இந்தியாவும் ஒட்டுக்குழுக்களும் புரிந்த போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் – இரா.துரைரத்தினம்



முள்ளிவாய்க்காலில் 2009ஆம் ஆண்டு இறுதிப் போரின் போது சிறிலங்கா படைகள் போர்க்குற்றம் அல்லது இனஅழிப்பை செய்தனர் என்றே பலரும் பேசுகின்றனர். தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என சொல்லிக்கொள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் சரி தமிழ் நாட்டில் உள்ளவர்களும் சரி ஏன் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களும் முள்ளிவாய்க்கால் இறுதிப் போரையே போர்க்குற்றம் என பேசி வருகின்றனர்.
இந்த போர்க்குற்றத்தை புரிந்த சிறிலங்கா தரப்பை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என கோரி வருகின்றனர். இந்த கோரிக்கைகள் தவறு என்று இங்கு நான் வாதிட வரவில்லை. ஆனால் முள்ளிவாய்க்காலுக்கு ஒப்பான மிகப்பெரிய போர்க்குற்றங்கள் ஏற்கனவே நடைபெற்றிருக்கிறது. அது பற்றி ஏன் தமிழர் தரப்பில் பேசுவதில்லை என்பதுதான் இங்கு முன்வைக்கப்படும் கேள்வியாகும்.
உள்நாட்டு படைகளை விட வெளிநாட்டு படைகள் ஒரு நாட்டில் புரியும் மனித உரிமை மீறல்கள் மற்றும் படுகொலைகள் போர்க்குற்றமாக பார்க்கப்படுகிறது.  ஆனால் 1987ஆம் ஆண்டிலிருந்து 1990ஆம் ஆண்டுவரை வடக்கு கிழக்கில் இந்திய இராணுவம் செய்த படுகொலைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழர் தரப்பு மிக இலகுவாகவே மறந்து விட்டது என்றே சொல்ல வேண்டும்.
வைத்தியசாலைகள், ஆலயங்கள் பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது திட்டமிட்டு நடத்தப்படும் தாக்குதல்கள் போர்க்குற்றம் என சர்வதேச சட்டங்கள் கூறுகின்றன.  யாழ். போதனா வைத்தியசாலையில் 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் 21ஆம் 22ஆம் திகதிகளில் இந்திய படையினர் நடத்திய படுகொலைகள் மிகப்பெரிய போர்க்குற்றமாகும்.
யாழ். குடாநாட்டில் அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டிருந்த இந்திய படையினர் 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ஆம் 22ஆம் திகதிகளில் யாழ் போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்து வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் நோயாளர்கள் உட்பட சுமார் 68க்கும் மேற்பட்டவர்களை படுகொலை செய்தனர்.
இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு கடந்த 21ஆம் திகதி யாழ். போதனா வைத்தியசாலையில் பணிப்பாளர் திருமதி பவானி பசுபதிராஜா தலைமையில் இடம்பெற்றது. இதன்போது வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை பணியாளர்கள் பொதுமக்கள் இறந்தவர்களின் நினைவாக தீபங்களை ஏற்றியதுடன், அவர்களுக்கான மலரஞ்சலிகளும் செலுத்தினர்.
இப் படுகொலையில் வைத்திய நிபுணர் அ.சிவபாதசுந்தரம், வைத்திய கலாநிதி கே. பரிமேலழகர், வைத்திய கலாநிதி கணேசரத்தினம் , பிரதம தாதி உத்தியோகத்தர் திருமதி பா.வடிவேல், உட்பட தாதிகள் வைத்தியசாலை ஊழியர்கள் நோயாளர்கள் என 68க்கும் மேற்பட்டவர்கள் இந்திய இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்தியாவை தங்கள் பொன்னான தேசம் என கொண்டாடும் ஒவ்வொரு இந்தியனும் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என இந்நிகழ்வில் கலந்து கொண்ட பலரும் கருத்து தெரிவித்தனர். தாம் வைத்தியர்கள் என்றும் தங்களை சுடவேண்டாம் என வைத்தியநிபுணர் சிவபாதசுந்தரம் இந்திய இராணுவத்திற்கு தலைமை தாங்கி வந்த இராணுவ அதிகாரியை மன்றாடிய போதும் ஈவிரக்கமற்ற இந்திய இராணுவத்தினர் வைத்தியநிபுணர், வைத்தியர்கள் என அப்பாவி பொதுமக்களை சுட்டுக்கொன்றனர்.
ஒரு ராஜீவ் காந்தியின் உயிரைப்பற்றி பெரிதாக பேசும் இந்தியர்கள் பெறுமதி மிக்க வைத்தியநிபுணர்கள் வைத்தியர்கள் , கல்விமான்கள் என நூற்றுக்கணக்கானவர்களை கொன்று குவிப்பதற்கு இந்திய இராணுவத்திற்கு உத்தரவிட்ட இந்தியாவின் போர்க்குற்றம் பற்றி பேசுவதில்லை.
