அறிவாலயத்து ஏமாளிகளும் அக்பர் ரோடு கோமாளிகளும் - புகழேந்தி தங்கராஜ்!


தமிழக மீனவர்களுக்கு அனுசரணையாக இல்லாமல் இலங்கை அரசுக்கே அனுசரணையாக இருக்கிறதாம் மத்திய அரசு. இத்தனை ஆண்டுகள் அலசி ஆராய்ந்தபின் ஆய்வு முடிவை வெளியிட்டிருக்கிறது அறிவாலயம். லேட்டஸ்டாக வராமல் எப்போதும்போல் இப்போதும் லேட்டாகவே வருகிறது திருவாரூர் கூட்ஸ் வண்டி. (கூட நாலு வேகன்ல சாமானும் ஏத்தணும் வேகமாவும் வரணும்னா நடக்கிற கதையா?)
தூரத்தில் இருந்தவர்கள் நாங்கள். கருணாநிதியின் கூடாநட்பு எங்கள் இனத்துக்குக் கேடாய் இருந்ததால் கொஞ்சம் கோபத்தோடு பேசியிருக்கலாம். அதனால்தானோ என்னவோ நாங்கள் உண்மையையே சொல்லியும் அவர் ஏற்கமறுத்தார். இது ஒரு யதார்த்தமான எதிர்விளைவாகவே இருந்துவிட்டுப் போகட்டும். கூப்பிடு தூரத்தில் அகலாது அணுகாது நின்றுகொண்டு நாங்கள் சொன்னதைத்தானே சொன்னார் சுப.வீ.! கொன்றுகுவிக்கப்படும் ஈழத் தமிழர்களுடன் காங்கிரஸும் மத்திய அரசும் சேர்ந்து உடன்கட்டை ஏறிவிடும் என்றா சுப.வீ. சொன்னார்? நான்கு ஆண்டுகள் கழித்துத்தான் வாழும் வள்ளுவருக்கு உண்மை புரிகிறது என்றால் என்ன அர்த்தம்?
'2009ல் போர் நடந்தபோது இலங்கை அரசுக்கு இந்தியா உதவுவதாக சிலர் சொன்னதை தி.மு.க. நம்பவில்லை. இப்போது இலங்கைக்குப் போர்க்கப்பல் கொடுக்க இந்தியா முன்வருவதைப் பார்த்தால் 'இலங்கைத் தமிழருக்கோ தமிழக மீனவர்களுக்கோ இந்தியா அனுசரணையாக இல்லை இலங்கைக்குத்தான் இந்தியா உதவுகிறது' என்று சிலர் தொடர்ந்து கூறும் குற்றச்சாட்டு உறுதியாகிறது' என்பது வா.வள்ளுவரின் வாதம்.
இலங்கைக்கு இந்தியா உதவுவது கிடக்கட்டும்.... யாருக்கு உதவ 'நடந்தது போர்' என்று சாதிக்கப் பார்க்கிறார் மு.க.? 1983 ஜூலையில் நடத்திய இனப்படுகொலையை மூடிமறைக்க 'இனக்கலவரம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியது இலங்கை. 2009ல் நடத்திய இனப்படுகொலையை மூடிமறைக்க 'நடந்தது போர் தான்' என்று புளுகுகிறது. அமெரிக்காவும் மார்க்சிஸ்ட்களும் 'ஆமாம்... ஆமாம்' என்று பூசி மெழுகுகிறார்கள். அப்படிச் சொல்ல அவர்களுக்கு ஆயிரம் காரணம் இருக்கிறது. அவர்கள் சொன்னதை அப்படியே சொல்ல இவருக்கு என்ன காரணம்?
தவறாக நினைத்தாலும் பரவாயில்லையென்று எடுத்த எடுப்பிலேயே முன்னாள் முதல்வருக்கு மூன்று உண்மைகளைத் தெளிவுபடுத்திவிட வேண்டியிருக்கிறது.
