அம்பலமாகும் இராணுவம்

 essay
வடக்குக் கிழக்கில் இராணுவ அதிகாரிகளை மாகாண ஆளுநர்கள், அரச அதிபர் போன்ற உயர் பதவிகளுக்கு நியமிக்கப்படுவதன் மூலம் அந்தப் பகுதியை மறை முகமாக ஓர் இராணுவ மேலாதிக்கத்துக்குள் உள்ளடக்கும் நிலை ஏற்படுத்தப்பட்டது.
 இலங்கையின் ஆட்சியதிகாரம் வெகுவேகமாக இராணுவ மயப்பட்டு வருகின்றது என்ற கருத்து ஏற்கனவே பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக வலுவடைந்து வந்துள்ளது. வடக்குக் கிழக்கில் இராணுவ அதிகாரிகளை மாகாண ஆளுநர்கள், அரச அதிபர் போன்ற உயர் பதவிகளுக்கு நியமிக்கப்படுவதன் மூலம் அந்தப் பகுதியை மறை முகமாக ஓர் இராணுவ மேலாதிக்கத்துக்குள் உள்ளடக்கும் நிலை ஏற்படுத்தப்பட்டது.
 
விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்பு இந்த நிலை மாற்றமடையும் எனப் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட போதும் அந்த நிலை பல்வேறு முனைகளிலும் மேலும் வலுப்படுத்தப்பட்டது. மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் ஆள்பதிவு, காணிகளில் குடியமர்த்துவது, ஏனைய சிவில் நடவடிக்கைகளை இராணு வமே நேரடியாக நடத்தியது. மீள்குடியேற்ற காணிகளுக்கு இராணுவமே இலக்கங்களை வழங்கி அவற்றை மேற்பார்வை செய்யும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. சாதாரண மக்கள் நடத்தும் கலந்துரையாடல்கள் முதல் பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் உட்பட்ட விழாக்கள் வரை அனைத்திலும் இராணுவப் பிரசன்னம் கட்டா யப்படுத்தப்பட்டது.
 
இன்றுவரை அந்த நிலை முற்றாக நீங்கிவிட்டது எனச் சொல்லிவிட முடியாது. அதே வேளையில் பல வெளிநாடுகளின் தூதுவர்களாகப் படை அதிகாரிகளே நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் போரின் இறுதி நாள்களில் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் சம்பந்தப்பட்டவர்கள் எனக் குற்றம் சாட்டப்பட்டவர்களும் உண்டு. ஐக்கிய நாடுகள் சபையிலும் சில வெளிநாடுகளிலும் இந்த இராணுவ அதிகாரிகளே இலங்கையைப் பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.
 
இவர்களில் இராணுவக் குரலே இலங்கையில் குரலாகப் பல முக்கிய இடங்களில் ஒலித்து வருகிறது.
ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­வும் இலங்கையின் அமைச்சர்களும் இலங்கை ஒரு ஜனநாயக நாடு எனவும் நாடாளுமன்றமே முழு அதிகாரம் கொண்டமையம் எனவும்  இங்கு நடப்பது மக்களாட்சி எனவும் மீண்டும் மீண்டும் சத்தியம் செய்து வருகின்றனர். சர்வதேச அரங்குகளில் இலங்கை தொடர்பாகக் குற்றச்சாட்டுக்கள் எழும் போது உள்நாட்டு விவகாரங்களில் அந்நியத் தலையீடு என அவற்றைப் புறந்தள்ளி விடுவதுண்டு.
 
இராணுவத்தினரின் அத்துமீறல்கள் தொடர்பாகக் குற்றச்சாட்டுகள் உள்ளூரில் முன்வைக்கப்படும்போது இராணுவப் பேச்சாளர்கள் தமது இராணுவம் ஒழுக்கமும் கட்டுப்பாடும் உள்ளவர்கள் எனவும் அவர்கள் இப்படியான காரியங்களில் ஈடுபடு வதில்லை எனவும் ஏகவசனத்தில் சொல்லி விடயத்தை அத்துடன் முடித்துவிடுவார்கள்.
 
