இலங்கை ஹிட்லரின் சர்வாதிகார அடக்குமுறைகளும் மக்களின் சகிப்பு தன்மையும்


ஹிட்லரை பற்றி தெரியாதவர்கள் கூட சர்வாதிகார அடக்குமுறை மற்றும் இப்படுகொலைகளுக்கு உதாரணமாக இந்த பெயரைத்தான் சொல்வார்கள். ஹிட்லரின் எனது போராட்டம் என்ற சுயசரிதை மற்றும் அவரின் வாழ்க்கை வரலாற்றை படித்து ஹிட்லர் பற்றி அறிந்து கொண்டதை விட ஹிட்லர் இறுதியாக அராஜகங்களை புரிந்த முன்சனுக்கு நேரடியாக சென்ற போது அந்த கொடுமைகளின் சாட்சிகளையும் பார்க்க முடிந்தது.
உலகில் படுகொலைகளுக்கும் சர்வாதிகாரத்திற்கும் உதாரணமாக பேசப்படும் ஹிட்லர் ஜேர்மனியின் ஆட்சியை கைப்பற்றி 80ஆண்டு நிறைவு கடந்த மாதம் 30ஆம் திகதி ஜேர்மனியில் நினைவு கூரப்பட்டது. ஜேர்மன் நாடாளுமன்றத்தில் இது நினைவு கூரப்பட்ட போது இப்போதைய ஜேர்மனிய அரச தலைவி ஏங்கெலா மெர்கல் ஆற்றிய உரையின் ஒரு பகுதி ஜேர்மனிய மக்களுக்காக அல்ல எங்கெல்லாம் அடக்குமுறையும் இனப்படுகொலையும் சர்வாதிகாரமும் மேலோங்கி இருக்கிறதோ அங்குள்ளவர்களுக்கும் அந்த பேச்சு பொருத்தமாகவே இருந்தது.
மக்கள் ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும், சகிப்புத் தன்மையையும் பேணுவதில் விழிப்பாக இருக்க வேண்டும். பெரும்பான்மையான ஜெர்மானியர்கள், நாஜிக்களை சகித்துக் கொண்ட காரணத்தால்தான் ஹிட்லர் தான் பதவிக்கு வந்த சில மாதங்களிலேயே ஜனநாயகத்தை அழிக்க முடிந்தது என்று ஏங்கலா மேர்கல் குறிப்பிட்டிருந்தார்.
அன்று மக்கள் அளவுக்கதிகமாக சகிப்பு தன்மையை கடைப்பிடித்த காரணத்தால் தான் ஹிட்லர் இவ்வளவு கொடுமைகளை மிக இலகுவாக செய்ய முடிந்தது. ஆரம்பத்திலேயே ஹிட்லரின் கொடுமைகளுக்கு எதிராக மக்கள் புரட்சி ஒன்றை நடத்தியிருந்தால் நாசிகளின் படுகொலைகளை தடுத்திருக்க முடியும்.  மக்களின் சகிப்பு தன்மைகளால் ஹிட்லரால் 50இலட்சத்திற்கு மேற்பட்டவர்களை மிக இலகுவாக கொல்ல முடிந்தது.
அன்று ஜேர்மனி மக்களிடம் காணப்பட்ட சகிப்பு தன்மை, அதைப்பயன்படுத்தி கொண்டு மக்கள் ஆதரவு தனக்கு இருக்கிறது என்ற இறுமாப்புடன் ஹிட்லர் அதிகாரங்கள் அனைத்தையும் தன் கையில் எடுத்துக்கொண்டது, அதை வைத்துக்கொண்டு மேற்கொண்ட இனப்படுகொலைகள் அனைத்தையும் இன்று இலங்கையில் காணமுடிகிறது.
