புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களுடைய தலைக்கு ஒரு மில்லியன் ரூபாய் விலை (அவலங்களின் அத்தியாயங்கள்- 84) – நிராஜ் டேவிட்

1987ம் ஆண்டு ஒக்டோபர் 9ம் திகதி இரவு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மாலைச் செய்தியறிக்கை நிலமையின் தீவிரத்தை யாழ்ப்பாண மக்களுக்கு நன்றாகவே விளக்கியிருந்தது.
புலிகளுக்கு எதிராக இந்தியப்படைகள் போர் பிரகடனம் செய்திருக்கும் விடயம் செய்தியறிக்கையில் வெளியிடப்பட்டிருந்தது.
புலிகளை நீராயுதபாணிகளாக்கும் நோக்கத்துடன் இந்திய அமைதிகாக்கும் படையினர் களமிறக்கப்பட்டிருப்பதாக லங்காப் புவத்தை மேற்கோள் காண்பித்து அந்தச் செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதைவிட அதிர்ச்சிகரமான மற்றொரு விடயமும் அந்தச் செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடைய தலைக்கு ஒரு மில்லியன் ரூபாய் விலை அறிவிக்கப்பட்டிருந்தது.
புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை உயிருடனோ, அல்லது பிணமாகவோ பிடிக்கும் ஒருவருக்கு ஒரு மில்லியன் ரூபாய் பணம் பரிசாக வழங்கப்படும் என்று சிறிலங்காவின் அரச தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அறிவித்திருந்தார்.
நிலமையின் தீவிரத்தை இந்த அறிவிப்பு யாழ்மக்களுக்கு தெள்ளெனப் புரிய வைத்திருந்து.
புலிகளின் தலைவரைக் குறிவைத்து நகர்வு:

