யாழ்ப்பாணத்தில் வேலைவாய்ப்பின்மை ஏன்?


essay யாழ்ப்பாணத்தின் தனியார் பொறியியலாளர் நிறுவனம் ஒன்று தனது அலுவலகப் பணி வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. ஆனால் எவரும் விண்ணப்பிக்கவில்லை.
மறுபுறத்தில் மாவட்ட செயலாளர் இமெல்டா சுகுமாரின் கருத்துக்கு அமைய, 100 பணிநிலை வெற்றிடங்களைப் பூர்த்திசெய்வதற்கு உள்ளூர் விவசாயத் திணைக்களம் விண்ணப்பம் கோரியிருந்த போது சுமார் 11,000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. 
 
இது யாழ்ப்பாணம் மற்றும் வடக்கில் தொழிலாளர் சந்தையில் காணப்படும் இயல்புக்கு மாறான ஒரு விடயம். தனியார்துறையில் வேலை செய்வதற்கு வெறுப்பு காணப்படுகின்றமை யாழ்ப்பாணத்தில் மாத்திரம் காணப்படும் நிலை அல்ல. இது தேசிய அடிப்படையிலான ஒரு வியாதி.
 
அரச வேலைக்கே முன்னுரிமை
இது தொடர்பில் 2009 ஆம் ஆண்டு பேராசிரியர் கெட்டிகே மற்றும் சிலரை உள்ளடக்கிய குழுவினால் ஆய்வு ஒன்று முன்னெடுக்கப் பட்டது. இந்த ஆய்விலிருந்து நாடெங்கிலும் உள்ள (வடக்கு, கிழக்கு உள்ளடங்கலாக) இளைஞர்களில் 70 வீதமானோர் பொதுத்துறையில் அரச வேலை வாய்ப்பைப் பெறுவதற்கே விரும்புகின்றனர் எனக் கண்டறியப்பட்டுள்ளது. 
 
யாழ். மாவட்டச் செயலகத்தில் வேலைவாய்ப்புக்கான அளவற்ற விண்ணப்பங்கள் பட்டதாரிகளிடமிருந்தே வந்து குவிந்துள்ளன என்று இமெல்டா சுகுமார் தெரிவித்தார். அதேசமயம் மாவட்டத்திலுள்ள 26,000 இளம் விதவைகளின் வாழ்வாதாரத் தேவைகளையும் உறுதி செய்ய வேண்டியுள்ளமையையும் இமெல்டா சுகுமார் சுட்டிக் காட்டினார்.
 
குறைவான வாழ்வாதாரச் சந்தர்ப்பங்கள் மற்றும் வாழ்வாதாரங்கள் என்பன குடும்பத்துக் குள்ளான வன்முறை, சமூகப் பதற்றங்கள் மற்றும் குற்றங்கள் ஏற்படுவதற்கான காரணங்களாக அமைகின்றன எனவும், விசேடமாகப் பெண்களுக்கு எதிராகவும், சிறுவர்களுக்கு எதிராகவும் இவை அமைகின்றன எனவும் அவர் தெரிவித்தார். முன்னாள் போராளிகளை சமூகத்துடன் மீள்ஒருங்கிணைப்பது தொடர்பில் முறையான திட்டம் ஒன்று இல்லை என்ற விடயத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
 
தகுதிக்கு மீறிய ஆசை
நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடும் போது யாழ். மாவட்டத்தில் அதிகளவிலான வேலைவாய்ப்பின்மை மற்றும் தகுதிக்குக் குறைந்த வேலை என்பன காணப்படுகின்றன. 
 
இதற்கான பிரதான காரணங்களில் ஒன்றாகப் பொதுத்துறை வேலை வாய்ப்பு மீதான அதீத விருப்பம் உள்ளது. மறுபுறத்தில் யாழ். பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பொ.பால சுந்தரம்பிள்ளையின் கருத்துக்கு அமைய, இலங்கை நிர்வாக சேவைகளுக்கான (SLAS) ஆள் சேர்ப்புக்காக அண்மையில் நடத்தப்பட்ட திறன்காண் பரீட்சையில் தோற்றிய 269 யாழ்ப் பாணப் பட்டதாரிகளில் ஒருவரும் தேர்ச்சி பெறவில்லை. 
 
தமது இயலுமைக்கு அப்பால் உள்ள பொதுத் துறையில் வேலைவாய்ப்பைப் பெற யாழ்ப் பாணத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற மற்றும் தகுதி குறைந்த வேலையில் உள்ள இளைஞர்கள் (குறிப்பாக பட்டதாரிகள்)  அலைந்து கொண்டி ருக்கின்றமை இங்கு வியப்பாக உள்ளது. 
 
வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ள முடியாத வகையில் பட்டதாரிகளை வெளியேற்று கின்றன என்று பல்கலைக்கழகங்களின் மீதும் தீவிர குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.  அரசியல் யதார்த்தம் மற்றும் நிர்வாகப் பகுத்தறி வுக்கு ஒவ்வாத வகையில் இந்த வேலையற்ற பட் டதாரிகள் இறுதியாக பொதுத் துறைக்குள் உள்வாங் கப்படுவர். இதன் காரணமாக, பொதுச் சேவை யின் மதிப்பீடுகள் மற்றும் தரங்கள் மேலும் மோசமாகும். 
 
இதனால் பட்டதாரிகளின் பலவீனமான தரம் மற்றும் பொதுத் துறையின் பலவீனமான மதிப்பீடு கள் மற்றும் தரங்களின் ஊழல் நிறைந்த சக்கரம் செல்வாக்குமிக்கதாக மாறும். இது உள்ளூர் மட்டத்திலும் அதற்கு அப்பாலும் தவிர்க்க முடியாத வகையில் மோசமான ஆட்சிமுறைக்கு காரணமாக அமையும்.
 
யாழ்ப்பாணத்தில் விவசாயம் மற்றும் மீன்பிடியில் உற்பத்தி அதிகரித்துள்ளபோதிலும் அதன் காரணமாக வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப் படவில்லை என பொ.பாலசுந்தரம்பிள்ளை குறிப்பிட்டார். பொருளாதாரம் துரிதமாக வளர்ச்சி யடைந்துவரும் போதும் அதனால் பெரும் எண் ணிக்கையிலான வேலைவாய்ப்புக்களை உருவாக்க முடியவில்லை என அவர் சுட்டிக் காட்டினார். 
 
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மீண்டும் வேலைவாய்ப்பைத் தேடிவரும் எண்ணிக்கையும் அதிகரிப்பதனால், வேலைவாய்ப்பின்மை மற் றும் தகுதிக்குக் குறைந்த வேலை என்பன யாழ்ப்பாணத்தில் முக்கியத்துவம் அடைந் துள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
 
 "அரச வேலையை எதிர்பார்ப்பது என்பது யாழ்ப்பாணக் கலாசாரத்தில் ஒரு பகுதி'' என சமுதாய மற்றும் பிராந்திய திட்டமிடலில் இள மாணிப்பட்டம் பெற்றவரான இராஜ்குமார் குறிப்பிட்டார். அரசினால் ஆளணி திட்டமிடப் பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
 
சாதி சார் தொழில்கள்
யாழ். குடாநாட்டில் வேறுபட்ட தொழில்களுக்கு மத்தியில் தொழிலாளர் நடமாட்டத்துக்கான நிறுவனம்சார் தடையாக சாதி அடையாளங் காணப்பட்டுள்ளது. 
 
உதாரணமாக, இந்துக் கோயில்களில் பூசகர்களுக்கான பணி பிராமணர்களுக்கு என ஒதுக்கப் பட்டுள்ளது. இந்துப் படிநிலை முறைமையில் உயர் நிலையில் இவர்கள் கருதப்படுகின்றனர். அதேவேளை பனைமரங்களுடன் சம்பந்தப்பட்ட தொழில்கள் (கள் இறக்கல், பனம் பழம் மற்றும் இனிப்புப் பண்டங்கள் மற்றும் கைவினைப் பொருள்கள் மற்றும் பனை ஓலைகளால் அலங்காரம் செய்தல், இன்ன பிற) மற்றும் மீன்பிடி போன்ற தொழில்களும் குறிப்பிட்ட சமூகங்களைச் சேர்ந்த மக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. 
 
நாட்டின் தென்பகுதியிலும் இதேபோன்று சாதி அடிப்படையிலான தொழில்கள் காணப்படுகின்றன. உதாரணமாக காலி மாவட்டத்தில் கறுவா மரங்களுடன் சம்பந்தப்பட்ட தொழில்களில் (கறுவாச் செய்கை, கறுவாப் பட்டை உரித்தல், இன்னபிற) ஈடுபடுபவர்கள் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களே.
 