பூனைகண்ணை மூடிக் கொண்டு பாலைக் குடிக்கும்போது அது தன்னை யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள் என்று நினைப்பதுண்டாம். அடி விழும்போதுதான் பூனைக்கு தான் கண்ணை மூடினாலும் தான் களவாகப் பால் குடிப்பதை மற்றவர்கள் கண்டு கொள்வார்கள் என்பது புரியும்.
 
ஜனாதிபதியும் பாதுகாப்புச் செயலரும் படைத்தரப்புப் பேச்சாளர்களும் இலங்கையின் இராணுவ மயமாக்கலை மூடிமறைக்கப் பகிரதப் பிரயத்தனம் செய்த போதும் பாதுகாப்பு என்ற மாயையைக் காட்டி ஏமாற்றினாலும் அண்மையில் வடமாகாண சபைத் தேர்தலின் போது மேற்கொள்ளப்பட்ட இராணுவத்தினரின் நடவடிக்கைகள் இலங்கை அரசின் மாயத் திரைகளைக் கிழித்தெறிந்துவிட்டன.
 
மத்திய, வடமேல், வடக்கு மாகாணங்களில் இடம்பெற்று முடிந்த மாகாண சபைத் தேர்தலின் போது அதைக் கண்காணிக்க பொதுநலவாய தேர்தல் கண்காணிப்பு அமைப்பை இலங்கை அரசு அழைத்திருந்தது. அமைச்சர்களின் கருத்துக்களையும் அதிகாரிகளின் அறிக்கைகளையும் பொலிஸாரின் புள்ளி விவரங்களையும் கேட்டு விட்டுத் தேர்தல் அமைதியாகவும் நீதியாகவும் நடந்தது என அந்தத் தேர்தல் கண்காணிப்புக் குழு அறிக்கை சமர்ப்பிக்கும் என இலங்கை அரசு எதிர்பார்த்திருக்க லாம்.
 
 
ஆனால் நிலைமையோ அரசு பிள்ளையார் பிடிக்கப் போக குரங்கு வந்த கதையாக மாறிவிட்டது. பொது நலவாய அமைப்பின் தேர்தல் கண்காணிப்புக் குழு தேர்தல் இடம் பெற்ற அத்துமீறல்களை நடுநிலையில் நின்று அவதானித்து தனது அறிக்கையை மிகவும் கடுமையான தொனியில் வெளியிட்டுள்ளது. குறிப்பாக வடமாகாணத் தேர்தலின் போது இராணுவத்தினர் மேற் கொண்ட அடாவடித்தனங்களையும் தலையீடுகளையும் அந்தக் குழு நேர்மையான முறையில் விமர்சனம் செய்துள்ளது.
 
பொதுநலவாயத்தின் தேர்தல் கண் காணிப்புக் குழு இடம்பெற்று முடிந்த மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக ஏழு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. இதில் மிக முக்கியமானது ஜனநாயக விதிமுறைகளை மீறி இராணுவம் தன்னிச்சையான முறையில் தேர்தல் நடவடிக்கைகளில் தலையிட்டு குழப்பங்களை விளைவித்தமை தொடர்பானதாகும்.
 
வடமாகாணச் சபைத் தேர்தல் பரப்புரைக் காலத்தின் போது இராணுவத் தலையீடும் செல்வாக்கும் ஊடுருவியுள்ளமையை தாம் கவனத்தில் கொள்வதாகவும், இது ஒரு பாரதூரமான செயற்பாடு எனவும் குழப்பியடிக்கும் நடவடிக்கை எனவும் இந்த தலையீடு குறித்தும் செல்வாக்குப் பிரயோகம் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவ்வறிக்கை கோரியுள்ளது. மேலும் பாரபட்சமற்ற முறையில் ஜனநாயக முன்னெடுப்புகளில் ஈடுபட்ட உள்ளூர் தேர்தல் கண்காணிப்பாளர்கள் மேல் நடத்தப் பட்டமை  சுட்டிக்காட்டப்பட்டு அது தொடர்பான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கேட்கப்பட்டுள்ளது. அத்துடன் ஊடகங்கள் சுயாதீனமாக இயங்கவிடாத வகையில் மேற்கொள்ளப்பட்ட இடையூறுகள் தொடர்பாகவும், சுயாதீனமான ஓர் ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
வடக்கில் தேர்தலை நடத்தி முடித்து ஜனநாயகத்தை நிலைநாட்டி விட்டதாகத் தம்பட்டமடிக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் அமைச்சர்களுக்கும் இந்த அறிக்கை நிச்சயம் ஒரு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. வடக்கின் தேர்தலை நடத்தியமை அரசாங்கத்துக்கு கிடைத்த ஒரு பெரும் வெற்றி என ஜனாதிபதி குறிப்பிட்மையையும் நாம் கவனத்தில் எடுக்காமல் விடமுடியாது. 
 
