மகிந்த ராசபக்சவின் இந்திய பயணத்தை தடுக்க
வேண்டும் என கோரிய தமிழக கட்சிகள் மற்றும் அமைப்புக்களின் பலம் பலவீனம்,
மகிந்த ராசபக்ச வெறுமனே புத்தகாயாவுக்கும், திருப்பதிக்கும் வழிபாடு
செய்யத்தான் சென்றாரா என்பதையும் ஆராய வேண்டும்.
மகிந்தவின் இந்திய பயணத்தின் உண்மையான நோக்கம் என்ன
சிறீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்
இந்தியப் பயணத்தின் நோக்கம் புனித யாத்திரைதான் என்று சொல்லப்பட்டாலும்
உண்மையில் அது அல்ல காரணம். சில இராஜதந்திர காய் நகர்த்தலை செய்வதற்காகவே
அவர் இந்த பயணத்தை பயன்படுத்திக் கொண்டார் என்பதுதான் உண்மை.
புத்தகாய, மற்றும் திருப்பதி வழிபாடுகள் என
வெளியில் சொல்லப்பட்டாலும் பிகார் மற்றும் ஆந்திர மாநில அரசுகளின் ஆதரவை
பெற்று அவர்கள் மூலம் இந்திய மத்திய அரசை ஜெனீவாவில் சிறீலங்காவுக்கு
எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்துக்கு ஆதரவளிக்கவிடாமல்
தடுக்கும் இராஜதந்திர நடவடிக்கையை மேற்கொள்ளவே இந்தப் பணயத்தை
மேற்கொண்டுள்ளார் என்றே இந்திய அரசியல் ஆய்வாளர்கள் பலரும்
தெரிவித்திருக்கிறார்கள்.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் அடுத்த மாதக்
கூட்டத்தொடரில் சிறீலங்கா நெருக்கடிகளை எதிர்நோக்கவுள்ள சூழலில், பொதுநலவாய
மாநாடு தொடர்பான சர்ச்சைகள் நீடிக்கும் நிலையில், சிறீலங்கா ஜனாதிபதி
மகிந்த ராஜபக்ச நிம்மதி தேடி இந்தியாவுக்கு புனித யாத்திரையை
மேற்கொண்டுள்ளார் என்று சிலரும், அவரது ஆஸ்தான சோதிடரின் ஆலோசனைப்படி தோச
நிவர்த்திக்கான புனித பயணத்தை மேற்கொண்டுள்ளார் என்று சிலரும் அவரது
இந்தியப் பயணம் தொடர்பாக கூறினாலும் இது ஒரு அரசியல் இலாபம் கருதிய பயணம்
என்றே இந்திய அரசியல் ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
இந்தியாவில் மத்தியில் ஆட்சிலுள்ள
காங்கிரஸ் அரசாங்கம் தற்போது தனது ஆட்சியை தக்க வைக்க மாநில அரசுகளின்
ஆதரவையே நம்பியிருக்கிறது. மாநில அரசுகளின் ஆதரவை பெற்று அவர்கள் மூலம்
மத்தியிலுள்ள காங்கிரஸ் அரசை ஜெனிவாவில் தங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை
எடுக்கவிடாமல் தடுக்கலாம் என்று சிறீலங்கா அரசு கணிப்பிட்டுள்ளது என
விஜயவாடவிலுள்ள சமூகவிஞ்ஞான கற்கை மையத்தின் இயக்குனரும் ஆய்வாளருமான
சந்திரசேர ரெட்டி எதிர்வு கூறியுள்ளார்.
கடந்த முறை ஜெனிவாவில் இலங்கை தொடர்பான
தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்த போது அதை சற்று பலவீனப்படுத்தி விட்டு
அதனை ஆதரிக்க வேண்டிய நிலையில் இந்தியா இருந்தது. இதற்கு இரண்டு காரணங்கள்
கூறப்பட்டது. அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தால்
அமெரிக்காவை பகைத்து கொள்ள வேண்டி வரும் என்பது ஒரு காரணம், மற்றது
தமிழகத்தில் ஏற்பட்ட எதிர்ப்பலைகள் காரணமாக அமைந்தது.
தமிழகத்தின் அழுத்தங்களால்தான் இந்தியா
இந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டி ஏற்பட்டது என்பதை சிறிலங்கா வெளிவிவகார
அமைச்சர் பீரிஸ் உட்பட இலங்கை அரசு தரப்பில் பலரும் தெரிவித்திருந்தனர்.