ஹிட்லர் ஜேர்மனியில் பிறந்தவர் அல்ல, அவர் ஜேர்மனியின் அயல்நாடான ஒஸ்ரியாவில்; 1889ல் சாதாரண குடும்பத்தில் பிறந்தார். ஹிக்கிள் கிரப்பர் ஹிட்லரின் மூன்றாவது மனைவிக்கு நான்காவது மகனாக பிறந்தவர்தான் அடோல்ப் ஹிட்லர்.
சிறுவயதில் தாய்தந்தையை இழந்து மிக கஸ்டமான நிலையில் வாழ்ந்த அவர் ஹிட்லர் 1914-ல் தொடங்கி, 1918 வரை நடந்த முதல் உலகப் போரின் போது ஜெர்மனி ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார். 1918-ல் போரில் ஜெர்மனி தோற்றது. இந்த தோல்விக்கு ஜனநாயகவாதிகளும், யூதர்களும்தான் காரணம் என்று ஹிட்லர் நினைத்தார்.
தேசிய சோசலிஸ்ட் ஜெர்மன் தொழிலாளர் கட்சியில் ஒரு உறுப்பினராகச் சேர்ந்து, தனது பேச்சு வன்மையால் விரைவிலேயே கட்சித் தலைவரானார். பின்னர் தன்னுடைய கட்சியின் பெயரை ‘நாஜி கட்சி’ என்று மாற்றி நாடு முழுவதும் தீவிரவாதத்தில் ஈடுபட்டார். அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் புரட்சிக்கு வழிவகுத்தார்.
பாராளுமன்றக் கட்டிடம் கொளுத்தப்பட்டது. ஜனாதிபதியாக இருந்த ஹிண்டன்பர்க், அந்த போராட்டத்திற்கு அடிபணிந்தார். 1933-ஜனவரி 30-ந்தேதி ஹிட்லரை அழைத்துப் பிரதமராக நியமித்தார். அன்றிலிருந்துதான் ஹிட்லரின் ஆட்சி ஆரம்பமானது. பிரதமராக இவர் பதவி ஏற்ற ஒரு வருடத்தில் ஜனாதிபதி ஹிண்டன்பர்க் மரணம் அடைந்தார். அவ்வளவுதான். ஜனாதிபதி பதவியையும் கைப்பற்றிக் கொண்டு, எதிர்ப்பாளர்களை எல்லாம் ஒழித்துவிட்டு, ஜெர்மனியின் சர்வாதிகாரி ஆனார் ஹிட்லர்.
இராணுவ இலாகாவையும், ராணுவ தளபதி பதவியையும் தானே எடுத்துக்கொண்டார். அரசியல் கட்சிகளை எல்லாம் தடை செய்தார்.
இராணுவம், நீதி, நிர்வாகம் அனைத்தையும் தானும் தன்னுடைய சகாக்களின் கைகளுக்கு கொண்டு வந்தார். வாய் திறந்தவர்களை எல்லாம் சிறையில் தள்ளினார். அரசுக்கு எதிரானவர்கள் என கருதப்பட்டவர்கள் திடீர் திடீர் என வீதிகளில் சுட்டுக்கொல்லப்பட்டனர். பத்திரிகையாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஜனநாயக வாதிகள் அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இன்று மக்கள் இலங்கையில் சகிப்பு தன்மையோடு மௌனம் காக்க பத்திரிகையாளர்களும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் தமிழ் அரசியல்வாதிகளும் வீதிகளில் தேவாலயங்களுக்குள்ளும் சுட்டுக்கொல்லப்பட்டனரோ இதே போன்றுதான் ஹிட்லரின் ஆட்சியிலும் கொடுமைகள் மக்கள் கண் முன்னே நடந்தன.
ஹிட்லர் எதிரிகளைச் சிறையில் தள்ளினார். ‘இனி ஜெர்மனியில் ஜனநாயகம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை’ என்று அறிவித்தார். யூதர்களை அடியோடு அழிக்கவேண்டும் என்று முடிவு செய்து, யூதர்களைக் கைது செய்து, சிறையில் பட்டினி போட்டுச் சித்திரவதை செய்து கொன்றார். பலர் இருட்டறைகளில் அடைக்கப்பட்டு, விஷப் புகையால் கொல்லப்பட்டனர். தினமும் சராசரியாக 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் விஷப்புகையிட்டுச் சாகடிக்கப்பட்டனர்.
