பாதுகாப்புச் செயலரின் புதிய பாடம்


essay ஒரு ஜனநாயக நாட்டில் அரச அதிகாரிகளோ, படைத்தரப்பினரோ அரசியல் விடயங்களில் தலையிடுவதில்லை. அவர்கள் அரசிடம் சம்பளம் பெற்று அரசின் கடமைகளை நிறைவேற்றும்
கடப்பாடு உடையவர்களாக இருக்க வேண்டும் என்பதே ஏற்றுக் கொள்ளப்பட்ட மரபு.
 
ஆனால் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவோ வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறியோ, யாழ்.கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்கவோ இந்த மரபைபற்றி எக்காலத்திலும் பொருட்படுத்துவதில்லை. 
 
அரசியல் விவகாரங்களில் தலையிடுவதும் கட்சி சார்பு அரசியலில் பகிரங்கமாக அரச அதிகாரிக்குரிய அரிகாரங்களைப் பயன்படுத்துவதில் இந்த மூவரும் என்றுமே தயக்கம் காட்டியதில்லை.
 
அண்மையில் கொழும்பில் பாதுகாப்புச் செயலர் நடத்திய தமிழ்ப் பத்திரிகையாளர்களுக்கான ஊடகவியலாளர் சந்திப்பின் போது பாதுகாப்புச் செயலர்  வெளியிட்ட கருத்துக்கள் ஒரு பெரும் அத்துமீறிய அரசியல் தலையீடென்றே  நோக்கப்படுகிறது.
 
அவர் அங்கு "சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொறுப்பு முதலமைச்சருகே உண்டு. எனவும் விழிப்புக் குழுக்கள், சிவில் பாதுகாப்புக் குழுக்கள் என்பவற்றை அமைத்து பொலிஸாருக்கு உதவி வருவதன் மூலமாக வடக்கில் இடம்பெறும் கொலைகள்,  கொள்ளைகளை தடுத்து நிறுத்த முடியும் என்றும் இப்போதுள்ள நிலை தொடர்ந்தால் பாதாள உலகக் குழுக்களும் வடக்கில் ஆதிக்கம் செலுத்தும் நிலை ஏற்பட்டு விடும்'' எனவும் தெரிவித்துள்ளார்.
 
அதாவது மத்திய அரசின் கீழ் இயங்கும் பொலிஸாருக்கு உதவி செய்வதே - அதாவது துணைப் பொலிஸ் குழுக்களை உருவாக்கல், பொலிஸாரின் கட்டளைகளை நிறைவேற்றச் செய்வதே முதலமைச்சருக்கு உள்ள சட்டம் ஒழுங்கு பற்றி அதிகாரம் என்பதையே அவர் சுட்டிக் காட்டியுள்ளார். 
 
அதாவது முதலமைச்சர் என்பவர் பொலிஸ்மா அதிபரின் கட்டளைகளை நிறைவேற்றும் ஒரு முகவராகச் செயற்படுவார் என்பதே அதன் அர்த்தமாகும். 13 ஆவது அரசியலமைப்புச் சட்டத்தின் படி பொலிஸ், காணி அதிகாரங்கள் மாகாண சபைக்கே உரியவையாகும். 
 
இந்த அதிகாரங்கள்  வழங்கப்பட வேண்டும் என்பதைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 13 ஆவது திருத்தத்தின் படி முதலமைச்சர் மாகாணப் பொலிஸ் மா அதிபருக்குக் கட்டளைகளை வழங்க முடியும். என்றாலும் கூட பொலிஸ் அதிகாரம் மாகாண முதலமைச்சருக்கே உண்டு. 
 
அப்படியான நிலையில் விழிப்புக் குழுக்கள், சிவில் பாதுகாப்புக் குழுக்களை முதலமைச்சர் அமைத்து நேரடியாகப் பொலிஸ் மா அதிபரின் கட்டுப்பாட்டில் உள்ள பொலிஸாருக்கு வழங்க வேண்டும் என்பது மாகாணத்திற்கான பொலிஸ் அதிகாரத்தை முற்றாக மறுதலிப்பதாகும்.
 
