எங்கள் குரல் கேட்குமா?

essay 1948 ஆம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது என்று கூறப்பட்ட காலத்தில் இருந்து இன்றுவரை தமிழினம் தன்னைக் காக்க போராட்டத்தை மட்டுமே நம்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது.

அந்தவகையில் அண்மையில் நடைபெற்ற இரண்டு போராட்டங்கள் உள்ளூரையும் சர்வதேசத்தையும் தம் பக்கம் திருப்பியுள்ளன. 
 
1990 ஆம் ஆண்டு போர் காரணமாக உயிரிழப்பு மற்றும் உடைமை இழப்புடன் தமது சொந்த நிலத்தில் இருந்து வெளியேறி 23 ஆண்டுகளாக பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்ற வலி.வடக்கு மக்கள் இராணுவத்தினால் அபகரிக்கப்பட்டு உயர் பாதுகாப்பு வலயம் ஆக்கப்பட்டுள்ள தங்கள் நிலங்களை மீட்கும் போராட்டம் முடிவின்றி தொடர்கின்றது. 
 
தமது உயிரே போனாலும் சொந்த நிலம் தங்களுக்கு வேண்டும் என்று நில மீட்புப் போராட்டத்தை அவர்கள் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தின் நீட்சியாக  கடந்த 12ஆம் திகதி மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய முன்றலில் வலி.வடக்கு மக்கள்  ஆயிரக்கணக்கில் ஒன்றிணைந்து தொடர் உணவு தவிர்ப்புப் போராட்டம் ஒன்றினை ஆரம்பித்திருந்தனர்.
 
அந்த போராட்டம் 12, 13, 14, 15 ஆம் திகதிவரை தொடர்ந்தது. மக்கள் பல்வேறு இடங்களில் இருந்தும் தமது நிலங்களை மீட்க திரண்டிருந்தனர். தினமும் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும் உணவு விடுப்பு போராட்டம் பிற்பகல் 4 மணியுடன் நிறைவுக்கு வரும் வகையில் இந்தப் போராட்டம்  நான்கு தினங்களாக நடைபெற்றது. 
 
90ஆம் ஆண்டு வலி.வடக்கில் இருந்து வெளியேறிய மக்கள் தொடர் இடப்பெயர்வுகளால் பல்வேறு இடர்களுக்கு முகம் கொடுத்தே வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் தமது சொந்த நிலங்களுக்கு மீண்டும் செல்ல வேண்டும் என்ற திடமான கொள்கையுடன் போராடி வருகின்றனர்.
 
6382 ஏக்கர் நிலப்பகுதி இன்னமும் விடுவிக்கப்படாத நிலையில் இராணுவத்தினரால் விழுங்கப்பட்டுள்ளன. மெல்ல மெல்ல அவை உரு மறைப்பும் செய்யப்பட்டு வருகின்றன. அபிவிருத்தி என்ற போர்வையில் இராணுவத்தினர் தமது தேவைகளுக்காக மக்களது நிலங்களை பயன்படுத்துகின்றனர். 
 
விளையாட்டு திடல்களும் , உல்லாச விடுதிகளும், விவசாயச் செய்கைகளும், கடல் வளமும், பாற்சாலைகளும் என வளம் கொழிக்கும் நிலத்தில் தன்னுடைய சுகபோக கிளைகளை நிறுவி சம்பாதித்து வருகிறது அரசு. 
 
ஆனால் கடற்றொழில், விவசாயம் என செல்வச்சிறப்போடு வாழ்ந்த அந்த மண்ணின் மைந்தர்கள் இன்று நாளாந்த கூலிகளாக மாற்றப்பட்டுள்ளனர். வறுமை காரணமாக அவர்களது உறவுகளால் வெறுத்து ஒதுக்கப்பட்டுள்ளனர். 
 
சொந்தமாக சொத்துக்கள் இருந்தும் அவற்றைப் பயன்படுத்துவது நிச்சயமற்ற நிலையில் தமது பெண் பிள்ளைகளை திருமணம் செய்து கொடுக்க முடியாத நிலையில் வலி.வடக்கு வாசிகள் பலர் உள்ளனர். 
 
அந்த மண்ணின் அடுத்த சந்ததியினருக்கு தங்கள் பூர்வீக நிலம் எப்படி இருக்கும் என்று கூடத் தெரியாது. எனவே தான் தாங்கள் இறப்பதற்கு முன்னராவது தங்கள் சொந்த நிலத்தை மீட்டெடுத்து அடுத்த சந்ததியினருக்கு கையளிக்க வேண்டும் என்ற ஓர்மத்தோடு இந்தப் போராட்டத்தில் மக்கள் உணர்வோடு குதித்தனர்.
 
