மனித உரிமைகளைப் பேணும் தளத்தில் சீனாவின் புதிய போக்கு

 essay
இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், அவற்றை ஊக்குவிக்கவும் அந்நாட்டு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு குரல் கொடுத்துள்ளது சீனா. அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குயின் காங் தமது அரசின்சார்பில், கொழும்பில் பொதுநலவாய மாநாடு முடிவுற்ற கையோடு, பீஜிங்கில் வைத்து இலங்கைக்கு மேற்கண்ட புத்திமதியைக் கூறியுள்ளார்.
 
உலக வல்லரசுகளில் ஒன்றான சீனா, அதன் நெருங்கிய நட்பு நாடுகளில் முதல் வரிசையில் நிற்கும் இலங்கையிடம் இப்படி ஒரு கருத்தை வெளியிட்டிருப்பது இதுவே முதல் தடவையாகும்.
 
எதிர்வரும் மார்ச் மாதத்துக்கு முன்னர், மனித உரிமை விவகாரங்களுக்குப் பதில் அளிப்பதற்கு இலங்கை அரசு தவறினால், அனைத்துலக விசாரணைக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என்று பிரிட்டன் பிரதமர் கமரூன் கொழும்பில் வைத்து எச்சரிக்கை விடுத்திருந்தார்.
 
அது குறித்து ஊடகவியலாளர்கள் பீஜிங்கில் வைத்து எழுப்பிய வினாவுக்கு பதிலளிக்கையிலேயே அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மேற்படி கருத்தை வெளியிட்டிருக்கிறார். ஆகையால் சீனாவின் மிக நெருங்கிய நட்பு நாடாக விளங்கும் இலங்கை, இது தொடர்பில் ஊன்றிக்கருத்தில் கொள்வதனைத் தவிர்க்க முடியாத நிலை ஒன்று திடுதிப்பென மேல் எழுந்துள்ளது.
 
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பிரேரணைகளைத் தோற்கடிப் பதில் சீனா தீவிர பங்களிப்புச் செய்திருந்தது.
மனித உரிமைகள் தொடர்பாகப் பல நெருக்கடிகளை இலங்கை அரசு எதிர்கொள்ளும் வேளையில், திடீரென இருந்தாற்போல் ஞானம் பிறந்த வகையில், தனது நெருங்கிய நட்பு நாடான  இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் குறித்து சீனா காத்திரமான கருத்தை முதல் தடவையாக வெளியிட்டுள்ளது.
 
அதற்கு முத்தாய்ப்பு வைப்பது போன்று-
மனித உரிமை விவகாரங்களில், அனைத்து நாடுகளுட னும் பேச்சுவார்த்தை மற்றும் நெருங்கிய தொடர்பாடல்கள் ஊடாகப் பரஸ்பர புரிந்துணர்வை பேணி வருகிறோம். அனைத்துலக மனித உரிமைகளை ஊக்குவிக்க ஆக்கபூர்வமாக செயற்படுகிறோம் என்றும் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வழமையான மூடு மந்திரம் இல்லாமல் வெளிப்படையாகக் கருத்து வெளியிட்டுள்ளார்.
 
கனடா, பிரிட்டன் உட்பட்ட மேற்குலக நாடுகள் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து காத்திரமான கருத்துக்களை வெளியிட்ட போதெல்லாம், கண்ணாடி வீட்டிலிருந்து கொண்டு கல்லெறிய வேண்டாம் என்று ""போதனை செய்த'' எமது நாட்டு அரசு இனி என்ன கூறப்போகிறது?
 
அதற்கும் மேலாக, இலங்கையின் எதிர்க்கட்சிகள் (ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நவசமசமாஜக் கட்சி உட்பட்ட இடதுசாரிகள் முன்னணி போன்றவை) மனித உரிமை மீறல்களை நிறுத்த வேண்டும் என்று குரல் கொடுத்த போதிலும், அதனைக் காதில் போட்டுக் கொள்ளவும் விரும்பாத அரசு இனி என்ன செய்யப்போகிறது?
 
மேலும், இந்தியாவைத் தூர வைப்பதற்கு அல்லது அதனுடன் பேரம்பேசுவதற்கு சீனாவை முன்னிறுத்தி ""அச்சுறுத்தி'' வந்த, வரும் எமது அரசு, சீனாவின் புத்திமதியைத் தூக்கிக்கடாசுமா, அல்லது கருத்தில் கொள்ளுமா என்பது உடனடியாகத் தெரியவருவதற்கான சாத்தியமில்லை.
 
மொத்தத்தில், சீனா பொதுநலவாய நாடுகள் குழுமத்தைச் சேராத நாடு. ஆனால் கொழும்பில் அந்தக் குழுமத்தின் உச்சி மாநாடு  முடிவுற்ற இரண்டு நாள்களில் (நேற்றுமுன்தினம்) திடு திப்பென இலங்கை அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்திருப் பதற்கு உள்ளும் புறமும் காத்திரமான, கனதியான நோக்கம் அல்லது இராஜதந்திரம் உண்டா என்பது உடனடியாகத் தெரியவராது. மெல்லெனப் பாயும் தண்ணீர் போன்று ஏதோ ஒரு கட்டத்தில், கல்லையும் உருவிப்பாயும்  காலம் ஒன்று நெருங்குமோ யாரறிவார்....?
(நன்றி-U) GJKMEDIAWORKS TEAM 2012

Ingen kommentarer:

Legg inn en kommentar