ஏன் இந்த வன்மம்... - ச.ச.முத்து

அவர்கள் ஒருமுறைதான் கொன்றார்கள். ஆனால் ஏதோ காரணங்கள் சொல்லி சொல்லி நிதமும் கொல்வது  இருக்கிறதே அது கொலையாளிகளின் வன்மத்தைவிடவும கேவலமானது.
இசைப்பிரியாவை உயிருடன் சிங்கள மிலேச்சர்கள் பிடிப்பதுபோன்ற காணொளியை சனல்4 வெளியிட்ட நாளில் இருந்து மீண்டும் மீண்டும் அந்த பெண் எழுத்துக்களாலும் ஒளிப்படங்களாலும் கீறிக்கிழிக்கப்பட்டு பிரேதபரிசோதனை செய்வது இருக்கிறதே அது சிங்களராணுவத்தினரின் வன்மத்தைவிடவும் கொடியதாக தெரிகிறது.
சனல் 4 அந்த காணொளியை வெளியிட்டது எதற்காக?
இனப்படுகொலை அரசான சிங்களம் சொல்வதுபோல ஒரு இராணுவ நடவடிக்கையின்போது இசைப்பிரியா கொல்லப்படவில்லை. உயிருடன்,காயமெதும் இன்றி பிடிக்கப்பட்ட பின்னரே கொல்லப்பட்டுள்ளார் என்பதை வெளிக்காட்டுவதற்காகவேதான் அதனை வெளியிட்டார்கள்.
தமிழன் அல்லது தமிழச்சி என்ற காரணத்துக்காகவே, ஒரு இனரீதியான அழிப்புக்காகவே இந்த கொலைகள் நிகழ்த்தப்பட்டன என்பதை காட்டுவதற்காகவே சனல்4 இதனை வெளியிட்டார்கள்.
ஆனால் அதன் பின்னர் தமிழர் என்று சொல்லிக் கொள்ளும் நாம் அவள் மீது நடாத்தும் வன்மம் இருக்கிறதே அதுதான் புரியாமல் இருக்கிறது. ஏதோ சிங்களம் இப்போதான் தமிழ்ப்பெண்கள் மீதான பாலியல் பலாத்காரத்தை நடாத்துகின்றது என்பது தோற்றத்துடன் நாம் இருக்கின்றோம். உண்மையிலேயே தமிழ்ப்பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம் என்பது காலம் காலமாக சிங்களம் நிகழ்த்திவரும் ஒரு காட்டுமிராண்டித்தனமாகும். அது இன்று நேற்று தொடங்கியது அல்ல.
58 இனப்படுகொலை தொடங்கி, 83 யூலை இனப்படுகொலை என்று, 2009 முள்ளிவாய்க்கால் வரையும் தொடர்ந்ததுடன் நில்லாமல் இன்றைய தேதி வரைக்கும் இதுவே நடக்கின்றது. சிங்களம் மட்டுமல்லாமல் அமைதிப்படை என்ற பெயரில் வந்திறங்கி நின்ற காட்டுமிராண்டிகளும் அதனையே செய்தார்கள். இவர்கள் எல்லோரும் ஆயுதங்கள் துணையுடன் நிகழ்த்திய பாலியல் பலாத்காரத்துக்கு சற்றும் குறைவில்லாததாகவே நாம் இப்போது நடாத்தும் எழுத்துக்களும் ஒளிப்பட தரவேற்றங்களும் இருக்கின்றன.
அதனை அவர்கள் எப்படி செய்தார்கள், எத்தனைபோர் செய்தார்கள் என்ற எழுதுவது இருக்கிறதே, அது எந்த விதமான மனப்பிரள்வின் வெளிப்பாடு இது என்று புரியமாட்டேன் என்கிறது. எல்லாவிதமான உச்சங்களும் தொட்டுவிட்ட ஒரு மனிதன் இத்தகைய ஒரு பிரச்சனையில் எப்படி நடந்து கொண்டார் என்று தெரிந்து கொள்வதன் ஊடாக அனைவரும் தங்களுக்கு தாமே ஒருவிதமான தர்மக் கோட்டை கிழித்து அதனுள் இருந்து எழுதவும் ஒளிப்படம் பதிவேற்றவும் செய்தல் நல்லது என்பதற்காக அந்த சம்பவத்தை இதோ தருகின்றேன்.
தமிழீழத்தில் இந்தியபடைகளுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளும் இடையில் செறிவான யுத்தம் எல்லா அரங்குகளிலும் நடந்துகொண்டிருந்த காலமது. மிக கொடூரமான பாலியல் பலாத்காரங்களை இந்தியப்படை தமிழீழமெங்கும் கட்டவிழ்த்துவிட்டிருந்த காலமும்  அதுதான். அந்த நேரத்தில்  அமைப்பின் முக்கியமானவர்கள் சிலர் தமிழக முதல்வர் எம்.ஜி  ராமச்சந்திரன் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தனர். எம்.ஜி  ராமச்சந்திரன் அவர்களிடம் இந்தியப்படைகள் தமிழீழ பெண்கள் மீது நடாத்திவரும் படுகொலைகள் பற்றியும் பாலியல் பலாத்காரங்களை பற்றியும்  சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
