குருடராய்த் தமிழர்கள்!- கந்தரதன்


இன்று சிறீலங்கா அரசின் கோரத்தாண்டவத்திற்கு மத்தியில் தமிழ் இனம் அல்லாடிவருகின்றது. எந்தளவிற்கு தமிழ் மக்கள் மீது சிங்களம் அடக்குமுறைகளை மேற்கொள்ள முடியுமோ அந்தளவிற்கு தனது திட்டத்தை நிறைவேற்றி வருகின்றது. அத்துடன் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களையும் சிங்களவர்களுக்கு சேரவைப்பதற்கே சிறீலங்கா அரசு தொடர்ந்தும் தீவிர முயற்சி எடுத்து வருகின்றது.
இவ்வாறே, திருகோணமலை, தென்னமரவாடிக் கிராமத்தில் அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுவது தொடர்பாக இப்பகுதியில் முன்னர் குறிப்பிட்டிருந்தோம். தற்போது அப்பகுதியில் எஞ்சியுள்ள தமிழ் மக்களும் அங்கிருந்து வெளியேறவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தளப்பட்டுள்ளமை தொடர்பான அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடக்கு - கிழக்கு இணைப்புக் கிராமமாகவுள்ள தென்னமரவாடிக் கிராமம் தமிழர்களிடமிருந்து பறிபோகும் நிலையில் உள்ளமையை வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உறுதிப்படுத்தியுள்ளார். திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள இக்கிராமம் தன் பாரம்பரிய தமிழ் அடையாளங்களை இழக்கின்ற நிலையை முகம்கொடுத்துள்ளதாக ரவிகரன் மேலும் தெரிவித்தார்.
குறித்த பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் அழைப்பை ஏற்று அக்கிராமத்திற்குச் சென்ற ரவிகரன், அக்கிராம நிலையை முற்றாக ஆய்வுசெய்த பின்னரே இவ்விடயத்தை கவலையோடு தெரிவித்துள்ளார். 1984 ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் அங்குள்ள மக்கள் தமது வயல் நிலங்களில் விவசாயம் செய்து அறுவடை செய்ய குறுகிய காலம் இருந்தபோது ஏற்பட்ட கலவரத்தால் இடம்பெயர்ந்து, தற்போது மீளக்குடியேறியுள்ள நிலையில், அவர்களின் பூர்வீக நிலங்கள் பல சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
சிறுகடல், வயல்நிலங்கள், தோட்டக் காணிகள் என அனைத்துவகை வாழ்வாதார வழிகளும் முடக்கப்பட்டு, நுட்பமான முறையில் மக்கள் மேல் இடப்பெயர்வு அவசியநிலை திணிக்கப்பட்டு வருகின்றது. ஊர்காவற்படையினரால் அபகரிக்கப்பட்ட 22 ஏக்கர் நிலத்தில் பயிர்ச்செய்கை இடம்பெறுகிறது. இது பற்றி உயர் அதிகாரிகள் பலருக்கு அறிவித்தும் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
பனிக்கவயல்குளம் என்ற சிறியகுளம் சுமார் 45 ஏக்கர் நிலத்துக்கு விவசாயம் செய்ய உதவியது. ஆனால் தற்போது அக்குளத்தையும் அபகரித்து மூடி விவசாயம் செய்கிறார்கள். கொல்லவெளி, பெருமாள்பிலவு, துவரமுறிப்பு, பனிக்கவயல் , நல்லதண்ணி, ஊத்துப்பிலவு ஆகிய பகுதிகளில் சுமார் 300 ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டு வயல் செய்கிறார்கள். அப்பகுதியில் 240 ஏக்கர் வயல் நிலத்தில் 120 ஏக்கர் நிலப்பரப்புக்கான (1975 ஆம் ஆண்டு 60 பேருக்கு வழங்கப்பட்ட) அனுமதிப்பத்திரத்தை தமிழ் மக்கள் இன்னமும் வைத்திருக்கிறார்கள். அனுமதிப்பத்திரம் உள்ள காணிகளை இப்படி அத்துமீறி அபகரித்துள்ள செயல் சட்டவிரோதமாகும். அத்துமீறிய சிங்களவர்களோடு நேரில் கதைத்தபோது, குறித்த காணியைக் குத்தகைக்குத் தருவதாகக் கூறினார்கள். யார் நிலத்தை யார் யாருக்கு குத்தகைக்கு விடுவது? என பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் விசனம் தெரிவிக்கப்பட்டது.

