விடுதலைப் புலி முக்கியஸ்தர்களின் தலைமறைவு வாழ்க்கை- (அவலங்களின் அத்தியாயங்கள்- 85): நிராஜ் டேவிட்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்தியப் படையினருக்கும் இடையிலான மிக மும்முரமான யுத்தம் 1987ம் வரும் ஒக்டோபர் மாதம் 10ம் திகதி ஆரம்பமானது.
இந்திய -புலிகள் யுத்தத்தின் பல விடயங்களை ஏற்கனவே நாங்கள் இந்தத் தொடரின் முதல் 50 அத்தியாயங்களிலும் சற்று விரிவாகப் பார்த்திருந்தோம். யுத்த காலங்களில் இந்தியப் படையினராலும், இந்தியப் படையினரின் கைக்கூலிகளான சில தமிழ்க் குழுவினராலும் தமிழ் மக்கள் அனுபவித்த இன்னல்கள் பற்றியும் நிறைவே பார்த்திருந்தோம்.
இந்திய இராணுவம் தமிழ் பெண்கள் மீது நிகழ்த்திய பாலியல் வன்கொடுமைகள் பற்றி ஆதாரங்களுடன் பார்த்திருந்தோம். ஈழத் தமிழர்களைக் காக்கவென தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவம் தமிழர்கள் அடைக்கலம் புகுந்திருந்த அகதி முகாம்களையும், வைத்தியசாலைகளையும், பாடசாலைகளையும், மதஸ்தலங்களையும் எப்படி எப்படியெல்லாம் தாக்கியழித்து கோரதாண்டவம் ஆடியிருந்தது என்கின்ற வரலாறுகளைத் திகதிவாரியாக இந்தத் தொடரில் பதிவிலிட்டிருந்தோம்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற சண்டைகள், கிழக்கில் முஸ்லிம்கள் மீது இந்தியப் படையினர் நிகழ்த்திய தாக்குதல்கள் என்றும் பல விடயங்களையும் முன்னய சில அத்தியாயங்களில் பார்த்திருந்தோம்.
இந்திய-புலிகள் யுத்தத்தின் அந்த அந்தியாயங்களைப் பார்க்கத்தவறியவர்கள் கண்டிப்பாக அவற்றைப் படித்துவிட்டு இந்தத் தொடரின் இனிவரும் அந்தியாயங்களைப் பார்ப்பது நல்லது என்று நினைக்கின்றேன்.
இனி இந்திய -புலிகள் யுத்தத்தின் மேலும் சில முக்கிய கட்டங்கள் பற்றி ஓரளவு மேலோட்டமாகப் பார்ப்போம்.
கனரகப் பிரிவுகள்:
பாரிய இழப்புக்களின் மத்தியில் யாழ் குடாவையும், வடக்கு கிழக்கின் ஏனைய பாகங்களையும் கைப்பற்றிய இந்தியப் படையினர், விடுதலைப் புலிகளின் கெரில்லாத் தாக்குதல்களை எதிர்கொள்ளமுடியாமல் மிகவும் திண்டாடினார்கள்.
புலிகளைச் சமாளிக்கவென சுமார் ஒரு இலட்சத்து இருபதினாயிரம் இந்தியப் படையினர் வடக்கு கிழக்கில் நிலை கொண்டிருந்தார்கள். யாழ் குடாவில் இந்தியப் படையின் 54வது காலாட் படைப் பிரிவும், திருகோணமலையில் 340வது காலாட் படைப்பிரிவும் நிலைகொண்டிருந்தது.
இவற்றிற்கு மேலும் பலம் சேர்க்குமாற்போன்று யுத்த தாங்கிகள் அணிகளும் இந்த காலாட் படைப் பிரிவுகளுடன் இணைக்கபட்டிருந்தன. இந்தியப் படை அதிகாரிகளான மேஜர் ஜெனரல் சங்கர் பாதூரி மற்றும் மேஜர் ஜெனரல் அப்சார் கரீம் போன்றவர்கள் இந்தியப் படையினர் வசம் அப்பொழுது இருந்த கனரக ஆயுதங்கள் தொடர்பான சில விபரங்களை வெளியிட்டிருந்தார்கள். அவர்களின் கூற்றுப்படி, 1987ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ம் திகதி நிலவரப்படி இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்தியப் படையினர் ஆகக் குறைந்தது பின்வரும் கனரக ஆயுதங்களை வைத்திருந்தார்கள்:
நான்கு ரீ-72 தாங்கிகளைக் கொண்ட ஒரு சிறிய அணியினர் யாழ்ப்பாணத்திலும், மூன்று ரீ-73 தாங்கிகளைக் கொண்ட மற்றொரு அணியினர் திருகோணமலையிலும் இந்தியப் படையில் இருந்தார்கள்.