போராட்ட இறுதிநாளான 15ஆம் திகதி ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பல்வேறு தடைகளையும் தாண்டி திரண்டிருந்தனர். மாவிட்டபுரத்தில் வலி.வடக்கு உணவு விடுப்பு போராட்டம் நடைபெற்ற அதே நாளில் நல்லூர் ஆலய முன்றலில் காணாமற் போன உறவுகளைத் தேடும் கண்ணீர் போராட்டமும் நடந்து கொண்டிருந்தது நிலம் இழந்தவர்களினதும் உறவை இழந்தவர்களினதும் கண்ணீரால் யாழ்ப்பாணம் அன்றைக்கு நன்றாகவே நனைந்தது.
 
காலை 10 மணிக்கு நல்லூர் கந்தன் ஆலயமுன்றலில் ஆரம்பமான காணாமல் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிய கண்ணீர் போராட்டம் யாழ். முனியப்பர் ஆலயமுன்றலில் நிறைவடைந்தது. 
 
போர்க் காலங்களின் போதும், இறுதிக்கட்ட போர் மற்றும் போருக்கு பின்னான காலங்களின் போதும் பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர், யுவதிகள் காணாமற் போயிருந்தனர். அவர்கள் எங்கு இருக்கிறார்கள்? உயிரோடுதான் இருக்கிறார்களா? இல்லையா? என்று கூடத் தெரியாது கண்ணீருடன் கழிகின்றன அவர்களது உறவுகளின் எஞ்சிய நாள்கள்.
 
உறவுகளின் கண்முன்னே வைத்து இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டவர்கள், போன இடங்களில் இருந்து வீடு திரும்பாதவர்கள், உறவுகளால் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் என ஆயிரக் கணக்கானவர்கள் உறவுகளை இழந்து துடிக்கின்றனர். இழந்த தமது உறவுகளை மீட்டுத்தாருங்கள் என நீதி கேட்டு அலைகின்றனர்.
 
எல்லாவற்றையும் விட சோகம் என்னவென்றால் கணவன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்று தெரியாததால் பொட்டுப் வைப்பதா? இல்லையா? தாலியை கழற்றுவதா? இல்லையா? என்ற குழம்பல்களால் பல பெண்கள் மனநோயாளிகளாகக் கூட மாற்றப்பட்டுள்ளனர். 
 
தந்தையை தாயை காணாத பிள்ளைகள் எப்போது அவர்கள் வருவார்கள் என்று அடிக்கடி கேட்கும் போதெல்லாம் "வருவார்கள்" என்று கூறுவதற்குள் பெரும் பாடாகிப் போய்விடுகின்றது. 
 
கமரூனின் யாழ் வருகை
கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்ட பிரிட்டன் பிரதமர் டேவிட்  கமரூன் மாநாட்டினை ஆரம்பித்து வைத்துவிட்டு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார்.
 
துரையப்பா விளையாட்டு மைதானத்தில் வந்து கமரூன் இறங்கியதும், நல்லூரில் இருந்து புறப்பட்டு கைகளில் புகைப்படங்களோடும் கண்களில் நீரோடும்  யாழ். பொதுநூலக முன்றலில் நின்றிருந்த காணாமற் போனோரின் உறவுகள் மைதானத்தை முற்றுகையிட்டனர். 
 
ஆனாலும் அவர்களின் கண்ணீர் கமரூனுக்குத் தெரிந்துவிடக்கூடாது என்பதில் பொலிஸார் அக்கறை காட்டினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்கவும் செய்தனர். எனினும் அதையும் மீறி இழப்போடு கதறும் காணாமற் போனோர் உறவுகளின் கண்ணீரை தனது வாகனத்தில் இருந்து பார்த்தார் கமரூன். 
 
போராட்டங்களை குழப்ப முயற்சி
வழமையாகவே உரிமை போராட்டங்களை தமிழ் மக்கள் மேற்கொள்ளும் போது பல்வேறு தரப்புக்களாலும் குழப்பங்கள் உருவாக்கப்படுவது வழமை. எனினும் எத்தனை தடைகள் வரினும் அவை அனைத்தையும் உடைத்து எறிந்து விட்டு தமது உரிமைக்காக குரல் கொடுப்பதே வழக்கமாகியும் போனது.
 
அதுபோலவே இம்முறை நடைபெற்ற இரண்டு போராட்டங்களும் அனைத்து தடைகளையும் தாண்டி பல செய்திகளைக் கூறி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. 
 