இந்த படுகொலைகளுக்கு அன்றைய இந்திய தலைமை அமைச்சர் ராஜீவ் காந்தியே உத்தரவிட்டிருந்தார். இந்திய சிப்பாய்கள் ஒவ்வொருவராக இழுத்து வந்து மன்றாட மன்றாட சுட்டுக்கொல்வதை நான் நேரில் பார்த்த சாட்சியாவேன். எனது வாழ்வில் என்றுமே மறக்கமுடியாத கறுப்பு நாட்கள் அவையென நினைவு கூர்ந்தார் யாழ். போதனா வைத்தியசாலை வைத்தியர் சங்க தலைவர் வைத்திய கலாநிதி.நிமலன்.
இந்த படுகொலைகளை சீக்கிய மற்றும் தமிழ்நாட்டு றெஜிமென்ட் படையினரே மேற்கொண்டனர். நோயாளர்களாக இருந்த பெண்களை கூட இழுந்து வந்து பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தனர்.
இந்த போர்க்குற்றங்களுக்காக இந்தியா சர்வதேச நீதிமன்றில் நிறுத்தப்பட வேண்டும் என்றும் தங்களை இந்தியர்கள் என கூறும் ஒவ்வொருவரும் இந்த படுகொலைகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்றும் இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
ஈழத்தமிழர்களின் வரலாற்றில் என்றும் மறக்க முடியாத இந்த நிகழ்வில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என கூறிக்கொள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏன் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, போன்ற இயக்கங்கள் அப்போது இந்திய இராணுவத்துடன் சேர்ந்து தமிழ் மக்கள் மீது தாக்குதல்களை நடத்தி வந்தார்கள். இப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் ரெலோ போன்ற இயக்கங்கள் இந்த நிகழ்வில் பங்கு கொள்வதற்கு அவர்களுக்கு குற்ற உணர்வு தடுத்திருக்கும். ஏனெனில் இந்த படுகொலைகளுக்கு அவர்களும் பங்குதாரர்கள்தான்.
ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கட்சியான தமிழரசுக்கட்சி ஏன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தவில்லை. இந்தியாவின் போர்க்குற்றத்தை மறைப்பதற்காகவும் அவர்களை காப்பாற்றுவதற்காகவும் தான் தமிழரசுக்கட்சி இதில் பங்குபற்றவில்லை என்ற மக்களின் நியாயமான குற்றச்சாட்டிற்கு அக்கட்சி பதில் சொல்ல வேண்டும்.
இந்திய இராணுவம் வடக்கு கிழக்கில் நிலை கொண்டிருந்த காலத்தில் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் புத்திஜீவிகள் கல்விமான்கள் சமூகசேவையாளர்கள் பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரை தேடித்தேடி அழித்தார்கள். அதற்கு ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்ற தமது ஒட்டுக்குழுக்களை அவர்கள் பயன்படுத்தினார்கள்.
ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் கல்விமான்கள் அறிஞர்களை அழிக்க வேண்டும் என்ற அவர்களின் தி;ட்டத்தை நடைமுறைப்படுத்தவதற்காக அவர்கள் முதலில் தெரிவு செய்த இடம்தான் யாழ். போதனா வைத்தியசாலை.  யாழ். கோட்டையிலிருந்து புறப்பட்டு வந்த இந்திய இராணுவத்தினர் நேராக யாழ் போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்தனர். அங்கு அவர்கள் முதலில் தேடியது வைத்தியநிபுணர் போன்ற புலமையாளர்களைத்தான்.
யாழ். போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட வைத்தியநிபுணர் பேராசிரியர் அ.சிவபாதசுந்தரம் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் முக்கிய போதனாசிரியராக இருந்தவர். இலங்கையிலேயே தலைசிறந்த மருத்துவராக திகழ்ந்தவர். அதேபோன்றுதான் ஏனைய கொல்லப்பட்ட ஏனைய வைத்திய நிபுணர்களும்.
தாங்கள் வைத்தியர்கள் என கூறி தங்களை சுட வேண்டாம் என மன்றாடிய போதிலும் அவர்களை இழுத்து வந்து சுட்டுக்கொன்றனர்.  நோயாளர்களாக தங்கியிருந்த பெண்களை கூட பாலியல் பலாத்காரம் செய்து சுட்டுக்கொன்றனர்.  கொலை செய்யப்பட்டவர்களை அடக்கம் செய்வதற்கு கூட இந்திய இராணுவத்தினர் அனுமதிக்கவில்லை. இரண்டு நாட்களாக சடலங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட அதே இடங்களில் கிடந்தன. இரண்டு நாட்களுக்கு பின்பே வைத்தியசாலையின் பின்புறத்தில் சடலங்கள் எல்லாவற்றையும் ஒன்றாக குவித்து எரிக்கப்பட்டது. இறந்தவர்களுக்கு கூட மரணச்சடங்கு செய்வதற்கு கூட கொடிய இந்திய இராணுவத்தினர் அனுமதிக்கவில்லை.
