யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனுடன் ஒரு நேர்காணல்
கே: நீங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள அதேவேளையில், ஓர் ஊடகத்துறை சார்ந்தவராகவும் உள்ளீர்கள். அந்தவகையில் அனுராதபுரம், வவுனியா ஆகிய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ்க் கைதிகளை நீங்கள் சந்தித்த போது உங்களிடம் ஏனைய அரசியல் வாதிகளைவிட வேறு பட்ட உணர்வுகள் தோன்றியிருக்கக் கூடும். அவை பற்றி நீங்கள் விளக்க முடியுமா?
ப: நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்பதை விட ஓர் ஊடகத்துறையைச் சேர்ந்தவன் என்பதை விட நான் ஒரு மனிதனாக நின்று அனுபவித்த உணர்வுகளை உங்கள் முன் முதலில் வைக்கவிரும்புகிறேன்.
நாங்கள் பெற்றோர், பிள்ளைகளுக்கிடையேயான பாசம், சகோரங்களுக்கிடையேயுள்ள பாசம் போன்ற குடும்ப உறவுகளாலும் சொந்த பந்தங்கள், அயல், நண்பர்கள், சடங்குகள் போன்ற சமூக உறவுகளாலும் பிணைக்கப்பட்டவர்கள்.
அதுமட்டுமன்றி, பிள்ளையைத் தொட்டிலில் போடுதல், தலை தொடல், பூப்பெய்திய பெண்களுக்குத் தலைக்குத் தண்ணி வார்த்தல், மணப் பெண்ணைத் தத்துக்கொடுத்தல், கைப்பிடித்தல், தாலி கட்டல், பிறந்த குழந்தைக்குத் துடக்குக் கழித்தல், கொள்ளி வைத்தல், எட்டுச் செலவு, அந்தியேட்டி செய்தல், திவசம் கொடுத்தல், பிதிர்க்கடன் நிறை வேற்றல் எனப் பாரம்பரிய சடங்குகள் எங்கள் பண்பாட்டுவேர்களில் பிரிக்க முடியாத அம்சங்கள்.அந்தச் சிறைச்சாலை மதில்களும் இரும்புக் கதவுகளும் எமது இரத்தத்தில் ஊறிவிட்ட உறவுகளைப் பேணல், சடங்குகளைப் பேணல் போன்ற பண்பாட்டு அம்சங்களிலிருந்து அந்தக் கைதிகளைப் பிரித்துவிட்ட கொடுமையை நான் அங்கு உணர்ந்து கொண்டேன். எனக்கு அது ஒருபுறம் தாங்க முடியாத வேதனையையும் ஆட்சியாளர்கள் மீது எல்லையற்ற கோபத்தையும் ஏற்படுத்தியது. இப்படியான மரபுசார் நடவடிக்கைகளிலிருந்து பிரிக்கப்படுதல் எவ்வளவு தூரம் அவர்களுக்கு மன அழுத்தத்தையும் வேதனையையும் ஏற்படுத்தும் என்பதைப் புரிந்து கொண்டேன்.ஒரு மனிதனாக அங்கு என்னால் இவைகளை உணரமுடிந்தது. அதே வேளையில், ஓர் ஊடகத்துறை சார்ந்தவனாக இப்படியான அப்பட்டமான மனித உரிமை மீறல்களையும் ஓர் இனத்தின் தனித்துவத்தையே அவர்களுக்கு மறுக்கும் கொடுமையையும் உலகின் முன் அம்பலப்படுத்துவது என முடிவு செய்தேன். இன்னொருபுறம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எனக்குள்ள அதிகாரங்களையும் உரிமைகளையும் பாவித்து அவர்களின் விடுதலைக்கும் விமோசனத்துக்கும் முனைப்புடன் செயற்படுவது எனவும் உறுதி பூண்டேன்.
கே: எல்லோரும் இந்தக் கைதிகள் சமூகத்திலிருந்து தடுத்து வைக்கப்பட்டிருப்பதைத்தான் பார்ப்பார்கள். நீங்கள் மேலும் ஆழமாக எமது இனத்தின் மரபு சார் அம்சங்களிலிருந்தும் கூட பிரிக்கப்பட்டிருக்கும் கொடுமைகளையும் அதனால் ஏற்படும் மனத் தாக்கங்களையும் பார்த்திருக்கிறீர்கள். நீங்கள் அவர்களைச் சந்தித்தபோது அவர்களின் உணர்வுகள் எப்படி இருந்தன?