அதுமட்டுமல்ல, தென்னமரவாடிக்கு சொந்தமான ஆற்றுப்பகுதியில் 2 இடத்தில் படகுகளுக்கான இறங்குதுறை அமைத்து, அதில் தொழில் செய்யும் சிங்கபுர கிராம சிங்களவர்களுக்காக தொழில் உபகரணங்களை பாதுகாத்து வைப்பதற்குரிய அறைகள் அமைத்து வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதுவும் அத்துமீறிய செயலாகும்.
இது தவிர இன்னோரிடத்தில், சுமார் 20 இற்கு மேற்பட்ட ஓடங்களைக் கொண்டு வந்து சட்டவிரோதமான முறையில் படுப்பு வலைகளை பயன்படுத்தி தொழில் செய்கிறார்கள். தென்னமரவாடிக் கிராமமூடாகவே பல சிங்களக் கிராமங்களுக்கு மின் இணைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. எனினும் இக்கிராமத்திற்கு இன்னமும் மின்சாரம் வழங்கப்படவில்லை. அனைத்து வாழ்வாதார வழிகளையும் முடக்கி , மக்களை இடம்பெயர வைக்கும் தந்திர நோக்கம் இங்கு செயற்படுத்தப்படுவது நன்றாக தெரிகிறது.
அதை விட உள்ளூர் மாட்டுத்தளமும் பறிபோய்விட்டதால் மாடு மேய்க்கக் கூட முடியாத நிலையில் தாம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலையுடன் தெரிவித்தனர். தென்னவன் எனும் தமிழ் மன்னன் ஆட்சி புரிந்த, அவன் மரபடி வந்த தென்னமரவாடிக்கிராமம், தமிழர் கைகளை விட்டுப்போகும் நிலையில் இருப்பது கவலையளிக்கிறது. இப்பகுதியில் தமிழர் இருப்பை உறுதிப்படுத்த சம்பந்தப்பட்ட தரப்பினர் முன்வரவேண்டும். என்று ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வன்னிப் பாடசாலைகளில் படையினர் தலையீடுகள் அதிகரித்துள்ளன. அவற்றைத் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. வன்னியில் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்ட பின்னர் படையினரின் தலையீடுகள் அதிகரித்துள்ளன. அவை மாணவர்களின் கற்றலுக்கு இடையூறாக இருந்து வருகின்றன. படைத் தலையீடு இன்றி மாணவர்கள் இயல்பாகக் கற்றலில் ஈடுபடுவதற்கான சூழல் உருவாக்கப்படவேண்டும். அவ்வாறு செய்வதாயின் பாடசாலைகளில் படையினரின் தலையீடுகள் தவிர்க்கப்படவேண்டும். குறிப்பாகப் பாடசாலை நேரங்களில் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெறும் படைநிகழ்வுகள் தடுத்துநிறுத்தப்பட வேண்டும்.  இவ்வாறு இலங்கை ஆசிரியர் சங்கப் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தில் வன்னியிலேயே சிறந்த வைத்தியசாலையாகத் திகழ்ந்த மல்லாவி வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படாமல் அலைக்கழிக்கப்படுவதாக அந்த வைத்தியசாலையைச் சூழவுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த வைத்தியசாலை தற்போது பொறுப்பற்ற விதத்தில் நடத்தப்பட்டு வருவதாலேயே இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சாதாரண நோய்க்கு வைத்தியம் பார்க்க குறித்த வைத்தியசாலைக்கு செல்கின்ற நோயாளர்களை, வைத்தியர்கள் வவுனியா, மாஞ்சோலை மற்றும் கிளிநொச்சி வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைப்பதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இதனால் தாங்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதுடன் போக்குவரத்துச் செலவுகள், தங்குமிடங்கள் பெரும் பிரச்சினையாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். காய்ச்சல் என்று வைத்தியசாலைக்கு சென்றாலும் அங்குள்ள வைத்தியர்கள் எங்களை நோயாளர் காவு வண்டியில் ஏற்றி கிளிநொச்சிக்கோ வவுனியாவுக்கோ அனுப்புகின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தில், மல்லாவி மருத்துவமனை முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு மட்டுமன்றி கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கும் சிறப்பான சேவையாற்றியதையும் அங்கு அதிக விடுதிகள் அமைக்கப்பட்டு நோயாளர்களுக்கு சிறந்த மருத்துவ சேவை வழங்கப்பட்டதையும் இங்குள்ள மக்கள் நன்றியுடன் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய  மாவட்டங்களிலுள்ள பிரதேச வைத்தியசாலைகள் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனை போன்றவற்றில் ஆளணிப் பற்றாக்குறை நிலவுவதாகவும் இதனால் தாங்கள் பூரணமான சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியவில்லையென்றும் இந்த மாவட்டங்களிலுள்ள பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இங்கு நிரந்தர வைத்தியர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
போரினால் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ள வன்னிப் பிரதேசத்தில் மருத்துவத்துறையில் தொடர்ந்தும் பெரும் பின்னடைவுகளே இருந்துவருகின்றது. இந்த நிலை மாற்றப்படவேண்டும். இங்குள்ள வெற்றிடங்களுக்கு பொருத்தமானவர்களை நியமிப்பதன் மூலம் நாங்கள் சிறப்பான மருத்துவ சேவை பெறுவதை மருத்துவத்துறைசார் அதிகாரிகள் உறுதிப்படுத்தவேண்டும் என்றும் மேற்படி பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் சுகாதாரத் தேவையை மேம்படுத்துமாறு தமது பிரதேசங்களுக்கு அவ்வப்போது வருகை தருகின்ற மருத்துவத்துறைசார் அதிகாரிகளிடம் தாங்கள் பல தடவவை கோரிக்கை விடுத்தததைச் சுட்டிக்காட்டியுள்ள மேற்படி மக்கள் அது குறித்து இதுவரை உறுதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லையென்றும் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு, ‘கண்ணிருந்தும் குருடர்கள் போன்று’ எம் இனத்தின் மீது திணிக்கப்படும் சிறீலங்காவின் திட்டமிட்ட வன்முறைகள், தமிழ் மக்களை மீண்டும் ஆயுதம் ஏந்தவைக்கும் என்பதே உண்மை. உலகெங்கும் பரந்து வாழும் எம் தமிழ் உறவுகளே இது சிந்திக்கும் நேரமல்ல நாம் ஒருமித்து செயற்படவேண்டிய நேரம்.
(சூறையாடல்கள் தொடரும்) 
நன்றி: ஈழமுரசு

Ingen kommentarer:

Legg inn en kommentar