கைகளுக்கு எட்டுமா பொலிஸ் அதிகாரம்

 essay
வடமாகாணத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொறுப்பு முதலமைச்சரின் வசமே உள்ளதாக பாதுகாப்புச் செயலர் கூறியுள்ளமை பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.
 வட மாகாணத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொறுப்பு மாகாண முதலமைச் சருக்கே உள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலர் கூறியுள்ளார். 
இதனை பொலிஸ் அதிகாரம் மாகாண சபைக்கு வழங்கப்பட்டுள்ளதாகச் சிலர் அர்த்தமும் கற்பித்துக் கொண்டனர். மகிழ்ச்சியும் அடைந்தனர். ஆனால் இவற்றுக்கெல்லாம் பாதுகாப்புச் செயலர்  ஒரேயடியாக பலமான ஆப்பு ஒன்றை இறுக்கி யுள்ளார். "பொலிஸாருக்கு' உத்தரவிடும் அதிகாரம் எதுவும் முதலமைச்சருக்குக் கிடையாது. அவர் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் மட்டுமே,  சட்டம் ஒழுங்கைப் பேணிக்கொள்ள முடியும் என அவர் கூறியுள்ளமை "பழைய குருடி கதவைத் திறவடி' என்ற வரிகளை நினைவுபடுத்துகிறது.
பொலிஸாருக்கு உத்தரவு இடாமல் எவ்வாறு சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்த முடியும் என்பது புரியாத புதிராகவே உள்ளது. ஏனென்றால் பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பாக இங்குள்ள மக்கள் மிக நன்றாகவே அறிந்து வைத்துள்ளனர்.
பொலிஸ் அதிகாரம் முதலமைச்சருக்கே
ஒரு மாகாணத்தை எடுத்துக் கொண்டால் அதனை நிர்வகிக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு உண்டு. பொலிஸாரைக் கொண்டே சட்டம், ஒழுங்கு ஆகியவற்றை அவர் பேண முடியும். இதற்கு பொலிஸாருக்கு ஆணையிடும் அதிகாரம் அவருக்கு வழங்கப்பட வேண்டும். ஏனைய நாடுகளில் இந்த நடைமுறைதான் பின்பற்றப்படுகின் றது. ஆனால் எமது நாடு இதற்கு விதி விலக்காகக் காணப்படுகின்றது. பொலிஸாரின் தன்னிச்சையான செயல்களை ஒரு மாகாண முதலமைச்சரால் கட்டுப்படுத்த முடியாத நிலையில் வெறுமனே  பார்த்துக் கொண்டு இருக்க வேண்டிநேருமானால் அவர் முதலமைச்சருக்கான பதவிக்கதிரையில் அமர்ந்திருப்பதில் எந்தவித அர்த்தமும் கிடையாது.
எமது நாட்டிலுள்ள ஏனைய 8 மாகாண சபைகளும், மத்தியில் ஆட்சியில் அமர்ந்துள்ள கட்சியினால் நிர்வகிக்கப்படுவதால், மத்திய அரசின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரமே செயற்பட்டு வருகின்றன. மத்தியில் உள்ளவர்கள் சொல்வதே அவர்களுக்கு வேதவாக்காகவும் அமைந்துள்ளது. அதனால் தமக்குள்ள அதிகாரங்கள் தொடர்பாக இந்த மாகாண சபைகள் அலட்டிக் கொள்வதில்லை.
அச்சமில்லாத வாழ்க்கையை எதிர்பார்க்கும் மக்கள்
ஆனால் வடமாகாண சபை வித்தியாசமானதொரு சூழ்நிலையில் இயங்க நேர்ந்துள்ளது. சுமார் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தச் சபை மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள் பலதரப்பட்ட இடர்களுக்கு, சவால்களுக்கு முகம் கொடுத்த போதிலும்  தமது வாக்குகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அளித்து உறுப்பினர்களைத் தெரிவு செய்துள்ளனர். அதனால் எதிர்பார்ப்புக்களும் அவர்களிடையே நிறையவே காணப்படுகின் றன. இதனை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு முதலமைச்சரின் தலையைப் பாரமாக அழுத்தி வருகின்றது.
மக்கள் அச்சமற்றதொரு இயல்பு வாழ்க்கைக்காகவே ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். கடந்த 30 ஆண்டுகளாகத் தாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் வேதனைகளுக்கு ஒரு முடிவு வேண்டு மென்பதே இங்குள்ள மக்களின் முக்கிய எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
இந்தியாவில் நிலைமை வேறு
இதேவேளை, இந்திய மாநில அரசுகளை நாம் எடுத்துக் கொண்டால், அவை ஓரளவு சுயாட்சியுடன் செயற்படுவதைக் காண முடிகின்றது. பொலிஸ், காணி அதிகாரங்கள், வெளிநாடுகளின் முதலீடுகளை ஊக்குவித்தல் ஆகியமுக்கிய  அதிகாரங்களை இவை கொண்டுள்ளன.  இதனால் அந்த மாநில அரசுகளால் பொலிஸாரைக் கட்டுப்படுத்துவதுடன், சட்டம் ஒழுங்கை முழுமையாக நிலை நிறுத்தவும் முடியும். ஆனால் இங்கு ஒரு முதலமைச்சரால் பொலிஸாருக்கு உத்தரவிட முடியாத நிலையில் எவ்வாறு அவரால்  சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த முடியுமென்பது கேள்விக்குரியதொன்றாக ஆகியுள்ளது.