இந்தியாவில் உள்ள ஒரு மாநிலத்தின் அழுத்தம்
காரணமாக இந்திய மத்திய அரசு செயற்படுமாக இருந்தால் இலங்கைக்கு சார்பாக
இன்னொரு மாநிலத்தை கொண்டு அழுத்தம் கொடுத்தால் இந்தியா நெருக்கடிக்குள்
உள்ளாகும் என்பதும் இந்திய தன்னுடைய நிலையை மாற்ற வேண்டிய இக்கட்டிற்குள்
தள்ளப்படும் என்பதும் சிறிலங்காவின் இராஜதந்திர வியூகமாகும்.
கடந்த வருடம் செப்ரெம்பரில் இந்திய பயணத்தை
மேற்கொண்டிருந்த மகிந்த ராசபக்ச மத்தியப் பிரதேச மாநில முதல்வர்
சிவ்ராஜ்சிங் சௌகானுடன் பேசி உறவை வளர்த்துக்கொண்டிருந்தார். அதேபோல,
அதற்கு முன்னர் திருப்பதி சென்றிருந்தபோது, ஆந்திர முதல்வர் கிரண்குமார்
ரெட்டியுடன் பேசியிருந்தார். 
இம்முறை பீகார் முதல்வருடன்
பேசியிருக்கிறார். இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு வெள்ளிக்கிழமை காலை
புத்தகாயா விமான நிலையத்தைச் சென்றடைந்த ஜனாதிபதி குழுவினரை, பீகார் மாநில
முதலமைச்சர் நிதீஷ் குமார் நேரடியாக சென்று வரவேற்றிருக்கிறார். ஜனாதிபதி
மகிந்த ராசபக்ச குழுவினருடன் முதலமைச்சர் நிதீஷ் குமார் புத்தகாயாவில்
வழிபாடுகளை நடத்தியதுடன் மகிந்த ராசபக்ச தலைமையிலான குழுவினருக்கு விருந்து
ஒன்றையும் அளித்திருக்கிறார். மகிந்த ராசபக்சவும் பீகார் மாநில
முதலமைச்சரும் தனியாகவும் பேசியிருக்கிறார்கள்.
அவர்கள் என்ன பேசினார்கள் என்று
உத்தியோகபூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படாவிட்டாலும் அவர்கள் பேசிய விடயம்
நிட்சயமாக சிறிலங்கா அரசுக்கு ஆதரவாக செயற்படுமாறு மத்திய அரசுக்கு
அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற விடயமாகவே இருக்கும் என்பதே அரசியல்
ஆய்வாளர்களின் கணிப்பாகும்.
இந்த மூன்று மாநிலங்களும் உத்தரப்
பிரதேசத்துக்கு அடுத்ததாக அதிகளவிலான நாடாளுமன்ற ஆசனங்களைக் கொண்ட
மாநிலங்கள் என்றும் பீகாரில், 54 தொகுதிகளும், ஆந்திராவில் 42 தொகுதிகளும்,
மத்தியப் பிரதேசத்தில் 40 தொகுதிகளும் உள்ளன. எனவே இந்த மாநிலங்களின்
அழுத்தங்களுக்கு அடிபணிய வேண்டிய நிலையில் இந்திய மத்திய அரசு இருப்பதாக
அரசியல் ஆய்வாளர் சந்திரசேகர ரெட்டி கூறியிருக்கிறார்.
மாநில அரசுகளை வளைத்துப் போடும் மஹிந்த
ராஜபக்ஷவின் கணக்கு சரியாக அமைந்தால், அவரது அடுத்த இலக்கு உத்தரப்
பிரதேசமாக இருக்கும் என்றும் அதுதான் 85 தொகுதிகளைக் கொண்ட மாநிலம்
என்பதுடன், வாரணாசியில் சாரநாத் மற்றும் குஷிநகர் என்று இரு பௌத்த
யாத்திரைத் தலங்களையும் கொண்டது என்றம் அவர் குறிப்பிடுகிறார்.