1. இலங்கைக்கு இந்தியா அனுசரணையாக இருந்தது இருக்கிறது - என்று சுற்றிவளைத்து மூக்கைத் தொடுவது ஒரு நேரடிக் குற்றச்சாட்டை நீர்த்துப் போகவைக்கும் முயற்சி. நடந்த இனப்படுகொலையில் இந்தியா 'கூட்டுக் குற்றவாளி' என்பது அப்பட்டமான உண்மை. அந்தக் கூட்டுக் குற்றவாளியின் கூட்டாளி கருணாநிதிக்கு நடப்பது போரல்ல இனப்படுகொலை என்பது 2009லேயே தெரியாதா என்ன! முத்துக்குமாருக்குத் தெரிந்தது முத்தமிழறிஞருக்கு எப்படித் தெரியாதிருந்திருக்கும்?
2. 'இலங்கை அரசுக்குத்தான் இந்தியா உதவுகிறது என்று சிலர் சொன்னதை தி.மு.க. நம்பவில்லை' - என்று சொல்லி தி.மு.க. என்கிற இயக்கத்தின் பெயரைக் கேடயமாகப் பிடிக்கப்பார்ப்பது அப்பட்டமான மோசடி. இனப்படுகொலை நடந்தபோது கருணாநிதி அறிதுயிலில் ஆழ்ந்திருந்தது குடும்ப நலனுக்காகவும் பதவி நாற்காலிக்காகவும் அல்லாமல் வேறு எதற்காக? தான் செய்த துரோகத்துக்கான பழியைத் தன் இயக்கத்தின் மீது சுமத்தப் பார்க்கிறாரா? இனப்படுகொலை நடந்தபோது கண்டும் காணாத கற்சிலை போல் இருந்துவிட்டு 'சிலர் சொன்னதை தி.மு.க. நம்பவில்லை' என்று வசனம் பேசுவதன்மூலம் ஈழ மக்களை உண்மையாகவே நேசிக்கும் லட்சோப லட்சம் தி.மு.க. தோழர்களை முட்டாளாக்கப் பார்க்கிறாரா? ஒருவேளை கருணாநிதி இப்போது சொல்வதுதான் உண்மையென்றால் காங்கிரஸ் கட்சியாலும் மத்திய அரசாலும் முட்டாளாக்கப்படும் அளவுக்குத் தனது அரசியல் 'முதிர்ச்சி' இருந்தது இருக்கிறது என்பதை அவர் ஒப்புக்கொண்டதாக எடுத்துக்கொள்ளலாமா?
3. இலங்கைக்கு இந்தியா கொடுத்த ஆயுதங்களை விட ஆபத்தானதாக இருந்தது தன்னுடைய மௌனம்தான் என்பதையும் இனப்படுகொலைக்கு எதிராகப் போராடுவதுபோல் பாவலா காட்ட மட்டுமே தன்னுடைய நிஜமான எஜமானர்கள் தன்னை அனுமதித்தார்கள் என்பதையும் கருணாநிதி எந்தக் காலத்திலாவது மறைக்க முடியுமா? முழுமையாய்த் தன்னைப் புரிந்துவைத்திருக்கும் உடன்பிறப்புகளுக்கு இதெல்லாம் தெரியாது என்றா நினைக்கிறார் அவர்!
இது ஒருபுறம் இருக்க தான் நடத்திய நான்கரை மணி நேர நாடகம் குறித்து மீண்டும் பேசியிருக்கிறார் கருணாநிதி. (நாமே மறந்துவிட்ட அந்த அயோக்கியத்தனத்தை அவர் நினைவு படுத்தாமலாவது இருந்திருக்கலாம்!)
தமிழர் மீதான தாக்குதல் நிறுத்தப்படவேண்டும் என்று சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தாராம்....
போரை இலங்கை நிறுத்திவிட்டதாகத் தகவல் கொடுத்து தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ள வைத்தது இந்தியா தானாம்!
உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள வைத்தது இந்தியா - என்கிறார் கருணாநிதி.... சரி!
'நீங்கள் உண்ணாவிரதத்தை முடித்த பிறகும் தாக்குதல் தொடர்கிறதே' என்கிற கேள்விக்கு 'மழை விட்டபிறகும் தூவாணம் தொடர்கிறது' என்று கண்ணியத்தோடு பதிலளித்த கனவான் யார்? கொல்லப்பட்டுக் கொண்டிருந்த மக்களைப்பற்றி கவலைப்படும் தொனியிலா இருந்தது அந்த நக்கல் பதில்!
