மனித உரிமைகள் தொடர்பான பல்வேறு ஒப்பந்தங்களில் சர்வதேச நாடுகளுடன் கையெழுத்துப் போட்ட சிங்கள அரசு, இலங்கையின் இறுதிக் கட்டப் போரிலும் சரி, முடிந்த பிறகும் சரி... மனிதநேயத்துக்கு விரோதமாகச் செயல்பட்டு இருக்கிறது.
கூடவே, சொந்த நாட்டின் சட்டங்களைக்கூட, அதன் ராணுவம் பின்பற்றவில்லை. உரிமை மீறல்கள் குறித்து உள்நாட்டில் இருந்து பெறப்படும் புகார்களை விசாரிக்க, இலங்கை மனித உரிமை கமிஷன் அமைக்கப்பட்டது. இதன் தலைவரையும் நிர்வாகிகளையும் அந்த நாட்டின் அதிபரே நியமிப்பார். இதனால், 'அரசுக்கு எதிரான கருத்துகளைத் தெரிவிப்பது இல்லை’ என்ற முடிவோடு இந்த அமைப்பு செயல்பட்டது. தப்பித் தவறி உண்மையை வெளிப்படுத்தினாலும், அரசு அதை ஏற்காது!
குறிப்பாக, யாழ்ப்பாணம் பகுதியில் அப்பாவிப் பொதுமக்களை ஒரு ராணுவ முகாமின் கமாண்டர், தனது வாகனத்தில் கடத்திச் சென்று கொலை செய்ததை விசாரித்த இந்த அமைப்பு, அதில் உண்மை இருப்பதை அம்பலப்படுத்தியது. விசாரணை அறிக்கையில், அந்த அதிகாரியின் பெயரைக் குறிப்பிட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த சம்பவம் அரசுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுக்க, அதிகாரி மீது நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இத்தகைய தர்மசங்கடம், மறுபடியும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, மனித உரிமை கமிஷன் நிர்வாகிகள் அனைவரும் கூண்டோடு நீக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்ய வேண்டிய அதிபர், அதைக் கண்டுகொள்ளவே இல்லை. இதுவும், இலங்கை அரசின் திட்டமிட்ட செயல்தான்.
பரிந்துரைகள்!
இலங்கைப் பிரச்னைக்கு முக்கியக் காரணம்... அரசியல், சமூக, பொருளாதாரத்தில் அனைத்துத் தரப்பினரையும் சமமாக மதிக்காததுதான். அதனால், தமிழர்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சம உரிமைகள் கிடைக்கச் செய்ய வேண்டும். இலங்கை அரசின் மும்மொழிக் கொள்கை தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் என்ற உறுதியை தமிழர்களுக்குக் கொடுக்க வேண்டும். அதற்கு எதிர்மாறாக, 'அனைத்து மக்களும் சிங்கள மொழியில் தேசிய கீதம் பாட வேண்டும்’ என்று இலங்கை அரசு செய்த அறிவிப்பு, தமிழ் பேசும் மக்களைக் கொந்தளிக்கச் செய்திருக்கிறது. இத்தகைய செயல்களை இலங்கை அரசு முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது.
போரில் பாதிக்கப்பட்டு முகாம்களில் அடைபட்டுக்கிடந்தவர்களில் சிலர், மீண்டும் சொந்த கிராமங்களுக்குத் திரும்புகின்றனர். ஆனால், அவர்கள் செல்லும் வழி எங்கும் ராணுவப் படையினர் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளனர். ஆகவே, மனித உரிமை மீறல்கள் இன்னும் சர்வ சாதாரணமாகவே தொடர்வதால், ராணுவப் படைகளைத் திரும்பப் பெறுவது அவசியம்.
ஊடகங்கள் மீதான அடக்குமுறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்த லசந்தா விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டார். ராணுவத்தின் அத்துமீறல்கள் பற்றி துணிச்சலுடன் செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் திசநாயகம் மீது, தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட முதல் பத்திரிகையாளர் இவரே. இது தவிர, பிரபல கார்ட்டூனிஸ்ட் பிரகீத் கடந்த ஆண்டு தலைமறைவானார். இதுவரை அவரைப்பற்றிய தகவல் எதுவும் இல்லை. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் ஏற்படாமல் இருக்க, நடவடிக்கை தேவை.
இதற்காக ஐ.நா சார்பில் சர்வதேசப் பிரதிநிதிகள் அடங்கிய விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். இந்தக் குழு, இறுதிக் கட்டப் போரில் நடந்த விதிமுறை மீறல்கள்பற்றி முழுமையாக விசாரணை நடத்தும். இதில் போர்க் குற்றம் நிரூபிக்கப்பட்டால், நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதற்கான ஆதாரங்களை ஏற்கெனவே விசாரணை நடத்திய எங்களிடம் (ஐ.நா. நிபுணர் குழு) இருந்து பெறலாம். அத்துடன், போர் முனையில் கடுமையான சிரமங்களுக்கு மத்தியில் பணியாற்றிய செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட தன்னார்வ அமைப்பினரிடம் இருந்தும் ஆதாரங்களைத் திரட்டலாம்.
உடனடித் தேவை!
போரில் பலியானவர்களது எண்ணிக்கையை இலங்கை அரசு மறைக்காமல் வெளிப்படுத்த வேண்டும். அவர்களின் உறவினர்களிடம் இறப்புச் சான்றிதழ் தரப்பட வேண்டும். அத்துடன், போர்க் காலத்தில் அடிக்கடி நிறையப் பேர் காணாமல்போனார்கள். 'ஒயிட் வேன்’ ஆபரேஷன் மூலமாக நிறையப் பேரை ராணுவத்தினர் கடத்திச் சென்றனர். அவர்களின் நிலை என்ன என்பதை உடனடியாகத் தெரியப்படுத்த வேண்டும்.
இலங்கையில் இப்போது அமலில் இருக்கும் தீவிரவாதத் தடுப்புச் சட்டம் மிகவும் கடுமையாக உள்ளது. அதன் தீவிரத்தைக் குறைக்கும் வகையில், சட்டத்தில் உடனடி மாற்றம் தேவை. இதன் மூலம், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அப்பாவி மக்களுக்கு நியாயம் கிடைக்க வழி ஏற்படும்.
புலிகள் அல்லது அவர்களுக்கு உதவி செய்தவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஆயிரக்கணக்கான மக்களை சிங்கள ராணுவம் கைது செய்தது. அவர்களது பட்டியலை ராணுவம் உடனடியாக வெளியிட்டு, நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தி சட்ட உதவி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இன்னும் சிலர், ரகசிய இடங்களில் அடைத்துவைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படுகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. இத்தகைய பாதகமான செயல்களை உடனடியாக நிறுத்துவது அவசியம்!
துயரங்கள் தொடரும்

Ingen kommentarer:
Legg inn en kommentar