ப: முதல் முதலில் அவர்களைச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் நான் என்ற வகையில் அவர்கள் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்திருந்தனர். அந்தச் சந்திப்பு அவர்கள் தங்கள் துயரங்களைத் தற்காலிகமாக மறந்து கொஞ்சநேரம் சந்தோஷமாக இருக்கக் கிடைத்த ஒரு சந்தர்ப்பம் என நினைப்பது போலவே எனக்குத் தோன்றியது. அவர்கள் தங்கள் மன உணர்வுகளையும் பிரச்சினைகளையும் என்னிடம் மனம்விட்டுப் பேசினர்.1500 சிங்களக் கைதிகள் மத்தியில் அதிலும் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு, போதைவஸ்துக் குற்றங்கள் போன்ற கொடிய குற்றங்களின் பேரில் தடுத்து வைக்கப் பட்டவர்கள் மத்தியில் சிங்களம் தெரியாத 55 தமிழ்க் கைதிகள் இருப்பது எவ்வளவு சிரமமான காரியம் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். ஒவ்வொரு கூண்டிலும் ஐந்து பேர் வீதம் பதினொரு கூடுகளில் இவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்க ளுக்கு சட்ட உதவிகள் கூட வழங்கப்படுவதில்லை. அப்படி வழங்கப்பட்டாலும் சிங்கள மொழி பேசும் சட்டத்தரணிகளே ஏற்பாடு செய்யப்படுகின்றனர்.ஒரு பக்கம் இவர் கள் சொல்வதை அவர் களால் விளங்கிக் கொள்ள முடியாது. மற்றது அவர்கள் இனவாதிகளாக இருந்து விட்டால் விளைவுகள் வேறு விதமாக மாறிவிடும் என்ற அச்சம் கைதிகளிடம் உண்டு.
கே: இந்தப் பிரச்சினைக்கு எப்படித் தீர்வு காண முடியும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?
ப: அவர்களே அதன் தீர்வுக்கான கோரிக்கையை முன்வைத்தார்கள். நான் அதை நிறைவேற்றுவது தொடர்பாக முயற்சிப்பதாக வாக்களித்துள்ளேன்.
கே: ஒரு தீர்வுத் திட்டத்தை அவர்களே முன் வைப்பது அனுபவபூர்வமானதும் ஆக்கபூர்வமானதாகவும் அமைய வாய்ப்புக்கள் உண்டு. அவர்கள் எப்படியான தீர்வை முன் வைத்தனர்?
ப: அவர்கள் தங்களைத் தமிழ்ப் பகுதிகளில் உள்ள சிறைகளுக்கு மாற்றும்படி கேட்டார்கள். அது தங்களைச் சந்திக்க வரும் உறவினர்களின் சிரமங்களைக் குறைக்கும் எனவும் மொழி தெரியாதமையால் தமக்கு ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்கும் எனவும் தெரிவித்தனர். மேலும் அது தமக்கு வசதியான தமிழ் சட்டத்தரணிகளை ஏற்பாடு செய்யவும் வசதியாயிருக்கும் எனவும் தெரிவித்தனர்.பல வழக்குகள் சாட்சிகள் ஒழுங்காக வராமையால் இழுபடும் நிலையில் உள்ளன. வழக்குகள் தமிழ்ப் பகுதிகளுக்கு மாற்றப்படும்போது இப்பிரச்சினையும் தீர்க்கப்பட்டுவிடும்.
கே: இது தொடர்பாக என்ன நட வடிக்கை எடுக்கவுள்ளீர்கள்?
ப: இதுபற்றி நான் சட்டமா அதிபருடனும் நீதி அமைச்சருடனும் ஆக்கபூர்வ மான பேச்சுகளில் ஈடுபடவுள்ளேன்.
