தமிழ்த் தேசிய அரசியலில் பரீட்சியமற்ற ஒருவராக விளங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண முதன்மை வேட்பாளர் விஸ்வலிங்கம் விக்னேஸ்வரன் அரசியல் களத்தில் குதித்த ஓரிரு மாதங்களிலேயே பலத்த சர்ச்சையை ஏற்படுத்தும் ஒருவராக மாறியுள்ளார்.
கொழும்பை தனது நிரந்தர வதிவிடமாகக் கொண்டவரும், மகிந்தரின் நல்லிணக்க அமைச்சரான வாசுதேவ நாணயக்கார, தெகிவளை-மவுன்ரலவேனியா பிரதேச துணை முதல்வர் கேசரலால் குணசேகரவின் சகோதரர் ஆகியோரை சம்மந்திகளாகக் கொண்டவர் விக்னேஸ்வரன். சிறீலங்கா உச்ச நீதிமன்றத்தின் நீதியாளராக பதவி வகித்த பொழுதும் சரி, அதன் முன்னரும் சரி தமிழ் மக்களுக்காக ஒரு விரலைத்தானும் விக்னேஸ்வரன் உயர்த்தியது கிடையாது. தவிர வன்னிப் போரில் ஈட்டிய வெற்றியை மிகப்பெரும் வெற்றி விழா நிகழ்வாக சிங்களம் கொண்டாடி ஆர்ப்பரித்த பொழுது அதில் விக்னேஸ்வரனும் பங்கேற்கத் தவறவில்லை.
இப்படிப்பட்ட விக்னேஸ்வரனிடமிருந்து நாம் எதனையும் எதிர்பார்க்க முடியாது என்பதை ஏற்கனவே எமது முன்னைய பத்திகளில் குறிப்பிட்டிருந்தோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண முதன்மை வேட்பாளராக நியமிக்கப்பட்ட ஓரிரு நாட்களிலேயே தமிழக அரசியல் தலைவர்களையும், புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களையும் வாயை மூடிக்கொண்டு இருக்குமாறு எச்சரித்தவர் விக்னேஸ்வரன். இது தொடர்பாக தமிழகத்திலும், புகலிடத்திலும் கண்டனக் குரல்கள் எழுந்த பொழுது அதனையிட்டு விக்னேஸ்வரன் அலட்டிக் கொள்ளவில்லை.
இந்த வகையில் தமிழ் - சிங்கள தேசிய இனப்பிரச்சினையில் தமிழக உறவுகள் தலையிடுவதும், தமிழீழ மக்களுக்கான இறுதித் தீர்வாக தமிழீழத் தனியரசை வலியுறுத்துவதும், கணவன் - மனைவி இடையே மணவிலக்கை நிர்ப்பந்திப்பதற்கு ஒப்பானது என்று இப்பொழுது விக்னேஸ்வரன் தெரிவித்திருப்பதையிட்டு நாம் ஆச்சரியப்படத் தேவையில்லை.
இதில் நகைப்புக்கிடமான விடயம் என்னவென்றால் தமிழ் - சிங்கள தேசிய இனப்பிரச்சினையை கணவன் - மனைவி உறவோடு தான் ஒப்பிடவில்லை என்றும், மாறாக தமிழீழத் தனியரசு தொடர்பாக தமிழகத்தில் இருந்து எழும் குரல்களை மட்டுமே மணவிலக்கிற்கு நிர்ப்பந்திப்பதற்கு ஒப்பாகத் தான் வர்ணித்ததாகவும் விக்னேஸ்வரன் கூறியிருப்பதுதான். தமிழீழ மக்களுக்கும், சிங்கள மக்களுக்கும் இடையே உள்ள உறவை கணவன் - மனைவி உறவுடன் தான் ஒப்பிடவில்லை என்று விக்னேஸ்வரன் கூறுவது உண்மையென்றால் எதற்காக தனியரசுக் கோரிக்கையை மணவிலக்குடன் அவர் ஒப்பிட வேண்டும்? மணவிலக்கு என்பது திருமணமான தம்பதிகளுக்கு மட்டும் பொருந்தும் ஒரு கேட்பாடு. வேறு எந்த உறவு முறைக்கு ஒவ்வாத ஒன்று மணவிலக்கு. அப்படியிருக்கும் பொழுது இரண்டு தேசங்களிடையே நடைபெறும் இனப்பிரச்சினைக்கு தீர்வான தனிரயசுக் கோரிக்கையை மணவிலக்குடன் ஒப்பிட்டத்தன் மூலம் தமிழ் - சிங்கள உறவை கணவன் - மனைவி உறவாக அன்றி வேறு எந்த உறவாக விக்னேஸ்வரன் வரைவிலக்கணம் செய்துள்ளார் என்று நாம் வியாக்கியானம் செய்வது?