வலி.வடக்கு மக்களின் போராட்டத்தில் ஆரம்பித்த நாள் முதல் இறுதி நாள் வரை இனந்தெரியாதவர்கள் என்ற அடைமொழியில் உள்ள ஒரு குழுவினரால் பல்வேறு குழப்பங்கள் மேற்கொள்ளப்பட்டன.
 
நேருக்குநேர் மோத முடியாத கோழைகள் போராட்டம் ஆரம்பமாகும் முன்னரே அதனை ஏற்பாடு செய்த வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் மற்றும் உப தவிசாளர் ஆகியோரது வீட்டின் வாயில் பகுதியில் மாட்டின் தலையினை வைத்ததுடன் தொலை பேசியில் மிரட்டியும் போராட்டத்தை குழப்ப முனைந்தனர். எனினும் திட்டமிட்டபடி உணவு விடுப்புப் போராட்டம் ஆரம்பமானது.
 
எனினும் எவ்வாறாயினும் அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு இனந் தெரியாதோர் அலைந்து கொண்டு இருந்தனர். போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். 
 
மண்மீட்பு போராட்டத்தில் முதல் நாள் திரண்டிருந்த மக்கள் போராட்டத்தை முடித்துக் கொண்டு திரும்பிக் கொண்டிருந்த வாகனத்தின் மீது கழிவு ஒயில் வீசித் தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.
 
அத்துடன் அவர்கள் ஓயவில்லை. வாகனங்கள் மீது கல்வீசியும், கண்ணாடிகளை உடைத்தும் போராட்டங்களில் கலந்து கொள்ளும் மக்களது வீடுகளுக்கு சென்று அச்சுறுத்தியும் உடைமைகளைச் சேதப்படுத்தியும் தமது அட்டகாசத்தைத் தொடர்ந்தனர். 
 
அத்துடன் போராட்டத்தில் கலந்து கொண்டால் கொலை செய்யப்படுவீர்கள் என்று அச்சுறுத்தி வீட்டிற்கு முன்பாக மலர் வளையங்களையும் வைத்து விட்டும்  இனந்தெரியாதோர் சென்றுள்ளனர்.
 
ஆணிகளாலான இரும்புக் கட்டைகளை மக்களையும் அவர்கள் பயணிக்கும் வாகனங்களையும் நோக்கி வீசினர். எனினும் இவற்றைக் கண்டு மக்கள் பயந்துவிடவில்லை. உயிரே போனாலும் எமது நிலங்களுக்காக போராடுவோம் என்ற திடமான கொள்கையுடன் தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
 
புலனாய்வாளர்களது செயற்பாடு   
வடக்கில் என்ன நிகழ்வு நடந்தாலும் ஏற்பாட்டாளர்களை விட நிகழ்விடத்தில் முதலில் வந்து நிற்பவர்கள் புலனாய்வாளர்கள். இவர்களுக்கு என்ன வேலை அங்கே? 
 
பொலிஸாரும், தமிழர் பகுதிகளை ஆக்கிரமித்துள்ள இராணுவத்தினரும் தமக்கென தனித்தனிப் புலனாய்வாளர் குழுவை கொண்டுள்ளனர். இவர்களை வைத்தே யார் வருகின்றனர்? என்ன பேசுகின்றனர்? எவர் எல்லாம் மும்முரமாக செயற்படுகின்றனர்? என அறிந்து, அரசியல்வாதிகள், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் என அனைவரும் அடையாளப்படுத்தப்படுகின்றனர். 
 
இந்த புலனாய்வாளர்கள் எப்படித்தான் தங்களை உருமறைப்பு செய்தாலும் அவர்கள் யார் என்பதையும் எதற்காக வந்திருக்கிறார்கள் என்பதையும் பார்த்த உடனேயே தெரிந்து கொள்ள முடிகிறது. கையில் ஒரு கையடக்க தொலைபேசியைக் கொண்டே வந்த வேலைகளை முடித்துக் கொள்வதில் வல்லவர்கள் அவர்கள்.
 
அதுபோலத்தான் வலி.வடக்கு மக்கள் போராட்டக்களத்திலும் நூற்றுக்கு மேற்பட்ட புலனாய்வாளர்கள் சுற்றிக் கொண்டு திரிந்தனர். அவர்கள் அங்கு கலந்து கொண்ட ஒவ்வொருவரையும் மிகவும் நுணுக்கமாக கவனித்துக் கொண்டிருந்ததுடன் அவர்களது கைபேசிகளில் உள்ள கமராக்களும் ரெக்கோடர்களும் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருந்தன.
 