கே: ஏற்கனவே இப்படியான கோரிக்கைகளை முன்வைத்து வெலிக்கடை, மகசின், களுத்துறைபோன்ற சிறைகளில் உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களை நடத்தினர். அப்போதெல்லாம் பல அரசியல்வாதிகள் அங்கு சென்று பல வாக்குறுதிகளை வழங்கினர். இதுவரை அவை எவையும் நிறைவேற்றப்பட்டதாகத் தெரியவில்லையே...?
ப: உண்மைதான்! அதற்காக நாம் முயற்சிக்காமல் இருக்க முடியாதல்லவா? இனவாதம் மேலோங்கியிருக்கும் இந்
நாள்களில் ஒவ்வொரு விடயத்தையும் பலத்த சிரமங்கள் மத்தியிலேயே நிறை வேற்ற வேண்டியுள்ளது.ஆனால், நான் தனிப்பட்ட முறையில் உரியவர்களுடன் தொடர்பு கொண்டு முயற்சிக்கும் அதேவேளையில், தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கும் அரசுக்கும் இடையே இடம்பெறும் பேச்சுக்களின் போதும் இப்பிரச்சினைகளை முன்வைப்பேன்.தற்போது நீதியமைச்சராக இருப்பவர் ஒரு சிறுபான்மைச் சமூகத்தவர் என்ற வகையில் எமக்கு சில வாய்ப்புகள் ஏற்படக்கூடும் என நினைக்கிறேன்.
கே: இலங்கையின் பல சிறைகளி லும் விசாரணைகளே இன்றிப் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அனுராதபுரம் சிறையில் இப்படியானவர்கள் இருக்கிறார்களா? இருந்தால் அவர்கள் தொடர்பாக என்ன நடவ டிக்கை எடுக்கப் போகிறீர்கள்?
ப: ஆம். இங்கும் எவ்வித குற்றச்சாட்டும் சுமத்தப்படாமல் 8 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பொலிஸாரின் பொறுப் பற்றதனம், சட்டமா அதிபர் திணைக்களத் தினரின் அசிரத்தை என்பன எத்தனையோ பேரின் வாழ்க்கையையும் பொது நீதியையும், மனித நேயங்களையும் பாழடித்துக் கொண்டிருக்கின்றன. இவற்றைப் பார்க்கும்போது ருஷ்ய எழுத்தாளர் டான்ஸிடாய் அவர்களின் புத்துயிர்ப்பு நாவல்தான் நினைவுக்கு வரும். நீதிபதி தன் மனைவியுடன் ஏற்பட்ட கோபத்துடன் வந்து கதாநாயகருக்கு ஒரு சிறிய குற்றத்துக்கு கடும் தண்டனை விதிக்கிறார். சிறைச்சாலை அதிகாரிகளின் பொறுப்பின்மை காரணமாக அவர் பற்றிய கோவைகள் தொலைந்துவிட அவன் தண்டனைக்காலம் முடிந்து பல காலமாகியும் சிறையில் வாடுகிறான். அது கொடுங்கோலன் ஜார் சக்கரவர்த்தி யின் காலம். ஆனால், எமது நாட்டிலும் ஜனநாயகத்தின் பேரால் அதே நிலைமை தான் நிலவுகிறது. எப்படியிருப்பினும் நான் சட்டமா அதிபர் திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளேன்.
கே: அவர்களின் மனநிலை எப்படி இருக்கிறது?
ப: அடைக்கப்பட்ட கதவுகளின் பின்னால் ஒரு கூண்டுக்குள் ஐந்து பேர் மாறி மாறி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? தங்களுக்குத் தமிழ்ப் பத்திரிகைகள் கூடக் கிடைப்பதில்லை என என்னிடம் முறையிட்டனர். உடனடியாகவே நான் அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகருடன் கதைத்து தமிழ்ப் பத்திரிகைகள் கிடைக்க ஏற்பாடு செய்தேன்.ஒரு கைதியின் தாய் சுகவீன முற்றிருப்பதாக முதல்நாள் அறிவித்தல் கிடைத்த தாம். அவர் தாயைப் பார்க்கப்போக அனுமதி கோரினாராம். ஆனால், அடுத்த நாளே தாயார் இறந்துவிட்ட செய்தி கிடைத் ததாம். இதைக் கண்ணீர்மல்க என்னிடம் கூறினார்.இவர்களில் ஒருவர் ஆயுள் தண்டனைக் கைதி. அவர் இன்னொரு பெண் கைதியை சிறையிலேயே திருமணம் செய்தாராம். இப்போது இருவரும் வெவ்வேறு சிறைகளில் வைக்கப்பட்டிருக்கிறார்களாம்.