அடிப்படையில் வடமாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் விரும்பவில்லை என்பதே உண்மை. ஏனெனில் அவர்கள் வடமாகாண மக்கள். காணி, பொலிஸ் அதிகா ரத்தை கேட்கவில்லை. அபிவிருத்தியைத் தான் கேட்கிறார்கள் என்ற அவர்களின் தொடர்ச்சியான பொய். வடமாகாணசபைத் தேர்தலை நடத்தினால் அம்பலமாகிவிடும் என்பதை அவர்கள் அறிவார்கள்.
 
ஆனால் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கை வருகையும், அவர் வெளியிட்ட கருத்துக்களும் இலங்கையில் இடம் பெறும் பொதுநலவாய மாநாட்டில் எழக்கூடிய இந்தியாவின் அழுத்தங்கள் என்பன காரணமாகவே இலங்கை அரசு வடமாகாண சபைத் தேர்தலை நடத்தியது. எனினும் வட மாகாண சபையின் அதிகாரத்தை கைப்பற்றாவிட்டாலும் கணிசமான அரசு சார்பு  வேட்பாளர்களை வெற்றி பெற வைப்பதன் மூலம் தங்கள் நடவடிக்கைகளுக்கு தமிழ் மக்களிடம் ஆதரவு இருப்பதாகக் காட்டும் முகமாக இராணுவம் தேர்தல் களத்தில் முழுமூச்சுடன் இறக்கப்பட்டது.
 
ஆனால் வடபகுதி மக்களோ பல்வேறு நெருக்கடிகள் மத்தியிலும் உறுதியாக நின்று அரசதரப்பு வேட்பாளர்களைப் படுதோல்வியடைய வைத்ததுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வரலாறு காணாத வெற்றியை வழங்கினர்.
எனவே வடபகுதி மக்கள் அரசின் கொள்கைகளைப் ஏற்றுக் கொள்கின்றனர் எனவும் அவர்களுக்கு அபிவிருத்தியே போதுமானது எனவும் பொதுநலவாய மாநாட்டில் அரசு முன்வைக்கத் திட்டமிட்டிருந்த உண்மைக்குப் புறம்பான கருத்துப் படிமம் உடைக்கப்பட்டு விட்டது.
 
தமிழ் மக்கள் தங்கள் அடிப்படை உரிமைகளுடன் கூடிய ஒரு சுயநிர்ணய உரிமை கொண்ட அரசியல் அலகையே கோருகின்றனர் என்பது மழுங்கடிக்கப்பட முடியாத உண்மையாகிவிட்டது.
 
இப்படியான நிலையில் பொதுநல வாய அமைப்பின் தேர்தல் கண்காணிப்புக் குழுவால் முன் வைக்கப்பட்டுள்ள அறிக்கை வடக்கில் தேர்தலை நடத்தி ஜனநாயகத்தை நிலைநாட்டியதாக  முன்வைக்கப்படும்  அரசின் பொய்யையும் அம்பலப்படுத்தி விட்டது. அடிப்படையில் இத் தேர்தல் இராணுவமயமாக்கப்பட்ட ஒரு சூழலுக்குள்ளேயே இடம்பெற்றது என்பதையும் தமிழ் மக்கள் அதற்கு அஞ்சாமல் நமது கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர் என்பதையும் அந்த அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
 