9ம் திகதி இரவு இந்தியப் படைகளின் சீக்கிய அதிரடிப்படைப் பிரிவினர் ஒரு இரகசிய அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார்கள். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களைப் பிடிப்பதற்கான அதிரடி நடவடிக்கையே அது. 
யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து சுமார் அரை மைல் தொலைவில் உள்ள பிரம்படி வீதியில் அமைந்திருந்த புலிகளின் முகாமிலேயே, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அவர்கள் தங்கியிருந்ததாக இந்தியப் படையினர் நம்பியிருந்தார்கள். இந்தியப் படையினருக்கும் புலிகளின் தலைவருக்கும் இடையிலான பல சந்திப்புக்கள் அந்த இடத்தில் நடைபெற்றும் இருந்தன.
9ம் திகதி காலை புலிகளின் தலைவர் அந்த இடத்தில் தங்கியிருப்பதாக உளவுத் தகவல்கள் நம்பகரமான தரப்பில் இருந்து இந்தியப் படைத்துறைக்குக் கிடைக்கப் பெற்றிருந்தது. அதனால்தான் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களைக் கைதுசெய்யும் அந்த இரகசிய நடவடிக்கை திட்டமிடப்பட்டது.
ஒக்டோபர் 9ம் திகதி இரவு 9 மணியளவில் சுமார் 25 சீக்கிய அதிரடிப்படையினர் இந்தப் பிரம்படி முகாமைக் குறிவைத்து நகர்வொன்றை மேற்கொண்டிருந்தார்கள்.
பிரபாகரன் அவர்கள் தங்கியிருந்ததாகக் கூறப்படும் பிரம்படி வீதிக்கு சுமார் அரை கி.மீ. தொலைவில் உள்ள பிரவுன் வீதியில் வசித்துவந்த ஒருவரின் வீட்டுக்கதவு நள்ளிரவில் தட்டப்பட்டது. அவர் கதவைத் திறக்க வந்தபோது, வாசலில் உள்ள விளக்கை அணைத்துவிட்டு வெளியில் வருமாறு உத்தரவிடப்பட்டது. அவ் உத்தரவுக்கமைய செய்துவிட்டு வெளியில் வந்தவருக்கு பலத்த அதிர்ச்சி ஏற்பட்டது.
அவரது வீட்டைச் சூழ இராணுவ சீருடையில் ஆயுதம் தரித்த சுமார் 25 சீக்கியப் படை வீரர்கள் காணப்பட்டார்கள். அவர்கள் அனைவரினதும் முகங்களிலும் பதட்டம் காணப்பட்டது.
யாழ் கோட்டைக்கு எப்படிச் செல்லவேண்டும் என்று அவர்கள் கேட்டார்கள். அந்த நபர் வழியைக் காண்பித்ததும், மதில்களைத் தாண்டிக் குதித்தபடி அவர்கள் அந்த திசையை நோக்கி புறப்பட்டார்கள். சிறிது நேரத்தில் காணாமல் போனார்கள்.
புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் தங்கியிருந்த பிரம்படி வீதி முகாம் மீது அதிரடித் தாக்குதல் ஒன்றை மேற்கொண்டு, புலிகளின் தலைவரைக் கைது செய்தும் திட்டத்துடன் அவர்கள் முயற்சி ஒன்றை மேற்கொண்டதாகவும், ஏதோ காரணத்தினால் அது கைகூடவில்லை என்றும் மக்கள் மத்தியில் மறு நாள் செய்தி பரவியிருந்தது.
இந்தியாவின் ஜனநாயக முகமூடியை கிழித்த நடவடிக்கை
அக்டோபர் 10ம் நாள், ஊரடங்கு உத்தரவுடனும், முன்னைய நாள் இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தியப் படையினரின் இரகசிய நடவடிக்கைகள் பற்றிய செய்திகளுடனும் உதயமானது.
அன்று காலை யாழ் கோட்டையில் நிலைகொண்டிருந்த இந்தியப் படைகளின் மராத்திய காலட்படையின் முதலாவது பட்டாலியன் ( First Battalion of Maharatta Light Infantry ) நகர்வொன்றை மேற்கொள்ள ஆரம்பித்தது.
இந்தியாவின் ஜனநாயக முகமூடியை கிழித்த ஒரு நகர்வென்று இந்தியப் படையின் அந்த நகர்வைக் குறிப்பிடலாம்.
யாழ் குடாவில் இயங்கிவந்த பத்திரிகைக் காரியாலயங்களையும், அச்சகங்களையும் முடக்கிவிடும் நோக்கத்துடன் இந்தியப் படையின் அந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டது.
யாழ்பாணத்தில் இயங்கிவந்த ஈழமுரசு, முரசொலி, ஈழநாடு போன்ற பத்திரிகை காரியாலயங்களைச் சுற்றிவழைத்த இந்தியப் படையினர் அந்த பத்திரிகை அலுவலகங்களை குண்டு வைத்துத் தகர்த்தார்கள்.
