இஸ்ரேலியர்கள் பற்றி ஒரு விரிவான பார்வையை இந்தத் தொடரில் நாம் சற்று ஆழமாகப் பார்த்துவருகின்றோம். இஸ்ரேலியர்கள் பற்றியும், அவர்களது வரலாறு பற்றியும், அவர்கள் பெற்ற மிகப் பெரிய விடுதலை பற்றியுதம் ஈழத் தமிழராகிய நாங்கள் நிச்சயம் அறிந்து வைத்திருக்கவேண்டும்.
அதுவும் குறிப்பாக எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் என்று நாம் சோர்ந்துபோய் என்ன செய்வது என்பது புரியாமல் விழித்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில், எம்மைவிட மோசமான இழப்புக்களைச் சந்தித்த ஒரு இனமான யூத இனம் எப்படி நிமிர்ந்தது என்றும், பல முள்ளிவாய்க்கால்களைக் கடந்தும் எப்படி அந்த இனம் பயணம்செய்து ஒரு விடுதலையைப் பெற்றது என்றும் ஒப்பிட்டுப் பார்ப்பது காலத்தின் தேவை என்றே நான் நினைக்கின்றேன். பாபிலோனிய ஆக்கிரமிப்பின் பொழுது இஸ்ரேலியர்கள் நாடுகடத்தப்பட்டது பற்றியும், புலம்பெயர்ந்த இஸ்ரேலியர்கள் நாடு திருப்பியது பற்றியும் கடந்த வாரங்களில் விரிவாகப் பார்த்திருந்தோம்.
இந்தச் சம்பவம் இற்றைக்கு 2500 வருடங்களுக்கு முன்னர் நடந்தது.
கி.மு.538ம் ஆண்டில் முதலாவது தொகுதி இஸ்ரேலியர்கள் நாடு திரும்பினார்கள்.
புலம்பெயர்ந்த இஸ்ரேலியர்கள் தமது தேசத்திற்குத் திரும்பிய பொழுது, ஜெருசலேம் என்பது கிட்டத்தட்ட தரைமட்டமாகவே காட்சி தந்தது. சாலமோன் கட்டிய தேவாலயம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டிருந்தது. ஜெருசலேம் கோட்டை இருந்த இடமே தெரியவில்லை. மண்மேடாகக் காட்சி தந்தது.
தாவீதின் காலத்திலும், சாலமோனின் காலத்திலும் யூதர்களால் சேகரிக்கப்பட்ட செல்வங்கள் எதிரிகளால் சூறையாடப்பட்டு, ஜெருசலேம் என்பது கிட்டத்தட்ட சுடுகாடாகக் காட்சி தந்து கொண்டிருந்தது.
ஜெருசலேமை ஆக்கிரமித்திருந்த பாபிலோனியர்களால் நாடுகடத்தப்பட்ட இஸ்ரேலியர்கள் போக எஞ்சியிருந்தவர்கள் மிருந்த ஏழைகளாக, பாமரர்களாக, கல்வி அறிவு அற்றவர்களாக, மாறியிருந்தார்கள்.
யூதர்கள் என்கின்ற அடையாளத்தை அவர்கள் இழக்க ஆரம்பித்திருந்தார்கள்: யூதர்களின் ஒரே கடவுள் வழிபாடான யாவே வழிபாட்டைக் கைவிட்டு, அன்னிய தெய்வ மற்றும் விக்கிரக வழிபாடுகளை அவர்கள் மேற்கொள்ள ஆரம்பித்திருந்தார்கள்.
யூதர்களின் கலாச்சாரம், அவர்களது தனித்துவம், எதிர்கால இருப்பு அனைத்துமே அவர்களது தாயகமான ஜெருசலேமில் படிப்படியாக அழிந்து கொண்டிருந்தது.
பாபிலோனிய ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து வேறு இன மக்கள் ஜெருசலேமிலும் யூதேயாவின் பல பகுதிகளிலும் பலவந்தமாகக் குடியேறியிருந்தார்கள். யூதர்களது தாயகப் பிரதேசங்களில் யூதர்களின் பெரும்பான்மையைக் குறைக்கும் நோக்குடன் வேறு இன மக்களும் பாபிலோனியர்களால் அங்கு குடியமர்த்தப்பட்டிருந்தார்கள்.
இதனால் பலவிதமான கலாச்சாரச் சீர்கேடுகள் யூதேயாவிலும் ஜெருசலேமிலும் மலிந்து காணப்பட்டன. இப்படியான சந்தர்ப்பத்தில்தான் புலம்பெயர் யூதர்கள் தாயகம் திரும்பியிருந்தார்கள்.
சுடுகாடாகக் காட்சிதந்து கொண்டிருந்த ஜெருசலேமை மீண்டும் மனிதர்கள் வாழும் ஒரு தேசமாக, யூதர்களின் ஒரு அடையாளமாக மாற்றுவதுதான் புலம்பெயர்ந்து பின்னர் நாடு திரும்பிய யூதர்களின் முதலாவது பணியாக இருந்தது.