எனவே வடக்கு கிழக்கில் மேற் கொள்ளப்படும் இராணுவ மயமாக்கலின் எதிரொலியும் ஜனநாயக மறுப்பும் பொதுநலவாய மாநாட்டில் எதிரொலிக்கும் என்பதை எதிர் பார்க்கலாம். இது பிரிட்டன் போன்ற நாடுகளால் அங்கு முன்வைக்கப்படவுள்ள போர்க்குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் போன்ற குற்றச் சாட்டுக்களுக்கு மேலும் வலுச் சேர்க்கும் வகையிலேயே அமைந்துள்ளது.
 
மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றே வந்துள்ளது. 13 ஆவது அரசியல் அமைப்பின்படி மாகாண எல் லைக்குள் அமைந்துள்ள காணிகளை மாகாணசபையுடன் கலந்து பேசி அதன் இணக்கப்பாட்டுடனேயே கையாள முடியும்.
 
இலங்கையின் அரசியலமைப்பின் படி காணி அதிகாரம் மத்திய அரசுக்கே உண்டு என்ற போதிலும் மாகாண சபைகளின் இணக்கப்பாடின்றி மாகாணத்துக்குள் உள்ள காணிகளை 13 ஆவது திருத்தச் சட்டத் திருத்தத்தின்படி மத்திய அரசு கையாள முடியாது. இதன்படி வலிவடக்கில் உள்ள 6183 ஏக்கர் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் தொடர்பாக மாகாண சபையுடன் மத்திய அரசு கலந்துரையாட வேண்டும். இதுமட்டுமன்றி இக்காணிப் பிரச்சனை தொடர்பாக  நீதிமன்றில் ஒரு வழக்கும் விசாரணையில் உள்ளது.
 
இப்படியான ஒரு நிலையில் கூட படையினர் அக்காணிகளில் அமைந்துள்ள பொதுமக்களின் வீடுகளை இடித்து வருகின்றனர்.
 
இது தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கு சென்று இராணுவ உயர திகாரியிடம் விசாரித்த போது அங்கு தாங்கள் இராணுவத்தின் குடும்பங்களுக்கான குடியிருப்பை அமைக்கப்போவதாகவும் இதில் எவரும் தலையிட முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது. இங்கு நாம் இரு விசயங்களை கவனிக்க முடியும்.
ஒன்று பதின்மூன்றாவது அரசியல் அமைப்பு  திருத்தம், நீதிமன்றம் என்ற ஜனநாயக கோட்பாடுகளை மதிக்காத இராணுவ சர்வாதிகார போக்கு.
 
அடுத்தது இராணுவ குடியேற்றங்களை அமைப்பதன் மூலமாக அப்பகுதியை மட்டுமன்றி முழு யாழ் குடா நாட்டையும் இராணுவ மயப்படுத்தும் நடவடிக்கையாகும்.
 
அதே வேளையில் கிளிநொச்சி திரு முறிகண்டியில் இராணுவக் குடும்பங்களை குடியேற்றவென 2000 வீடுகள் கொண்ட பெரும் குடியேற்றம் அமைக்கப்படுகின்றது. 
 
அதாவது சிவில் நிர்வாகம், தேர்தல் என்பவற்றில் மட்டுமன்றி குடிப்பரம்பலில் கூட வடபகுதி இராணுவ மயமாக்கப்படும் பெரும் ஆபத்தை நோக்கி நகர்த்தப்பட்டுக்கொண்டி ருக்கிறது.
 
இது எதிர் காலத்தில் முழு நாட்டையும் இராணுவ மயப்படுத்தி ஓர் இராணுவ சர்வாதிகாரத்துக்குள் தள்ளிவிடும் நிலைமையே தோற்றுவிக்கும் நிலை உருவாகும் என் பதை சர்வதேசம் புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டது. இது உள்நாட்டு விவகாரம் என்ற எல்லையை  கடக்கும் நாள்கள் வெகு தொலைவில் இல்லை. 
(நன்றி-U) GJKMEDIAWORKS TEAM 2012

Ingen kommentarer:

Legg inn en kommentar