‘நான் அப்படிக் கூறவில்லை: இப்படித்தான் கூறினேன்’ என்று எத்தனை தடவை விக்னேஸ்வரன் கற்பூரம் எரித்துச் சத்தியம் செய்தாலும் அவர் அப்படிக் கூறியதும், இப்படிக் கூறியதும் ஒன்றுதான் என்பதை சிறு குழந்தை கூடப் புரிந்து கொள்ளும். அப்படியும், இப்படியும் விக்னேஸ்வரன் கூறினாலும் அவர் தமிழ் - சிங்கள தேசிய இனப்பிரச்சினையை கணவன் - மனைவி உறவோடு சிறுமைப்படுத்தியுள்ளார் என்பதுதான் உண்மை. வேண்டுமென்றால் தனது வாதத்தை நீதிமன்றங்களில் விக்னேஸ்வரன் முன்வைக்கலாம். சட்டம் என்ற இரும்புப் பெட்டகத்திற்குள் இயங்கும் நீதிமன்றங்களில் நீதியை விட சொற்களுக்குத்தான் சக்தி அதிகம். அவற்றை நீதிமன்றங்கள் என்று கூறுவதைவிட சட்டமன்றங்கள் என்று கூறுவது சாலச்சிறந்தது. அங்கு நிச்சயம் விக்னேஸ்வரனின் வாதம் வெற்றி பெறும். இதில் எவருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.
ஆனால் மக்களை நீதியாளர்களாகக் கொண்ட அரசியல் மன்றம் என்பது வேறு. எப்படித்தான் சொற்களை புரட்டிப் புரட்டிக் கூறினாலும் மக்களை ஏமாற்றிவிட முடியாது. ஆங்கிலத்தில் ‘சமஸ்டிக் கட்சி’ என்று பொருள்படும் பெயரைச் சூட்டிக் கொண்டு தமிழில் ‘தமிழரசுக் கட்சி’ என்ற புலித்தோல் போர்த்த நரியாக அன்றுதொட்டு இன்று வரை தமிழரசுக் கட்சியும், அதன் முதிசத்தை சிறிது காலத்திற்கு சுமந்த தமிழர் விடுதலைக் கூட்டணியும் திகழ்ந்தாலும் தமிழரசுக் கட்சியும் சரி, தமிழர் விடுதலைக் கூட்டணியும்சரி, தற்பொழுது இவ்விரு கட்சிகளை உள்ளடக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருந்தாலும்சரி இவை வெறும் பூனைகளே தவிர புலிகள் அல்ல என்பது தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும்.
முப்பத்தையாயிரம் மாவீரர்களின் ஈகத்திலும், இரண்டரை இலட்சம் மக்களின் உயிர்களிலும் கனன்று கொண்டிருக்கும் தமிழீழத் தேசிய நெருப்பை அவ்வளவு இலகுவாக எவராலும் அணைத்துவிட முடியாது. இது விக்னேஸ்வரனுக்கும் தெரியும். அதனால்தான் தேர்தலுக்கான நாள் நெருங்க நெருங்க தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை மாவீரன் என்று விக்னேஸ்வரன் அறிவிக்கின்றார். ஏதோ இவர் சொல்லித்தான் எமது தலைவனின் வீரத்தைப் பற்றி நாம் அறிந்து கொண்டோம் என்ற எண்ணமோ தெரியவில்லை.
