ஐ.நாவில் இம்முறையும் இந்தியா இலங்கையை காப்பாற்றும் – இரா.துரைரத்தினம்


ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 22ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பமாக உள்ள இவ்வேளையில் வழமை போலவே தமிழ் பத்திரிகைகளும் சில தமிழ் இணையத்தளங்களும் தங்களுடைய அறியாமையை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளன.
சிறிலங்காவுக்கு மிகப்பெரிய பொறி காத்திருக்கிறது, சர்வதேச போர் குற்ற நீதிமன்றில் மகிந்த ராசபக்ச அரசு நிறுத்தப்பட போகிறது என செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இலங்கை தொடர்பான பிரேரணையை ஐ.நா.மனித உரிமை பேரவை ஆணையாளரும், அமெரிக்காவும் கொண்டுவர இருக்கின்ற போதிலும் அவை இலங்கைக்கு எதிரான பிரேரணையா அல்லது சிறிலங்காவை சர்தேச போர் குற்ற நீதிமன்றில் நிறுத்தக் கூடிய வலுவுள்ளதா என பார்க்க வேண்டும்.
கடந்த வருடம் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் அமெரிக்கா சிறிலங்காவுக்கு எதிரான பிரேரணையை கொண்டுவந்ததாக இன்றுவரை பல ஊடகங்கள் கூறிவருகின்றன.  கடந்த வருடத்தில் ஐ.நா.மனித உரிமை பேரவையில் அமெரிக்கா கொண்டுவந்தது பிரேரணை இலங்கைக்கு எதிரானது என்ற வார்த்தை பிரயோகம் தவறானது என்றே நான் கருகிறேன்.  அந்த பிரேரணையில் எந்த ஒரு இடத்திலும் இலங்கைக்கு எதிராக என்ற வாசகம் இடம்பெறவில்லை. அந்த பிரேரணை இலங்கைக்கு எதிரானதும் அல்ல.
அந்த பிரேரணையை முன்வைத்த அமெரிக்க பிரதிநிதி கூட இது சிறிலங்காவுக்கு எதிரான பிரேரணை அல்ல என ஐ.நா.சபையில் கூறியிருந்தார். இலங்கைக்கு அதில் பாதகம் இல்லை என்பதை உறுதி செய்த பின்பே இந்தியா கூட அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தது.
அமெரிக்கா கடந்த வருடத்தில் கொண்டுவந்த தீர்மானம் ஐநா நிபுணர் குழு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டது அல்ல, சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராசபக்சவினால் நியமிக்கப்பட்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு கூறிய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துங்கள் என்பதுதான்.
ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்துங்கள் என தீர்மானம் நிறைவேற்றியிருந்தால் அது இலங்கை அரசுக்கு நெருக்கடியை கொடுக்க கூடிய அல்லது இலங்கை அரசுக்கு எதிரான பிரேரணை என கூற முடியும்.
ஆனால் மகிந்த ராசபக்சவினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்டுத்துங்கள் என கூறுவது எப்படி இலங்கை அரசுக்கு எதிரான பிரேரணை என கூற முடியும்.  நல்லிணக்க ஆணைக்குழுவில் நியமிக்கப்பட்ட ஆறு பேரும் மகிந்த ராசபக்ச அரசுக்கு மிக நெருக்கமான விசுவாசிகள்.
அவர்கள் பரிந்துரை செய்தது எவையுமே சிறிலங்கா அரசுக்கு எதிரானது அல்ல.
சிறிலங்கா போர்க்குற்றத்தை புரிந்ததாக சர்வதேச ரீதியாக குற்றச்சாட்டுக்கள் எழுந்ததையடுத்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக அமைத்த நிபுணர்குழு அறிக்கை வெளியானதையடுத்து போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணையில் தாம் சிக்கிவிடலாம் என்ற அச்சத்தில் அதிலிருந்து தப்புவதற்காகவும், சர்வதேச அழுத்தங்களிலிருந்து மீள்வதற்காகவும் மகிந்த ராசபக்ச நியமித்த ஆணைக்குழுதான் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவாகும்.
தனக்கு மிகவும் நெருக்கமானவர்களையே இந்த ஆணைக்குழுவில் நியமித்திருந்தார். இந்த ஆணைக்குழுவின் முக்கிய நோக்கம் மகிந்த ராசபக்சவையும் அவரது அரசையும், இராணுவத்தையும் காப்பாற்றுவதாகும்.  அந்த இலக்கை மிகக்கச்சிதமாக நல்லிணக்க ஆணைக்குழு நிறைவேற்றியிருந்தது. இறுதிப் போரின் போது பொதுமக்களை பாதுகாப்பதற்கு சிறிலங்கா இராணுவம் எடுத்த நடவடிக்கைகளை பாராட்டிதுடன் பொதுமக்கள் இழப்பிற்கு சிறிலங்கா இராணுவம் காரணமல்ல என்ற நற்சான்றிதழையும் வழங்கியிருந்தது. இழப்புக்கள் குற்றங்கள் இழைக்கப்பட்டதாக கருதினால் உள்நாட்டில் விசாரணையை மேற்கொள்ளலாம். உள்நாட்டு பொறிமுறையின் கீழ் விசாரணைகளை செய்யலாம் என்று பரிந்துரை செய்திருந்திருந்தது. சர்வதேச விசாரணையை நல்லிணக்க ஆணைக்குழு முற்றாக நிராகரித்திருந்தது. உள்நாட்டு பொறிமுறை என்பது இராணுவத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை இராணுவமே விசாரிக்க வேண்டும் என்பதாகும்.