13 ஆவது திருத்தத்திலுள்ள காணி, பொலிஸ் உட்பட சில அதிகாரங்களைக் குறைக்கவென அமைக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு, இந்தியாவின் அழுத்தம் காரணமாகத் தொடர்ந்து செயற்பட முடியாத நிலை ஏற்பட்டமையை நாம் மறந்துவிட முடியாது.
 
அதாவது மாகாண சபைக்கான பொலிஸ் அதிகாரம் என்பதை நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் பரிந்துரை இன்றியே சிவில் பாதுகாப்புக் குழுக்கள், விழிப்புக் குழுக்கள் என்பன மூலம் போக நீர்த்துப் போக வைக்கும் ஒரு சூழ்ச்சிகரமான தந்திரமே இது.
 
இப்படியான குழுக்களை அமைத்து முதலமைச்சர் ஒத்துழைக்கத் தவறினால் கிரிமினல்களும் பாதாள உலகக் குழுக்களும் உருவாகி விடலாம் எனவும் அவர் மிரட்டியுள்ளனர்.
 
கொலை, கொள்ளை, கப்பம் கோரி ஆள்களைக் கடத்திக் கொலை செய்தல், கழிவு ஒயில் வீசுதல், மக்களின் ஜனநாயக போராட்டங்கள் மீதான வன்முறைப்பிரயோகம் என  வடக்கில் தொடர்ந்து பல சட்டமீறல்கள் இடம்பெற்று வருகின்றன. 
 
பெரும்பாலான சம்பவங்களில் எவரும் கைது செய்யப்படுவதில்லை. அப்படித் தவிர்க்க முடியாமல் எவராவது கைது செய்யப்பட்டால் சில நாள்களில் அவர் பொலிஸாரின்  சம்மதத்துடன் பிணையில் விடப்பட்டுவிடுவார். 
 
அவர்கள் தலைமறைவாகி வெளிநாடுகளுக்கு ஓடி விட வழக்குகளும் கிடப்பில் போடப்பட்டு விடும். உதயன் பத்திரிகை மீதும் ஊடகவியலாளர் மீதும் கொலைகள், தாக்குதல்கள், எரியூட்டல்கள் என்பன தொடர்கதையாகவே நிலைபெற்று விட்டது. இந்தச் சம்பவங்கள் தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை.
 
இப்படியான வன்முறைகள் தொடர்பாக அரச சார்புத்துணை இராணுவக் குழுக்களின்  மீதும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மீதுமே மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். இந்தக் குழுக்களின் வன்முறை நடவடிக்கைகள் தொடர்பாகப் பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளும் எடுப்பதில்லை. 
 
அரசியல் பின்னணி கொண்ட வன்முறைகள் அரச சார்பு தந்திரமாக முன்னெடுக்கப்படுகின்றன. இப்படியான நிலையில் சட்டம் ஒழுங்கு சுதந்திரமாகப் பேணப்படுகின்றன என்று சொல்லி விட முடியுமா?
 
இப்படியான பக்கச்சார்பான, சட்டம் ஒழுங்கைப் பகிரங்கமாக அலட்சியப்படுத்தும் ஒரு சூழ்நிலையில் விழிப்புக் குழுக்களோ சிவில் பாதுகாப்புக் குழுக்களோ என்ன செய்ய முடியும்?
 
வடக்கில் கிறீஸ் மனிதர்கள் பிரச்சினை மேலோங்கியிருந்த போது மக்கள் தங்களைப் பாதுகாக்க முயற்சிகள் மேற்கொள்ள முயன்ற போது அவர்கள் படையினரால் தாக்கப்பட்டு காயப்படுத்தப்பட்டது மட்டுமில்லாமல் அவர்கள் மீது வழக்குத் தொடுக்கப்பட்டதை மறந்துவிட முடியுமா?
 
எனவே தான் வட மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டால் மட்டுமே  முதலமைச்சாரால் வடக்கில் சட்டம் ஒழுங்கைப் பாராமரிக்க முடியும். 
 
அதனால்தான் மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களும் வலியுறுத்தி வருகின்றனர். தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு அது தான் ஒரே வழி.
 