வடஇந்தியாவில் உள்ள இந்த மூன்று
மாநிலங்களின் ஆதரவுகளை மகிந்த ராசபக்ச பெற்றுக்கொண்டால் தமிழ்
நாட்டிலிருந்து இந்திய மத்திய அரசுக்கு கொடுக்கப்படும் அழுத்தங்கள்
நீர்த்து போய்விடும். ஏற்கனவே தமிழ்நாட்டின் அழுத்தங்களையோ கோரிக்கைகளையோ
இந்திய மத்திய அரசு பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. சிறிலங்காவுக்கு ஆதரவை
வழங்குமாறு வடஇந்தியாவில் உள்ள இந்த மூன்று மாநிலங்களின் அழுத்தங்கள்
வருமாக இருந்தால் தமிழ்நாட்டின் கோரிக்கைகளை தூக்கி எறிந்து விட்டு இந்திய
மத்திய அரசு அந்த மாநிலங்களின் கோரிக்கைகளுக்கே செவி சாய்க்கும் என்பது
எல்லோருக்கும் தெரிந்த விடயம் தான்.
சிறீலங்காவின் அரசுத்தலைவர் மகிந்த
ராஜபக்சவின் இந்த ராஜதந்திர வியூகம் நிச்சயமாக இந்திய கொள்கை வகுப்பாளர்கள்
சிலரது அனுசரணை இல்லாமல் வகுக்கப்பட்டிருக்க முடியாது. புதுடில்லியில்
உள்ள இந்திய கொள்கை வகுப்பாளர்கள் சிலரின் ஆலோசனையின் பேரிலேயே மகிந்த
ராசபக்ச வடமாநிலங்களை தங்கள் கைகளுக்குள் போடும் வியூகத்தை
அமைத்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
உண்மையில் இது தமிழ்நாட்டில் உள்ள ஈழத்தமிழர் ஆதரவு அமைப்புக்களின் பலவீனம் என்றுதான் கூறவேண்டும்.
தமிழகத்திலுள்ள ஈழ ஆதரவு அமைப்புக்கள்
தமிழக எல்லையை தாண்டி ஏனைய மாநில அரச வட்டாரங்களில் ஈழப் பிரச்சனை குறித்த
ஆதரவுத்தளத்தை உருவாக்க தவறிவிட்டதை சிறீலங்கா அரசு தனக்கு சாதமாக
பயன்படுத்திகொண்டுவிட்டது என புதுடல்லியிலுள்ள சுயாதீன ஊடக அமைப்பை சேர்ந்த
பத்தி எழுத்தாளர் ஆர். வெங்கடேசன்; சுட்டிக்காட்டியிருக்கிறார்.
மகிந்த ராசபக்சவின் வருகையை எதிர்த்து
தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான அதிமுக மற்றும் மத்தியில் ஆட்சியில் உள்ள
காங்கிரஷ் கட்சிகளை தவிர தமிழ்நாட்டில் உள்ள ஏனைய அனைத்து கட்சிகளும்
ஈழத்தமிழர் ஆதரவு அமைப்புக்களும் சட்டக்கல்லூரி மாணவர்கள், சட்டத்தரணிகள்,
ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தன. மதிமுக தலைவர் வைகோ தலைமையில் இந்திய
பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆகியோரின் இல்லத்தை முற்றுகையிட சென்ற போது கைது
செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.
பொதுவாக ஆட்சியில் இருக்கும் போது
ஈழத்தமிழர்கள் விடயத்தில் மௌனம் காக்கும் திமுக ஆட்சியில் இல்லாத காலத்தில்
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக செயற்படுவதாக தன்னை காட்டிக்கொள்ள தவறுவதில்லை.
அதைத்தான் அண்மைக்காலமாக திமுக செய்து வருகிறார். ஆனால் இந்திய மத்திய
அரசின் ஆளும் கட்சியில் பங்காளிக்கட்சியாக இருக்கும் திமுக ஈழத்தமிழரின்
இனப்பிரச்சினை தீர்வுக்கு இந்திய மத்திய அரசுக்கு எவ்வளவு தூரம் அழுத்தம்
கொடுக்கிறது என்பது கேள்விக்குறியாகும்.
வெளியில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி தாம்
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பதாக தமிழ்நாட்டு மக்களுக்கு
காட்டிக்கொள்ளும் திமுக மத்திய அரசாங்கத்தின் ஆளும் கட்சியில் அங்கம்
வகிக்கின்ற பிரதான கட்சி ஒன்று. திமுக ஈழத்தமிழர் விடயத்தில் இந்திய மத்திய
அரசுக்கு உரிய அழுத்தங்களை கொடுத்தால் அதை மீற முடியாத நிலையிலேயே
மன்மோகன் சிங் அரசு உள்ளது. ஆனால் மத்திய அரசுக்கு உரிய அழுத்தத்தை
கொடுக்கவோ அல்லது மன்மோகன் சிங் அரசுக்கான ஆதரவை மத்தியில் விலக்கி
கொள்வதற்கோ திமுக தயாராக இல்லை.
