தமிழக முகாம்களிலுள்ள ஈழத் தமிழருக்கு விடிவுகாலம் கிட்டுமா...?

 





அரசியல் தலைவர்களுக்கும் முதல்வர் கருணாநிதிக்கும்கடிதங்கள் எழுதியதுதான் மிச்சமாகியுள்ளது. எமக்கு விடிவுகாலம் கிடைக்க எந்தவிதமானநடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று குமுறுகின்றனர் ஈழத்தமிழ் அகதிகள்.
 இலங்கையில் போர் நடைபெற்ற காலப் பகுதியில் கடல் வழியாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்றவர்கள் இன்று போர் முடிவடைந்த நிலையிலும் தமது சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் அன்றாட வாழ்வில் பல துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். விமானக் குண்டு மழை, ஆட்லறி ஷெல்லின் சிதறல்களுக்குள் இருந்து தமது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு சொந்த ஊரையேவிட்டு ஓடியவர்கள். இன்னும் அவர்களுக்கான நிலையான இருப்பிடம் கிடைக்கவில்லை.  இன்னும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். 
 
கடலில் மாண்டனர் சிறையில் வாடுகின்றனர்
இடம்பெயர்ந்து படகு மூலம் சென்ற வர்களில் பலர் கடலில் மாண்டனர். பலர் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் வாடுகிறார் கள். பலர் இராமேஸ்வரம் கரை சேர்ந்த னர். இராமேஸ்வரம் கரை சேர்ந்தவர்கள் தமிழ்நாடு அகதி முகாம்களில் வாடுகின் றனர். தப்பிப் பிழைத்துச் சென்றும் தமக்கு இன்றுவரை சந்தோஷமான வாழ்வை வாழ முடியவில்லை எனக் கதறி அழுகின்றனர். தமது பிள்ளைகளின் எதிர்காலம் பற்றியும், அவர்களின் வாழ்வு முறை களைத் தமது சொந்த ஊருக்கே வந்து பழக்கிக் கொள்ள ஆசைப்படுகின்றனர். மிகப்பெரிய நிறைவேறாத கனவு உல கில் வாழ்கின்றனர். தமது எதிர்காலம் எப்படி அமையப் போகின்றது என்று தெரியாமல் விரக்தியின் விளிம்பில் நாளைக் கழிக்கின்றனர்.ஈழத் தமிழர்களுக்கு இந்தியா எந்த வேளையும் உதவி செய்யும் என்ற நம்பிக்கையில் இடம்பெயர்ந்து கடல் ஏறியவர்களுக்கு தமிழ்நாட்டு அரசு கூட எந்தவிதமான உதவிகளும் செய்யாது  கை விரித்துள்ளது.

இந்திய அரசு மீது நம்பிக்கை வைக்கமுடியாது
ஈழத் தமிழர்களின் அழிவுக்குப் பெரும் பங்காற்றிய இந்திய அரசு இலங்கைத் தமிழர்களுக்கு நல்ல விடிவைப் பெற் றுக் கொடுக்கும் என்று நினைக்க முடியாது. இடம்பெயர்ந்து இந்திய தமிழ் நாடு அகதிமுகாம்களில் இருக்கும் இலங்கை மக்களின் வாழ்வாதார முன் னேற்றத் திலும் அவர்களின் எதிர்காலம் பற்றியும் எள்ளளவும் சிந்திக்காத இந்திய அரசு, எப்படி இலங்கையில் இருக்கும் தமிழ் மக்களுக்கு உதவி செய்யப்போகிறது. தமிழ்நாடு அகதி முகாம்களில் இருக்கும் இலங்கைத் தமிழ்க் குடும்பங்களில் ஒரு குடும்பத்துக்கு இந்திய அரசு வழங்கும் உதவித் தொகையானது எந்த மூலைக்குக் காணும் என்பதால் கல் உடைத்தல், மூடை ஏற்றுதல் போன்ற கட்டட வேலைகள் உட்படப் பல கஷ்டமான தொழிலில் பெண்களும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் கியூ பொலிஸாரின் நெருக்கடிகளுக்கும் தமிழ்நாடு பொலிஸாரின் அச்சுறுத்தல்களுக்கும் நாளாந்தம் முகம் கொடுத்து வருகிறார்கள். முகாம்களில் நடக்கும் பிரச்சினைகளை வெளியே சொல்ல முடியாமல் தமக்குள் சொல்லிப் புலம்புகின்றனர். அங்குள்ள முகாம்களில் உள்ள மக்களுக்கு வழங்கப்படும் வெளிநாட்டு நிறுவனங்களின் உதவிகள் கூட முழு மையாகக் கிடைப்பதில்லை. முகாம் பொறுப்பதிகாரிகளிலிருந்து அங்கு கடமைபுரியும் அலுவலகர்வரை இவர்களுக்குக் கிடைக்கக்கூடிய வசதிகள் அனைத்திலும் கை வைத்து விடுகின்றனர். முகாமில் நடப்பவை வெளியே சொல்லக்கூடாது என முகாம் அதிகாரிகளால் அடிக்கடி தமிழ் மக்கள் அச்சுறுத்தப்பட்டும் வருகின்றனர். 