இப்படியான நிலையில் தான் பாதுகாப்புச் செயலர், சட்டம் ஒழுங்கை முதலமைச்சர் கையாள்வது என்பதை விழிப்புக் குழுக்கள் சிவில் பாதுகாப்புக் குழுக்கள் என்ற சொன்னதைச் செய்யும் "பெடியள் கூட்டமாக' மட்டுப்படுத்தி விட முனைகிறார். தமிழ் மக்கள் இப்படி எத்தனையோ மாயமான்களை இவர்கள் ஓட விட்டும் பின்னால்  போகாதவர்கள் என்பதை மறந்து விடுகின்றனர்.
 
மேற்படி சந்திப்பின் போது அவர் குறிப்பிட்ட ஒரு விடயத்தை நம் கவனத்திலா எடுக்காமல் விடமுடியாது. பாதுகாப்புச் செயலர், "தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இந்தியாவில் போய் தேவையற்ற கதைகள் கதைப்பதாகவும் இலங்கைக் கடலில் இந்திய மீனவர்கள் ஊடுருவுவது பற்றி எதுவும் பேசவில்லை'' எனவும் கவலைப்பட்டுக் கொண்டார்.
 
இரா. சம்பந்தன் இந்தியாவில் பேசுகிற போது  எல்லாகட்சிகளும் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஒரே நிரலில் வலியுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
 
இலங்கையிலும்  கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 13 ஆவது திருத்தத்தையும் அதற்கு மேலதிகமாகவும் நடைமுறைப்படுத்த வேண்டும்  எனக்கோரி வருகிறது. 
 
13 ஆவது திருத்தம் என்பது இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்பதால் அதை நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்கும் உரிமை இந்தியாவுக்கு உண்டு. 
 
இந்த உரிமைகளைப் பயன்படுத்தும் படியே இரா.சம்பந்தன்; கேட்டது பாதுகாப்புச் செயலருக்கு தேவையற்ற கதையாகப்படுகிறது. ஆனால் அவை மக்களுக்கு மிகமிகத் தேவையான ஒன்று. 
 
தமிழ் மக்களின் பிரதிநிதி என்ற வகையில் அக்கோரிக்கையை வலியுறுத்தத் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு முழு உரிமையும் உண்டு. இலங்கையின் வடகடலில் இந்திய மீனவர்கள் ஊடுருவல் செய்வது தொடர்பாக சம்பந்தன் எதுவுமே பேசவில்லை என்று கூறி கண்ணீர் விட்டுள்ளார். 
 
கோத்தபாய ராஜபக்ஷ அது மட்டுமின்றி வடபகுதி மீனவர்களுக்கு பாஸ் நடைமுறை இல்லை எனவும் எவரும் சென்று மீன்பிடிக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
 
அண்மையில் சில நாள்களாக மன்னாரில் கடற்படையினர் பாஸ் நடைமுறையைக் கொண்டு வந்து விட்டனர் என்பதையே அவர் அறியாமல் இருப்பது வியப்புத்தான்.
இலங்கை - இந்திய மீனவர்களுக்கு இடையே உள்ள வாழ்வாதாரப் பிரச்சினை இது. 
 
மாறாக ஒரு பகைமை கொண்ட முரண்பாடல்ல. சகோதர அடிப்படையிலான   முரண்பாடு. இதுபற்றி இரு பகுதி மீனவர்களும் இணக்கமான முறையில் பேச்சுக்களை நடத்தி ஒரு தீர்வுக்கு வரவேண்டும். அடிப்படையில் இரு நாட்டு அரசுகளும் ஒரு திட்டவட்டமான கொள்கையை வகுத்துச் செயற்பட வேண்டும்.
 
ஆனால் பாதுகாப்புச் செயலர், மீன்பிடி அமைச்சர் ஆகியோர் வடபகுதி மீனவர்களுக்காக  உருகுவதாகக் காட்டி இரு பகுதி மக்களுக்குமிடையே ஒரு பகை முரண்பாட்டை உருவாக்க முனைகின்றனர். 
 
அதன் மூலம் எமது உரிமைக் போராட்டத்துக்கு தமிழக மக்கள் வழங்கும் பேராதரவை பலவீனப்படுத்தும் நோக்கத்துடனேயே செயற்படுகின்றனர்.
 