கனரக துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட பன்னிரெண்டு கவச வாகனங்கள் (BMPI) யாழ்ப்பாணத்திலும், ஆறு கவச வாகனங்கள் திருகோணமலையிலும் இந்தியப் படையினர் வசம் இருந்தன. இதைவிட யாழ்ப்பாணத்தில் எட்டு முதல் பன்னிரெண்டு 120 மி.மீ. ஆட்டிலெறிகள் மற்றும் வேறு சில ஆட்டிலெறிகளும் இருந்தன.
இதேபோன்று அரை ஸ்குவாட்ரன் அளவில் கவச வாகனங்களும், யுத்த தாங்கிகளும், ஆட்டிலறிகளும் வவுனியாவிலும், மட்டக்களப்பிலும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. மேலதிகமாக நாற்றுக்கணக்கான சிறிய ரக மோட்டார்கள், பீ-40 ரக ஏவகளைச் செலுத்திகள் இந்தியப் படைவசம் இருந்தன.
இவற்றைவிட இந்தியப் படையின் 36வது படையணியின் ஆட்டிலறி பிரிவொன்றும், 2வது இன்டிபெண்டன் ஆட்டிலறி ரெஜிமென் (2nd Independent Artillery Regiment) இனது ஒரு பிரிவும் சென்னையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தேவை ஏற்பட்டால் மிக குறுகிய அறிவிப்பில் இலங்கைக்கு நகர்த்தக்கூடிய விதத்தில் அவை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இதேபோன்று இந்தியப் படையின் 72வது படையணியின் ஆட்டிலறிப் பிரிவொன்றும் பெங்களூரில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. 
இத்தனை ஆராவாரங்களும், சுமார் ஆயிரம் முதல் இரண்டாயிரம் வரையிலான விடுதலைப் புலிகளைச் சமாளிக்க என்பது இரண்டாம் நூற்றாண்டின் மிகப் பெரிய நகைச் சுவை.
புலிகளின் முக்கியஸ்தர்கள்:
இந்தியப் படையினர் மிகப் பெரிய பலத்துடன் வடக்கு கிழக்கை ஓரளவு தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தார்கள். சந்திக்கு சந்தி முகாம் அமைத்து இந்தியப் படையினர் நிலைகொண்டிருந்தார்கள். சாதாரண மக்கள் புலிகளுக்கு உதவிவிட்டு இலகுவில் தப்பித்துவிட முடியாத அளவிற்கு அச்சம் ஊட்டப்பட்டிருந்தார்கள்.
மக்கள் மீது இந்தியப் படையினர் நிகழ்த்தியிருந்த கொடூரங்களின் வெளிப்பாடாக அது அமைந்திருந்தது. விடுதலைப் புலிகளின் தலைவர் உட்பட புலிகளின் முக்கிய அணிகள் வன்னிக்கு தமது தளங்களை இடம்மாற்றிக் கொண்டன. வன்னிக் காடுகளில் மறைந்திருந்து தமது போராட்டத்தைத் நெறிப்படுத்துவதே அப்போதைக்கு சிறந்த ஒரு ராஜதந்திரமாக இருந்தது.
இதேநேரத்தில் யாழ்.குடாவில் சிறுசிறு அணிகளாகப் பிரிந்து நின்ற விடுதலைப் புலிகள் இந்தியப் படையினருக்கு எதிராக கெரில்லாத் தாக்குதல்களைத் தொடர்ந்தபடி இருந்தார்கள். வன்னியில் இருந்து அவர்களுக்கு உத்தரவுகளும், வழங்கல்களும் கிடைத்தபடி இருந்தன.