நாளாந்தம் அச்சுறுத்தலால் நொந்துபோயுள்ளனர்
நாளாந்தம் நடைபெறும் இவர்கள் மீதான அச்சுறுத்தல் நடவடிக்கைகளால் கும்மிடிப் பூண்டி முகாம் மக்கள் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்து விட்டனர். மரங்களில் ஏறி நின்றும் தமது உண்ணாவிரதப் போரட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தைக் கைவிடுமாறு கோரிய தமிழ்நாடு பொலிஸார், அதனை ஏற்க மறுத்த முகாம் மக்களைப் பொல்லுகளால் அடித்துக் காயப்படுத்தினர். காயப்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதனால் அந்தப் போராட்டத்தை முகாம் மக்கள் கைவிட்டனர். இன்று வரை ஒன்றுமே செய்ய முடியாமல் குரல் கொடுக்க முடியாத அடிமைகளாக  அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். கூலித் தொழிலுக்காக அம் மக்கள் முகாமை விட்டு வெளியே சென்றுவரும்போது பொலிஸாருக்கு "மாமுல்" கொடுக்காமல் முகாமுக்குள் வரமுடியாது.
உலகத் தமிழர்களின் தலைவன் என்று வெளியே சொல்லிக் கொண்டிருக்கும் தமிழ் நாட்டின் முதல்வர் கலைஞர் கருணாநிதி கூட இந்த மக்களின் எதிர்காலம் பற்றி ஒரு துளியளவு கூட சிந்திப்பதாகத் தெரியவில்லை. திருமணம் ஆகாத பெண்களும், தொழில் இல்லாத ஆண்களும் அகதி முகாம்களில் அதிகமாகக் காணப்படுகின்றார்கள். 
புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள் முன் வந்து தமக்கு உதவி செய்வார்களா என எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள். 

பகடைக் காய்களாக ஈழத் தமிழர்கள்
இந்திய அரசியலுக்காக ஈழத் தமிழர்களைப் பகடைக் காய்கலாகப் பயன்படுத்தும் தமிழ்நாட்டு அரசு, தேர்தல் முடிவடைந்த பின்னர் அடுத்த தேர்தல் வரும் வரை மௌனம் காப்பது அவர்கள் அரசியல் இலாபத்தை எதிர்நோக்கி இருப்பது நன்கு தெரிகிறது. ஒரு மிக்ஷிக்கும், ரீவிக்கும் தேர்தலில் ஓட்டுப் போடும் தமிழ்நாட்டு மக்கள் இருக்கும் வரை தமிழ்நாடு அரசியல் நாற்றம் வெளியே வரமுடியாத குப்பைத் தொட்டியாகவே இருக்கப் போகின்றது. இதனை மாற்றக்கூடிய திராணி உள்ள தமிழ்த் தலைவன் இல்லாத வெறுமையின் இருப்பிடமாவே என்றைக்குமே தமிழ் நாடு இருக்கப் போகிறது என்பது தான் தமிழ் சமூகத்துக்குக் கிடைத்த வேதனையான செய்தியாகும். தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளின் விவரங்களைத் திரட்டி, அவர்களது புலம்பெயர் உறவுகளுடனான தொடர்புகளைக் கண்காணிக்க இலங்கையிலிருந்து சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர் தமிழகத்துக்குச் செல்லவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. 
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புலிகள் இன்னும் இருக்கிறார்கள் என்ற வலையமைப்பில் தொடர்ந்தும் தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள். விடுதலைப் புலிகளின் போராட்டத்தில் பங்கு கொள்ளாமல் இந்தியாவுக்கு இடம் பெயர்ந்த தமிழ் மக்களைக் கண்காணிப்பு நடவடிக்கை என்ற பெயரில் அவர்களுக்கு நெருக்கடிகளைக் கொடுப்பது எந்த விதத்தில் நியாயமாகும். 

