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருப்பது சட்டத்திற்கு முரணானது என சட்டவல்லுனர்கள் கூறுகின்றனர். வெலிக்கந்தை புனர்வாழ்வு முகாம் என்பது உண்மையில் கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்கும் கைதிகளுக்கு வழங்கப்படும் தண்டனையை விட மிக மோசமானது என அங்கிருந்து விடுதலையானவர்களின் வாக்கு மூலமாகும்.
காலையில் 4மணிக்கு எழுந்து காலைக்கடன்களை அவசரஅவசரமாக முடித்த பின் அவர்கள் பண்ணைகளுக்கு அழைத்து செல்லப்படுவார்கள், எருமைமாடுகளுக்கு குளிப்பாட்டுவது, எருமைமாட்டு பண்ணைகளை துப்பரவு செய்வது, தோட்டவேலை, மரம் வெட்டுதல் போன்ற கடினமான வேலைகளை நாள் முழுதும் செய்த பின் மாலை 6மணிக்கு முகாமுக்கு கொண்டு வந்து அவர்களை அடைத்து வைப்பதற்கு பெயரே புனர்வாழ்வு ஆகும்.
தடுத்து வைத்திருப்பவர்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறதே ஒழிய புனர்வாழ்வோ அல்லது வேறு பயிற்சிகளோ அவர்களுக்கு கிடையாது. வார இறுதி நாட்களில் சில வேளைகளில் சிங்களம் படிப்பிப்பார்கள். அதனை தவிர மாட்டு பண்ணைகளிலும் தோட்டங்களிலும் கடுமையான வேலை செய்வதே சிறிலங்கா அரசாங்கத்தின் பாஷையில் புனர்வாழ்வாகும்.
ஒருவருக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் அல்லது புனர்வாழ்வு என்ற பெயரில் முகாமில் தடுத்து வைக்கும் அதிகாரம் கைது செய்யப்பட்ட இராணுவத்திற்கோ அல்லது அதற்கான உத்தரவை வழங்கிய பாதுகாப்பு உயர்மட்டத்தினருக்கோ கிடையாது.
கைது செய்தவர்கள் ஒருபோதும் தண்டனை வழங்க முடியாது. கைது செய்யப்பட்டால் அவர் மீது உள்ள குற்றச்சாட்டுகளை நீதிமன்றில் சமர்ப்பித்து வழக்கு ஒன்றை தாக்கல் செய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு உள்ளதே தவிர தண்டனை வழங்கும் அதிகாரம் அல்லது தீர்ப்பு வழங்கும் அதிகாரம் படைத்தரப்புக்கு கிடையாது.
சட்டத்துக்கு முரணான வகையிலேயே பல்கலைக்கழக மாணவர்கள் புனர்வாழ்வு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
நாட்டில் நடைமுறையிலிருந்த அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளபோதிலும், அதிலுள்ள முக்கிய சில ஷரத்துகள் சட்டபூர்வமற்ற முறையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்குள் புகுத்தப்பட்டுள்ளன.  போர் முடிவடைந்த பின்னர் அவசரகால சட்டத்தை நீக்க வேண்டிய நெருக்கடியில் அரசாங்கம் இருந்தது. அவசரகால சட்டத்தை நீக்கிய போது பயங்கரவாத தடைச்சட்டத்தில் புதிய சரத்து ஒன்று புகுத்தப்பட்டது. 1721/5 கீழ் புதிய விதி ஒன்று சேர்க்கப்பட்டது. பயங்கரவாத செயலில் ஈடுபட்டு இராணுவத்தில் சரணடைபவர்கள் புனர்வாழ்வு முகாம்களில் வைத்து புனர்வாழ்வு அளித்த பின் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்பது புதிதாக சேர்க்கப்பட்ட விதிகளில் ஒன்றாகும்.
ஒருவரைக் கைதுசெய்து அவரிடம் பலவந்தமாக ஆவணத்தில் கையொப்பம் பெற்று, சரணடைந்தவர் எனக் கூறி புனர்வாழ்வு என்ற பெயரில் புனர்வாழ்வு முகாமுக்கு மாற்ற இந்த ஒழுங்கு விதிகள் வழிவகுக்கின்றன.
எனினும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் புதிதாக சேர்க்கப்பட்ட இவ்விதிகள் சட்டத்திற்கு முரணானது என சட்டவல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
தீர்ப்பை வழங்கும் அதிகாரம், அல்லது தண்டனை வழங்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் புதிதாக சேர்க்கப்பட்ட இந்த விதிகள் நீதிமன்றத்தின் அதிகாரங்களை சட்டவிரோதமாக கையில் எடுக்கும் நடவடிக்கை என சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்த சட்டத்தின் கீழ் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது சட்டவிரோதமானது என்றே சுட்டிக்காட்டப்படுகிறது. பயங்கரவாத செயலில் ஈடுபட்டு இராணுவத்தினரிடம் சரணடைந்து அவர்களின் சுயவிருப்பின் பேரிலேயே புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்ப முடியும். ஆனால் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பயங்கரவாத செயல்களில் ஈடுபடவும் இல்லை, இராணுவத்தினரிடம் சரணடையவும் இல்லை. தமக்கு புனர்வாழ்வு வழங்குமாறு கோரியதாகவும் இதுவரை தகவல் இல்லை. சில வேளைகளில் படையினரின் வற்புறுத்தல் சித்திரவதைகளால் அவர்கள் கையொப்பம் இட்டிருக்க கூடும். அவ்வாறு சம்மதம் தெரிவித்தாலும் அவர்களுக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் கைது செய்ய படையினருக்கு கிடையாது.
கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சட்டத்திற்கு புறம்பான வகையில் புனர்வாழ்வு என்ற பெயரில் தண்டனை அனுபவித்து வருவதை ஆட்சேபித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு உயர்நீதிமன்றில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்ய உள்ளது.
இதுவும் நீதித்துறைக்கும் நிறைவேற்று அதிகாரத்தரப்பிற்கும் இடையிலான போட்டியாகவே அமையலாம். நீதித்துறையின் அதிகாரத்தை கையில் எடுத்து தண்டனை வழங்கும் அதிகாரம் கைது செய்ய படையினருக்கோ அல்லது அதற்கான உத்தரவை வழங்கிய பாதுகாப்பு உயர்மட்டத்திற்கோ உண்டா என்ற கேள்விக்கு இந்த வழக்கில் விடைகிடைக்கலாம்.
(நன்றி-TKK) GJKMEDIAWORKS TEAM 2012

Ingen kommentarer:

Legg inn en kommentar