பனை அபிவிருத்திச்சபையின் தலைமைப் பதவிக்கு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் வரக் கூடாது என்ற அளவுக்குத் தொழில்சார் உரிமை காணப்படுகின்றது. யாழ்ப்பாணத்தின் நிர்வாகத் துறையானது யுத்தத்துக்குப் பிந்திய மீள்கட் டமைப்பு மற்றும் அபிவிருத்தியில் வளர்ச்சி யடைந்துவரும் துறையாக உள்ளது. கொத்த னார்கள், தச்சர்கள், இன்ன பிற நிர்மாணத்துறை சார்ந்தவர்களின் பற்றாக்குறையினால் இது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 
சாதிக்கட்டுப்பாடுகளின் காரணமாக ஏனைய சாதிகளைச் சேர்ந்தவர்கள் இந்தத் தொழில் களுக்குள் பிரவேசிப்பது சிக்கலாக உள்ளது. குறிப்பிட்ட தொழில்களில் இவ்வாறான தனி உரிமையானது குறித்த தொழில்களில் தொழி லாளர் பற்றாக்குறை நிலவும்போது தொழிலாளர்களை இணைத்துக் கொள்வதில் தீவிரமான கட்டுப்பாடுகளை ஏற்படுத்துகின்றது. 
 
யாழ்ப்பாணத்தில் போட்டிக்குரிய சந்தையை உருவாக்க வேண்டுமாயின் சாதி அடிப்படையிலான தொழில் கட்டமைப்பின் "நிர்மாணப் பூர்வமான அழிவு'' (கார்ல் மாக்ஸின் வார்த்தைகளில் கூறுவ தாயின்) அல்லது "ஆக்கபூர்வமான அழிவு'' (ஜோசப்ஸ் கும்பீற்றரின் வார்த்கைகளில் கூறுவதாயின்) என்பது தவிர்க்க இயலாத அம்சமாக உள்ளது.
 
வெளிநாட்டுப் பணம் படுத்தும் பாடு
நாளாந்த கூலி வீதங்களை அல்லது மாதாந்த சம்பளங்களை, சந்தை தீர்மானிக்கும் அளவுக்கும் அதிகமாக்கி அல்லது அப்பால் அதிகரித்து தொழிலாளர் சந்தையை சீரழிக்கும் சிக்கலான அம்சமாக வெளிநாட்டிலிருந்து கிடைக்கும் பணம் உள்ளது. சிறிது சிறிதாக உட்புகுத்தப்பட்டு நாசமாக்கும் சாதனமாக இது இருக்கிறது.
 
தனியார் துறையில் விளம்பரம் செய்யப்படும் தொழிலுக்கு பெரும்பாலானோர் விண்ணப்பிக்காத போதும், நாள் முழுவதும் இளைஞர்கள் வீதியில் கையடக்க தொலைபேசியுடன் மோட்டார் சைக்கிள்களில் வீணாகச் சுற்றித் திரிவதைக் காணக்கூடியதாக உள்ளதாக வர்த்தகப் பிரமுகர்கள் குறிப்பிடுகின்றனர். 
 
தமது உறவினர்களால் வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்பப்படுவதன் விளைவாக வேலை யற்ற மற்றும் தகுதிக்குக் குறைவான வேலைபுரியும் பெரும்பாலான இளைஞர்களின் அத்தியவசிய பொருள்களாகக் கையடக்கத் தொலைபேசி களும் மோட்டார் சைக்கிள்களும் மாறியுள்ளன.
 
வராமலிருத்தல், உரியநேரத்துக்கு வராமை, அடிக்கடி சுகயீனம் தெரிவித்தல் மற்றும் விரதங்களின் போது (கௌரி விரதம், கந்த சஷ்டி விரதம், இன்னபிற) விடுமுறை எடுத்தல் என்பன தனியார்துறை தொழில் வழங்குநர்கள் எதிர்கொள் ளும் சில தொழிலாளர் சார்ந்த பெரும் பிரச்சி னைகளாக யாழ்ப்பாணத்தில் உள்ளன.
 
சில தனியார்துறை தொழில் வழங்குநர்கள் சமூ கப் பொறுப்புடமையின் அடிப்படையில் முன்னாள் போராளிகளை தமது ஊழியர்களாக உள்வாங்கியுள்ளனர். எவ்வாறாயினும் முன்னாள் போராளிகள் அவ்வப்போது (மாதத்துக்கு 24 தடவைகள்) தாம் தொழில்புரியும் இடம் அல்லது வதியும் இடத்திலிருந்து வெகு தூரத்தில் அமைந்துள்ள இராணுவ முகாம்களுக்கு செல்ல வேண்டியுள்ளமையும் அவர்களை தனியார்துறையில் வேலைவாய்ப்புக் கொள்வதில் தடையை ஏற்படுத்தியுள்ளது. 
 
