குடும்பக் கட்டுப்பாடு இங்கு இப்போது அவசியம்தானா?


essay கட்டாய குடும்பக் கட்டுப்பாடு செய்ய நிர்ப்பந்திக்கப்பட்ட பெண் ஒருவர் பின்னர் உயிரிழந்து போன பரிதாபம் அவரது கிராம மக்களிடையே அறச் சீற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவர்களின் நியாயத்தைப் புறந்தள்ளிவிட முடியாது.
 
கிளிநொச்சி மலையாளபுரத்தைச் சேர்ந்த சதீஸ்குமார் மஞ்சுளா என்ற 26 வயதான இளம் தாயின் இறப்பு, கட்டாயக் கருத்தடை செய்துகொண்டதனால்தான் ஏற்பட்டது என்று மருத்துவ அறிக்கைகள் இதுவரையில் உறுதி செய்யாதபோதும், இந்த விடயம் உணர்வுபூர்வமான சர்ச்சைக்குரியது என்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை. 
மஞ்சுளா உள்ளிட்ட பெண்கள் பலருக்குக்  கட்டாயக் கருத்தடை செய்யப்பட்டதா இல்லையா என்ற விசாரணையின் அறிக்கை வெளிவரவேண்டிய நிலையில் தமிழர்கள் இப்போது கருத்தடை செய்து கொள்வது அவசியமா என்கிற கேள்வியை அவரது இழப்பு எம்மிடம் விட்டுச் சென்றிருக்கிறது.
 
மலையாளபுரத்தில் கட்டாயக் கருத்தடை செய்யப்பட்டது என்ற சர்ச்சைகளின் பின்னணியில் கருத்தடை செய்வதற்கு முன்னர் குறித்த பெண்ணினதும் கணவனினதும் முழுச் சம்மதத்தையும் எழுத்து மூலமாகப் பெறுவதற்கான படிவங்களை வடமாகாண சுகாதார அமைச்சு தயாரித்து வருவதாக அறிய முடிகின்றது. எதிர்காலத்தில் கருத் தடை செய்யும்போது இதுபோன்ற சர்ச்சைகள் ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக அமைச்சு இந்த நடவடிக்கையில் இறங்கியிருப்பது புரிகிறது. 
என்றாலும், 30 வருடகாலப் போரால் அழிந்து போன பின்னணியில் பல பத்தாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்ட பின்னணியில் கருத்தடையை தொடர்ந்து ஊக்குவிப்பது சரியானதா என்கிற முக்கியமான கேள்வியை வடமாகாண சுகாதார அமைச்சு சீர்தூக்கி ஆராய்வது அவசியம். 
 
போரில் சுமார் ஒரு லட்சம் வரையிலானவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாத நிலையிலும் மேலும் பல லட்சம் பேர் வெளிநாடுகளுக்குச் சென்று விட்ட  நிலையிலும் இங்குள்ள தமிழர்கள் மேலும் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஊக்கு விப்பதே மாகாண சுகாதார அமைச்சின் உண்மையான தற்போதைய கடமையாக இருக்க வேண்டும்.
 
சளி இருக்கிறது என்பதற்காக மூக்கை அறுத்து விட முடியாது. அதேபோல போசாக்குக் குறைபாட்டால் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள், பல பெற்றோருக்குக் குழந்கைளை வளர்ப்பதற்குப் போதிய பொருளாதார வசதிகள் இல்லை என்ற காரணங்களுக்காகப் பல பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடாது என்று தடுப்பதும், கூறுவதும், ஊக்குவிப்பதும் நியாயமல்ல.
 
பிறக்கும் பிள்ளைகளுக்குத் தேவையான போசாக்கை எப்படிக் கொடுப்பது, பொருளாதாரப் பலம் அற்ற பெற்றோரின் பிள்ளைகளை போதிய போசாக்குடன் வளர்ப்பதற்கு எப்படி உதவுவது என்பவற்றை தீர ஆராய்ந்து அவற்றுக்கான திட்டங்களைச் சுகாதார அமைச்சுத் தீட்ட வேண்டும்.
 
ஒன்று அல்லது இரண்டுக்கு மேற்பட்ட பிள்ளைகளைப் பெறும் பெற்றோருக்கு அரச உதவிகளை வழங்கி மேற்குலக நாடுகள் சில ஊக்குவிப்பது போன்று இங்கும் திட்டங்களைச் செயற்படுத்த முடியுமா என்று  குறிப்பிட்ட காலத்துக்காவது  10 ஆண் டுத் திட்டம், 20 ஆண்டுத் திட்டம் போன்று அமைச்சுச் சிந்திக்க வேண்டும்.
 
படையினரின் மூன்றாவது பிள்ளைக்கு ஒரு லட்சம் ரூபாவைக் கொடுத்து இலங்கை அரசே ஊக்கு விக்கும் நிலையில், போரால் அழிந்து போன மக்கள் கூட்டத்தை மீண்டும் கட்டியயழுப்பும் திட்டத்தில் கருத்தடையை ஊக்குவிப்பது நியாயமானது அல்ல.
 
வடமாகாண சுகாதார அமைச்சு இது விடயத்தில் விரைந்து சிந்தித்து தீர்க்கமான நடவடிக்கையில் இறங்க வேண்டும்.
(நன்றி-U) GJKMEDIAWORKS TEAM 2012

Ingen kommentarer:

Legg inn en kommentar