போர் நின்றுவிட்டதாக கருணாநிதியிடம் பொய் சொன்னவர் சாதாரண நபரில்லை... மூத்த அமைச்சர் சிதம்பரம். மரண வளையத்தில் சிக்கிக் கொண்டிருந்தவர்களின் எண்ணிக்கையைக் கருணாநிதியிடம் பொய்யாகக் குறைத்துச் சொன்னவரும் சாதாரண நபரில்லை.... அப்போது நம்பர் டூ ஆக இருந்த பிரணாப் முகர்ஜி. சிதம்பரப் பொய்யையும் பிரணாப் புளுகையும் பற்றி கருணாநிதி ஏற்கெனவே சொல்லியிருக்கிறார் என்பதால் நமக்கு இது புதிதல்ல!
மத்திய அரசோ காங்கிரஸ் கட்சியோ கருணாநிதியை அவரது தனிப்பட்ட விவகாரங்களில் ஏமாற்றியிருந்தால் அதைப்பற்றி நாம் கேள்வி கேட்டிருக்கப் போவதில்லை. உதாரணமாக கனிமொழிக்கு வாக்களிக்கிறோம் - என்று வாக்குறுதி கொடுத்த காங்கிரஸ் மாநிலங்களவைத் தேர்தலில் தே.மு.தி.க. வேட்பாளருக்கு வாக்களித்திருந்தால் ஏன் எதற்கு என்று நானோ நீங்களோ கேட்டிருப்போமா? குறைந்தபட்சம் என்னுடைய அன்பு நண்பர்கள் அப்புசாமி குப்புசாமியாவது கேட்டிருப்பார்களா? இன்னும் சொல்லப்போனால் சு.சுவாமி கூட அதைக் கேட்டிருக்கப் போவதில்லை.
இது அப்படியில்லை. தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்தவே 'சாகும்வரை' உண்ணாவிரதம் இருந்ததாக இவர் சொல்கிறார். அந்த உண்ணாவிரதத்தை நிறுத்துவதற்காக தாக்குதல் நின்றுவிட்டதாய்ப் பொய் சொல்கிறது மத்திய அரசு. சிதம்பரத்தின் பொய்யை நம்பி உண்ணாவிரதத்தையும் நான்கரை கோடி ஈழ உறவுகளையும் கைவிடுகிறார் கருணாநிதி. இனப்படுகொலை நடந்த அந்தக் களத்துக்குள் அன்புச் சகோதரி கனிமொழி சிக்கிக் கொண்டிருந்தார் என்று வையுங்கள்.... சிதம்பரம் தெரிவித்த தகவலை உறுதிசெய்யாமல் தாக்குதல் நிறுத்தப்பட்டு விட்டதை ஊர்ஜிதம் செய்யாமல் உண்ணாவிரதத்தைக் கைவிட்டிருப்பாரா கருணாநிதி? 'மழை விட்டபிறகும் தூவாணம் தொடர்கிறது' என்கிற வசனத்தைப் பேசியிருப்பாரா?
இவருடைய கள்ளத்தனத்துக்கோ ஏமாளித்தனத்துக்கோ - எதுவோ ஒன்றுக்கு எங்கள் ஒன்றரை லட்சம் உறவுகள் பலியானபிறகு 'என்னை ஏமாற்றித்தான் விட்டார்கள்' - என்று பொறுப்பான பதவியிலிருந்த இவர் புலம்புவது என்ன நியாயம்?

ஏமாந்துவிட்டேன் ஏமாந்துவிட்டேன் - என்று தன்னிரக்கத்தோடு இவர் உருகுவது உண்மையா? இவரை ஏமாந்த சோணகிரியாக்கிய சோனியாவிடம் மகளுக்கு வாக்கு கேட்டு மன்றாடியது உண்மையா? எது உண்மை என்பது முத்தமிழறிஞருக்கே வெளிச்சம்.
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு -
என்கிற வள்ளுவத்தை அறியாமலா இலங்கை செய்த இனப்படுகொலைக்குத் துணைபோன கூட்டுக் குற்றவாளிகளிடம்இ தனக்குப் பொய்யான தகவலைக் கொடுத்துத் தலைகுனிய வைத்தவர்களிடம் மண்டியிட்டுஇ பெற்ற மகளுக்கு வாக்குக் கேட்டார் கருணாநிதி? கழகத்தின் சார்பில் வேறு வேட்பாளர் நின்றிருந்தால் இப்படி மானம் விற்று பிழைப்பு நடத்தத் துணிந்திருக்குமா தி.மு.க.? (இனமானப் பேராசிரியர் இருக்கும் கழகம் அதற்கு உடன்பட்டிருக்குமா என்ன!)