உண்மையில் இவர்களுக்கு தமிழ் மீனவர்கள் மீது அக்கறை இருக்குமானால் வடபகுதி கடலில் சிங்கள மீனவர்கள் ஊடுருவி  தடை செய்யப்பட்ட முறைகளைப் பாவித்து மீன்பிடிப்பதைத் தடைசெய்ய வேண்டும். மீன்பிடிக்க கப்பல்கள் வட கடலில் ஊடுருவதைத் தடை  செய்ய வேண்டும். 
 
மன்னார் கடலில் அட்டை பிடிப்பதற்கு  சிங்கள் மீனவர்களுக்கு இயந்திரமும் தமிழ் மீனவர்களுக்கு பாஸ் நடைமுறையையும் நிறுத்த வேண்டும்.
 
எப்படியிருந்த போதிலும் பாதுகாப்புச் செயலாளரின் கருத்து நிச்சயமாக தமிழ்நாட்டு மக்கள் இலங்கைத் தமிழர்களின் போராட்டத்துக்கு வழங்கும் ஆதரவை மழுங்கடிக்கும் நோக்கம் கொண்டதாகும். இதில் எவ்வித சந்தேகமில்லை.
 
எல்லாவற்றையும் விட அவர் மாகாண சபை உறுப்பினர்களுக்கே ஒரு அருமையான ஆலோசனையை வழங்கியுள்ளார். அதாவது பழைய விடயங்களைப் பேசிக் கொண்டிருப்பதை விட்டு மக்களுக்குக் சேவை செய்வதில் கவனம் செலுத்தும் படி கேட்டுக் கொண்டுள்ளார்.
 
மாகாண சபை அமைச்சர்களும் உறுப்பினர்களும் தமக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைத் கொண்டு சேவை செய்வார்கள். அதை எவரும் சொல்ல வேண்டிய தேவை இல்லை. ஏனெனில் அவர்கள் எமது மக்களால் எமது மக்களிடமிருந்து தெரிவு செய்யப்பட்டவர்கள்.
 
ஆனால் அதற்காக எமது உரிமைக் கோரிக்கைகளை விட்டுவிட முடியாது. எமது உரிமைகள் எமக்குக் கிட்டும் போது எமது தேசத்தின் கனவை மேலும் சிறப்பாக நிறைவேற்ற முடியும். 
 
ஒடுக்கு முறை நடவடிக்கைகள் மேலும் மேலும் விரிவாக்கப்படும் போது பழையவற்றை மேலும் மேலும் ஆழமாகப் பேச வேண்டியும் வரும். மாகாணசபையை ஒரு ஆயுதமாகப் பாவித்துப் போராட வேண்டியும் வரும்.
 
இவ்வாறே இராணுவத்தை வெளியேற்றுவது காணிப்பிரச்சினை சிங்களக் குடியேற்றம் என எல்லா ஒடுக்குமுறை நடவடிக்கைகளையும் பாதுகாப்புச் செயலர் புதிய வார்த்தைகளால் அழகுபடுத்தி மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க முயல்கிறார் என்பதை எம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
 
எப்படியிருப்பினும் மாகாண சபை அரசின் ஒரு பிராந்திய முகாமையாளராக மாற்றி தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை மழுங்கடிக்க எடுக்கும் முயற்சி அவரின் செவ்வி முழுவதும் இழையோடுகிறது. 
 
இந்த நோக்கம் ஈடேற்றப்பட முடியாதது என்பதை அவர்கள் அறிந்த போதும் மீண்டும் மீண்டும் பல்வேறு முனைகளில் முயன்று கொண்டேயிருப்பார்கள் என்பது மட்டும் அசைக்க முடியாத உண்மையாகும். 
 
வட மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டால் மட்டுமே  முதலமைச் சாரால் வடக்கில் சட்டம் ஒழுங்கைப் பாராமரிக்க முடியும். அதனால்தான் மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களும் வலியுறுத்தி வருகின்றனர். தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு அது தான் ஒரே வழி.
 
 
 
 
 
சந்திரசேகர ஆசாத்
(நன்றி-U) GJKMEDIAWORKS TEAM 2012

Ingen kommentarer:

Legg inn en kommentar