ஹிட்லரால் கொல்லப்பட்ட யூதர்களின் எண்ணிக்கை சுமார் 50 லட்சம். உலகத்தையே தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர நேரம் நெருங்கிவிட்டதாக நினைத்தார் ஹிட்லர். இந்தச் சமயத்தில் ஹிட்லருடன் நட்புக் கொண்டார் இத்தாலி சர்வாதிகாரி முசோலினி.
ஜப்பான் உள்பட வேறு சில நாடுகளும் ஜெர்மனியுடன் கைகோர்த்துக் கொண்டன. ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் ஒரு ரகசிய ஒப்பந்தத்தைச் செய்து கொண்டன. ஆசியப் பகுதிகளை ஜப்பானும், ஆப்பிரிக்காவை இத்தாலியும், ஐரோப்பிய பகுதிகளை ஜெர்மனியும் தாக்கிக் கைப்பற்றவேண்டும் என்பதே அந்த ரகசிய ஒப்பந்தம்.
பதவி வெறியும் சர்வாதிகாரமும், ஈவிரக்கமற்ற படுகொலைகளும் இறுதியில் ஹிட்லர் என்ற சர்வாதிகாரியின் வீழ்ச்சிக்கு காரணமானது. ஹிட்லர் 1945 ஏப்ரல் 30ஆம் திகதி தன்மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டான்.
நடந்த கொடூரகொலைகளின் சாட்சியாக இருக்கும் அந்த இடங்களை முன்சன் பகுதியில் இன்றும் பார்க்கலாம்.
இன்றும் அந்த பகுதியில் நாசிகள் என்று சொல்லப்படுகின்ற ஒருபிரிவினர் வாழ்ந்து வருகின்றனர். வெளிநாட்டவர்களுக்கு எதிரான கொள்கைகளை கொண்டவர்களாக அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் சிலர் இன்றும் ஹிட்லரின் கொலைகளை நியமப்படுத்துபவர்களும் உள்ளனர்.
சுவிஸிலிம் கூட நான் வாழும் சுவிட்ஷ் மாநிலத்தில் புறுணன் போன்ற இடத்தில் நாசிகள் என்று அழைக்கப்படும் ஒரு குழுவினர் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் அடிப்படையில் வெளிநாட்டவர்களுக்கு எதிரான எதிர்ப்புணர்வு கொண்டவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். அண்மையில் கூட பேர்ண் மாநகரில் இலங்கையர் ஒருவர் நடத்தும் உணவு விடுதியில் புகுந்த மூன்று பேர் நாசிகள் பயன்படுத்தும் அந்த கொட்டொலி வாசனங்களை எழுப்பியவாறே தாக்குதல் நடத்தியிருந்தனர்.
ஆனாலும் நாசிக்கட்சி சுவிஸிலும் சரி ஜேர்மனியிலும் சரி தடைசெய்யப்பட்ட கட்சியாகும்.
ஜேர்மனியில் வாழ்ந்த யூத மக்கள் இன்றைக்கு 80ஆண்டுகளுக்கு முதல் அனுபவித்த துன்பங்களையும், அடக்குமுறைகளையும் இன்று இலங்கையர்கள் முக்கியமாக தமிழர்கள் அனுபவித்து வருகின்றனர்.  தங்கள் இனத்தின் மீது நடத்தப்பட்ட படுகொலைகளை நினைவு கூருவதற்கு கூட உரிமை அற்றவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர்.
