மீண்டும் ஒருமுறை ஏமாறுவதற்கு தமிழ் மக்கள் தயாரா...?

essay உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு, பிறநாடுகளில் தீர்வுகளைத் தேடுவதை விட, தேசிய நல்லிணக்கத்துக்கும் அபிவிருத்திக்கும் எமது நாட்டுக்கு உள்ளேயே உகந்த தீர்வைக் காண்பதற்கு அரசாங்கத்துடன் கைகோர்க்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அறைகூவல் விடுத்துள்ளார்,நாட்டின் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­.
நாட்டின் அரசாளும் மன்றமான, மக்கள் சபையான நாடாளுமன்றில் வைத்து, தமது ஆகப்பிந்திய அறைகூவலை அவர் விடுத்திருக்கிறார்.
 
வடக்கில் மாகாணசபை உருவாக்கப்பட்டு, அங்கு ஜனநாயகம் தோற்றுவிக்கப்பட்ட சூழ்நிலையிலேயே புதிய ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது- வடக்கில் அரச சேவைகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. விசேட சலுகைகள் அடிப்படையில் அரசசேவைகளுக்கு ஆள்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இத்தகைய ஒரு சூழமைவில், எங்கள் நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு, பிறதேசங்களில் தீர்வைத் தேடுவது பொருத்தமானது அல்ல-
ஏனைய நாடுகளுக்கு முன்மாதிரியான வகையில், எமக்குள்ள பிரச்சினைகள் குறித்து நாமே பேசித் தீர்வு ஒன்றைக் காண வேண்டும்- என்று நாட்டின் அதிஉயர் அரசியல் தலைவர் தெரிவித்துள்ளார்.
 
தேசிய நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்திக்கும் உள்நாட்டிற்குள் தீர்வைக் காண்பதற்கு இந்த மன்றத்தில் உள்ள சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும்-
வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும்-
எம்மோடு கைகோர்த்துச் செயற்படுமாறு அழைப்பு விடுக்கிறேன்- என்று கனதியான முறையில் கருத்து வெளியிட்டுள்ளார் நாட்டின் அதி உயர் அதிகாரங்களைக் கொண்டுள்ள ஜனாதிபதி அவர்கள்.
 
நாட்டின் அதிஉயர் அரச தலைவரின் மேற்கண்ட அழைப்பு, தமிழ் மக்களுக்கு உரிய, அவர்களிடம் இருந்து பிரித்து எடுக்க இயலாத, அரசியல் மற்றும் சிவில் உரிமைகளை வழங்குவதற்கான இதய சுத்தியுடனான அழைப்பா என்பது மிக ஆழமாக ஊடுருவி ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும்.
 
காரணம், இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் தொட்டு, சிங்கள மக்களின் அரசியல் தலைவர்கள் அத்தனை பேரும், தமிழ் மக்களைக் கிள்ளுக் கீரைகளாகக் கருதியே செயற்பட்டு வந்திருக்கிறார்கள்; அரசியல் நடத்தி இருக்கிறார்கள் என்பது மறைக்க முடியாத, அழித்து எழுத முடியாத சரித்திரமாக உள்ளது.
 
டி.எஸ்.சேனநாயக்கா காலம் தொட்டு சகல கொழும்பு அரசுகளும், சிறுபான்மையினரிடமிருந்து பிரிக்க முடியாத, ஜனநாயக உரிமைகளை, அவர்களுக்குச் சேர வேண்டிய சம ஆட்சி உரிமைகளை புறந்தள்ளியே செயற்பட்டு வந்திருக்கிறார்கள்; வருகிறார்கள்.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­வும் அந்தப் பாதையில் நடந்து செல்கிறார் என்பதுடன், அது அவரது இப்போதைய இரண்டாவது ஆட்சிக் காலத்திலும் தொடர்கிறது.
 
ஜனாதிபதி மஹிந்த விடுத்துள்ள இப்போதைய அழைப்பும் அந்த வகை சார்ந்ததே என்று கொள்வது தப்பன்று.
 
இன நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு அரசாங்கத்துடன் பேசுவதற்கு தமது தரப்புத் தயார் என்றும்-
விடயங்களை ஒத்துமொத்தமாக ஆராயாமல், குறிப்பிட்ட பிரச்சினைகள் குறித்துக் குழுக்களாகப் பேசி இணக்கம் காண்பதற்கு-
ஜனாதிபதியும், அரசாங்கமும் உடன்பட்டு இருப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சம்பந்தன் தலைவர் சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னரே,தெரிவித்திருந்தார்.
மீண்டும் அரச தரப்பில் பழைய பல்லவி பாடப்பட்டிருக்கிறது.
 
இந்த இடைவெளியில் இந்து ஆலயங்களும், இஸ்லாமிய மக்களின் வழிபாட்டு இடங்களான மசூதிகளும், கிறிஸ்தவ தேவாலங்களும் சேதமுறச் செய்யப்பட்டன.
 
அந்த வகையில், அனர்த்தங்கள் இன்னமும் முற்றாக ஓயவில்லை. அவற்றைத் தடுத்து நிறுத்தும் வல்லமை அரசிடம் இல்லை என்றே உணர, முடிவுசெய்ய வைக்கிறது. தமிழ் மக்களின் தானைத்தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்துடன், எஸ்.டபிள்யு. ஆர்.டி. பண்டாரநாயக்கா செய்துகொண்ட ஒப்பந்தம், கால்வேக்காட்டோடு தூக்கி வீசப்பட்டது. இந்த அனுபவமும் அவலங்களும் முற்றாக ஒழிக்கப்படும் என்று தமிழ் அரசியல் தலைவர்கள் நம்பக் கூடும். ஆனால் தமிழ் மக்கள் அதனை நம்பமாட்டார்கள்.
 
காலத்துக்குக் காலம் தென்னிலங்கைத் தலைவர்களால் ஒப்பனை செய்து அரங்கேற்றப்படும் அரசியல் திருகுதாளங்கள், அவர்கள் மீது வெறுப்பையும் விரக்தியையுமே வளர்த்தன; இப்போதும் அதுவே மீண்டும் தலையயடுத்துள்ளது எனலாம்.
ஐக்கிய நாடுகள், மனித உரிமைகள் பேரவையில் இன்னும் மூன்று மாதங்களில், இலங்கை அரசு குறித்து சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணையின் காரத்தைக் குறைப்பதற்கான முன் முயற்சிகளில் இதுவுமொன்று எனக் கருதுவது தப்பன்று.
(நன்றி-U) GJKMEDIAWORKS TEAM 2012

Ingen kommentarer:

Legg inn en kommentar