தமிழீழ மக்களின் இதயங்களில் மட்டுமன்றி மானமுள்ள உலகத் தமிழர்கள் ஒவ்வொருவரின் இதயங்களிலும் குடிகொண்டிருப்பவர் தலைவர் பிரபாகரன். தமிழ் மக்களின் உயிராகவும், இதயத் துடிப்பாகவும் திகழ்பவர் தமிழீழ தேசியத் தலைவர். திருமண பந்தத்தின் மூலம் சிங்களவர்களோடு ஒன்றிப்போய் தனது தமிழின அடையாளத்தை தொலைத்த விக்னேஸ்வரனுக்கு இன்று சிங்களம் புலி முத்திரை குத்துகின்றதென்றால் அதற்கு தமிழீழ தேசியத் தலைவரின் வீரம்செறிந்த போராட்டம்தான் காரணம். சோழ மன்னர்களான கரிகாற்பெருவளவன், இராசராசன், இராசேந்திரன் ஆகியோருக்குப் பின்னர் தமிழர்களுக்கு புலி முகவரி கொடுத்த பெருமைக்குரிய ஒரேயரு தமிழீழத்தின் கரிகாலன் எங்கள் தலைவர் பிரபாகரன் மட்டுமே. அந்த வகையில் விக்னேஸ்வரனுக்கு இன்று புலி முகவரி கிடைத்திருப்பதற்கு தலைவர் பிரபாகரன் அவர்களே காரணம் என்றால் அது மிகையில்லை.
இது விக்னேஸ்வரனுக்கும் தெரியும்: சம்பந்தருக்கும் தெரியும். அதனால்தான் பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா அவர்களின் காலில் விழுந்து மன்றாடி தமது தேர்தல் பரப்புரைக்கான பாடல்களை விக்னேஸ்வரனும், சம்பந்தரும் பெற்றுக் கொண்டுள்ளனர். அப்படியிருந்தும் தனது சிங்கள வாசனையை விக்னேஸ்வரனால் மறக்க முடியவில்லை. அதனால்தான் தமிழ் - சிங்கள தேசிய இனப்பிரச்சினையில் தமிழகத் தலைவர்களை தலையிட வேண்டாம் என்று விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
இதன்மூலம் 1940களில் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்கள் இழைத்த இரண்டு பாரதுரமான தவறுகளுக்கு ஒப்பான தவறையே இப்பொழுது விக்னேஸ்வரன் இழைக்கின்றார். 1940களிலும் இந்திய சுதந்திரக் கோரிக்கைக்கு நிகராக தமிழகத்தில் தனித்திராவிட நாட்டிற்கான கோரிக்கை வலுப்பெறத் தொடங்கிய பொழுது திராவிட நாட்டின் எல்லைக்குள் தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய தென்னிந்திய மாநிலங்களும், ஆயிரம் மைல்கள் தொலைவில் உள்ள வங்காளமும் உள்ளடக்கப்பட்டது. ஆனால் பதினெட்டு மைல் தொலைவில் உள்ள தமிழீழம் உள்ளடக்கப்படவில்லை. ஒரு தடவை தந்தை பெரியாரை சந்தித்த பொழுது திராவிட நாட்டிற்குள் ஈழத்தின் வடக்குக் கிழக்கு மாநிலங்களை உள்ளடக்க வேண்டாம் என்று எஸ்.ஜே.வி.செல்வநாயகம் வலியுறுத்தியதே இதற்குக் காரணம்.
பின்னர் மலையகத் தமிழ் மக்களின் குடியுரிமையை சிங்களம் பறித்த பொழுது இதனையிட்டு கண்டனக் குரல் எதனையும் எழுப்பாது எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அமைதி காத்தார். இறுதியில் ஈழத்தீவின் பூர்வீகத் தமிழ்க் குடிகளுக்கு எதிராக சிங்களம் திரும்பிய பொழுதுதான் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்திற்கு ஞானம் பிறந்தது.
ஆனால் அதற்குள் காலம்கடந்து எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் ஆயுட்காலமும் முடிவுக்கு வந்தது. தமிழீழத் தனியரசுக்கான வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றி ‘தந்தை செல்வா’ என்ற பெயரை எஸ்.ஜே.வி.செல்வநாயகம் பெற்ற சில மாதங்களிலேயே மண்ணுலகைவிட்டு அவர் மறுலோகம் சென்று விட்டார். தனது அரசியல் வரலாற்றில் தான் இழைத்த தவறை அவர் உணர்ந்து கொண்ட பொழுது காலம் கடந்திருந்தது. அவரது ஆயுட்காலமும் முடிவை எட்டியிருந்தது.