யாழ்ப்பாணத்தில் வசிக்கும் மற்றும் தொழில் புரியும் முன்னாள் போராளிகள் முல்லைத்தீவு அல்லது கிளிநொச்சியில் அமைந்துள்ள இராணுவ முகாம்களுக்கு வருமாறு கோரப்படுகின்றனர். இதன் பொருட்டு, அவர்கள் நீண்ட தூரம் பயணிக்கவேண்டியுள்ளது.  இதன் காரணமாக அவர்கள் தமது தொழிலில் குறிப்பிடத்தக்க இழப்பை ஏற்படுத்துகின்றனர் என்று தனியார் துறை தொழில் வழங்குநர்கள் தெரிவிக்கின்றனர்.
 
இதனைத்தவிர, முன்னாள் போராளிகள் பணிபுரியும் இடங்களுக்கு புலனாய்வு அதிகாரி கள் வருகை தருகின்றமையும், சக ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதுடன், பணிபுரியும் போராளிகளின் ஊக்கத்துக்கு இடையூறு விளைவிப்பதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். யாழ்ப்பாணத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்ட போது பங்கு பற்றிய சிரேஷ்ட இராணுவத்தினர் இந்த விடயத்தை யாழ். இராணுவத் தளபதியின் கவனத் துக்குத் தாம் கொண்டு செல்வர் என்று குறிப்பிட்டனர்.
 
முறைதவறும் தொழிலாளர்கள்
மேலும் ஊழியர் சேமலாபநிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் சம்பந்தமாக நீண்டகால பிரயத்தனத்தின் பின்னர் தனியார்துறை தொழில் உரிமையாளர்களைத் தெரிவு அடிப்படையில் பெற்றுக்கொள்வதற்கு தொழில் திணைக்களம் முயற்சிப்பதாகத் தெரிகின்றது.
 
எவ்வாறாயினும் சில தொழில் வழங்குநர்கள் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதிய பங்களிப்புக்களைக் கழிப்பதற்கு முயற்சித்தால் அந்த தொழில்வழங்குநர்களை விட்டு ஊழியர்கள் விலகி (தமது மொத்தச் சம்பளம் குறைவடைவதனால்), அவற்றை கழிக்காத தொழில் வழங்குநரிடம் இணைகின்றனர். 
 
இதனால் ஊழியர்கள் முறைசார் அமைப்பிலிருந்து, முறைசாரா அமைப்புக்கு செல்கின்றனர். இந்த பயிற்சியும் யாழ்ப்பாணத்தில் தொழில் சந்தை உருக் குலைவதற்கு காரணமாகியுள்ளது.
 
சுருக்கமாகக் கூறுவதாயின், பொதுத்துறை வேலைவாய்ப்பு மீதான மிகை விருப்பு, கல்வி அறிவின் மோசமான தரம், பாடசாலைகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் உயர்கல்வி நிறுவனங்களில் வழங்கப்பட்ட வாழ்க்கைத் திறன்களின் மோசமான தரம் , சாதி அடிப்படையிலான தொழில் கட்டமைப்பு, வெளிநாட்டிலிருந்து பணம் கிடைத்தல் என்பன வடக்கில் வேலை வாய்ப்பின்மை மற்றும் தகுதி குறைந்த வேலை என்பவற்றுக்கான பிரதான காரணங்களாக உள்ளன. இவற்றைத் தவிர, பிரதானமாக அரசால் வடக்கில் முன்னெடுக்கப்படும் போருக்குப் பின்னரான அபிவிருத்தி உபாயம், குறைந்தளவான வேலைவாய்ப்பு உருவாக்கத்துடன் பொருளாதார வளர்ச்சிக்கு வழி ஏற்படுத்தி உள்ளமையையும் குறிப்பிட்டாக வேண்டும். 
 
ஏனெனில் பொதுத் துறையின் வேலைவாய்ப்புச் சந்தர்ப்பங்கள் செல்வச் செருக்குக் கொண்ட அதிகார வர்க்கம், அதிகரித்துள்ள இராணுவத்தினர் மற்றும் கடுமையான நிதிநிலமை என்பவற்றால் பூரணமாக உறிஞ்சப்பட்டுள்ளது. 
 
அபிவிருத்திக்கான பருத்தித்துறை ஆய்வகம் (PPID)  மற்றும் Friedrich Ebert Stiftung (FES) என்பன இணைந்து ஒழுங்கு செய்த யாழ்.பொது நூலகக் கேட்போர் கூடத்தில் 2011, ஜூன் 03 ஆம் திகதி நடைபெற்ற "யாழ்ப்பாணம் மற்றும் வடக்கில் தொழிலாளர் சந்தை புதிர்'' என தலைப்பிடப்பட்ட பகிரங்க பொது மன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களே மேலே குறிப்பிடப்பட்டுள்ளன. 

Ingen kommentarer:

Legg inn en kommentar