வடக்கின் கடல் வளத்தைத் தக்கவாறு பயன்படுத்த முனைப்புடன் செயலாற்றுக

 essay
மன்னார் மாவட்டத்தின் செளத்பார் தென்பகுதிக் கடற்கரைப் பகுதியில், அதே பிரதேசத்தைச் சேர்ந்த தமக்குத் தொழில் செய்வதற்குப் பல குந்தகங்களும் இடையூறுகளும் உள்ளதாக, பனங்கட்டிக்கொட்டு கடற்றொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
 மன்னார் மாவட்டத்தின் செளத்பார் தென்பகுதிக் கடற்கரைப் பகுதியில், அதே பிரதேசத்தைச் சேர்ந்த தமக்குத் தொழில் செய்வதற்குப் பல குந்தகங்களும் இடையூறுகளும் உள்ளதாக, பனங்கட்டிக்கொட்டு கடற்றொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
 
ஆனால் சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மீனவர்கள் வருடத்தில் ஆறு மாதங்கள்-நவம்பர் தொடக்கம் ஏப்ரல் மாதம் வரை-தங்கியிருந்து தொழில் செய்கின்றார்கள். அதற்கான சகலவித அனுசரணையும் ஆதரவும் அரச அலகுகளால்-கடற்படை மற்றும் பொலிஸாரால் வழங்கப்படுகின்றன.
 
வெளிப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் தமது குடும்பங்களுடன் வந்து குடியேறி, மன்னார்க் கடல் வளத்தைத் தாராளமாகத் தமதாக்கிக் கொள்கிறார்கள். அள்ளி அள்ளிப் பணம் சேர்க்கிறார்கள். தங்கு தடையின்றி மன்னாரின் வளம் பிற பிரதேசத்தவர்களால் சுரண்டப்படுகிறது என்று கொள்வது தப்பன்று.
 
ஒரே நாட்டின் பிறபகுதிகளைச் சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட  வேறு பிரதேசங்களில் தொழில் செய்யக்கூடாது என்று தடுக்க முடியாது. அல்லது தடை செய்ய இயலாது என்று மன்னாரில் நடத்தப்படும் கடற்றொழில்சார் சுரண்டலுக்கு நியாயம் கற்பிக்கப்படலாம் அல்லது பூசி மெழுகப்படலாம். எதுவானாலும் தமது தொழில் மீதான இடையூறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படாவிடில், அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கப்போவதாகப் பனங்கட்டிக்கொட்டுக் கடற்றொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.
 
போர்க் காலத்திலும், அதன் பின்னரான காலத்திலும் வடபகுதி மீனவர்கள் பலவகைகளிலும் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேர்ந்தது. அமைதி நிலவும் இந்தக் காலத்திலும் அவர்களை மேன்மேலும் பாதிப்புறச் செய்வது, பல வடிவங்களில் அவர்களின் வாழ்வாதாரத்தை நலிவுறவைப்பது, எந்த வகையிலும் ஏற்கக் கூடியதோ அன்றி நியாயப்படுத்த வல்லதோ அன்று.
தென்பகுதி மீனவர்கள் அனுமதிப் பத்திரம் இன்றி மன்னார்க் கடலின் வளத்தைச் சுரண்டிச் செல்வதற்கு ஒத்தாசை வழங்கும் ஆட்சி அதிகாரிகள், உள்ளூர் மீனவர்களுக்கு பல நடை முறைகளைத் தாண்டிச் செல்ல வேண்டும் என்று கட்டுப்பாடுகளும், ஒவ்வாத விதிமுறைகளையும் விதிப்பது என்ன நியாயம்?
 
மன்னார் பிரதேச மீனவர்களைப் போன்றே வடமராட்சி கிழக்கைச் சேர்ந்தவர்களும் தொலைவில் உள்ள பிற பிரதேச மீனவர்களால் பாதிப்புறுகிறார்கள், தமது தொழில் வருமானத்தை இழக்கிறார்கள்.
 
எமது நாட்டின் பிற பிரதேசங்களில் இருந்து மட்டு மன்றி, தமிழகம், கேரளம் ஆகிய இந்திய மாநிலங்களில் இருந்தும் வடக்கின் கடல் வளம் சூறையாடப்படுவதால் பெரும் பாதிப்புகளும், கடற்றொழிலாளர்களின் வருமானத்தில் வீழ்ச்சியும் ஏற்படுகின்றன.
 
அவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள், ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்று அரச தரப்பினால் அவ்வப்போது அறிவிக்கப்பட்டாலும், அது இன்னும் உத்தி யோகபூர்வமாக முழு அளவில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இதுவரை வடக்கு மாகாண சபை இயங்காததால் இது விடயத்தில் போதிய அக்கறையும் கவனமும் எடுக்கப்படவில்லை.
 
வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்று ஆட்சியும் ஆரம்பமாகிவிட்டதால், எங்கள் பிரதேசத்தின் மூன்று முக்கிய இயற்கை வளங்களில் ஒன்றான கடல் வளத்தையும் அதுசார்ந்த தொழிற்றுறையையும் தக்கவாறு பயன்படுத்த விரைந்து செயற்பட வேண்டும்.
 
கடல்வளம், அதனைப் பேணுதல் ஆகிய அதிகாரங்கள் மத்திய அரசுக்கும் மாகாண அரசுக்கும் சேர்ந்தாற்போல் உள்ளதால், (Concurrent List) மாகாண அரசு இது விடயத்தில் முன்னுரிமை வழங்கிச் செயற்பட வேண்டும். எமது மக்களுக்கு உரிய தேவைகள், சேவைகள் பல, கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் அதிகமாக ஏறெடுத்தும் பார்க்கப்படாத நிலை நீடித்தது. அதனைத் தகர்த்து எறிய மாகாண சபைக்கு மக்கள் அமோக ஆதரவு தந்துள்ளார்கள். விரைந்து செயற்பட வேண்டிய பொறுப்பு மாகாண சபைக்கே.
(நன்றி-U) GJKMEDIAWORKS TEAM 2012

Ingen kommentarer:

Legg inn en kommentar