தென்னிலங்கை நோக்கி விரியும் அடக்குமுறைகள்

 essay
இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் இன்றுவரை தமிழ் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதும் அதற்கெதிரான குமுறல்கள் எழும் போதோ, போராட்டங்கள் வெடிக்கும் போதோ இன ரீதியான கொடிய அடக்கு முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதும் தமிழ் மக்களின் அனுபவமாக நிலை பெற்றுவிட்டது.
  
மலையக மக்களின் வாக்குரிமை பறிப்பு, தமிழ் பிரதேசங்களில் சிங்களக்குடியேற்றத் திட்டங்கள், தனிச்சிங்களச் சட்டம், 1972, 1978 அரசியலமைப்புச் சட்டங்கள் எனத் தமிழ் மக்களை இரண்டாம்தரப் பிரஜை களாக்கும் நடவடிக்கைகள் காலம் காலமாக இடம்பெற்று வருகின்றன. இப்படியான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக தமிழ் மக்கள் சாத்வீக வழிகளில் போராடிய போதெல்லாம் இனக்கலவரங்கள் என்ற பேரில் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகள் மூலமும், இராணுவ வன்முறைகள் மூலமும் அவை முறியடிக்கப்பட்டன. அப்படியான ஒரு நிலையிலே தமிழ்மக்கள் ஆயுதம் ஏந்திப் பேராட நிர்ப்பந்திக்கப்பட்டனர். அதுவே பெரும் போராக விரிவடைந்தது.
 
2001 செப்ரெம்பர் 11 இல் உலக வர்த்தக மையத்தின் மீதும் பென்ரகன் தலைமை செயலகத் தில் மேலும் நடத்தப்பட்ட தாக்குதலை அடிப்படையாக வைத்து அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் எனப் பிரகடனம் செய்து விடுதலைப் போராட்டங்களுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுத்தன. அதைச் சரியாகப் பயன்படுத்திய இலங்கையின் அரச தரப்பு தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தைப் பயங்கரவாதமாகச் சித்தரித்து உலகநாடுகளின் உதவியுடன் போரை விரிவுபடுத்தியது. இறுதியில் 2009 மே 19 ஆம் திகதியுடன் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
 
போர் இடம்பெற்ற காலப்பகுதியில் சிங்கள மக்கள் வாழ்க்கைச் செலவு உயர்வு, ஊதிய உயர் வின்மை, வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை போன்ற பல நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்தனர். எல்லாவற்றுக்கும் போர் காரணம் காட்டப்பட் டதுடன் சிங்கள மக்களின் கோபத்தைத் தமிழ் மக்கள் மேல் திருப்பிவிடும் வகையில் இனவெறி ஊட்டியும் வரப்பட்டது.இந்தப் போர் முடிவடைந்து இரு வருடங்கள் கடந்துவிட்டன. இந்த இரு வருடங்களில் போர் வெற்றி பற்றிய மாயையை நிலைநிறுத்தும் விழாக்களும் அபிவிருத்தி பற்றிய பிரசாரங்களுமே மேலோங்கி நிற்கின்றன. மக்கள் அவற்றில் மயங்கி நிற்க உணவு உட்பட அத்தியாவ சியப் பொருள்களின் விலைகள் மலை போல் உயர்ந்தன. வாக்களிக்கப்பட்ட ஊதிய உயர்வுகள் மறுக்கப்பட்டன. வேலையற்றோர் தொகை அதிகரிக்க ஆரம்பித்தது. இவற்றுக்கு எதிரான போராட்டங்கள் எழாமல் இல்லை. ஆனால் அவை ஆயுதப்படைகள் மூலம் அரசின் குண்டர்களாலும் வன்முறை மூலம் அடக்கப்பட்டன. அந்தப் போராட்டங்கள் நாட்டின் அபிவிருத்தியைக் குழப்ப ஐக்கிய தேசியக் கட்சியும்  ஜே.வி.பியும் மேற்கொள்ளும் சதி நடவடிக்கைகள் எனப் பிரசாரம் செய்யப்பட்டன. சிங்கள மக்களில் ஒரு பகுதியின ரும் அதை நம்பினர். ஆனால் தனியார் துறையின ருக்கு ஓய்வூதியம் வழங்குவது என்ற பேரில் ஊழியர்களின் சேவைக்காலம் சேமிப்பு நிதியான ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பவற்றை அரசு அபகரிக்க முயன்றபோது பெரும் எதிப்புணர்வு எழும்பியது.
 