உலகின் மிகச் சிறந்த ஜனநாயக் கட்டமைப்பைக் கொண்ட நாடு என்று பெருமையாகத் தன்னைக் குறிப்பிட்டுக் கொள்ளும் இந்தியா, 1987ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் திகதி யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட இந்த இழி செயலை, சரித்திரம் என்றுமே மன்னிக்க மாட்டாது.
எந்த ஒரு நாடுமே யுத்த காலங்களில் கூட நடுநிலையான பத்திரிகைகளின் மீது கைவைத்தது கிடையாது. அதுவும் பகிரங்கமாகச் சென்று பத்திரிகைக் காரியாலயங்களை குண்டுவைத்து தகர்ப்பதென்பது, எந்த ஒரு ஜனநாயகவாதியினாலும் ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒரு நடவடிக்கை என்றுதான் கூறவேண்டும்.
பத்திரிகை தர்மம் பற்றியும், ஜனநாயகம் பற்றியும், மனித உரிமைகள் பற்றியும் பேசிக்கொள்ளும் தார்மீக உரிமையை இந்தியா முற்றாகவே இழந்துவிட்ட ஒரு சந்தர்ப்பம் என்று அதனைக் குறிப்பிட முடியும்.
அதனைத் தொடர்ந்து இந்தியப் படையினர் உதயன் பத்திரிகை காரியாலயத்தையும் சுற்றிவளைத்து சீல் வைத்தார்கள். பின்னர் கொக்குவில் பிரதேசத்தில் இயங்கிவந்த புலிகளின் நிதர்சனம் தொலைக்காட்சி நிலையத்தையும் கைப்பற்றி நிலை கொண்டார்கள்.
யாழ் நிலவரம் தொடர்பாக நடுநிலையான செய்திகள் வெளிவர வேண்டும் என்பதற்காகவே தாம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டதாக, தமது இந்த நடவடிக்கைகளுக்கு இந்தியா பின்னர் நியாயம் கற்பித்திருந்தது. ஆனால் உண்மையிலேயே, அடுத்த சில நாட்களில் யாழ் குடாவில் இந்தியப் படைகள் ஆட இருந்த கோர தாண்டவம் பற்றிய உண்மையான செய்திகள் வெளிவராமல் தடுக்கவே இந்தியா இப்படியான கீழத்தரமான செயல்களை மேற்கொண்டிருந்தது.
புலிகளின் அலுவலகங்கள் முற்றுகை
இதே தினத்தில் சென்னையில் புலிகளின் அலுவலகங்கள் சிலவற்றைச் சுற்றிவளைத்த இந்தியப் பொலிஸார், புலிகளுக்கு சொந்தமான ஆறு தொலைத் தொடர்பு கருவிகளையும் கைப்பற்றி இருந்தார்கள்.
இதே தினத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்த விடுதலைப் புலிகளின் சில முகாம்களும் இந்தியப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டன. சில விடுதலைப் புலி உறுப்பினர்களும், அப்பாவித் தமிழ் இளைஞர்களும் இந்தியப்படையினரால் கைதுசெய்யப்பட்டார்கள். இதுபற்றி அன்றைய ஆல் இந்திய ரேடியோ மாலைச் செய்தியில் 131 விடுதலைப் புலி உறுப்பினர்கள் இந்தியப்படையினரால் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களிடம் இருந்து 27 ஆயுதங்களையும் இந்தியப்படையினர் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தியாவின் யுத்தப் பிரகடனம்:
1987ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ம் திகதி: விடுதலைப் புலிகளுக்கு எதிரான தனது யுத்தத்தை இந்தியா உத்தியோகபூர்வமாகப் பிரகடனப்படுத்தியது.
தனது தங்கையைக் காப்பாற்ற, தனது தாயைக் காப்பாற்ற, தனது மண்ணை எதிரியிடம் இருந்து காப்பாற்ற ஆயுதம் தரித்து விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியா அன்றைய தினம் மேற்கொள்ள ஆரம்பித்த இராணுவ நடவடிக்கை நாட்கணக்கில் அல்ல, மாதக்கணக்கில் அல்ல, வருடக்கணக்கில் அல்ல இரண்டரை தசாப்தகாலமாக நடைபெற்று, தற்பொழுதும் தொடர்ந்துகொண்டிருக்கின்றது.
விடுதலைப் புலிகளுக்கும் இந்தியப்படையினருக்கும் இடையில் மிக மும்முரமான யுத்தம் ஆரம்பமாகியது. இந்த யுத்தத்தின் அத்தியாயங்கள் இரத்தத்தால் எழுதப்பட்டு ஒரு நீண்ட வரலாறு.
அந்த வரலாற்றின் மேலும் சில பக்கங்களை தொடர்ந்து வரும் வாரங்களில் விரிவாகப் பார்ப்போம்.

   
தொடரும்...
nirajdavid@bluewin.ch(நன்றி-L.SRI) GJKMEDIAWORKS TEAM 2012

Ingen kommentarer:

Legg inn en kommentar