கருணாநிதியின் குடும்ப அரசியல்தான் ஒன்றரை லட்சம் பேரைக் கொன்று விட்டது - என்பதை உணர்ந்தேயிருக்கிற தி.மு.க. தலைவர்களும் தொண்டர்களும் உள்ளுக்குள் எப்படி பொருமுகிறார்கள் என்பதை அவர் புரிந்துகொள்ளாமலேயே இருந்தால் எப்படி?
தி.மு.க.வின் பலமாக அவர் இருந்த காலம் போயே போச்! இன்று தி.மு.க.வின் ஆகப் பெரிய பலவீனம் அவர். இந்தப் பலவீனம்தான் காங்கிரஸின் பலம். இந்தத் தைரியத்தில் தான் இலங்கை என்கிற சலங்கையைக் கட்டிக் கொண்டு நடனமாடுகிறது சோனியா காங்கிரஸ்.
கருணாநிதி என்கிற பாசப்பெட்டகத்தை முற்று முழுதாகப் புரிந்துகொண்டிருக்கிறது காங்கிரஸ். அதனால்தான் 'இனப்படுகொலை' என்று சொல்லலாமா வேண்டாமா என்று தடுமாறுகிற கோழை நிலைக்கு அவரைத் தள்ளிவிட்டு 'தமிழர் பூமியான இலங்கையைக் கைப்பற்ற வேண்டும் தமிழீழக் கனவை நனவாக்க வேண்டும்' என்று காமெடி நாச்சியை வைத்து வீரம் பேசுகிறது அக்பர் ரோடு.
நாச்சியப்பன் கோமாளியாவது அவரது விருப்பம். ஆனால் நம்மைக் கோமாளியாக்கப் பார்க்கிறாரே அதை நாம் அனுமதிக்க முடியாது. தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு - என்கிற பெயரைக்கூடப் பயன்படுத்தக் கூடாது என்று வாழும் வள்ளுவரையே மிரட்டியவர்கள் இவர்கள். (இவர்களுக்குப் பயந்து 'டெசோ' என்று பெயரையே சுருக்கிவிடவில்லையா அறிவாலயம்!) இவர்களா 'தமிழீழக் கனவு' என்று திடீரென்று சவுண்ட் கொடுக்கிறார்கள்..... அதிர்ந்து போயிருக்கிறேன் நான்.
இலங்கை சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் குழுவில் இடம்பெற்றிருந்தவர்களில் நாச்சியும் ரங்கராஜனும் தான் இரும்புக்கை மாயாவி வேலையெல்லாம் செய்தார்கள். பாதுகாப்புப் படையினருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு ஈழத் தமிழர்களை ரகசியமாகச் சந்தித்தார்கள். அவர்களுக்கு ஈழமெல்லாம் தேவையில்லை சோறும் வேலையும் தான் தேவை என்பதைக் கண்டுபிடித்தார்கள்.
அண்மையில் டெல்லியில் இலங்கைப் பிரச்சினை தொடர்பாக நாச்சி நடத்திய மாநாடு கூட உப்புக்கு உதவாத 13 பற்றித்தான் பேசியது. இப்போது திடுதிப்பென்று களத்தில் இறங்கி 'தமிழர்களுக்குச் சொந்தமான பூமி இலங்கை தமிழீழக் கனவு நனவாக வேண்டும்' என்று நாச்சி வீரவசனம் பேசுவதற்குப் பின் ஒரு மிகப் பெரிய மோசடி ஒளிந்துகொண்டிருக்கிறது.
ஈழ விடுதலையை மூர்க்கமாக எதிர்க்கும் ராஜபக்சே தாசர்கள் கும்பலில் முன்னணியில் இருப்பவர் நாச்சியப்பன். ஈழம் கிடைத்து இலங்கை உடைந்துவிட்டால் இவர்களெல்லாம் வடக்கிருந்து உயிர்நீத்து விடுவார்களோ - என்று கூட நான் அஞ்சுவதுண்டு. அப்படிப்பட்ட ஒருவர் தமிழ் ஈழம் என்று முழங்குவதைப் பார்க்கும்போது 'அழகாக இருக்கிறாய் பயமாக இருக்கிறது' என்பதைப் போல் பயப்படுகிறேன் நான். கண்ணனுக்குப் பாலூட்ட தனம் திறக்கும் பூதகிகளைப் பார்த்து அஞ்சாதிருக்க முடியுமா நாம்!