இவர்கள் மத்தியில் அருகில் இருப்பவர்களோடு கூட சுதந்திரமாக பேசமுடியாத நிலையில் அங்கிருந்தவர்கள் மிகுந்த அச்சத்துடன் காணப்பட்டனர். புலனாய்வாளர்களின் செயற்பாடுகள் அனைத்தும் ஊடகவியலாளர்களையும் மக்களையும் மிரட்டும் பாணியிலேயே அமைந்திருந்தது.
 
போராட்டத்திற்கு தடைவிதிக்க மறுத்த நீதிமன்றம் 
கடந்த காலங்களில் யாழ். நகரில் தமிழ் மக்களின் போராட்டங்களை நிறுத்துவதற்கு நீதிமன்றில் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்வதும், அதனை ஏற்று நீதிமன்றம்  தடை உத்தரவினை பிறப்பிப்பதும் தொடர்கதையாகவே இருந்தது. 
 
அது போலவே கடந்த 15ஆம் திகதி நடத்தப்பட்ட காணாமற் போனோரது உறவுகள் மேற்கொண்ட கவனவீர்ப்புப் போராட்டத்தையும் நிறுத்த பொலிஸாரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. எனினும் அதற்கு  நீதிமன்றம் சம்மதிக்கவில்லை.
 
பொலிஸாரின் அடாவடி  
காணாமற் போனவர்களின் உறவுகள் மேற்கொண்ட போராட்டத்திற்கு நீதிமன்றமே அனுமதியினை வழங்கியிருந்த போதும் பொலிஸார் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை இடைமறித்தனர். 
 
அதனையும் மீறி கட்டவிழ்த்து வெளியேறிய மக்களை ஈவிரக்கம் இன்றி பெண்கள், சிறுவர்கள் என்றுகூட பாராமால் ஏன் மத குருவைக் கூட நிலத்தில் தள்ளிவிழுத்தி தாக்குதல் நடத்தினர். அமைதியான மக்கள்  போராட்டத்தை தடுக்க அடாவடித்தனமான செயற்பாடுகளில் பொலிஸார் இறங்கியது  ஏன் என்பது இதுவரை எவருக்கும் புரியவில்லை. 
 
சனல் 4 ஊடகவியலாளர்களை கட்டியணைத்து அழுத மக்கள் பொதுநலவாய மாநாட்டிற்கு வந்திருந்த சர்வதேச ஊடகவியலாளர்கள் வடக்குக்கும் படையெடுத்த வேளையிலேயே யாழ்ப்பாணத்தில் நிலமீட்பு போராட்டமும், காணாமற் போனோரின் உறவுகளின் போராட்டமும்  நடைபெற்றுக் கொண்டிருந்தன. சர்வதேச ஊடகர்களின்  வருகையால் இராணுவத்தினரும் பொலிஸாரும் உறைந்து போயினர்.
 
பிரிட்டன் பிரதமருடன் யாழ்ப்பாணத்துக்கு சனல் - 4 ஊடகவியலாளர் உள்ளிட்ட சர்வதேச ஊடகவியலாளர்கள் குழு ஒன்றும் பயணத்தினை மேற்கொண்டிருந்தது. இந்த ஊடகவியலாளர்கள் இதுவரை சர்வதேச ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்ட உண்மையினை அன்று நேரடியாக சந்தித்திருந்தனர்.
 
இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை ஆவணப்படமாக வெளியிட்டு வரும் சனல் - 4 ஊடகவியலாளர்களும் அந்தக் குழுவில் இருந்தமை போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களுக்கு தங்கள் பிள்ளைகளை எப்படியும் மீட்டுவிடலாம் என்ற உணர்வினைக் கொடுத்திருக்க வேண்டும்.
 
எனவே சர்வதேச ஊடகவியலாளர்களிடம் "எங்கள் பிள்ளைகளை மீட்க உதவிகளை செய்யுங்கள் .குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை கிடைக்க வழிசெய்யுங்கள்'' என கதறிய வண்ணம் ஊடகர்களையும் கட்டித்தழுவி கதறினர். இதன்போது செய்தி சேகரிப்புக்கு வந்திருந்த சனல் 4 ஊடகவியலாளர் ஒருவரும் கண்ணீர் விட்டு அழுது தனது உணர்வினை வெளிப்படுத்தியிருந்தார்.
 
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரிக்கைகளை எழுத்து வடிவில் பெற்ற சனல் - 4 ஊடகவியலாளர்கள் அவற்றை பிரிட்டன் பிரதமரிடம் கையளித்தார்.
 