1987ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் திகதி மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேச கிராமங்களில் சிறிலங்கா விசேட அதிரடிப்படையினர் நடத்திய படுகொலைகளில் சிறுவர்கள் உட்பட 150க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். ஹிட்லர் காலத்தில் எவ்வாறு படுகொலைகளை செய்து வீதிகளில் சடலங்களை போட்டு எரித்தார்களோ அதேபோன்று சடலங்களை நடுவீதியில் ரயர் போட்டு எரித்தனர். கொக்கட்டிச்சோலை, முதலைக்குடா, முனைக்காடு, மகிழடித்தீவு தாண்டியடி என அப்பிரதேச கிராமங்களில் இருந்தவர்கள் தேடி அழிக்கப்பட்டனர். வாவி ஊடாக தப்பி சென்றவர்கள் உலங்குவா}ர்தி மூலம் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதன் பின்னரும் 1991ஆம் ஆண்டு யூன் 12ஆம் திகதி அக்கிராமங்களில் 165க்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1987ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் திகதி கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் வணக்க நிகழ்வை அக்கிராம மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர். கொக்கட்டிச்சோலை தான் தோன்றீஸ்வரர் ஆலயத்தில் ஆத்மசாந்தி பூசை நடத்தி விட்டு மண்டபத்தில் நடக்க இருக்க வணக்க நிகழ்வுக்கு சென்ற மக்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இறந்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்ச்சியை மண்டபத்தில் நடத்தக் கூடாது என அரசாங்கத்தின் மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருப்பதாக கூறி மக்களை வெளியேற்றிய பொலிஸார் மண்டபத்தை பூட்டி விட்டு சென்றனர்.
தென்னிலங்கையில் சிங்கள மக்கள் தாங்களின் உறவினர்கள் கொல்லப்பட்டதை நினைவு கூருவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். ஜே.வி.பி கிளர்ச்சிகாலத்தில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூருவதற்கும் அரசாங்கம் அனுமதி வழங்கியிருக்கிறது.
காத்தான்குடி ஏறாவூரில் படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவு கூர்வதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. இவை பெருமெடுப்பில் அன்றைய தினங்களில் அனுட்டிப்பதற்கு தாராளமாக அனுமதிக்கப்படுகிறது.
தமிழ் மக்களுக்கு மட்டும் இறந்த அவர்களின் உறவுகளை நினைவு கூருவதற்கு கூட அனுமதியோ உரிமையோ அற்றவர்களாக உள்ளனர்.
கடந்த 28ஆம் திகதி கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடந்த அஞ்சலிக் கூட்டத்திற்கு சென்ற மக்கள் இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்டு வீடுகளுக்கு திருப்பி அனுப்பபட்டனர். இதனைத் தொடர்ந்து அஞ்சலிக் கூட்டம் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் நடத்தப்பட்ட போது அங்கு வந்த பொலிஸ் உளவுத்துறையினர் அங்கு கூடி இருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் அவர்களை வீடியோ எடுத்ததுடன் உரையாற்றியவர்களின் பேச்சுகளையும் ஒலிப்பதிவு செய்து சென்றனர்.
கொலையாளிகளுக்கு எதிராக அந்த மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை, கொலையாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என கோரவில்லை, கொல்லப்பட்ட தங்கள் உறவுகளுக்கு விளக்கை ஏற்றி மலர் தூவி அஞ்சலி செய்வதற்குதான் அந்த மக்கள் முற்பட்டார்கள். அதனை கூட தடுப்பது ஹிட்லரின் சர்வாதிகார ஆட்சியை விட கொடுமையானதாகவே படுகிறது.
ஜேர்மன் அரசுத்தலைவர் ஏங்கலா மேர்கல் கூறியது போல மக்கள் அளவுக்கதிகமாக சகிப்து தன்மையோடு இருப்பது சர்வாதிகாரிகள் ஜனநாயகத்தை அழிப்பதற்கு உதவியாக அமைந்து விடுகிறது.
இரா.துரைரத்தினம்
(நன்றி-TKK) GJKMEDIAWORKS TEAM 2012

Ingen kommentarer:

Legg inn en kommentar