வந்ததும் வராததுமாக செருபாவேல் என்கின்ற மனிதனின் தலைமையில் ஜெருசலேமில் ஒரு தேவாலயத்தை கட்ட ஆரம்பித்தார்கள். எத்தனையோ தடைகள், இழுபறிகள். அனைத்தையும் கடந்து 18 வருடங்களின் பின்னர் தேவாலயம் கட்டி முடிக்கப்பட்டது.
பாபிலோனிய ஆட்சிக் காலத்தில் புலம் பெயர்ந்த யூதர்கள் கட்டம் கட்டமாக நாடு திரும்ப ஆரம்பித்தார்கள். இதில் முதலாவது நாடு திரும்புதல் கி.மு. 538 ல் இடம்பெற்றதாக முன்னர் பார்த்திருந்தோம்.
இரண்டாவது தொகுதியினர் கி.மு.457ம் ஆண்டு எஸ்ரா தலைமையில் இடம்பெற்றது. இந்த தொகுதியினர் நாடு திரும்பியதைத் தொடர்ந்துதான் ஜெருசலேமில் இஸ்ரேலியர்கள் யூதமத வழிபாட்டு முறைகளை அறிமுகப்படுத்தி அதனை அனைத்து யூதர்களும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கவேண்டும் என்று நடைமுறையைக் கொண்டுவந்தார்கள்.
யூத தேவாலயமும் அதனுடைய நிர்வாகமும் யூத மக்களுடைய வாழ்க்கையில் மிகுந்த செல்வாக்கு செலுத்தும் ஒரு மையமாக மாற ஆரம்பித்தது. இந்த ஏற்பாட்டை புலம்பெயர்ந்து பின்னர் நாடு திரும்பிய யூதர்களே செய்தார்கள்.
ஏனென்றால் அந்தக் காலத்தில் ஜெருசலேம் முற்றுமுழுதாக பாரசீகத்தின் ஆட்சியின்; கீழேயே இருந்தது. அதனால் ஆட்சி அதிகாரம் என்கின்ற விடயத்தில் பாரசீக அரசன் வைத்ததுதான் சட்டம்.
ஆனால் பாரசீக மன்னன் யூதர்கள் தமது மத விடயங்களை மேற்கொள்வதற்கு தாராளமாக அனுமதி வழங்கியிருந்தான். அதனால் யூத மதச் சட்டங்களை அடிப்படையாக வைத்து ஒருவித நிழல் அரசாங்கத்தை மறைமுகமாக நடாத்த ஆரம்பித்திருந்தார்கள் புலம்பெயர்ந்து, பின்னர் நாடு திரும்பியிருந்த யூதர்கள்.
அதனைத்தொடர்ந்து கி.மு.444ம் ஆண்டு நெகேமியா என்கின்ற யூத ஆன்மீகத் தலைவர் தலைமையில் நாடு திரும்பிய மற்றொரு புலம்பெயர் யூதர்கள் ஜெருசலேமின் மதிலைக் கட்டி முடித்தார்கள்.
பாரசீக ஆட்சியின் பொழுது புலம்பெயர் யூதர்களின் நாடுதிரும்புதல் பெரிய மாற்றத்தையும், புதிய வாழ்வையும் இஸ்ரேலுக்கு ஏற்படுத்தியிருந்தது. ஆனாலும் யூதர்களின் அடிமை வாழ்க்கை என்பது அவர்களை விட்டு முற்றாகவே விலகியது என்று கூற முடியாது.
பாரசீகர்களின் ஆட்சியின் பொழுது ஓரளவு சுததந்திரம் அனுபவித்த யூதர்கள் அடுத்து அடுத்து தொடர் துன்பங்களை அனுபவிக்கவேண்டிய காலச் சூழல் ஏற்பட ஆரம்பித்தது.
ஆக்கிரமிப்புகளும், அடிமைச் சீவியங்களும், இன அழிப்புக்களும், புலம்பெயர் அவலங்களும் யூதர்களை தொடர்ந்து துரத்திக்கொண்டுதான் இருந்தன. ஓரிரு ஆண்டுகள் அல்ல… இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட ஆண்டுகள் இப்படியான அவல வாழ்க்கை யூதர்களை ஓட ஓட விரட்டிக்கொண்டே இருந்தது. அவை அனைத்தையும் கடந்து யூதர்கள் ஒரு விடுதலையைப் பெற்றார்கள். அது எப்படி?
அதுபற்றித்தான் தொடர்ந்து வரும் வாரங்களில் நாங்கள் ஆராய இருக்கின்றோம்.
தொடரும்..
nirajdavid@bluewin.ch
Ingen kommentarer:
Legg inn en kommentar