பிரபாகரன் என்கிற உன்னதமான விடுதலைப் போர் வீரனே ஒட்டுமொத்த இலங்கையும் எமக்கென்று சொன்னதில்லை. 'வந்தேறிய நீ தென்னிலங்கையிலும் விரட்டப்பட்ட நாங்கள் தமிழரின் தாய்மண்ணிலும் இருந்து கொள்கிறோம்... உன்னை நீயும் எங்களை நாங்களும் ஆண்டுகொள்வோம்' என்கிற செல்வாவின் கருத்தைத்தான் முன்னெடுத்தான் பிரபாகரன். ஒட்டுமொத்த இலங்கையையும் கைப்பற்றுவோம் - என்று நாச்சி மாதிரி திமிருடன் பேசவில்லை பிரபா.
தனது அரசியல் அறியாமையால் இலங்கைப் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கிய நாச்சியின் கதாநாயகன் ராஜீவ்காந்தியை ஈழக் கோரிக்கையை நசுக்கத்தானே பயன்படுத்தியது கிழட்டு நரி ஜெயவர்தனே. அதை அறியாமல்தானேஇ தமிழீழ விடுதலைப் போரை நசுக்க முயன்றார் உங்கள் கதாநாயகன்! ஈழத்தின் மீது இப்போது என்ன திடீர் கரிசனம் சுதர்சனம்? ராஜீவ் கொள்கையைக் குழிதோண்டிப் புதைக்கப் போகிறீர்களா?

இப்படியெல்லாம் பேசுவதன் மூலம் கொழும்பு காமன்வெல்த் மாநாட்டுக்கு எழுந்துள்ள கடும் எதிர்ப்பைத் திசை திருப்பப் பார்க்கிறார்களா? இலங்கையைத் தோலுரிக்க இருக்கும் நவநீதம் பிள்ளையின் அறிக்கை வரும்முன் குட்டையைக் குழப்ப முயற்சிக்கிறார்களா? ஏதோ ஒரு திட்டம் இல்லாமல் அக்பர் ரோட்டிலிருந்து களத்தில் இறக்க மாட்டார்கள் நாச்சியை!
நாச்சியப்பன் வகையறா நமக்கு கொம்பு சீவ நாம் அனுமதிக்கவே கூடாது. சுதர்சனத்துக்கும் அவரது எஜமானர்களுக்கும் ஈழத்தைக் கைப்பற்ற அல்ல அதைப்பற்றிப் பேசவே அருகதை கிடையாது. இவர்களது துரோகத்தால் கொல்லப்பட்ட 3 லட்சம் தமிழர்களின் ரத்தத்தால் சுத்திகரிக்கப்பட்டிருக்கும் அந்த மண்ணில் இவர்களது கால் விரல்கூட பட்டுவிடக் கூடாது. 'தந்தை செல்வாவும் தம்பி பிரபாகரனும் வரையறுத்ததை மீறி தமிழீழம் பற்றித் தான்தோன்றித் தனமாக பேசாதீர்கள்' என்று சுதர்சன நாச்சியப்பனை நாம் ஒவ்வொருவரும் எச்சரித்தாக வேண்டும்.
அதே சமயம் 'இலங்கையில் என்னைச் சந்தித்து முறையிட்டவர்களை அச்சுறுத்தாதே' என்று எச்சரித்திருக்கும் நவநீதம் பிள்ளைக்கும் 'பயங்கரவாதி அல்ல பிரபாகரன்... மக்களுக்காகப் போராடிய மாவீரன்' என்று தெள்ளத்தெளிவாகப் பேசியிருக்கிற சிங்களத் தலைவர் விக்கிரமபாகுவுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதல்வர் வேட்பாளர் விக்னேஸ்வரனுக்கும் மறக்காமல் நன்றி சொல்ல வேண்டும்.
தமிழக அரசியல் 13. 09. 2013 இதழ் கட்டுரை
(நன்றி-S24) GJKMEDIAWORKS TEAM 2012

Ingen kommentarer:

Legg inn en kommentar