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் போராட்டக் களத்தில் இறங்கினர். அவர்கள் நடத்திய ஆர்பாட்டப் பேரணி மீது பொலிஸாரும் காடையர் களும் இணைந்து தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார். 240 இற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்தனர்.இது தென்னிலங்கையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தத் தாக்குதலைக் கண்டித்துப் பல ஆர்பாட்டங்கள் இடம்பெற்றன. நிலைமை மோசமடை யவே தாக்குதலை முன்னின்று நடத்திய இரு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரிய சம்பவத்துக்குப் பொறுப்பேற்று தான் பதவி விலகிக் கொண்டார். உத்தேச ஓய்வூதியத் திட்டமும் கைவிடப்பட்டது.மேலோட்டமாகப் பார்க்கும் போது அரசு நடத்தி முடித்த சம்பவங்களுக்காக மனம் வருந்துவது போலவும் தவறு செய்தவர்கள் தனிப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் என்பது போலவும், அரசு அவர்களைத் தண்டிக்கிறது போலவும் தோன்றும்.
 
ஆனால் ஆழ்ந்து கவனிக்கும் போது இப்படியான போராட்டங்கள் இனி எழ முடியாதவாறு ஒரு இறுக்கமான நிலையை உருவாக்குவதற்காகவே இந்தத் தற் காலிகப் பின்வாங்கல் என்பதை புரிந்து கொள்ள முடி யும். இதற்கான அடித்தளங்கள் உருவாக்க இப்போதே நட வடிக்கைகளும் பிரசாரங்களும் தொடங்கிவிட்டன.இந்தப் போராட்டத்தை ஜே.வி.பியே பின்னணி யில் நின்று நடத்தியதாகவும் இது மீண்டும் நாட்டில் 1988, 1989ஆம் காலப்பகுதிகளில் இடம்பெற்ற இரத்தக்களரி போன்று ஏற்படுத்த முயல்வதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது. அது மட்டும்மன்றி அனைத்து இலங்கை மாணவர் அமைப்பின் தலைவரான சஞ்சீவ் பண்டாரவே பின்னணியில் நின்று வன்முறைகளைத் தூண்டி விட்டவர் எனவும் கூடப் பிரசாரம் செய்யப் படுகிறது. இதேவேளையில் கட்டுநாயக்க சம்பவம் தொடர்பாக விசாரித்த ஒரு ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இது தன் விசாரணையில் சஞ் சீவ் பண்டார உட்பட சில தொழிலாளர் அமைப்பின் முக்கியஸ்தர்கள் குற்றம் காணப்படலாம். சில சமயங் களில் கலவரங்களைத் தூண்டியது, அமைதியைக் குலைத்தது போன்ற காரணங்கள் கூறப்பட்டு அவர் கள் கைதுசெய்யவும் படலாம். மேலும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தொழிற்சங்கத்தினர் மூலம் தொழிலாளர் களின் ஐக்கியத்தை சீர்குலைக்கவும் தொழிலாளர்கள் மத்தியில் மோதல்களை உருவாக்கவும் திட்டமிட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம். எல்லாவற்றுக் கும் மேலாக தொழிலாளர்களின் உரிமைகளுக்காக உரத்துக் குரல்கொடுப்பவர்கள் மீது பயங்கரவாத முத்திரையும் குத்தப்படலாம். இன்று தென்னிலங்கை யில் வாழ்க்கைச் செலவு உயர்வுக்கு எதிரான போராட் டங்கள், மாணவர் போராட்டங் கள், மருத்துவத் துறையி னரின் போராட்டங்கள், தனியார்துறை ஊழியர்களின் போராட்டங்கள் என்பன ஆங்காங்கே வெடித்து வருகின்றன.
 