இந்த கால கட்டம் விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில் மிகவும் இக்கட்டானதும், கஷ்டமானதுமான காலகட்டம் என்றுதான் கூறவேண்டும். யாழ் குடா முழுவதும் விதைக்கப்பட்டிருந்த இந்தியப் படையினர், வரிந்து கட்டிக்கொண்டு அவர்களுக்கு உதவ ஓடித்திரிந்த தமிழ் கூலிப் படைகள்: அச்சத்தில் உயிரைக் கைகளில் பிடித்துக்கொண்டு வாழ்ந்த தமிழ் மக்கள்: - இவைகளுக்கு நடுவில் விடுதலைப் புலிகள் தமது நடவடிக்கைகளையும், நகர்வுகளையும் மிகவும் கஷ்டத்துடன்தான் மேற்கொண்டு வந்தார்கள்.
இப்படியான கால கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தளபதிகளும் மிகுந்த நெருக்கடிகளை எதிர்கொண்டார்கள். துரத்தி வரும் இந்தியப் படையினரிடம் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்வது, அவ்வாறு பாதுகாத்தபடி எதிரியைத் திருப்பித் தாக்குவது என்பன அக்காலகட்டத்தில் மிகமிக கஷ்டமாக இருந்தது.
பிற்காலத்தில் உலகிற்கு நன்கு அறிமுகமான விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் இந்தியப் படை காலத்தில் எப்படியான சங்கடங்களை எதிர்கொண்டார்கள், எப்படியான ஆபத்துக்களைச் சந்தித்தார்கள், அவற்றில் இருந்து எப்படித் தப்பித்தார்கள் என்று அடுத்த சில அத்தியாயங்களில் மேலேராட்டமாகப் பார்க்க இருக்கின்றோம்.
விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் காயம் அடைந்து, அந்தக் காயம் சீழ் பிடித்த நிலையில் இந்தியப் படையினரிடம் இருந்து அவரைக் காப்பாற்ற போராளிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள்:
விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் அவர்கள் இந்தியப் படையினரின் வேட்டையில் இருந்து தப்புவதற்காக கரவெட்டி, நவின்டில், நெல்லியடி என்று தப்பி ஓடிய கதை: விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ் செல்வன், அக்காலத்தில் தென்மாராட்சியின் பிராந்தியத் தளபதியாக கடமையாற்றியபோது நிகழ்ந்த சம்பவங்கள்:
புலிகளின் மூத்த உறுப்பினரான பாலகுமார், காவல்துறைப் பொறுப்பாளர் (பின்னர் அரசியல்துறைப் பொறுப்பாளர்) நடேசன், நிதிப் பொறுப்பாளர் புகழேந்தி, கடற்புலிகளின் தளபதி சூசை, மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத் தளபதி கேணல் ரமேஷ், போன்றவர்கள் இந்தியப் படை காலத்தில் எப்படியான கஷ்டங்களை அனுபவித்தார்கள், எவ்வாறு அவற்றை எதிர்கொண்டார்கள் என்பன பற்றி எதிர்வரும் வாரங்களில் பார்க்க இருக்கின்றோம்.
அதேவேளை விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் வன்னி அலம்பில் காடுகளில் அனுபவித்த கஷ்டங்கள், பிரபாகரனைக் குறிவைத்து இந்தியப்படையினர் ஆப்பரேசன் திரீசூல் (Operation ‘Thrishul’ ) ஆப்பரேசன் வீரத் (Operation ‘Viraat’) ஆப்பரேசன் செக்மேட் (Operation Check-mate) என்ற பெயர்களில் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகள் பற்றியும், அந்த இராணுவ நடவடிக்கையில் இருந்து புலிகளின் தலைவர் எவ்வாறு தன்னையும் தன்னுடன் இருந்த போராளிகளையும் காப்பாற்றினார் என்ற வீர வரலாற்றையும் விரிவாகப் பார்க்க இருக்கின்றோம்.
தொடரும்.
nirajdavid@bluewin.ch
(நன்றி-L.SRI) GJKMEDIAWORKS TEAM 2012

Ingen kommentarer:

Legg inn en kommentar