அதேபோன்று தற்போதைய ஆட்சியில் இருக்கும்
ஜெயலலிதா அரசும் ஈழத்தமிழருக்கு ஆதரவாக தாம் செயல்படுவதாக தமிழ்நாட்டு
மக்களுக்கு காட்டிக்கொண்டாலும் இலங்கை தமிழரின் இனப்பிரச்சினை தீர்வுக்கு
ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் எடுத்ததாக வரலாறு இல்லை.
தமிழ்நாட்டில் உள்ள ஏனைய கட்சிகளும் சரி
தமிழ் அமைப்புக்களும் சரி தமிழ்நாட்டிற்குள் தங்கள் ஆர்ப்பாட்டங்களை
நடத்துவதுடன் அடங்கி போய்விடுகின்றன. இந்திய மத்திய அரசை பாரிய அழுத்தத்தை
கொடுக்க கூடிய அளவில் அல்லது இந்திய கொள்கை வகுப்பாளர்களின் மனநிலைகளில்
மாற்றங்களை கொண்டுவரக் கூடிய இராஜதந்திர நடவடிக்கைகளை எடுப்பதில் பூச்சிய
நிலையிலேயே தமிழக கட்சிகளும் ஈழத்தமிழர் ஆதரவு அமைப்புக்களும்
காணப்படுகின்றன.
இந்தியாவில் மிக முக்கிய மாநிலங்களில்
ஒன்றான தமிழ்நாட்டின் கோரிக்கையை தூக்கி எறிந்து விட்டு சிறிலங்கா
ஜனாதிபதியை இந்திய மத்திய அரசு வரவேற்றிருக்கிறது என்றால் அது
தமிழ்நாட்டின் பலவீனத்தை தான் காட்டுகிறது.
இதனை நன்கு உணர்ந்து கொண்ட இந்திய கொள்கை வகுப்பாளர்களும் சிறிலங்கா அரச தரப்பும் மிக சாதுரியமாக காய்களை நகர்த்தி வருகின்றன.
இதனை நன்கு உணர்ந்து கொண்ட இந்திய கொள்கை வகுப்பாளர்களும் சிறிலங்கா அரச தரப்பும் மிக சாதுரியமாக காய்களை நகர்த்தி வருகின்றன.
ஜெனிவாவில் சிறிலங்கா பொறிக்குள் சிக்க
போகிறது, ஆபத்து வருகிறது என சில தமிழ் ஊடகங்கள் ஆரவாரப்படுத்தினாலும்,
கடந்த காலங்களில் ஐ.நா.மனித உரிமை பேரவையில் தீர்மானங்கள் வந்த போது எப்படி
சமாளித்தோமோ அவ்வாறே இம்முறையும் சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கையுடன்
சிறிலங்கா காய்களை நகர்த்தி வருகிறது.
ஆனால் பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பு தமக்கு
நிகழ்த்தப்பட்ட அநீதிகளை தம்மீது இன்றும் மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகளை
சரியான முறையில் சர்வதேசத்தின் முன் வைத்து நீதி கோருவதற்கு தவறி வருவதையே
அவதானிக்க முடிகிறது.
அடுத்த மாதம் ஜெனிவாவில் இலங்கைக்கு
அழுத்தம் கொடுக்கும் வகையில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட இருக்கும்
பிரேரணைக்கு இந்தியா ஆதரவளிக்கலாம் அல்லது ஆதரவளிக்காமல் விடலாம். ஆனால்
ஒன்றை மட்டும் இந்தியா செய்ய தவறாது. அந்த பிரேரணை இலங்கையை பாதிக்காத
வகையில் அதை நீர்த்துப்போகும் வகையில் சில சகுனி வேலைகளை இந்தியா
செய்யத்தவறாது.
அப்போது இந்தியா எமக்கு அள்ளித்தரும், எம்மை பாதுகாக்கும் என நம்பிக்கொண்டிருக்கும் தமிழர் தரப்பு ஏமாந்து நிற்கத்தான் போகிறது.
(நன்றி-tkk) GJKMEDIAWORKS TEAM 2012
Ingen kommentarer:
Legg inn en kommentar