கூட்டமைப்பு இல்லாத தெரிவுக்குழு பிரச்சினையை தீர்க்கப்போவதில்லை

 essay
சமகால அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில் முடிவுகளை எடுப்பதற்காக கடந்த செவ்வாயன்று வவுனியாவில் நடைபெற்ற கூட்டமைப்பின் வடக்கு - கிழக்கு நாடாளுமன்ற
 உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள்  கலந்துகொண்ட கூட்டத்தில் இரு முக்கிய விடயங்கள் குறித்து கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.
ஒன்று, அரசமைப்புக்கான 13ஆவது திருத்தம் உட்பட அரசமைப்பில் திருத்தங்களைச் செய்வதற்காக அரசினால் அமைக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு. மற்றையது, தொகை மதிப்பு புள்ளி விவரத் திணைக்களத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ள 1983க்கும் 2009 மேக்கும் இடைப்பட்ட காலத்தில் இடம் பெற்ற சம்பவங்களால் காயமடைந்தோர், அங்கவீனமானோர், காணாமற்போனோர் தொடர்பான கணக்கெடுப்பு. 
நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் கூட்டமைப்பு பங்கேற்க வேண்டும். தெரிவுக்குழு மூலமே இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு என்று தெரிவுக்குழு அமைக்கப்பட்ட நாள்முதல் ஜனாதிபதி வலியுறுத்தி வருகிறார். தெரிவுக்குழுவுக்கு வருமாறு கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்து வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை வவுனியாவில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் கூட்டமைப்பின் பகிஷ்க ரிப்புத் தொடரப்போகிறது;  
 
பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க., தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி. ஆகியவை இல்லாமல் தெரிவுக் குழு தொடர்ந்து இயங்கப்போகிறது. அரசின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான ஜாதிக யஹல உறுமயவும், வட மாகாண சபைத் தேர்தலுக்கு முன்பு அரசமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை ஒழிக்க அரசு தவறிவிட்டதாகக் கூறி தெரிவுக்குழுவில் இருந்து வெளியேறியது.
 
இந்த நிலையில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையிலான தெரிவுக்குழு அர்த்தமற்ற ஒன்றாகிவிட்டது. வடமாகாணத்தில் மூன்றில் இரண்டுக்கு மேற்பட்ட உறுப்பினர்களுடன் பதவியேற்று தனது பலத்தை அதிகரித்துள்ள தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளான கூட்டமைப்பு இல்லாமல் எடுக்கப்படும் முடிவுகள் மூலம் இனப்பிரச் சினைக்குத் தீர்வு காணமுடியாது.
 
வடக்கில் இராணுவத்தை வைத்துக்கொண்டு தமிழ் மக்களின் நிலங்களை அபகரித்துக் கொண்டு, அரசமைப்பில் தமிழ் மக்களுக்கு சார்பாக உள்ள அற்ப, சொற்ப அதிகாரங்களைக்கூட பறிக்கப் போவதாகக் கூறிக் கொண்டு கூட்டமைப்பை தெரிவுக்குழுவுக்கு அழைத்தால் கூட்டமைப்பு அதற்கு இணங்கும் என்று எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?
 
""சமாதானத்தை விரும்பாத கூட்டமைப்பினரை தெரிவுக் குழுவுக்கு அழைப்பதில் பயனில்லை. இதனால் ஏற்படப்போகும் விளைவுகளை சம்பந்தன் விரைவில் உணர்ந்துகொள்வார். அரசின் மீது நம்பிக்கை இருந்தால் தெரிவுக்குழுவில் கலந்து கொண்டு நல்லதொரு தீர்மானத்துக்கு வரமுடியும்'' - என்கிறார் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல.
 
ஆகவே, வவுனியாக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் மற்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்த கருத்து ஆகியவை கூட்டமைப்பினதும்  அரசினதும் அரசியல் தீர்வு தொடர்பான நிலைப்பாடுகள் கடினமடைவதையே கோடிகாட்டுகின்றன. 2009 மே மாதத்துக்குப் பின்னர் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் அரசின் மீது கூட்டமைப்பு முழுமையாக நம்பிக்கை இழந்துவிட்டது.
 
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் நோக்கம் அரசுக்குக் கிடையாது. மார்ச் மாத ஜெனிவாக் கூட்டத்தைக் கருத்தில் கொண்டே அரசு கூட்டமைப்பை தெரிவுக்குழுவுக்கு  அழைக்கிறது. 
 
இனங்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும், போரின் இறுதியில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலான இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம் வலியுறுத்துகிறது.
 
ஜெனிவா மாநாட்டுக்கு இன்ன மும் மூன்று மாதங்கள் கூட இல்லாத நிலையில் இதனை மனதில் கொண்டே அரசு தெரிவுக்குழுவுக்கு வருமாறு கூட்டமைப்புக்கு அழைப்பு விடுவதுடன் தொகை மதிப்புப் புள்ளி விவரத் திணைக்களம் ஊடாக காணாமற்போனோர், காயமடைந்தோர் தொடர்பான விவரங்களையும் சொத்து இழப்பையும் கணக்கெடுத்து வருகிறது. 
 
இன்றைய நிலையில் தெரிவுக்குழுவால் பயன் எதுவும் ஏற்படப்போவதில்லை. மூன்றாம் தரப்பு உதவியுடன் அரசும் கூட்டமைப்பும் நேரடிப் பேச்சுகளில் ஈடுபடுவது ஓரளவு பயனை அளிக்கமுடியும். தெரிவுக்குழு மூலம் தமிழ் மக்களை அரசியல் ரீதியில் தோற்கடிக்க அரசு திட்டமிட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டை நாம் அலட்சியம் செய்துவிட முடியாது.
(நன்றி-U) GJKMEDIAWORKS TEAM 2012

Ingen kommentarer:

Legg inn en kommentar