இன்று இலங்கை அரசு உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் என்பவற்றைத் திருப்திப்படுத்தும் வகையில் அரச செலவினங்களைக் குறைத்தல் என்ற பெயரில் ஊதிய உயர்வு வழங்காமை, மருத்துவம் கல்வி போன்றவற்றுக்கான செலவினங்களைக் குறைத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இது மேலும் மேலும் மக்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தவே செய்யும். இப்படியான நிலைமையில் போராட்டங்கள் எழுச்சி பெறுவது தவிர்க்க முடியாத நியதி ஆகிவிடும். இதன் வளர்ச்சி எகிப்து, டுனிஷியா போன்ற ஒரு நிலைமைக்கு இட்டுச் சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
 
இதேவேளையில் அரசு இந்த நிலைமைகளை உணரவில்லை என்று சொல்லிவிட முடியாது. அதற் கமைவாகவே வியூகங்களை வகுத்து செயற்பட்டு வருகிறது. அவ் வியூகத்தை விட்டு கை மீறிப் போன ஒரு விடயமாகவே கட்டுநாயக்க சம்பவம் பார்க்கப்படுகிறது. ஆனால் அரசு இதிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டு இன்னொரு முறை இப்படியான சம்பவம் இடம் பெறா வண்ணம் அவதானமாக இருக்கும்.ஆனால் இங்குள்ள துரதிஷ்ட வசமான நிலை என்னவென்றால் அரசு பிரச்சினை களை தீர்ப்பதை விட அவற்றைத் திசை திருப்புவதையே பிரதான தந்திரோபா யமாகக் கையாள்கிறது. அது வெற்றி பெறாத போது அடுத்த கட்டமாக அடக்குமுறையை கையிலெடுக்கத் தயார் நிலைமையையும் ஏற்படுத்தி வைக்கிறது.
 
போர் வெற்றி தமிழினத்துக்கு எதிரான நடவடிக்கை கள், அபிவிருத்தி பற்றிய மாயை என்பன போன்ற திசை திருப்பல்கள் நீண்ட காலத்துக்குச் செல்லுபடியாகப் போவதில்லை என்பதற்கு கட்டுநாயக்க சம்பவம் ஒரு ஆரம்பமாகவே தென்படுகிறது. இவை எவையுமே பசி, வறுமை என்பன அதிகரிக்கும் போது நலிவடைவது தவிர்க்க முடியததாகும்.  இந்த நிலையில் போராட்டங்கள் எழுச்சி பெறுவதை எந்த ஒரு பொய்மானையும் காட்டித் தடுத்து விட முடியாது.அபிவிருத்தியை விரும்பாதவர்கள்,அந்நிய சக்திகளின் கையாள்கள், தேச விரோத சக்திகள் போன்ற கோஷங் களின் நிழலில் நின்று அரசு தனது அடக்குமுறையை மேற்கொள்ளும். எனினும் அடக்குமுறைகள் கூட நீண்ட நாள்களுக்குத் தாக்குப்பிடிக்க முடியாது.வடக்கு, கிழக்கு இன்று முழுமையிலும் இராணுவ மயமாக்கப்பட்டுவிட்டது. காணுமிடமெங்கும் இராணுவ முகாம்களும் காவலரண்களுமே தென்படுகின்றன. இடம்பெறும் ஒவ்வொரு சம்பவத்திலும் இராணுவ தலையீடு கட்டாயமாகி விட்டது.
 
தென்னிலங்கையிலும் இதே நிலைமையை உருவாக்குவதற்கான தயாரிப்புகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. நாடு முழுவதும் முந்நூறுக்கு மேற்பட்ட இரா ணுவ மையங்கள் அமைக்கப்படவுள்ளன. இவை போராட்டம் ஆரம்பிக்கும் இடங்களிலேயே முளை விடும் நேரத்திலேயே அடக்கி விடுவதை நோக்கமாகக் கொண்டவை என்றே நம்பப்படுகிறது. பெரும் போராட் டங்கள் உருவாவதைத் தடுக்கும் ஒரு உத்தியாகவே இது கருதப்படுகிறது.இனிவரும் நாள்களில் சிங்கள மக்கள் சந்திக்கப் போகும் நிலைமைகள் நடந்த காலத்திலே தாம் இனவெறியூட்டி  எப்படி ஏமாற்றப்பட்டவர்கள் என் பதைப் புரிந்து கொள்ளும் நாள்களாகவே அமையும். தாம் அடக்கு முறையின் கொடுமையை அனுபவிக் கும் போது தமிழ் மக்கள் அடக்குமுறை நெருப்பில் வெந்து கொண்டிருப்பதைப் புரியமுடியும்.அப்படி உணரும்போது மட்டுமே தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளுடனும் சிங்கள மக்கள் தங்கள் உரி மைகளுடனும் வாழ அடக்கு முறைகளுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடும் காலம் மலரும். 

Ingen kommentarer:

Legg inn en kommentar