குறித்த இரண்டு போராட்டங்களையும் மக்களே மேற்கொண்டாலும் அதற்கு பக்கபலமாக  தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இருந்தனர். வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் என்று தமிழ்த் தேசியத்தின் வழி நடப்போர் வலி.வடக்கு மக்களின் போராட்டத்தில் இணைந்து தமது ஆதரவினை வெளிப்படுத்தினர்.
 
எனினும் காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி மேற்கொள்ளப்பட்ட  போராட்டத்தின் போது தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் சிலர் கலந்து கொண்டு ஆதரவு அளித்தனர். 
 
ஆனால் மக்களின் பிரச்சினைகளை செவிமடுக்காமல் யாழ். பொதுநூலக மாடியில் இருந்தவாறே கமரூனுக்கு மக்களை காட்டிவிட்டு பின் கதவால் ஓடியவர்கள் குறித்து மக்கள் மத்தியில் ஓர் அதிருப்தி தோன்றவே செய்துள்ளது.
 
மக்களால் தெரிவு செய்யப்பட்ட இந்த தலைவர்கள் மக்களுக்காகவே என்றும் பாடுபடுபவர்களாக இருக்கவேண்டுமே தவிர தேர்தல் காலத்தில் மட்டும் வருபவர்களாக இருக்ககூடாது. 
 
ஆனால் எங்கள் தேசத்தில் இன்றும் இந்த நிலைதான் தொடர்கின்றது. பதவி பட்டங்களை விடுத்து தங்களைத் தெரிவு செய்த மக்களது இன்பத்திலும் துன்பத்திலும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டியது  ஒவ்வொரு தலைவர்களது மனதிலும் சுயமாக வரவேண்டிய ஒன்றாகும்.
 
ஏற்பட்டுள்ள தாக்கம்
பிரிட்டன் பிரதமர் யாழ்ப்பாணத் தம் பயணத்தை முடித்துக் கொண்டு அன்று மாலையே இலங்கை ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். 
 
அதன்போது மனித உரிமை மீறல் தொட்ர்பில் உள்ளக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அதனை தவறும் பட்சத்தில் சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரித்திருந்ததுடன் மார்ச் மாதத்தினை காலக்கெடுவாகவும் விதித்துள்ளார். 
 
இவ்வாறு சூடாக கமரூன் நடந்து கொண்டமைக்கு அவர் யாழ்ப்பாணத்தில் பார்த்த மக்களின் போராட்டங்களால் உருவான உணர்வு ஒரு காரணம். 
 
எனினும் இவை எல்லாம் மஹிந்த அரசுக்கு செவிடன் காதில் ஊதிய சங்குதான். பழைய பாணியில் பேரினவாதிகள் பிழையைச் சுட்டிக்காட்டிய பிரிட்டன் பிரதமர் குறித்து பல்வேறு விமர்சனங்களை மேற்கொண்டு வருகின்றனர். இது அவர்களது வழமையான செயற்பாடுகளில் ஒன்று. எனவே அதுகுறித்து எவரும் பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டிய தேவையில்லை.
 
மஹிந்த அரசு என்னதான் போர்க்குற்றங்களை மூடி மறைத்தாலும்  இனிமேல் தப்பிக்க முடியாது என்ற நிலை உறுதியாகிவிட்டது. போர்காலத்தில் இலங்கையுடன் ஒன்றாக இருந்த நாடுகள் கூட தற்போது எதிர்க்க ஆரம்பித்துள்ளன. 
 
குறிப்பாக சீனா கூட இலங்கை தொடர்பில் எதிர்மறையான கருத்தை அண்மையில் வெளியிட்டிருந்தது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச்  மாதம் நடைபெறவுள்ளது. 
 
அப்போதாவது தமிழர்களின் விடிவுக்குகான தருணம் ஒன்று கிடைக்காதா என்று காத்திருக்கிறார்கள் தமிழர்கள். பிரிட்டன் பிரதமருடன் யாழ்ப்பாணத்துக்கு சனல் - 4 ஊடகவியலாளர் உள்ளிட்ட சர்வதேச ஊடகவியலாளர்கள் குழு ஒன்றும் பயணத்தினை மேற் கொண்டிருந்தது. 
 
இந்த ஊடகவியலாளர்கள் இதுவரை சர்வதேச ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்ட உண்மையினை அன்று நேரடியாக சந்தித்திருந்தனர். 
 
 
 
 
 
 
அஞ்சலி
(நன்றி-U) GJKMEDIAWORKS TEAM 2012

Ingen kommentarer:

Legg inn en kommentar