வளமான வாழ்வுக்கு வழிசமைக்கப்படுமா?
அந்த மக்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து, அவர்களைக் குடியமர்த்தி, அவர்களின் வாழ்வை வளம் பெறச் செய்ய நடவடிக்கை எடுப்பதை விட்டு, புலிகள் என்ற சந்தேகத்தின் பெயரில் முகாமுக்குள் முடக்கும் நடவ டிக்கையில் என்னத்தை இலங்கை அரசு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது. தமிழ் நாடு அகதி முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்கள் வெளியிடங்களுக்குச் செல்வதற்குக் கூட வசதியில்லாத காரணத்தினால் முகாம்களுக்குள் முடங்கும் நிலை காணப்படுகின்றது. தமிழ்நாடு அகதி முகாம்களில் இருக்கும் இலங்கைத் தமிழ்மக்கள் விமானம் மூலம் இலங்கை வருவதற்கு வசதி இருப்பின் ஒரு வழிக் கடவுச்சீட்டை அங்கே உள்ள இலங்கைத் தூதரகத்தில் பெறவேண்டும். அப்படிப் பெறுவதற்கு அங்கு சென்றால் அந்த தூதரகத்தில் பணிபுரியும் சிங்கள அதிகாரிகளால் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியாமல் போகும் நிலை உள்ளது. அவர்கள் திருப்பி முகாமுக்கே அனுப்பி விடுவார்கள். நீ புலியாக இருந்த படியால் தான் இங்கே கடலால் வந்திருக்கின்றாய் எனக்கேட்கும் கேள்வியில் பலபேர் இலங்கைத் தூதரகத்துக்குச் செல்வதற்கே பயப்படுகின்றனர். பல தட வைகள் தூதரகத்துக்கு அலைந்து திரிந்து ஒரு வழி கடவுச் சீட்டைப்பெற்று, பின்பு கிளியரன்ஸ் எடுப்பதற்காக அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கிவிட வேண்டும். முதலில் பொலிஸ் நற்சான்றிதழ் எடுத்துக் கொண்டு சென்னையில் உள்ள மவுண்ட் வீதியில் உள்ள S.P அலுவலகத்துக்குச் சென்று கிளியரன்ஸ் படிவத்தை வாங்கி நிரப்பிக் கொடுத்து V.O. விடம், அதாவது கிராம அலுவரிடம் இருந்து கடிதம் வாங்கிக் கொண்டு R.I. யிடம் சென்று ஒரு கடிதத்தை வாங்கிக்கொண்டு தாம் பரத்தில் உள்ள தாலுகா அலுவலகத்துக்குச் சென்று கடிதத்தைப் பெற்று காஞ்சிபுரம் சென்று கலெக்டரிடம் சைன் வாங்கிக்கொண்டு மீண்டும் S.p அலுவலகத்துக்கு வந்து விண்ணப்பத்தைக் கொடுத்தால் விமானரிக்கெட்டைப் பதிவுசெய்து கொண்டு வரும்படி சொல்லுவார்கள். உடனே சென்று விமான ரிக்கெட்டை புக்கிங்செய்து விட்டு டிக்கெட்டைக் கொண்டு வந்து காட்டினதும் கிளியரன்ஸ் தருவார்கள். இதற்கிடையில் எல்லோருக்கும் லஞ்சம் கொடுத்தால்தான் இத்தனை கடிதங்களையும் பெறமுடியும். பணம் இல்லாதவர்கள் என்ன செய்ய முடியும். தமிழ் நாட்டில் வெளி இடங்களில் தங்குவதா இருந்தால் என்ன செய்ய முடியும்.
 
