நாட்டின் நலன்களைப் பிரதிபலிக்காத மாநாடுகளால் மக்களுக்கு மிஞ்சுவது என்ன...?

essay பொதுநலவாய நாடுகளில் நிரந்தரமான, சமத்துவமான அபிவிருத்தியை அடைவதனை பிரதான நோக்காகக் கொண்டு உழைப்பது என்ற பிரகடனத்துடன், கொழும்பில் நடைபெற்ற உச்சி மாநாடு முடிவுற்றுள்ளது.
 
 
வறுமை, உணவுப் பாதுகாப்பு, காலநிலை மாறுபடுதலைத் தணித்தல், வர்த்தகத்துறையில் நிலவும் பற்றாக்குறைகளை குறைப்பதற்கு உறுதிப்படுத்துவதை நாடிச் செயலாற்றுதல், தொழில்நுட்ப மற்றும் அறிவுசார் துறைகளில் உண்டாகும் முன் னேற்றங்களை அங்கத்துவ நாடுகள் தமக்கிடையே பரிவர்த்தனை செய்து பகிர்ந்துகொள்ளுதல், பொருளாதார மற்றும் வர்த்தக முறைமைகளை சமத்துவமாக உயர்த்துதல் ஆகியவற்றைப் பிரதானமான அம்சங்களாகக் கொண்டு-
அதன் பொருட்டு அனைத்துலக மட்டத்தில் அவற்றை மேம்படுத்துவதற்கான பணிகளைச் செயற்படுத்த கூட்டாகச் செயற்படுதல் - என்பதே பிரகடனத்தின் உள்ளார்ந்த கருமைபடர்ந்த கருப்பொருள்கள் ஆகும்.
 
மேலும், உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளை அகற்றிச் சமன்பாட்டை உருவாக்குவதற்கு கூட்டாக உழைக்க வேண்டும் என்றும் -அதனை நாடி, கடந்த டிசெம்பர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட சாசனத்தைக் கடைப்பிடிப்பது என்றும், அதற்கு முன்னுரிமை வழங்குவதாகவும் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
மேற்குறிப்பிடப்பட்டவை, நாடுகள் பல சேர்ந்து  ஒன்றுகூடி, நடத்தும் மாநாடுகளின் இறுதியில் சம்பிரதாய பூர்வமாக வெளிப்படுத்தப்படும் கவர்ச்சிக் கருத்துக்களின் கூட்டுக் குழம்பு எனக் கொள்ளப்படவேண்டிய  வகையறாக்கள் என்பதனை  விட வேறு விசேட தார்ப்பரியம் கொண்டவை அல்ல.
 
அதற்கு மாற்றீடாக இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் ஜனநாயக விரோத செயற்பாடுகளைக் கண்டித்து கொழும்பில் வைத்தே தீர்மானம் நிறைவேற்றியிருக்க வேண்டும் என்று கனேடிய வெளிவிவகார அமைச்சின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான செயலாளர் தீபக் ஒபராய் கருத்து வெளியிட்டமை குறிப்பிட்டுப் பதிவு செய்யப்படவேண்டிய ஒன்றாகும்.
 
இதேவேளை, மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்குப் பதில் அளிப்பதற்கு இலங்கை அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பொதுநலவாய அமைப்பின் செயலாளரும், இந்தியாவைச் சேர்ந்தவருமான கமலேஷ் சர்மா தெரிவித்த  யதார்த்தத்துக்கு ஒவ்வாத கருத்தையும் கனேடிய நாடாளுமன்றச் செயலர் சாடியமை மாநாட்டின் முரண்பாடு நிலைகளை வெளிப்படுத்துவதாக அமைந்தன.
 
எமது நாட்டில், சட்டம் ஒழுங்கு, நல்லாட்சி, ஜனநாயகம் என்பனவற்றில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதும் மாநாட்டில் ஊன்றி வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
 
மனித உரிமைகளைப் பேணும் விவகாரத்தில் தெளிவான, வரவேற்கத்தக்க, போதியளவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டு மாநாட்டுக்குப் புறம்பான சந்திப்புக்களில் வெளிநாட்டுப் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டன.
 
மனித உரிமை விவகாரங்கள் விடயத்தில் இந்த நாட்டு அரசினால் இதுவரை ""அழகுபடுத்தும்'' நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர்கள் கிண்டல் செய்துள்ளனர்.
 
அவற்றை இலங்கை அரசு காதில் போட்டுக்கொள்ளுமா என்பதனைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று கூற வேண்டிய நிலையே உயர்ந்து நிற்கிறது.
 
வடக்கில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு அப்பால், அவர்கள் மீது கொலைகளையும் தாக்குதல்களையும் நிகழ்த்தியோரை கைது செய்வதற்கோ-அன்றி மக்களைப் பாதுகாப்பதற்கோ நடவடிக்கை எடுக்கப்படவில்லை -
அதனூடாக, பொதுநலவாயக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் உண்மையான பெறுபேறுகளை இலங்கையில் காணமுடியவில்லை என்பதற்கு இத்தகைய நிகழ்வுகள் சான்றுபகர்கின்றன என்பதும் கனேடியப் பிரதிநிதியால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
 
மொத்தத்தில் வடபுலத்தைப் பொறுத்த வரையில் அங்கு ஜனநாயகம், சட்டவாட்சி, ஊடகசுதந்திரம், மதசுதந்திரம் ஆகியன சீர் கெட்டுப் போயுள்ளதனைத் தன்னால் தெளிவாக அவதானிக்க முடிந்தது என்று கனேடியப் பிரதிநிதி தீபக் ஒபராய் தெரிவித்தமை ஊன்றிப்பதியப்பட வேண்டியதாகும்.
 
ஜனநாயகத்தை அதற்குரிய வடிவில் பயன்படுத்தி, அதனூடாக மக்களின் உரிமைகளையும் நலன்களையும் வழங்குவதாகக் காட்டிக்கொள்ளும் பொய்மைப் போக்கே இந்நாட்டில் மேலோங்கி நிற்கிறது என்பதனை கொழும்பு மாநாடு வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது.இனியேனும் இந் நிலையைப் போக்க எமது நாட்டு அரசு மனம் கொள்ளக் கூடாதா.....?
(நன்றி-U) GJKMEDIAWORKS TEAM 2012

Ingen kommentarer:

Legg inn en kommentar