கொலைகாரனிடமே கொலையை விசாரிக்கும் அதிகாரத்தை வழங்கியிருந்தது. அதன் படி இராணுவம் தன்னைத்தானே விசாரித்து அந்த குற்றங்கள் எதையும் இராணுவம் செய்யவில்லை என்றும் கூறியிருக்கிறது. அண்மையில் இராணுவ நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையிலும் எறிகணைகளை கூட இராணுவம் வீசவில்லை என கூறியிருக்கிறது.
ஆகவே நல்லிணக்க ஆணைக்குழு என்பதும் அதன் பரிந்துரைகள் என்பதும் முழுக்க முழுக்க மகிந்த ராசபக்ச தலைமையிலான அரசை காப்பாற்றுவதற்காக செய்யப்பட்டதாகும்.
மகிந்த ராசபக்ச அரசை காப்பாற்றுவதற்காக மகிந்த ராசபக்சவினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு செய்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு கோரும் பிரேரணை எவ்வாறு சிறிலங்கா அரசுக்கு எதிரான பிரேரணை என்று சொல்ல முடியும்?
நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைத்த விடயங்களில் இரு விடயங்கள் மட்டுமே ஓரளவுக்கு சிக்கலாக இருந்த போதிலும் அதை கூட தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள கூடிய அகப்புறச் சூழல்கள் காணப்படுகின்றன.  அந்த பரிந்துரைகளை செய்த நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு கூட இந்த இரு விடயங்களிலும் மகிந்த அரசு எப்படி தப்பிக்கொள்ள வழி இருக்கிறது என்பதும் நன்கு தெரிந்திருக்கும்.
வடக்கிலிருந்து இராணுவத்தை குறைக்க வேண்டும் என்பதும் மூதூர் தொண்;டர் நிறுவன பணியாளர்கள் கொல்லப்பட்ட விடயம் உட்பட சில மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற இந்த இரு விடயங்களும் தான் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் சிறிலங்கா அரசுக்கு நெருக்கடியை கொடுக்கலாம் என கூறப்படுகிறது.
இவைகளை கூட சிறிலங்கா நிறைவேற்றாமல் தப்பிக்கொள்வதற்கு சாதகமான வழிகள் இருக்கின்றன என்பது பரிந்துரைகளை செய்த நல்லிணக்க ஆணைக்குழுவுக்கும் நன்றாக தெரியும்.  வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற முடியாது என சர்வதேசத்திற்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் கூறுவதற்கு சாதகமான பல காரணங்கள் உள்ளன.
சிறிலங்கா அரசை காப்பாற்றுவதற்காக புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புக்களும், தமிழ் நாட்டில் உள்ள நெடுமாறன் போன்ற ஈழத்தமிழர் ஆதரவு அமைப்புக்கள் என சொல்லிக்கொள்பவர்களும் இரவு பகலாக உழைத்து கொண்டு இருக்கின்றனர். மகிந்த ராசபக்சவை சர்வதேச நாடுகளிலிருந்து காப்பாற்றுவதற்காக புலம்பெயர்ந்த புலி அமைப்புக்கள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள நெடுமாறன் போன்றவர்களை போன்று உழைப்பவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.
தம்பி பிரபாகரன் மிக விரைவில் வருவார், அவர் தயாரிப்பு வேலையில் ஈடுபட்டிருக்கிறார், 5ஆம் கட்ட ஈழப்போர் வெடிக்கும் என மேடை மேடையாக பழ. நெடுமாறன் போன்றவர்கள் பேசி வருவது ஈழத்தமிழர்களுக்காக அல்ல. மகிந்த ராசபக்சவை காப்பாற்றுவதற்காகவே பேசி வருகின்றனர்.
அதேபோன்று புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புக்களும் முக்கியமாக புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள புலிகள் அமைப்புகளில் நெடியவன் தலைமையிலான குழு மீண்டும் ஆயுதப்போராட்டம் ஆரம்பமாகும், தமது படை அணி தயாராக இருக்கிறது என்றே பேசி வருகின்றனர்.
தமிழ் நாட்டில் உள்ள நெடுமாறன் போன்றவர்களுக்கும் சரி அல்லது ஐரோப்பாவில் உள்ள புலிகளுக்கும் சரி மீண்டும் ஆயுதப்போராட்டம் என்பது சாத்தியமில்லை, என்பது தெரியும். எனினும் தங்களின் சுயநலனுக்காக அவர்கள் பேசி வருவது மகிந்த ராசபக்ச தரப்பிற்கு பெரும் சாதகமாக அமைந்துள்ளது.