எஸ்.ஜே.வி.செல்வநாயகம் இழைத்த தவறை சீர்செய்தவர் எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள். தனது சுதந்திர சாசனத்தில் மலையகத் தமிழ் மக்களுக்கு தமிழீழக் குடியுரிமை வழங்குவேன் என்று மட்டும் கூறுவதோடு தமிழீழத் தேசியத் தலைவர் நின்றுவிடவில்லை. மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்து ஏதிலிகளாக தமிழீழ தாயகத்தை வந்தடைந்த உறவுகளை வன்னி மண்ணில் குடியமர்த்தி அவர்களின் பாதுகாப்புக் கவசமாக தலைவர் பிரபாகரன் அவர்கள் திகழ்ந்தார். இதனால்தான் எமது விடுதலைப் போராட்டத்தில் மலையகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பல இளைஞர்கள் இணைந்து வீரவேங்கைகளாக தமது இன்னுயிர்களை ஈகம் செய்தார்கள்.
அவ்வாறே தாய்த்தமிழக உறவுகள் மீதும் ஆழமான அன்பும் அக்கறையும் கொண்டவர் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள். அது தமிழக உறவுகளுக்கும் நன்கு தெரியும். அதனால்தான் தமிழகத்தில் தலைவர் பிரபாகரன் அவர்கள் பாசறையமைத்து தங்கியிருந்த பொழுது அவரை தாய்த்தமிழக உறவுகள் பாதுகாத்தார்கள். தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் பாசறையமைத்து தங்கியிருந்த பூமி இன்று தமிழகத்தில் புலியூராகப் போற்றப்படுகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் போராளிகளாக இணைந்து கணிசமான தமிழக இளைஞர் - யுவதிகள் கூட தமது இன்னுயிர்களை ஈகம் செய்துள்ளார்கள்.
இவையெல்லாம் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தில் தம்மை அர்ப்பணித்துப் போராடியவர்களுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பக்கபலமாக நின்றவர்களுக்கும் தெரியும். கொழும்பில் ஒய்யாரமாக உப்பரிகை அமைத்து கம்பன் கழகத்தில் அனல்பறக்க உரை நிகழ்த்தி விட்டு அதனை தனது தமிழ்த் தேசியப் பங்களிப்பாகக் கருதும் விக்னேஸ்வரனுக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லைத்தான். நீதிமன்றத்தில் சிங்களத்தின் கைப்பாவையாக அமர்ந்திருந்து பயங்கரவாதத் தடைச்சட்டத்தை தனது இனத்திற்கு எதிராக அமுல்படுத்திய ஒருவர் என்ற வகையில் விக்னேஸ்வரனுக்கு தமிழ்த் தேசிய அரசியலின் ஆழ - அகலங்கள் புரிந்திருக்கும் என்று நாம் கருத முடியாதுதான்.
தவிர சிங்களத்தோடு திருமண சம்மந்தம் வைத்திருக்கும் விக்னேஸ்வரனுக்கு தமிழ் - சிங்கள தேசிய இனப்பிரச்சினை கணவன் - மனைவி உறவுப் பிரச்சினையாகத்தான் தென்படும். இது அதிர்ச்சிக்குரிய ஒன்றன்று. சுருங்கக்கூறினால் தமிழ்த் தேசிய அரசியலில் கற்றுக்குட்டியாக விளங்கும் விக்னேஸ்ரன் இப்படித்தான் அவசர குடுக்கைத்தனத்தோடு நடந்து கொள்வார் என்பது ஏற்கனவே தெரிந்த ஒரு விடயம்தான். ஆனாலும் மாவீரர்களின் ஈகத்திலும், மக்களின் குருதியிலும் எழுதப்படும் தமிழீழத் தேசத்தின் விடுதலை வரலாற்றை கணவன் - மனைவி உறவோடு ஒப்பிட்டவாறு தமிழ்த் தேசிய அரசியலில் விக்னேஸ்வரன் போன்றவர்கள் சவாரி செய்வதற்கு எந்தவொரு மானமுள்ள தமிழரும் அனுமதிக்க முடியாது. அதுவும் தமிழீழ தேசிய விடுதலைக்காக தமது உடமைகளையும், அரசியல் எதிர்காலத்தையும் அர்ப்பணித்தும், தமிழீழ தாயக களம் வந்து வீரவேங்கைகளாக தமது உயிர்களை ஈகம்செய்தும், சிறைசென்றும், தமது உடல்களைத் தீயிட்டுக் கொளுத்தியும், பட்டினிப் போர் புரிந்தும் எமக்காக குரல்கொடுக்கும் தமிழக உறவுகளை விக்னேஸ்வரன் கொச்சைப்படுத்துவதற்கு நாம் இடமளிக்க முடியாது.
நன்றி: ஈழமுரசு
Ingen kommentarer:
Legg inn en kommentar