அப்போது எம்.ஜி  ராமச்சந்திரன் அவர்களுடன் அந்த நேரத்தைய இந்திய பாராளுமன்ற உதவி சபாநாயகராக இருந்த தம்பித்துரை என்பவரும் இருந்தார். அவர் உடனே 'இராணுவம் என்றால் இத்தகைய பாலியல் பலாத்காரம் இருக்கத்தான் செய்யும்' என்ற தோரணையில்  பதிலளித்தார். அத்துடன் அந்த பாலியல் பலாத்காரங்கள் பற்றியும் தம்பித்துரை அவர்கள் அக்குவேறு ஆணிவேறாக துருவிதுருவி கொண்டிருந்தார். அவர்  பதிலளித்து ஒரு கணத்துக்குள் தமிழக முதல்வர் எம்.ஜி  ராமச்சந்திரன் அவர்கள் மிகவும் உக்கிரமான கோபத்துடன் தம்பித்துரை அவர்களை பார்த்து உடனே எழுந்து அந்த இடத்தைவிட்டு அகன்றுவிடுமாறு உத்தரவிட்டார்.
எம்.ஜி  ராமச்சந்திரன் அவர்கள் கூறியதை தம்பித்துரை ஏற்காது விட்டிருந்தால் நிச்சயமாக எம்.ஜி  ராமச்சந்திரன் அவர்கள் அவரை பலவந்தமாக துரத்தியே இருப்பார். இது நடந்தது எம்.ஜி  ராமச்சந்திரன் அவர்கள் நோயின் உக்கிரத்தில் சாவுக்கு அண்மையில் இருந்த காலத்திலே. எம்.ஜி  ராமச்சந்திரன் அவர்களின் பேச்சுத்திறன் குறைந்து நோயின் தாக்கத்தால் அவரின் வாய் ஒரு பக்கமாக இழுபட்டிருந்த நிலையிலும் பாலியல் பலாத்காரம் பற்றி துருவிதுருவி தம்பித்துரை விசாரித்ததை பொறுக்க முடியாமல் எம்.ஜி  ராமச்சந்திரன் அவர்கள் காட்டிய அந்த கோபத்தை போன்றதொரு கோபத்தை அதற்கு முன்னர் ஒருபோதும் தாம் கண்டிருக்கவில்லை என்று அவர்களின் உதவியாளர்கள் அதன்பின் கூறினார்களாம்.
ஆனால் நாமோ நடந்துகொண்டிருக்கும் கொடூரங்களை பார்த்து குமுறி எழுவதற்கு பதிலாக அந்த கொடூரங்கள் எப்படி நடந்தன... அந்த தருணம் எப்படி.. என்ற பிரேத பரிசோதனைகளை கேவலமாக நடாத்தி கொண்டிருக்கிறோம். எப்போதோ நடந்த 58 கலவரத்தில் தனது கணவனை சிங்கள இனப்படுகொலையாளிகளிடம் பறிகொடுத்த பாணந்துறை கோவில் அர்ச்சகரின் மனைவியின் நிலையை கண்டதுதான் தன்னை இந்த போராட்ட களத்துக்கு கொண்டுவந்ததாக சொல்லிய தேசியத் தலைவனின் அந்த கோபத்தில் லட்சத்தில் ஒரு வீதம் தன்னும் இப்போது நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளை பார்த்து எமக்கு சிங்களத்தின் மீது வரவேண்டும். அதனை ஏற்படுத்துவதற்காகவே அனைவரும் எழுதவும் பேசவும் ஒளிப்படம் வெளியிடவும் வேண்டும்.
சிங்களம் ஒருபோதும் மாறப்போவதே இல்லை. அது 58ல் செய்ததையே 77லும் 83லும் 2009லும் ஏன் இன்றுவரையும் செய்து வருகின்றது. இனியும் அதனையே செய்யும். அது கொன்றுவீசிய உடல்களை நாமும் மீண்டும் குத்தி குதறிக் கொண்டிருக்காமல் எப்படி இவற்றை தடுத்து நிறுத்துவது என்பதை எழுதவேண்டும். எப்படி இதனை சர்வதேச அரங்கில் எழுப்பவேண்டும் என்பதை பதிய வேண்டும்.
அதுதான் உண்மையான விடுதலைக்கான வேலையாகும்.
(நன்றி-S24) GJKMEDIAWORKS TEAM 2012

Ingen kommentarer:

Legg inn en kommentar