கே: அதாவது தாய் பிள்ளைப் பாசம், கணவன் மனைவி உறவு போன்ற இயல்பான மனித உணர்வுகள் கூட நசுக்கப்படுகின்றன. இது ஓர் அப்பட்டமான மனித உரிமை மீறல் அல்லவா...?
ப:உண்மைதான். ஆனால், இந்தக் கொடுமைகளைச் சட்ட பூர்வமாக நியாயப்படுத்தப் பயங்கரவாதத் தடைச் சட்டம், அவசர காலச் சட்டம் என்பன துணை நிற்கின்றன.
கே: அப்படியானால் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவசரகாலச் சட்ட நீடிப்புக்கு ஆதரவு வழங்குகின்றனரே?
ப: அவர்கள் தெரிவு செய்யப்பட்டமை தமிழ்மக்களால் என்பது உண்மைதான். ஆனால், அவர்கள் பதவி வகிப்பது, அரசின் தமிழ் மக்கள் விரோத நடவடிக்கை களை நியாயப்படுத்தவே.அவர்கள் நினைத்தால் அமைச்சரவை யிலோ, நாடாளுமன்றக் குழுவிலோ வாதாடி இந்தக் கைதிகளின் விடுதலைக்கு வழி வகுத்திருக்கலாம். ஆனால், அவர்களுக்குஅதற்கான மனமும் இல்லை. அதற்கான துணிவும் இல்லை.அந்தக் கைதிகள் என்னிடம் இராணு வத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தி நேரடி யாகப் போரிட்ட முன்னாள் புலி உறுப் பினர்கள் முதலமைச்சராகவும் அமைச் சராகவும் இருக்கும்போது சிறு குற்றச் சாட்டுக்களின்பேரில் நாங்கள் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றமை எந்த வகையில் நியாயம் என்று கேட்டனர்.ஓர் இளைஞர் தான் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டிருந்தால் 2 வருடம் சிறைத் தண்டனையை முடித்து வெளியேறியி ருக்கலாம் எனவும் குற்றத்தை ஏற்க மறுத் தமையால் நான்கு வருடங்களாகத் தடுப் பில் இருக்கின்றார் எனவும் தெரிவித் தார். இதுதான் அங்கு நிலவும் யதார்த்தம்.
கே: வவுனியா சிறைச்சாலைக் கைதி களுடனான சந்திப்புப் பற்றி...?
ப: அவர்களுக்கும் இதே பிரச்சினை கள் அத்தனையும் உண்டு. மேலதிக மாக அவர்கள் தண்ணீர்ப் பிரச்சினை பற் றிக் கூறினார்கள். இதுபற்றிச் சிறைச்சாலை அத்தியட்சகருடன் கதைத்தபோது, அங்கு ஒரு குழாய்க்கிணறு அமைக்க நிதி இல்லையெனத் தெரிவித்தார். நான் சில நலன் விரும்பிகளின் உதவியுடன் அந்த நிதியை நானே பெற்றுத் தருவதாகக் கூறியுள்ளேன்.
கே: இந்தச் சந்திப்புத் தொடர்பாக இறுதியாக என்ன கூற விரும்புகிறீர்கள்?
ப: இதுவரை அவர்கள் தடுத்து வைக் கப்பட்டிருந்தமை பற்றி அறிந்தோம். ஆனால், அவர்கள் மனங்கள் சிறைப்பட்டு காயப் பட்டு குருதி ஒழுகுவதை அங்கு சென்ற பின்பு தான் என்னால் அறிய முடிந்தது.
அவர்களின் விடிவுக்கு முழுமூச் சுடன் ஈடுபட வேண்டிய பெரும் பொறுப்பு எங்களுக்கு உண்டு என்பது எமக்கு ஆணித்தரமாகவே உணர்த்தப்பட்டுள்ளது.
Ingen kommentarer:
Legg inn en kommentar