தம்பி தயாரிப்பு வேலையில் ஈடுபட்டிருக்கிறார், விரைவில் வருவார் என்ற நெடுமாறனின் தேவவாக்கும், புலம்பெயர்ந்த கடதாசி புலிகளின் 5ஆம் கட்;ட ஈழப்போர் வெடிக்கும் என்ற வெற்ற வார்த்தைகளையும் கேட்டு முதலில் சந்தேசப்படுபவர்கள் மகிந்த ராசபக்ச தரப்பினர்தான்.
புலிகள் மீண்டும் அணி திரள்கிறார்கள், ஆயுதப்போராட்ட முனைப்புக்கள் இன்னும் ஓய்ந்து விடவில்லை எனவே படையினர் உசாராக இருக்க வேண்டும் என பாதுகாப்பு செயலாளர் கோதபாய கூறிவருவதும் இதற்காக தான்.  வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற முடியாது என்பதற்கு இது ஒரு காரணமே போதும். புலம்பெயர் புலிகளின் பேச்சையும், தமிழ் நாட்டில் நெடுமாறன் போன்றவர்களின் பேச்சையும் கேட்கும் சர்வதேச நாடுகளுக்கு வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற முடியாது என மகிந்த ராசபக்சவின் கூற்று நியாயமாகவே தென்படும்.
தமிழ்நாட்டில் நெடுமாறன் போன்றவர்கள் இருக்கும் வரை, அல்லது புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள சில புலி அமைப்புக்கள் இருக்கும் வரை வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுமாறு சர்வதேசமோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையோ சிறிலங்கா அரசை கோரப்போவதில்லை. வடக்கில் தொடர்ந்து இராணுவம் இருக்க வேண்டும், அப்பாவி பொதுமக்களுக்கு நெருக்கடிகளையும் தொல்லைகளையும் தொடர்ந்து கொடுக்க வேண்டும் என உளமார எண்ணுபவர்களும் தமிழ்நாட்டில் உள்ள நெடுமாறன் போன்றவர்களும் 5ஆம் கட்ட ஈழப்போர் வெடிக்கும் என கூறிக்கொண்டிருக்கும் புலம்பெயர்ந்த கடதாசி புலிகளும் தான்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் ஏனைய பரிந்துரைகளான மீள்குடியேற்றம், நல்லிணக்கம், அரசியல் தீர்வு இவற்றை நடைமுறைப்படுத்தி வருகிறோம், இதற்கு கால அவகாசம் தேவை என சிறிலங்கா அரசாங்க தரப்பு சர்வதேச அழுத்தங்களிலிருந்து தன்னை காப்பாற்றி கொள்வதற்கான சாதக நிலைகளே காணப்படுகின்றன. அந்த சாதகமான நிலை சிறிலங்கா அரசுக்கு உள்ளது என்பதை நல்லிணக்க ஆணைக்குழு நன்கு உணர்ந்து கொண்டுதான் அந்த பரிந்துரைகளை செய்திருந்தது.
ஆகவே முழுக்க முழுக்க சிறிலங்கா அரசுக்கு சாதகமான சிறிலங்கா அரசை காப்பாற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துங்கள் என கூறுவது எப்படி இலங்கை அரசுக்கு எதிரான பிரேரணை என கூற முடியும்.
தனக்கு மிக சாதகமான பரிந்துரைகளை கூட சிறிலங்கா அரசு நடைமுறைப்படுத்தாது காலம் கடத்தி வரும் நிலையில் தான் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 22ஆவது கூட்டத்தொடரிலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளையினால் இலங்கை தொடர்பாக ஒரு அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.
இதற்கு மேலதிகமாக அமெரிக்காவும் ஒரு பிரேரணையை கொண்டுவர இருக்கிறது. இவற்றில் நீதித்துறையின் சுதந்திரம், நீதிக்கு புறம்பான கடத்தல்கள், காணாமல் போன சம்பவங்கள் தொடர்பான சுதந்திர விசாரணை ஆகியவற்றை வலியுறுத்தி இந்த பிரேரணை அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பிரேரணை எவ்வளவு தூரம் இலங்கைக்கு பாதகமாக அமையும் என கூற முடியாது. எப்போதும் இலங்கை அரசை காப்பாற்ற நினைக்கும் இந்தியா இலங்கைக்கு பாதகமாக அப்பிரேரணை அமையாமல் பார்த்துக் கொள்ளும் என்பதுதான் யதார்த்தம்.
எனவே இம்முறையும் ஐ.நா.வில் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட இருக்கும் பிரேரணை கடந்த முறையை போன்று உப்பு சப்பற்ற இலங்கையை காப்பாற்றுகின்ற பிரேரணையாக அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
(நன்றி-TKK) GJKMEDIAWORKS TEAM 2012

Ingen kommentarer:

Legg inn en kommentar