வாடகைக்குப் பணம் கூடுதலாக தேவைப்படும் சில குடும்பங்களின் உறவினர்கள் வெளிநாடுகளில் இருப்பதால் அவர்கள் மூலம் பணம் கிடைப்பதால் சிலரின் வாழ்க்கை நன்றாக இருக்கிறது. வெளிநாடுகளில் உறவு இல்லாதவர்கள் ஏதாவது கூலிவேலை செய்துதான் அங்கே வாழமுடியும்.சென்னையில் பல பகுதிகளில் அதாவது மடிப்பாக்கம், விருகம்பாக்கம், வளசரபாக்கம், போரூர், திருவாண்மையூர், அண்ணாநகர், தாம்பரம் போன்ற பகுதிகளிலும் திருச்சியில் கே.கே.நகர் போன்ற பகுதிகளிலும் அதிகமான இலங்கைத் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அங்கிருந்தவர்கள் வெளிநாட்டுக்குச் செல்வதற்கு முகவரிடம் பணம் கொடுத்து போய்ச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள் போக முடியாமல் பெருந்தொகைப் பணத்தைப் பறி கொடுத்தவர்களும் இருக்கிறார்கள்.வெளிநாடு செல்ல முற்பட்டபோது கைது செய்யப்பட்டு சிறையிலும் பலர் இருக்கிறார்கள். வெளிநாட்டில் உறவினர்கள் உள்ளவர்கள் பணம் கொடுக்க பலர் பலசரக்குக் கடைகளை அமைத்தும், தொலைபேசி நிலையங்களை அமைத்தும், வாகனப்போக்குவரத்தை மேற்கொள்ள வேண்டும். ஒளி அமைப்பு செய்தும் நகைக்கடைகள், தையல் கடைகள் போன்றவற்றை அமைத்து வாழ்க்கையை நகர்த்துகின்றனர். 

புலிச்சாயம் பூசப்பட்டு சிறைகளில் உள்ளனர்
விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தின் பெயரில் பலர் இன்னும் சிறைகளில் வாடுகின்றார்கள். கூடுதலானவர்கள் வேலூர் சிறையிலேயே அடைக்கப்பட்டுள்ளனர்.வருடக்கணக்கில் எந்தவித விசாரணைகளும் இன்றி வேலூர் சிறைகளில் அடைக்கப்பட்ட இலங்கைத் தமிழ் இளைஞர்கள் எப்போது விடிவு கிடைக்கும் என காத்துக்கிடக்கின்றார்கள். தமிழ்நாட்டு காவல் துறையினருக்கு பணத்தைக் காட்டினால் போதும். வாயைப் பிளந்து நிற்பார்கள் அந்தளவிற்கு லஞ்சம் அங்கு  தாண்டவம் ஆடு கின்றது. எந்தவித குற்றமும் செய்யாத வசதிபடைக்காத ஈழத்தமிழர்கள் இவர்களால் நிறையத் தடவைகள் தண்டனைக்கு ஆளாகி விடுகின்றார்கள். இராமேஸ்வரத்தில் உள்ள மண்டப முகாம், கும்முடிப் பூண்டி முகாம், சேலம் முகாம், மகாவல்லிபுரத்திலுள்ள முகாம், தட்டுவன் கொட்டி முகாம் மதுரையில் உள்ள முகாம் போன்ற முகாம்களில் பல வருடக் கணக்காக அடைப்பட்டுக் கிடக்கும் இலங்கைத் தமிழர்களைச் சொந்த இடங்களுக்குக் கொண்டு வர இந்திய அரசும், இலங்கை அரசு நடவடிக்கை எடுக்குமா? ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இலங் கைத் தமிழ் மக்கள் தமிழ் நாட்டில் உள்ள அகதி முகாம்களில் வாழ்கின்றனர். இந்த மக்கள் எப்பொழுது தமது சொந்த, ஊருக்குச் செல்வோம் என்று எதிர் பார்த்துக் காத்திருக்கின்றனர்.பல அரசியல் தலைவர்களிடம் கடிதம் மூலம் தமது பிரச்சினைகளை எழுதி அனுப்பியும் எந்த விதமான பதிலும் அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை. முதலமைச்சர் கருணாநிதிக்கு நிறையக் கடிதங்கள் அனுப்பியும் அவை எந்தவித பயனும் இல்லாமல் போய் விட்டதாகக் கூறுகின்றனர்.எங்களை இலங்கைக்கு அனுப்பும்படி எல்லோருக்கும் கடிதம் போட்டும் வீண் விரையமான நாள்கள் எமது வாழ்வை மீட்டெடுக்க வழி அமைக்குமா? என முகாம் மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

Ingen kommentarer:

Legg inn en kommentar