மக்கள் வசிக்கும் இடங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், கொலைக் குற்றத்துக்கு சமம். திட்டமிட்டு இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்பட்டு இருக்குமானால், அதை உலகின் எந்தச் சமூகமும் ஏற்காது.
இலங்கையில் நடந்த போரில், சிங்கள ராணுவம் இத்தகைய திட்டமிட்ட தாக்குதல்களையே நடத்தி இருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. சிங்கள ராணுவத்திடம் ஆள் இல்லாத போர் விமானம்கூட இருந்தது. அவற்றின் மூலம் மக்களின் வசிப்பிடங்களையும், புலிகளின் முகாம்களையும் பிரித்துப் பார்க்க முடியும். ஆனாலும், மக்களின் வசிப்பிடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தற்செயல்தானா? இது தவிர, மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை உடனே நிறுத்தும்படி வன்னிப் பகுதியின் கமாண்டருக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்கள் செவிசாய்க்கப்படவில்லை. இலங்கை அரசு சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்பட்டதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?
சர்வதேச மனித உரிமை சட்டத்தின்படி, மக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் வான் வழித் தாக்குதல்களை நடத்தினால்கூட, முன்கூட்டியே அதுபற்றி எச்சரிக்கை கொடுக்கப்பட வேண்டும். இதையும் சிங்கள ராணுவம் கடைப்பிடிக்கவில்லை.
காலில் மிதிபட்ட சட்டங்கள்!
போரில் இரு தரப்பும் காயம் அடையும்; உயிர் இழப்புகளையும் சந்திக்கும். இந்த சமயங்களில், சர்வதேச செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகள், அச்சம் இன்றி போர் முனையில் பணியாற்றும் சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். சிங்கள ராணுவமோ, இத்தகைய தன்னார்வ அமைப்பினர் மீதே நேரடித் தாக்குதல் நடத்தியது. அந்த அமைப்புகளின் கொடிகள் ஏற்றப்பட்ட முகாம்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
போர் முனையில் உயிர் இழப்பவர்களையும் உரிய மரியாதையுடன் நடத்த வேண்டும் என்கிறது சர்வதேச மனிதநேய சட்டம். இதுவும் சிங்கள அரசால் மீறப்பட்டது. இவற்றுக்குப் பல ஆதாரங்கள் இருக்கின்றன. உயிர் இழந்த புலிகளையும், பெண்களையும் அவர்கள் நடத்திய விதம் குறித்த ஆதாரங்கள் அதிர்ச்சியைத் தருகின்றன. பெண் புலிகள் நிர்வாண நிலையில் இருந்ததும், அந்த உடல்களைக் குப்பைபோல, டிராக்டர்களில் ராணுவம் ஏற்றிச் சென்றதற்கும் ஆதாரம் கிடைத்து இருக்கிறது. இது அப்பட்டமான மனித உரிமை மீறல்.
மீடியாவின் குரல்வளையையும் சிங்கள ராணுவமே நெரித்தது. சில பத்திரிகையாளர்களின் பெயர்களை ராணுவ இணைய தளத்தில் வெளியிட்டதே இதற்கு சாட்சி. பல்வேறு காலகட்டங்களில், நேர்மையாக செய்திகளை வெளியிட்டவர்களை அடித்து உதைத்தனர். மிரட்டலோடு சிலரை விடுவித்த ராணுவம், மேலும் சிலரைக் கொன்று இருக்கிறது.
பல்வேறு தரப்பினரிடமும் நிபுணர் குழு நடத்திய விசாரணையில் கிடைத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களைப் பார்க்கும்போது, சிங்கள அரசு திட்டமிட்டே போர்க் குற்றத்தில் ஈடுபட்டு இருப்பது அம்பலமாகிறது. சர்வதேச மனிதநேய சட்டங்களும், சர்வதேச மனித உரிமை சட்டங்களும் சிங்கள ராணுவத்தின் பூட்ஸ் கால்களால் நசுக்கப்பட்டது நிஜம்!
புலிகள் செய்த தவறுகள்!
இறுதிக் கட்டப் போரின் உச்சத்தில், ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை புலிகள் மனிதக் கேடயமாகப் பயன்படுத்தினார்கள் என்கிற குற்றச்சாட்டை இலங்கை அரசு கூறி வருகிறது. அப்படி நடந்து இருந்தால், அதுவும் மனித உரிமை மீறல்தான். ஆனால், இந்தப் புகாருக்கு எந்தவித ஆதாரமோ, சாட்சியமோ இல்லை. மக்கள் வசிக்கும் பகுதிகளில் ராணுவ முகாம்களை அமைக்கக் கூடாது என்கிறது சர்வதேச மனித உரிமை சட்டம். ஆனால், இந்த சட்டத்துக்கு முரணாக நடந்துகொண்ட புலிகள், சில பகுதிகளில் மக்கள் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே தங்களுடைய முகாம்களை அமைத்தனர். அங்கு ராணுவத் தளவாடங்கள், ஆயுதங்கள், வாகனங்கள் ஆகியவற்றை மறைத்துவைத்தனர். இதைக் கண்டுபிடித்த சிங்கள ராணுவம், மக்களைப்பற்றிய அக்கறை இல்லாமல் தாக்குதல் நடத்தியதில், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
சிறுவர்களைப் படைப் பிரிவில் சேர்ப்பதை சர்வதேச விதிமுறைகள் கடுமையாக எதிர்க்கின்றன. புலிகளோ தங்கள் படையில் சிறுவர்களையும் சேர்த்தனர். அத்துடன் இறுதிப் போரில், ஆயுதங்களை ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குக் கொண்டுசெல்வது, குண்டுப் பொழிவுக்கு மத்தியில் பதுங்கு குழிகளை அமைப்பதுபோன்ற அபாயகரமான வேலைகளில் சாமான்ய மக்களை புலிகள் ஈடுபடுத்தினர். புலிகள் அவ்வப்போது நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதல்களில் அப்பாவி மக்கள் சிக்கி உயிர் இழந்த சம்பவங்களும் நடந்தன. இந்தச் சட்ட மீறல்களை புலிகள் தரப்பு நியாயப்படுத்த முடியாது!
துயரங்கள் தொடரும்...

Ingen kommentarer:
Legg inn en kommentar