சிறிலங்கா படையினர் வைத்தியசாலையில் எறிகணைத்தாக்குதல்களையும் விமான குண்டுத்தாக்குதல்களையும் நடத்தியதை கேள்வியுற்றிருக்கிறோம். ஆனால் வைத்தியசாலைக்குள் புகுந்து வைத்தியர்கள் தாதிகள் என அடையாளம் கண்டு அவர்களை தேடி தேடி சுட்டதாக இதுவரை அறியவில்லை. ஆனால் இந்திய இராணுவம் இந்த மிகப்பெரிய போர்க்குற்றச்செயலை செய்தனர்.
உலகிலேயே வைத்தியசாலைக்குள் புகுந்து படுகொலையை நடத்திய போர்க்குற்றத்தை புரிந்தவர்கள் இந்திய இராணுவமாகத்தான் இருக்க முடியும்.
அதேபோன்று பலாலி படைத்தளத்திலிருந்து யாழ் நகரை நோக்கி முன்னேறிய இந்திய இராணுவத்தினர் நடத்திய படுகொலைகளும் எண்ணில் அடங்காதவை. கோண்டாவில் பகுதி ஊடக முன்னேறிவந்த இராணுவத்தினர் தங்கள் கண்ணில் பட்டவர்கள் அனைவரையும் சுட்டுக்கொன்றனர். சுட்டுக்கொல்லப்பட்டவர்களை வீதியில் போட்டு செயின் புளொக் என கூறப்படும் இராணுவ வண்டியினால் நெரிக்கப்பட்டனர். அப்படி இராணுவ செயின் புளொக்கால் நெரிக்கப்பட்ட நான்கு மாத குழந்தையின் உடலும் காணப்பட்டதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்திருந்தனர்.  நான்கு மாத குழந்தையை கூட செயின்புளொக்கில் போட்டு நெரிக்கும் அளவிற்கு ஈவிரக்கமற்ற கொலைவெறி பிடித்தவர்களாகவே அப்போது இந்திய இராணுவத்தினர் காணப்பட்டனர்.
அதன் பின்னர் அவர்கள் நிலைகொண்டிருந்த 1990வரை தமிழ் அறிஞர்கள் கல்விமான்கள் சமூகசேவையாளர்கள் என பலரையும் தேடி தேடி கொலை செய்யப்பட்டனர்.  அந்த கொலைகளுக்கு இந்திய இராணுவம் தன்னுடன் இணைந்து செயற்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ் ஒட்டுக்குழுவையே பயன்படுத்தி கொண்டது.
வடமராட்சி பிரஜைகள் குழு தலைவராக இருந்த சிவபாதசுந்தரம், மட்டக்களப்பு பிரஜைகள் குழு தலைவராக இருந்த வணபிதா சந்திரா அடிகளார், இலங்கை தமிழர் ஆசிரியர் சங்க தலைவராக இருந்த வணசிங்க போன்ற பலரை இந்திய இராணுவம் தனது ஒட்டுக்குழுவான ஈ.பி.ஆர்.எல்.எவ் மூலமாக படுகொலை செய்தது.
இந்திய இராணுவம் இலங்கை மண்ணில் புரிந்தது மிகப்பெரிய போர்க்குற்றமாகும். இந்த போர்க்குற்றம் பற்றியும் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இந்த கோரிக்கையை தமிழ் தேசிய கூட்டமைப்பு சர்வதேச மட்டத்தில் முன்வைக்கப்போவதில்லை. இதனை அவர்கள் மூடிமறைக்கவே செய்வார்கள். ஏனெனில் இந்த போர்க்குற்றவாளிகளாக இந்திய இராணுவத்தினருடன் அவர்களுடன் இணைந்து செயற்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ போன்ற இயக்கங்களும் உள்ளன. இந்த இயக்கங்களை பங்காளிகளாக கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பால் இப்போர்க்குற்றத்தை சர்வதேச மட்டத்தில் கொண்டு செல்ல முடியாது.
அது போல தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவாளர்களும் தங்கள் நாட்டு படைகள் புரிந்த போர்க்குற்றத்தை விசாரிப்பதற்கு சர்வதேசத்தை கோருவார்கள் என எதிர்பார்க்க முடியாது.
எனவே இலங்கையில் உள்ள பொதுமக்களின் அமைப்புக்களும் புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழர்களும் ஈழமண்ணில் இந்தியா புரிந்த போர்க்குற்றங்களை சர்வதேச மட்டத்தில் விசாரிப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அப்போதுதான் இந்தியாவின் முகமூடிகள் கிழிக்கப்படும்.
இந்தியாவுக்கு துதிபாடும் தமிழர் தரப்பின் வேசங்களும் அப்போது கலைந்து போகும்.

(நன்றி-TKK) GJKMEDIAWORKS TEAM 2012

Ingen kommentarer:

Legg inn en kommentar