போரின் பின்னர்  மோசமாகிவரும் நிலைமை
போரின் பின்னரான காலப்பகுதியில் வடபகுதியின் நிலைமைகள் மிகவும் மோசமாகவே மாறியுள்ளன. கொலைகள்  சர்வசாதாரணமாக இடம்பெற்று வருகின்றன. திருட்டு, கொள்ளை என்பன  இடம் பெறாத நாள் இல்லையயனக் கூறுமளவுக்கு அவை மலிந்து போயுள்ளன. சிறுவர்  துஷ்பிரயோகம், பெண்கள் மீதான வன்முறைகள், காடையர்களின் அட்டகாசம், குழுக்களுக்கிடையில் மோதல்கள் என்பனவும் கட்டுக் கடங்காத நிலையை எட்டியுள்ளன.
இளைஞர்களின் போதைப் பொருள் மற்றும் மது பாவனை என்பன கவலையளிக்கும் வகையில் பெருகியுள்ளன. இதனால் இவர்களின் எதிர்காலம் இருள் சூழ்ந்ததாக மாறும் வாய்ப்புக்கள் உச்ச நிலையிலுள்ளன. புனிதமான ஆலயங்களைக்கூட விட்டு வைக்காத கொடியவர்கள் சாதாரண மக்களை எவ்வாறு நோக்குவார்கள் என்பதைச் சொல்லவே தேவையில்லை.
வெளியில் செல்லும் பெண்கள் பத்திரமாக வீடுவந்து சேரும் வரை வீட்டில் உள்ளவர்கள் நெருப்பை மடியில் கட்டி வைத்திருக்க வேண்டிய நிலைதான் இங்குள்ளது. ஏனென்றால் அவர்களைக் குறிவைத்துக் காத்திருக்கும் வல்லூறுகளால் அவர்களுக்கு எந்த வேளையிலும் ஆபத்து நேர்ந்துவிடலா மென்ற பரவலான அச்ச உணர்வு இங்கு நிலவி வருகின்றது.
விடுதலைப் புலிகள்  காலத்தில் நிலைமை வேறு
தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப் பாட்டில் வடபகுதி இருந்தபோது, என்ன தான் கஷ்டங்கள் இருந்திருந்தாலும் மக்கள் போர் அச்சத்தைத் தவிர வேறு எதற்கும் அஞ்சியதில்லை. எல்லாமே ஒழுங்காக நடந்தன. அப்போது இயங்கி வந்த காவல்துறை  சிறப்பாகச் செயற்பட்டது. குற்றம் புரிந்தவர்களுக்கு தாமத மின்றி உரிய தண்டனைகள் வழங்கப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களுக்கு  விரைவாகவே நீதி வழங்கப்பட்டது. லஞ்சம், ஊழல் என்ற பேச்சுக்கு அங்கு இடம் இருக்கவில்லை.
முதலமைச்சருக்கு  அதிகாரம் அவசியம்
ஆனால் இன்று வடமாகாணம் என்ன நிலையில் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். இதனைச் சீர் செய்ய வேண்டுமென்றால் கடுமையானதும், காத்திரமானதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும். இதனை நிறை வேற்றிவைப்பவருக்குப் போதிய அதிகாரங்கள் வழங்கப்பட்டாலே இது சாத்தியமாகும். இந்த நிலையில் பொலிஸாரை வழி நடத்தும் அதிகாரம் எதுவுமற்ற முதலமைச்சர் ஒருவரால் சட்டம் ஒழுங்கை முறைப்படி நிலைநிறுத்த எந்த அளவுக்கு இயலும் என்பது கேள்விக்கு உரியதொன்றே.  இதனால் தான் வடமாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம் வேண்டுமென்ற கோரிக்கை வலுவாக மேலெழுந்து வருகிறது.
முதலமைச்சரின் கட்டளைகளைப் பொலிஸார் ஏற்க மறுத்துவிட்டால் பொலிஸாரின் செயற்பாடுகளை அவதானித்துக் கொண்டிருப்பதைத் தவிர முதலமைச்சரால் எதுவுமே செய்ய முடியாமல் போய்விடக்கூடும்.
மேலும் உரிய அதிகாரங்களை வெள்ளித்தட்டில் வைத்து தென்னிலங்கை அரசியல் வாதிகள் வழங்குவார்களென நாம் ஒரு போதுமே எதிர்பார்க்க முடியாது. ஜனநாயக  ரீதியில் தேர்தல் மூலம் வடமாகாண சபை அமைவதற்கே 25 வருடங்கள் எடுத்த தென்றால் அதற்குரிய அதிகாரங்களைப் பெறுவதற்கு ஒரு யுகம் கடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமேயில்லை.
மாகாணசபை முறைமையை இங்கு உருவாக்கிய முதுகெலும்பு இல்லாத இந்திய அரசு, அதிகாரங்களைப் பெற்றுத் தருமென நாம் ஒருபோதுமே எதிர்பார்த்துக் காத்திருக்க முடியாது. ஏனென்றால் இந்தியாவிடமிருந்து நிறையவே கசப்பான பாடங்களை நாம் கற்றுள்ளோம்.
எனவே ஏதோவொரு வகையில் ஜனநாயக  ரீதியில் போராட வேண்டிய நிலைக்கு நாம் தற்போது தள்ளப்பட்டுள்ளோம். ஆனால் இது எவ்வாறு அமைய வேண்டு மென்பதை எமது தலைவர்கள் தான் தீர்க்கமாகச் சிந்தித்து முடிவு செய்ய வேண்டும்.  தாமதிக்கும் ஒவ்வொரு விநாடியும் மக்களின் வெறுப்பு அதிகரிக்கவே வழி செய்யும்.
எனவே எமது தலைவர்கள் பொறுத்திருப்பார்களா அல்லது வெகுண்டெழு வார்களா என்பதைக் காலம்தான் தீர்மானிக்க முடியும்.
(நன்றி-U) GJKMEDIAWORKS TEAM 2012

Ingen kommentarer:

Legg inn en kommentar